தமக்குள் சொல்தல்
ஒரு நாளில் நான் அதிகம் உரையாடும் நபர் நான்தான். அதாவது, நான் எழுந்தது முதல் தூங்குவது வரை, என் தூக்கத்தில்கூட, நான் என்னோடு உரையாடிக்கொண்டே இருக்கின்றேன். நாம் எல்லாரும் நமக்கு நாமேதான் பல நேரங்களில் உரையாடிக்கொண்டிருக்கின்றோம். என்னோடு தங்கியிருந்த அருள்தந்தை ஒருவர் அடிக்கடி, 'எனக்கு குரல் கேட்கிறது' என்பார். எல்லாருக்கும் குரல் கேட்கிறது.
சில நேரங்களில் நமக்கு நாமே குரலாக ஒலிக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும், முதல் வாசகத்திலும் இருவர் தங்களுக்குத் தாங்களே உரையாடிக்கொள்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், இரத்தப் போக்குடைய பெண் ஒருவர், 'நான் இயேசுவுடைய ஆடையைத் தொட்டாலே போதும். நலம் பெறுவேன்' என்று தனக்குள் சொல்லிக்கொள்கின்றார். முதல் வாசகத்தில், யாக்கோபு, 'உண்மையாகவே இந்த இடத்தில் ஆண்டவர் இருக்கிறார். நானோ இதை அறியாதிருந்தேன்' என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்கின்றார்.
உளவியலில் தன்னாலோசனை (auto-suggestion) என்று ஒன்று உண்டு. அதாவது, எனக்கு நானே உற்சாகம் தந்துகொள்வது. அல்லது என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்வது. மூளையே மூளைக்குச் சொல்வதாக இருக்கலாம். அல்லது மனம் மூளைக்குச் சொல்வதாக இருக்கலாம். இரண்டுமே மூளையில்தான் நடந்தேறுகின்றன.
இது ஒரு கட்டடம் கட்டுவது போல. கட்டடம் வெளியே உருவாகும் முன் அது பொறியாளர் அல்லது வடிவமைப்பாளரின் உள்ளத்தில் முதலில் உருவாகின்றது. இயேசு தன்னைக் குணமாக்குதலை முதலில் தன் உள்ளத்தில் காண்கிறார் பெண். கடவுள் பெத்தேலில் இருப்பதை முதலில் தன் உள்ளத்தில் காண்கிறார் யாக்கோபு.
நம் வாழ்க்கையில் நம்மோடு இறுதிவரை பயணம் செய்வது நாம் மட்டும்தான். நம் இன்ப துன்பம், வெறுமை நிறைவு அனைத்தையும் அறிந்தது நம் மனம் மட்டும்தான். ஆதலால், ஜெர்மானிய தத்துவ இயலாளர் ஷோப்பன்ஹாவர், 'நம் மனம் செல்லும் வழியில் மட்டுமே நம்மால் செல்ல முடியும்' என்கிறார்.
இளைய மகன் தமக்குள் பேசியதால், அறிவுத்தெளிவு பெறுகின்றார். தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார்.
தினமும் கொஞ்ச நேரம் தனியே அமர்ந்து நமக்கு நாமே பேசுதல் நலம்.
அந்தத் தனிமைத்தவமே நம் இறையனுபவம். யாக்கோபு பெற்ற முதல் இறையனுபவம் அவர் தன் தந்தையின் இல்லத்திலிருந்து தப்பி வந்த தனிமையிலும் குளிரிலும் இரவிலும் நடக்கிறது. இரத்தப்போக்குடைய பெண் பெற்ற அனுபவமும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் நடந்தேறுகிறது. கூட்டத்திலும்கூட தனியாக இருக்கிறார் அந்தப் பெண்.
தனிமை ஏற்றலும் தனக்குள் பேசுதலும் இறையனுபவத்திற்கான இனிய படிகள்.
நம் அன்றாட வாழ்வின் நிம்மதிக்குத் துணை நிற்க க் கூடிய ஒரு பதிவு. “ஆற்றுப்படுத்துதல்”….அழகான…அர்த்தமுள்ள ஒரு சொல்.என் மனம் சோர்ந்து போன நேரங்களில் என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்வதை விட்டு அவரையும்,இவரையும் துணைக்கழைப்பது மடமை என்கின்றன இன்றைய வாசகங்கள்.”நான் இயேசுவுடைய ஆடையைத் தொட்டாலே போதும்; நலமடைவேன்” என்று தன் மனம் சொன்னபடி செய்த இரத்தப்போக்குடைய பெண்ணும், தனக்குள் பேசியதால் அறிவு தெளிவு பெற்று தன் தந்தையின் இல்லம் நோக்கிச் சென்ற இளைய மகனும் நம் மனம் செல்லும் வழியில் மட்டுமே நம்மால் செல்ல முடியும் என்பதற்கு முன்னுதாரணமாய் நிற்கிறார்கள்.இறைவன் அங்கே இருக்கிறார்…இங்கே இருக்கிறார் என்பதைத் தாண்டி “ அவர் என்னுள் உறைகிறார்; அவர் குரல் எனக்குக் கேட்கிறது” என்று நம்பினால் “ தனிமை” எனும் இறையனுபவத்தை என்னாலும் உணரமுடியும் என்று ஓங்கிச் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்.இன்றையப் பதிவு ஒரு “ Need of the hour”….
ReplyDelete