Monday, July 19, 2021

சீடத்துவத்தின் மேன்மை

இன்றைய (20 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:46-50)

சீடத்துவத்தின் மேன்மை

யோவான் நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களை, 'நண்பர்கள்' என அழைக்கின்றார்.

மத்தேயு நற்செய்தியில், அவர்களை, 'தாய் மற்றும் சகோதரர்கள்' என அழைக்கின்றார்.

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக ஒருவர் இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்கள் என ஆக முடியும். மத்தேயு நற்செய்தியில் தந்தையின் திருவுளம் நிறைவேற்றுதல் சீடத்துவத்தின் மிக முக்கியமான கருத்துரு ஆகும்.

திருவுளம் நிறைவேற்றுதல் என்றால் என்ன?

இது மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது.

(அ) திருவுளம் அறிதல்

பல நேரங்களில் நம் உள்ளத்தில் எழுவதே நமக்குக் குழப்பமாக இருக்கிறது. இப்படி இருக்க, இறைவனின் திருவுளம் எது என்பதை எப்படி அறிவது? சில நேரங்களில், 'இதுதான் திருவுளம்' என்று நம் மூளை நம்மை ஏமாற்றுகிறது.

(ஆ) நம் உளம் மறுத்தல்

அதாவது, ஒரே நேரத்தில் நான் இரு கட்டளைகளை ஏற்க முடியாது. 'சாப்பிடு!' என்ற ஒரு கட்டளையும், 'சாப்பிடாதே!' என்ற இன்னொரு கட்டளையும் ஒரே நேரத்தில் மூளையிலிருந்து வந்தால் உடல் எதைச் செயல்படுத்த முடியும்? என் உளமும் இறைவனின் திருவுளமும் எதிரும் புதிருமாக இருந்தால், நான் இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது.

(இ) திருவுளத்தை நிறைவேற்றுதல்

நிறைவேற்றாத எண்ணங்கள் எல்லாம் வெறும் ஆசைகளே. ஆக, எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்போதுதான் திருவுளம் நிறைவேறுகிறது.

மொத்தத்தில், இறைவனின் திருவுளம் நிறைவேற்றுதல் என்பது நாமாக விரும்பி நம்மேல் ஏற்கின்ற தெரிவு. இந்தத் தெரிவுக்காக நாம் இழக்க வேண்டியவை நிறைய இருக்கலாம். ஆனால், பெறப் போவது இறைவனின் உடன்பிறப்பாளர் என்ற நிலை.

1 comment:

  1. ‘இறைவனின் திருவுளம் நிறைவேற்றுவதே சீடத்துவம்’ என்று சொல்ல வருகிறது இன்றையப் பதிவு. “ உன் எண்ணங்கள் என் எண்ணங்கள் அல்ல….” என்கிறது விவிலியம். இதுவா…அதுவா என்று வருகையில் எதைத்தெரிவு செய்வது? என் அனுபவம்…. எந்த விஷயம் நம் உடலுக்கு வலியையும்,உள்ளத்திற்கு சுகத்தையும் தருகிறதோ அதுவே இறைவனின் திருவுளம். கல்லும் முள்ளும் நிறைந்ததாலேயே வலி.நாமாகவே தெரிவு செய்வதால் இழத்தல்கள் அதிகம் இருப்பினும் நாம் பெறப்போவது “ இறைவனின் உடன்பிறப்பாளர் என்ற நிலை” என்கிறார் தந்தை. எதற்காக எதை இழக்கிறோம் என்பதை சிந்தித்தால் இழப்பது கூட சுகமாகும்.

    நாளும் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம்! சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete