Thursday, July 1, 2021

ஒரே நபர்

இன்றைய (2 ஜூலை 2021) நற்செய்தி (மத் 9:9-13)

ஒரே நபர்

'ஒருவருக்கு உன் நிகழ்காலம் பிடிக்காதபோது அவர் உன் கடந்தகாலத்தை ஆராய்வார்' என்பது 'தெ காட்ஃபாதர்' நாவலில் தொன் கொரலெயோனே சொல்லும் வரி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர் மத்தேயுவின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியாளரே தன் அழைப்பைப் பற்றி இங்கே பதிவு செய்கின்றார். மத்தேயு என்ற நபரை இரு வகையான மனிதர்கள் பார்க்கின்றனர். முதல் வகை மனிதர் இயேசு. இயேசு மத்தேயுவின் நிகழ்காலத்திலிருந்து அவருடைய எதிர்காலத்தைப் பார்க்கின்றனர். வரிதண்டுபவருள் ஒருவராக இருந்த அவரை தன் நற்செய்திப் பணிக்காக இயேசு அழைக்கின்றார். இரண்டாம் வகை மனிதர்கள் பரிசேயர்கள். இவர்கள் மத்தேயுவின் நிகழ்கால நிலையிலிருந்து அவருடைய இறந்தகாலத்தைப் பார்த்து இடறல்படுகின்றனர். வரிதண்டுபவர் மற்றும் பாவி என்று அவர்கள் கருதிய ஒருவரை ரபி ஒருவரின் சீடராக அவர்களால் பார்க்க இயலவில்லை.

மத்தேயு தன் இறந்தகாலத்தை ஏற்றுக்கொள்கின்றார். அந்த இறந்தகாலத்திற்கு இயேசுவை அழைத்துச் சென்று அவருக்கு விருந்தளிக்கின்றார். தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் பாவிகளே என இயேசுவின்முன் தன் இருத்தலை ஏற்றுக்கொள்கின்றார். இயேசுவும், தன் பணி யாருக்கானது என்பதை இங்கே வரையறை செய்கின்றார். 'நோயற்றவருக்கு அல்ல. நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல, இரக்கத்தையே' என அறிக்கையிடுகின்றார்.

'பலியை அல்ல, இரக்கத்தையே!' என்பதை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.

'பலி செலுத்துவதில்' ஒருவரின் இறந்தகாலம் இருக்கிறது. அதாவது, நான் செய்த தவறு அல்லது பாவத்திற்காக நான் பாவப் பரிகாரப் பலி செலுத்துகிறேன். ஆனால், இரக்கம் காட்டுவதில் நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடந்த நபரைக் கண்டவுடன் தன் கழுதையிலிருந்து இறங்கிய நல்ல சமாரியன், அடிபட்டுக் கிடந்தவரின் இறந்தகாலத்தை அல்ல, மாறாக, நிகழ்காலத்தையே கண்டார்.

நாம் இன்று சந்திக்கும் நபர்களை இறந்தகாலத்தின் கண்கொண்டு பார்த்து இடறல்படுகிறோமா? அல்லது நிகழ்காலத்தின் கண்கொண்டு பார்த்து இரக்கம் காட்டுகின்றோமா?


1 comment:

  1. “ நோயற்றவருக்கு அல்ல; நோயுற்றவருக்கே மருத்துவம் தேவை”
    “ பலியை அல்ல, இரக்கத்தையே!”
    இரண்டுமே அதனதன் சூழ்நிலைக்கேற்ப பொருள் தருகின்றன. ‘பலி செலுத்துவதில்’ ஒருவரின் இறந்த காலம் இருக்கிறது என்பது உண்மைதான்! ஆனால் பலி செலுத்துவதற்கு செய்த பாவம் தான் காரணம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.’கிடைத்த நன்மைகளுக்கு…பெற்ற சுகத்திற்கு நன்றியாக’ என்று எத்தனையோ காரணங்களுக்காக பலிசெலுத்தப்படுவதை அறிவோம். ஆனால் நல்ல காரியம் என்பது கண்கள் பார்த்தவுடனே கைகள் செய்வது. கண்டிப்பாக அது நிழ்காலத்தில் தான் நடக்க முடியும். அப்படி நடக்கும் பொழுது….அதுவும் நாமறியாத ஒருவருக்கு இரக்கம் காட்டுகையில் நாம் பார்ப்பது அவரின் அப்போதைய….நிகழ்கால நிகழ்வைத்தான்.எப்படியோ இங்கே முக்கியமெனக் கருதப்படுவது “ இரக்கமே” யன்றி ஒருவரின் இறந்த காலமோ…நிகழ்காலமோ அல்ல.” இரக்கம்” ….விலைமதிப்பெற்ற இந்த ஈகை(அ) செய்கை யாருக்கு வேண்டுமானாலும்..எக்காலத்தில் வேண்டுமானாலும் கொடுக்கப்படக் கூடியது; கொடுக்கப்பட வேண்டியது. அள்ளிக் கொடுப்போம்…அளவின்றி கொடுப்போம்.

    “ இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” இயேசுவின் மலைப்பொழிவை செயலாக்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete