Tuesday, July 27, 2021

முழுமையாக முதன்மையாக

இன்றைய (28 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:44-46)

முழுமையாக முதன்மையாக

விண்ணரசு பற்றிய உவமைகளைத் தொடர்கின்ற இயேசு, விண்ணரசை புதையல் மற்றும் முத்துக்கு ஒப்பிடுகின்றார்.

நிலத்தில் புதையல் இருப்பதைக் காண்கிறார் ஒருவர். புதையலை அப்படியே எடுத்துச் செல்வதை விடுத்து அதை மீண்டும் புதைத்துவிட்டுச் சென்று, தமக்குள்ள அனைத்தையும் விற்று நிலத்தை வாங்கிக்கொள்கின்றார். இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம். 'புதையலை மட்டும் அவர் எடுத்துச் சென்றிருந்தால் என்ன?' இயேசுவின் சமகாலத்தில் நிலங்களில் நிறையப் புதையல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது, நாடுகடத்தல், போர், வன்முறை, திருட்டு ஆகியவற்றுக்கு அஞ்சிய மக்கள் தங்களிடம் உள்ள பணம் (நாணயம்) மற்றும் அணிகலன்களைப் பானையில் வைத்து நிலத்தில் புதைப்பது வழக்கம். அப்படிப் புதைக்கப்பட்ட பல காலப்போக்கில் மறக்கப்பட்டன. அல்லது மறைந்து போயின. நிலத்தை உழும்போது புதையல்கள் பெரும்பாலும் கண்டெடுக்கப்பட்டன. நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற நபரின் ஏரில் புதையல் தென்பட்டவுடன், அவர் அதை எடுத்துக்கொண்டால் அது திருட்டு என்று கருதப்படும். ஏனெனில், நிலம் வேறொருவருக்கு உரியது. ஆக, உழுபவர் என்ன செய்கிறார் தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்று அந்த நிலத்தையும், பின்னர் அந்தப் புதையலையும் சொந்தமாக்கிக் கொள்கின்றார்.

ஆக, இறையாட்சி என்பது திருடப்பட வேண்டியது அல்ல. மாறாக, உரிமையாக்கிக்கொள்ள வேண்டியது. அதை உரிமையாக்கிக் கொள்ள ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாக இழக்க முன்வர வேண்டும். நிலத்தை உழுபவர் அந்த நிலத்தை உரிமையாக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும்.

இரண்டாவது, விலையுயர்ந்த முத்து.

முத்துக்களைச் சேகரிப்பதையும் விற்பதையும் சில வணிகர்கள் முன்னெடுத்தனர். நல்முத்துக்களை தேடிச் செல்கின்ற வணிகர் அதைக் கண்டவுடன், தன்னிடம் உள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கின்றார். அதாவது, மற்ற முத்துக்களை அவர் இழந்தால்தான் இந்த முத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த முத்து அவருக்கு மதிப்புக்குரியதாக இருக்கும். ஆக, மதிப்புக்குரிய ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளவும், முதன்மையாக்கிக்கொள்ளவும், தன்னுடைய மற்ற முதன்மைகளை அவர் இழக்க முன்வர வேண்டும்.

ஆக, விண்ணரசு முழுமையாக உரிமையாக்கப்படவும், முதன்மையானதாகத் தெரிந்துகொள்ளப்படவும் வேண்டும்.

அப்படி என்றால், பாதிப் பாதியான அணுகுமுறையும், பலவற்றில் ஒன்ற என்ற மனநிலையும் இறையாட்சிக்கு ஏற்ற மனநிலை அல்ல.

முழுமையாக உரிமையாக்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? ஒருவேளை புதையல் வெறும் செல்லாக் காசுகளாக இருந்தால் என்ன ஆவது? என்ற பயம்.

முதன்மையாக உரிமையாக்கிக்கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? மதிப்புக்குரிய முத்தைத் தேடிச் செல்லாமல் இருப்பதே போதும் என்ற தேக்க மனநிலை கொள்வது. அல்லது மதிப்புக்குரிய ஒன்றைக் கண்டாலும் மதிப்பற்றவற்றை இழக்கும் ஆர்வமும் துணிவும் இல்லாமல் இருப்பது.

ஆனால்,

நாம் விட்ட வாய்ப்புகளை எவரோ எங்கோ தனதாக்கிக்கொள்கிறார் என்பதே உண்மை.

இன்றும், முழுமையாகவும் முதன்மையாகவும் இறையாட்சி உரிமையாக்கிக்கொள்ளப்படுகிறது.

2 comments:

  1. “ இறையாட்சி”….. புதையலைத் தன்னுள் புதைந்து வைத்துள்ள நிலத்தோடும்,கிடைத்தற்கரிய நல் முத்தோடும் ஒப்பிடுகிறார் இயேசு.தான் உழும் நிலத்தில் புதையல் இருப்பதாக உணரும் ஒருவர், தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்றேனும் அந்நிலத்தை வாங்கவும்,நல் முத்தைத் தேடிச்செல்லும் ஒருவர் அதைக்கண்டவுடன் தனக்குள்ள யாவையும் விற்று அதை வாங்கவும் முன் வருகிறார் எனில் அவர்களுக்கு அந்தப் புதையல் மற்றும் முத்தின் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இன்றையப்பதிவு.அழிவுக்குரிய இந்த விஷயங்களுக்கே இத்தனை மதிப்பெனில் அழியாத்தன்மைகொண்ட “ இறையாட்சியை” ஒருவர் முழுமையாகவும்,முதன்மையாகவும் ஆக்கிக்கொள்ள எத்துணை ஆர்வம் காட்ட வேண்டும்! ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி அதை உடனே செயல் படுத்தவும் வேண்டும். நேரம் கடத்தினால் அதை அவர் கோட்டை விடுவது மட்டுமின்றி, அதில் ஆர்வமுள்ள இன்னொருவருக்கு அது உரிமைச் சொத்தாகிவிடும். வேகமும்,விவேகமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இறையாட்சியைத் தனதாக்க முடியும்! என்னிடம் இருப்பதென்ன? நான் இழக்க விரும்புவதென்ன? எதை “என்னதாக்க” எதை விற்கத் துணிகிறேன்? இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரிந்த ஒருவரால் மட்டுமே “ இறையாட்சியை”த் தனதாக்க முடியுமென ஆரூடம் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete