Monday, July 26, 2021

விளக்கிக் கூறும்

இன்றைய (27 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:36-43)

விளக்கிக் கூறும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வு ஒன்றை மத்தேயு பதிவு செய்கின்றார்.

மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகின்றார் இயேசு. வீட்டுக்கு வருதல் என்பது மிக முக்கியமான நிகழ்வு. மார்ட்டின் ஹைடக்கர் என்ற மெய்யியலாளர், 'வீட்டுக்கு வருதல்' (homecoming) என்பது ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நடக்க வேண்டிய மிக முக்கியமான நிகழ்வு என்கிறார். எடுத்துக்காட்டாக, லூக்கா 15இல் நாம் காணும் இளைய மகன் தூர நாட்டில் அமர்ந்து, 'என் தந்தையின் இல்லத்தில் ...' என்று யோசித்துக்கொண்டிருக்கின்றார். 'அவர் அறிவு தெளிந்து' என்று பதிவு செய்கின்றார் லூக்கா. ஆக, அறிவு தெளிந்தவுடன் இளைய மகன் அந்த நொடியே தன் இல்லம் வந்துவிடுகின்றார். அதாவது, அவருடைய மனம் அந்த நொடியே இல்லத்திற்கு வந்துவிடுகின்றது. அதற்குப் பின்னர் வருவது அவருடைய உடல்தான்.

வீட்டுக்கு வருதல் என்பது இயேசு மற்றும் சீடர்களுடைய வாழ்வில் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

(அ) அவர்கள் பொது வாழ்க்கையிலிருந்து தனி வாழ்க்கைக்கு வருகின்றனர். அங்கே யாரும் யாரையும் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை. நம் வீட்டிற்குள் நாம் நாமாக இருக்கிறோம். நாம் அணியும் உடை, நாம் பேசும் பேச்சு, நாம் நடந்துகொள்ளும் முறை என எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. நாம் இயல்பாக இருக்கிறோம் நம் வீட்டில்.

(ஆ) சீடர்கள் இயேசுவோடு உரையாடும் வாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிகழ்வைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். வீட்டிற்கு வருகின்றனர் இயேசுவும் சீடர்களும். இயேசு சற்றே ஓய்வாக சுவற்றில் சாய்ந்து அமர்கின்றார். வருகின்ற வழியில் வாங்கி வந்த மீன்களைப் பேதுரு அலசிக் கொண்டிருக்கின்றார். யோவான் அந்த வீட்டில் உள்ள விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டே, ஒரு விளக்கின் திரியை மாற்றுகின்றார். யூதாசு அன்றைய நாளின் வரவு செலவு பார்க்கின்றார். பிலிப்பு, 'இதோ வருகிறேன்!' என்று சொல்லிவிட்டுத் தன் நண்பர்களைச் சந்திக்கச் செல்கின்றார். மற்றவர்கள் இயேசுவைச் சுற்றி அமர்கின்றனர். விளையாட்டும் கேலியுமாகத் தொடங்கும் உரையாடல் கேள்வியாக முடிகிறது: 'நீர் சொன்ன உவமையின் பொருள் என்ன?'

(இ) விளக்கம் கேட்கவும் விளக்கம் பெறவும் அவர்களால் முடிகிறது. விளக்கம் கேட்டல் ஒரு கலை என்றால், விளக்கம் சொல்லுதலும் ஒரு கலை. அதாவது, கேட்பவரின் அறியாமையைக் குத்திக் காட்டாமல், கேட்பவரைக் காயப்படுத்தாமல் விளக்கம் சொல்லுதல் வெகு சிலரால் மட்டுமே முடியும். இயேசு அந்தக் கலையைக் கற்றவராக இருக்கின்றார். தன் சீடர்களைக் கடிந்துகொள்ளாமல் விளக்கம் தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், 'ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போல ஆண்டவர் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்' என எழுதுகின்றார் ஆசிரியர். ஏறக்குறைய அதே போன்ற பரிவர்த்தனை இங்கே நடந்தேறுகிறது.

இந்த வாசகம் நமக்குக் கூறும் செய்தி என்ன?

ஒன்று, 'நான் என் வீட்டுக்கு எப்போதெல்லாம் திரும்புகிறேன்?' வீட்டுக்குத் திரும்பும் ஒருவர்தான் தன் வேர்களோடு நெருக்கமாக இருக்க முடியும்.

இரண்டு, வாழ்வின் நிகழ்வுகள் எனக்குப் புரியாத புதிராக இருக்கும்போது, என் தனிமையில் இயேசுவிடம் நான் பகிர்ந்துகொள்ளத் தயாரா?

மூன்று, அறிநிலையில் பின்தங்கி இருப்போருக்கும், விளக்கம் தேவைப்படுவோருக்கும் நான் எப்படி அறிவு புகட்டுகிறேன்?


1 comment:

  1. “ வீட்டுக்கு வருதல்”… யார் மனத்தையும் மகிழ்விக்கும் ஒரு சொல். முதலில் மனமும், பின்பு உடலும் வீடுவந்து சேர்வதே “ வீட்டுக்கு வருதல் என விளக்கம் சொல்லும் தந்தை இயேசு மற்றும் சீடர்கள் வாழ்வில் ஏற்படுத்திய முக்கியத்துவத்தை மட்டுமல்ல….நம் வாழ்விலும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டுமென்பதையும் கோடு காட்டுகிறார்.

    நாம் நாமாக,இயல்பாக இருப்பதும், இல்லத்தின் அப்போதையத் தேவைகளைப் புரிந்து கொண்டு அதைப் பங்கு போட்டு செய்வதும், ஒரு விஷயம் பற்றி விளக்கம் கேட்பவருக்கு காயம் ஏற்படுத்தாமல்…குத்திக்காட்டாமல் பதில் சொல்லுவதுமே நாம் வீட்டுக்கு வருதலின்….வீட்டில் இருத்தலின் சிறப்பு. அதில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமே!

    இந்தப் பதிவு அழகான செய்தியை மட்டுமல்ல…அதை நாம் வாழ்வாக்க வேண்டிய முறை பற்றியும் எடுத்துரைக்கிறது. ஆண்டவர் மோசேயிடம் முகமுமாய்ப் பேசியதுபோல் நாமும் நம்மிடம் விஷயம் கேட்டு வருபவரிடம் அவரைக் காயப்படுத்தாமல் அவர் மனம் குளிரும் வகையில் பேசவேண்டுமென்பதும்…… இதை சரியாக செய்ய முடிந்த ஒருவரால் தான் வீடு நோக்கியும்,தன் வேர்கள் நோக்கியும் திரும்ப முடியும் என்பதுவே இன்றைக்கு இறைவன் நமக்கு விடுக்கும் செய்தி.தந்தைக்கு நன்றிகள்!!!

    “விளக்கம் கேட்டல் ஒரு கலை என்றால், விளக்கம் சொல்லுதலும் ஒரு கலை”….. அருமை!

    ஒரு சாதாரண விஷயத்தை ஒரு அசாதாரண முறையில் மகிழ்ச்சி பொங்கும் செய்தியாகத் தரும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete