இன்றைய (9 ஜூலை 2021) நற்செய்தி (மத் 10:16-23)இறுதிவரை மனவுறுதி
'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே குடியிரு.
நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்.
உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.'
இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 37) வரிகள் இன்றைய வாசகங்களின் பொருளை மிக அழகாக விளக்குகின்றது. இயேசுவால் பணிக்கு அனுப்பப்படும் திருத்தூதர்கள் இயேசுவின் காலத்திலும், இயேசுவின் காலத்திற்குப் பின்னும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்ப்புகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் எப்படி பதிலிறுப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இன்றைய நற்செய்தியின் கருத்துரு இயேசுவின் காலத்திற்குப் பின்னர் மத்தேயு குழுமத்தில் எழுந்த பிரச்சினைகளைப் பற்றியதாகவே இருக்கிறது.
இயேசுவின் காலத்திற்குப் பின்னரே அவருடைய திருத்தூதர்கள் மிக அதிகமான துன்பங்களை எதிர்கொண்டனர். புதிய நம்பிக்கையாளர்களும் துன்பங்களுக்கு ஆளாகினர். இவற்றைப் பற்றி இயேசுவே முன்னுரைத்ததாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.
'ஓநாய்களிடையே ஆடுகள்' என்பதுதான் திருத்தூதர்களின் உருவகம். அதாவது, முற்றிலுமான கையறு நிலையில் சீடர்கள் தங்கள் பணியை எதிர்கொள்ள வேண்டும். ஓநாய்களிடமிருந்து அவர்கள் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. சீடர்கள் முன்மதி மற்றும் கபடற்ற தன்மை கொண்டிருத்தல் வேண்டும்.
ஆக, பிரச்சினைகள் இருக்காது என்ற போலியான வாக்குறுதியை இயேசு கொடுக்கவில்லை. மாறாக, பிரச்சினைகள் இருக்கும் என்பது எதார்த்தம் என்கிறார். தூய ஆவியாரின் உடனிருப்பு இருக்கும் என்ற ஆறுதலை அவர்களுக்கு வழங்குகிறார்.
'இறுதிவரை மனவுறுதி' என்பதுதான் இயேசுவின் இறுதிப்பாடமாக இருக்கிறது.
நம் மனவுறுதியைப் பாதிக்கக்கூடிய காரணிகள் அல்லது எதிர்மறை உணர்வுகள் மூன்று: ஒன்று, தாழ்வு மனப்பான்மை, இரண்டு, பயம், மூன்று, குற்றவுணர்வு.
திருத்தூதர்கள் அல்லது மத்தேயுவின் குழும உறுப்பினர்கள் மேற்காணும் எதிர்மறை உணர்வுகளால் மனவுறுதியை இழந்திருப்பார்கள். அந்த நேரத்தில்தான் மத்தேயு அவர்களுக்கு ஊக்கம் தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், யாக்கோபு தன் மகன் யோசேப்பைக் கண்டுகொள்கின்றார்:
'இப்போது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!'
மேற்காணும் வார்த்தைகளில் யாக்கோபின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவர் அனுபவித்த துன்பமும் தெரிகிறது.
தன் மகனைக் காண்போம் என்ற எண்ணம் அல்ல, மாறாக, தன் இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்ற மனவுறுதியே அவரைத் தன் மகனின் மடியில் சேர்த்தது.
“ இப்போது நான் சாகத்தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்….” நம்பிக்கையும்,மனவுறுதியும் சேர்ந்த ஒரு தந்தையின் குணாதிசயமே அவரை அவரின் மகனின் மடியில் சேர்த்தது…. ஏக்கமும்,எதிர்பார்ப்பும்,துன்பமும் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்த ஒரு தந்தையின் வார்த்தைகள்.
ReplyDeleteஓநாய்களிடையே ஆடுகளாகத் தான் அனுப்பும் திருத்தூதர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களாக கபடற்ற தன்மை மற்றும் முன்மதியைக் குறிப்பிடுகிறார் இயேசு. தாழ்வு மனப்பான்மை,பயம் மற்றும் குற்ற உணர்வைத் தவிர்த்த ஒரு வாழ்க்கையைத் தன் சீடர்கள் வாழ்வார்களேயானால் அவர்களின் கையறு நிலையிலும் தூய ஆவியின் உடனிருப்பு அவர்களோடு பயணிக்கும் என்கிறார்.
“ இறுதி வரை மனவுறுதி” ……சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களுக்காக இறுதி வரை மனவுறுதியுடன் போராடி, அண்மையில் தன் இன்னுயிரையும் நீத்த “தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி” அவர்களை நினைவுபடுத்திய தந்தைக்கு நன்றிகள்!!!