Wednesday, July 28, 2021

புனித மார்த்தா

இன்றைய (29 ஜூலை 2021) திருநாள்

புனித மார்த்தா

நீர் இங்கே இருந்திருந்தால்

புதிய ஏற்பாட்டுக் கதைமாந்தர்களில் ஒருவரான பெத்தானியா ஊர் மார்த்தாவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். புனித நாடுகள் பயணத்தின்போது இன்றும் பெத்தானியாவுக்குச் செல்பவர்கள் அந்த இல்லத்தில் மார்த்தா இயேசுவிடம் புலம்பியதை நம்மால் கேட்க முடிகிறது. அதே புலம்பலோடு சேர்த்து, 'ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்ற நம்பிக்கை வார்த்தையையும் நாம் அங்கே கேட்கலாம்.

மார்த்தா என்னும் கதைமாந்தரை நாம் லூக்கா நற்செய்தியிலும், யோவான் நற்செய்தியிலும் சந்திக்கின்றோம். லூக்கா நற்செய்தியாளர், மார்த்தாவை விருந்தோம்பல் செய்பவராகவும், யோவான் நற்செய்தியாளர், நம்பிக்கை அறிக்கை செய்பவராகவும் முன்மொழிகின்றனர்.

ஒரு வீட்டில் முதலில் மகள் பிறந்து அடுத்தடுத்து இன்னொரு மகளோ அல்லது மகனோ பிறந்தால், அந்த மகளுக்கும் மகனுக்கும் இரண்டு அன்னையர் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், அக்காவும் அங்கே அன்னையாகவே இருக்கின்றாள் மற்ற குழந்தைகளுக்கு. மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கும் பாக்கியம் அது. ஆனால், அக்காக்கள் அலட்டிக்கொள்வதே இல்லை – அன்னையரைப் போல! அன்னை இல்லாத இடத்தையும் கூட அக்காக்கள் நிரப்பி விடுவார்கள். அம்மா குழந்தைகளை வீட்டில் விட்டு நிம்மதியாக வெளியே செல்லக் காரணம் அங்கே அக்கா இருப்பதால்தான்.

இப்படிப்பட்ட ஓர் அக்காவாகத்தான் இருக்கிறார் மார்த்தா.

மார்த்தா, மரியா, இலாசர் குடும்பத்தில் இவர்களுடைய பெற்றோர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம். பெற்றோர் இல்லாத நிலையை தங்கையும் தம்பியும் உணராதவாறு வளர்த்திருப்பார் அக்கா மார்த்தா.

'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா?' என இயேசுவிடம் முறையிடுகின்றார் மரியா.

அக்காக்கள் தங்கள் குறைகளை ஆண்டவரிடம் மட்டுமே தெரிவிப்பார்கள். அக்காக்களும் அண்ணன்களும் பல நேரங்களில் தனியாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் சொல்வது தங்கையருக்கும் தம்பிகளுக்கும் புரியாது. தனக்கு மேல் முறையிடுவதற்கு பெற்றோர்களும் இல்லாத நிலையில் தங்கள் துக்கங்களை அவர்களே விழுங்கித் தண்ணீர் குடித்துக்கொள்கின்றனர். 'அதெல்லாம் ஒன்னுமில்லமா! ஒன்னுமில்லப்பா!' என்று தங்கை, தம்பியிடம் சொல்லிவிட்டு மெதுவாக ஒதுங்கிக்கொள்வார்கள். தன் வாழ்வில் தனிமைக்குப் பழக்கப்பட்ட மார்த்தா, இயேசுவும் தன் தங்கையும் இருக்கின்ற அந்தப் பொழுதிலும் தனிமையை உணர்கின்றார். சிலரை வாழ்க்கை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. சிறிய வயதில் ஞானிகளாக!

தான் தனியாக விடப்பட்டாலும் தன் வேலையைச் சரியாகச் செய்கின்றார் மார்த்தா. விருந்தோம்பலில் கருத்தாயிருக்கின்றார். விருந்தோம்பல் ஒரு கலை. விருந்துக்கு அழைப்பவர்களில் பல வகை உண்டு. சில வகையினர் தங்கள் இருத்தலை மற்றவர்களுக்குக் காட்டுவதற்கு அழைப்பர். சிலர் விருந்தோம்பிவிட்டு வந்தவரைக் காயப்படுத்தி அனுப்புவர். சிலர் இரக்கம் காட்டுவதற்காக விருந்தோம்பல் செய்வர். வெகு சிலர் மட்டுமே விருந்தோம்பலில் உரிமை கொண்டாடுவர். மார்த்தா கடைசி வகை. அதனால்தான், தன் மனத்தில் உள்ளதை அப்படியே இயேசுவிடம் கொட்டுகின்றார்.

'மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்!' என்று சீரியஸாகப் பேசுகிறார் இயேசு.

அதைக் கேட்ட மார்த்தா, 'சரி! சரி! நல்ல பங்கெல்லாம் இருக்கட்டும்! வாங்க சாப்பிடலாம்!' என்று சாப்பிட அழைத்திருப்பார் அவ்விருவரையும். தங்கள் தங்கையரும் தம்பியரும் பாராட்டப்படுவதையே அக்காக்கள் விரும்புவர். தன் இருத்தலும் பணியும் அங்கே இயேசுவால் அங்கீகரிக்கப்படவோ, பாராட்டப்படவோ இல்லை என்றாலும் மார்த்தா அதைப் பொருட்படுத்தவில்லை! அக்காக்கள் அப்படியே! தாங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் சற்றே புன்முறுவல் பூத்து தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்வர்.

சில மாதங்கள் கழிய, இலாசர் உடல்நலக்குறைவால் அவதியுறுகின்றார். 'ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று இயேசுவுக்குச் செய்தி அனுப்புகின்றனர். இயேசு தங்கள் இல்லத்தில் விருந்துக்கு வந்தாலும், அவர் தங்கள் நண்பர் என்றாலும், அவர்மேல் வைத்திருந்த, 'ஆண்டவரே!' என்ற மரியாதையை அவர்கள் விட்டுவிடவில்லை. 'பழகப் பழகப் பாலும் புளிக்கவில்லை' அங்கு!

இயேசு வேண்டுமென்றே தாமதிக்கின்றார். கடவுளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது!

இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆகின்றன. இளவயது இறப்பு என்பதால் இன்னும் வீட்டில் சோகம் அப்பிக்கொண்டிருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் வந்து செல்கிறார்கள். அவர்களுள் ஒருவராக இயேசுவும் வர, அவரை எதிர்கொண்டு செல்கின்ற மார்த்தா, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்' என்று தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.

'உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்று இயேசு சொல்ல, 'அவன் இறுதிநாளில் உயிர்த்தெழுவான் என்று எனக்குத் தெரியும்' என்று மார்த்தா இயேசுவைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார். இது நற்செய்தியாளர் பயன்படுத்தும் முரண் உத்தி.

இந்த இடத்தில்தான், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே' என்ற 'நானே' வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. 'ஆம்! ஆண்டவரே!' என்று தன் நம்பிக்கையை மீண்டும் அறிக்கையிடுகின்றார். மேலும், இயேசு வந்த செய்தியை, 'போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்' என்று மரியாவிடம் காதோடு காதாய்ச் சொல்கின்றார். 'போதகர்' என்று மரியா இயேசுவை அழைத்ததால் என்னவோ அவர் அப்படியே அவரை அறிமுகம் செய்கின்றார்.

மரியா அழுவதைக் கண்ட இயேசு, தானும் அழுகின்றார்.

மார்த்தா அழவில்லை. அக்காக்கள் அழுவதில்லை. இறப்புகளும் இழப்புகளும் அவர்களைப் பெரிதாய்ப் பாதிப்பதில்லை. அதில் அவர்கள் கடவுளையும் மிஞ்சியவர்கள்.

'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டு அங்கே செல்கின்றார் இயேசு.

'கல்லை அகற்றுங்கள்!'

