பெருஞ்சுமை
நாம் விருப்பப்பட்டுச் செய்தால் அது நம் வாழ்வின் நோக்கமாகவும், விருப்பமின்றிச் செய்தால் அது நம் வாழ்வின் சுமையாகவும் மாறிவிடுகிறது என்பது எதார்த்தம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தன்னிடம் வருமாறு அழைக்கின்றார் இயேசு. 'சுமை' என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? என்ற கேள்விக்கு பல விடைகள் தரப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்திலிருந்த உரோமை அரசின் ஆதிக்கம் என்னும் அரசியல் சுமை, அதிகமான வரிவிதிப்பு மற்றும் வறுமையால் நாளுக்கு நாள் அதிகரித்த பொருளாதார சுமை, மதத் தலைவர்கள் மக்கள்மேல் ஏற்றி வைத்த மதம்சார் கடமைகள் என்னும் சமயம்சார் சுமை என பல விடைகள் தரப்படுகின்றன. சில அருங்கொடை இல்லங்களில், 'பெருஞ்சுமை' என்பது பாவச்சுமை என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், நாம் விரும்பாத ஒன்று, ஆனால் நம்மை அழுத்துகின்ற ஒன்று சுமை எனக் கருதப்படுகிறது.
இயேசு ஓர் ஆறுதலும் ஒரு பாடமும் தருகின்றார்:
'நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்பது ஆறுதல்.
'என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், கனிவையும் மனத்தாழ்மையையும்' என்பது பாடம்.
சுமைகளை நீக்குவதாக இயேசு வாக்களிக்கவில்லை. ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு நாம் பெரிய மூடை ஒன்றைத் தூக்கிச் செல்கின்றோம். செல்லும் வழியில் ஒரு மரம் நிழல் தந்தால், அல்லது ஒரு நபர் தண்ணீர் தந்தால் அது இளைப்பாறுதல். அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடியும். சுமையை நாம்தான் சுமக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இயேசுவின் சிலுவைப் பாதையில் அவரோடு உடன் வந்த அவருடைய தாய், சீரேன் ஊரைச் சார்ந்த சீமோன், வெரோணிக்கா, எருசலேம் நகர்ப் பெண்கள் இவர்கள் அனைவரும் இளைப்பாறுதல்கள். அவர்கள் இளைப்பாறுதல் தருவார்களே அன்றி சுமையைக் குறைக்கமாட்டார்கள். ஆக, சுமைகளை நாம்தான் சுமக்க வேண்டும். வாழ்வின் சுமைகளிலிருந்து நமக்கு விதிவிலக்கு கிடையாது.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமையை வரையறுக்கிறது. சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் இதை மிக அழகாக வரையறுக்கிறார்: 'கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர் முதல் முரட்டுத்துணி உடுத்தியோர் வரை எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவு பற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு' (காண். சீஞா 40:4). மேற்காணும் எதிர்மறை எண்ணங்கள்கூட நாம் சுமக்க வேண்டிய சுமைகளே.
இயேசுவின் இளைப்பாறுதலைக் கண்டடைய நாம் இரண்டு விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்: (அ) கனிவு. (ஆ) மனத்தாழ்மை.
'கனிவு' அல்லது 'இரக்கம்' நமக்கு நாமே முதலில் நாம் காட்ட வேண்டியது. அதாவது, நம்மேல் கோபம் இல்லாத நிலையே கனிவு. கோபம் இருக்கின்ற இடத்தில் கனிவுக்கு இடமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னைக் கோபமின்றி ஏற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பிறந்த ஒரே குற்றத்திற்காக நான் பெட்ரோல் லிட்டருக்கு 104 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், என்மேல் கோபம் இல்லாமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. ஏற்றுக்கொள்வது என்பது இங்கே பொறுத்துக்கொள்வது அல்ல. மாறாக, 'இதுதான் எதார்த்தம்' எனக் கோபமின்றி எதிர்கொள்வது.
'மனத்தாழ்மை' என்பது 'எனக்கும் இது வரலாம்! எனக்கும் இது வரும்!' என எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது. 'அருள்பணியாளராக இருக்கும் எனக்கு எல்லாரும் வணக்கம் சொல்ல வேண்டும்' என நான் நினைத்தால், என் அருள்பணிநிலையை முன்வைத்து நான் என்னையே உயர்வாகக் கருதுகிறேன். ஆனால், எதார்த்தம் அப்படி இருக்கத் தேவையில்லை. எதுவும் எனக்கு நேரலாம் என்று அன்றாட எதார்த்தத்தை நான் எதிர்கொள்வது மனத்தாழ்மை.
இந்த இரண்டும் வந்துவிட்டால் எதுவும் சுமையாகத் தெரிவதில்லை.
என்னை ஏற்றுக்கொள்வதில் கனிவு.
என்னை அடுத்தவரில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் மனத்தாழ்மை.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அனுபவித்த சுமைக்கு இளைப்பாறுதலாக மோசேயை அனுப்புகின்றார் ஆண்டவராகிய கடவுள். பாரவோனுக்குப் பணிந்திருந்த அவர்கள் இனி ஆண்டவராகிய கடவுளுக்குப் பணிந்திருப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சுமையே.
ஒரு சுமையைச் சுமந்த அவர்கள் இனி மற்றொரு சுமையைச் சுமக்க வேண்டும்.
சுமைகள் நீங்குவதில்லை.
இளைப்பாறுதலும் நீங்குவதில்லை.
வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் சுமக்க வேண்டிய “சுமைகள்”…அந்த சுமைகளை நாம் சுமக்க நமக்கு “இளைப்பாறுதல்களாக” வரும் நல் உள்ளங்கள் பற்றிச் சொல்கின்றன இன்றைய வாசகங்கள்.நம் சுமைகளை இலகுவாக ஏற்கவும்,இயேசுவின் இளைப்பாறுதலை நம்மில் கண்டடையவும் தேவை வாழ்வின் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதும், என்னை அடுத்தவரில் ஒருவராகப் பார்ப்பதுமே என்பதையும் தாண்டி நாமும் நம் வாழ்வில் நம்மை அடுத்திருப்போருக்கு ஒரு சீமோன்…ஒரு வெரோனிக்கா…..எருசலேம் பெண்கள் போன்று இருக்கவும் முடியும் என்பது இன்றையப் பதிவு நம்முன் வைக்கும் பாடம். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் நம் சுமையோடு, அடுத்தவரின் சுமையையும் சேர்த்து சுமக்கும் எதார்த்தம் நம் வாழ்க்கையை சிதைத்து விடும். தந்தையின் கூற்றுப்படி “ சுமைகளும் நீங்குவதில்லை; இளைப்பாறுதலும் நீங்குவதில்லை” எனும் எதார்த்தங்களை உணர்ந்தவர்களுக்கே “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” எனும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் தரும்.
ReplyDeleteநானும் என்னை அடுத்திருப்போருக்கு ஒரு “ இளைப்பாறுதலாக இருக்க முடியும்” எனும் நம்பிக்கையின் வார்த்தைகள் நம் வாழ்வை வளமாக்கட்டும்!…..தந்தைக்கு நன்றிகள்!!!
'அருள்பணியாளராக இருக்கும் எனக்கு எல்லாரும் வணக்கம் சொல்ல வேண்டும்' என நான் நினைத்தால், என் அருள்பணிநிலையை முன்வைத்து நான் என்னையே உயர்வாகக் கருதுகிறேன். ஆனால், எதார்த்தம் அப்படி இருக்கத் தேவையில்லை.
ReplyDelete// I was following my parish priest to the sanctuary. He opened the sanctuary door and waited for me to get in... தூக்கிவாரிப் போட்டது was the right word to describe how I felt.
'கனிவு' அல்லது 'இரக்கம்' நமக்கு நாமே முதலில் நாம் காட்ட வேண்டியது. அதாவது, நம்மேல் கோபம் இல்லாத நிலையே கனிவு.
ReplyDelete// This is so true. Sometimes, I feel angry on myself on the way I handled things awkwardly. I haven't realized that s making things worser.