'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே!' என்கிறார் மார்த்தா. மிகவும் எதார்த்தமான விடை. ஒரு பக்கம் இறைநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் இன்னொரு பக்கம் மனித வாழ்வின் எதார்த்தை அறிந்தவராகவும் அதை ஏற்றுக்கொண்டவராகவும் இருக்கிறார் மார்த்தா.

இதுவே மார்த்தா சொன்ன இறுதி வாக்கியம். எதார்த்தமான வாக்கியம்.

விருந்தோம்பல், நம்பிக்கை அறிக்கை, எதார்த்தமான வாழ்வியல் அணுகுமுறை என்று வாழ்ந்த மார்த்தாவின் வாழ்வும் வார்த்தைகளும் நமக்குச் சவால்களே!

இன்றைய நாளில் நம் அக்காக்களையும் அண்ணன்களையும் நினைவுகூருவோம்.

அக்காக்கள் அம்மாக்களாகவும், அண்ணன்கள் அப்பாக்களாகவும் மாறுகின்ற குடும்பங்களில் இன்றும் மார்த்தா உயிருடன் இருக்கிறார்.


3 comments:

  1. நிறைய விஷயம் சொல்லுறீங்க பாதர் ..

    I have only known St. Martha as the patron sainf of cooks.

    மார்த்தா அழவில்லை. //

    ஒரு பக்கம் இறைநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் இன்னொரு பக்கம் மனித வாழ்வின் எதார்த்தை அறிந்தவராகவும் அதை ஏற்றுக்கொண்டவராகவும் இருக்கிறார் மார்த்தா.//

    when I am reading, I am like ஆமால்ல .. Never realised these..

    ReplyDelete
  2. இன்றைய நாளில் நம் அக்காக்களையும் அண்ணன்களையும் நினைவுகூருவோம்.

    ReplyDelete
  3. “ மார்த்தா” தேவையான அளவுக்கு இந்த மார்த்தா பற்றிய விஷயங்களைத் தந்தை ஏற்கனவே கொடுத்திருப்பினும், ஒவ்வொரு முறையும் ஏதோ புது செய்தி போலத்தான் செவிகளில் ஒலிக்கிறது.” விருந்தோம்பல்” இவளது விருதுவாக்கியம். “மார்த்தா நீ பலவற்றைப் பற்றிக் கலங்குகிறாய்! தேவையானது ஒன்றே!” என சீரியஸாகப் பேசிய இயேசுவை அவள் பொருட்படத்தவில்லை. தன் மனம் நிறைவு கொள்ளுமளவுக்கு பணிவிடையைத்தொடர்கிறார்…..இயேசுவின் வயிற்றை நிரப்புவதே தன் பணி என்பது போல.

    “ ஒரு பக்கம் தாய்மையின் உருவான அக்காவாக…மறுமக்கம் நம்பிக்கையின் மணிமகுடமாக! “ நீர் இங்கே இருந்திருந தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்”…. வாழ்வுக்கு வழி சொல்லும் வார்த்தைகள்!

    மார்த்தா என்ற அக்கா அழவில்லை…அவளிடமிருந்த அசைக்க முடியா நம்பிக்கையின் காரணமாக! தொடர்ந்து வரும் தந்தையின் வார்த்தைகள்…” அக்காக்கள் அழுவதில்லை.இறப்புகளும்,இழப்புகளும் அவர்களைப் பெரிதாய்ப் பாதிப்பதில்லை.அதில் அவர்கள் கடவுளையைம் மிஞ்சியவர்கள்!”…அருமை!

    அக்காக்கள் அம்மாக்களாகவும்,அண்ணன்கள் அப்பாக்களாகவும் மாறுகின்ற குடும்பங்களில் இன்றும் மார்த்தா உயிருடன் இருக்கிறார். தந்தைக்கு நன்றிகள்… அக்காக்களையும்…அண்ணன்களையும் உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்ததற்கு!
    மார்த்தா போன்ற ஒரு அக்கா கிடைத்த அனைவருமே பேறுபெற்றவர்கள் என்னைப் போல! தெளிந்த நீரோடையாக வந்து விழுந்த எழுத்துக்களுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!

    ReplyDelete