திருக்குடும்பத் திருவிழா
I. சீராக்கின் ஞானம் 3:2-7,12-14 II. கொலோசையர் 3:12-21 III. லூக்கா 2:22-40
ஒன்றும் இரண்டும் ஐந்து
'மேன்மையான மனிதர்களின் ஏழு பண்புகள்' என்ற நூலின் ஆசிரியர் ஸ்டீபன் கோவே அவர்கள், 'சினர்ஜி' ('கூட்டாற்றல்' அல்லது 'கூட்டொருங்கியக்கம்') என்பதை ஆறாவது பண்பாகக் குறிப்பிடுகின்றார். இந்த வார்த்தையின் பொருள் என்ன? 'சினர்ஜி' என்ற பெயர்ச்சொல், 'சுன்' மற்றும் 'எர்கவோ' ('இணை' மற்றும் 'செயலாற்றுதல்') என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. அதாவது, 'ஒன்றும் ஒன்றும் மூன்று' என்பதுதான் இதன் பொருள். அது எப்படி? அதாவது, இரு ஆற்றல்கள் இணையும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் கூட்டுத்தொகையை விட அதிகம். பவுல் தன் திருமுகத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் (கூட்டொருங்கியக்கம்) செய்கிறார்' (காண். உரோ 8:28). நான் கடவுளை அன்பு செய்கிறேன். அவர் எனக்கு நன்மை செய்கிறார். இங்கே நானும், கடவுளும் இரு ஆற்றல்கள். ஆனால், இந்த இரு ஆற்றல்களும் இணையும்போது என் ஆற்றல் பன்மடங்கு பெரிதாகிறது.
ஓர் உருவகம் வழியாகப் புரிந்துகொள்வோம். ஒரு வண்டியில் பூட்டப்பட்ட இரு மாடுகள் செயலாற்றி அந்த வண்டியை இழுக்கின்றன. அவை இணைந்து செயல்படும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் தனித்தனி ஆற்றலின் கூட்டுத்தொகையைக் விட அதிகமாக இருக்கிறது. 10 பேர் கொண்ட கிரிக்கெட் அணி ஒன்றில் 10 பேரின் தனித்தனி ஆற்றலால் அந்த அணி வெல்வதில்லை. மாறாக, அணியின் 10 பேரும் தங்கள் ஆற்றல்களை ஒருவர் மற்றவரோடு இணைத்துக்கொள்வதால்தான் அங்கே வெற்றி கிடைக்கிறது.
இன்று, யோசேப்பு-மரியா-இயேசு திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
'ஆண்' என்ற 'ஒன்றும்', 'பெண்' என்ற 'இரண்டும்' இணையும்போது அங்கே உருவாகும் ஆற்றல் 'ஐந்து' என இருக்கிறது என்று இன்றைய இறைவார்;த்தை வழிபாடு நமக்குச் சொல்கிறது. ஏனெனில், மனிதர்கள் குடும்பத்தை உருவாக்குகின்றனர். இறைவனே அதைத் திருக்குடும்பம் ஆக்குகின்றார்.
குடிலின் நடுவே பாலன் இயேசு படுத்திருக்க, அவரின் வலப்புறமும் இடப்புறமும் அவரின் கண்கள்மேல் தங்கள் கண்களைப் பதித்தவாறு யோசேப்பும் மரியாவும் நிற்கின்றனர். இந்த மூன்று பேரையும் ஒரு சேரப் பார்க்கும் நம் கண்கள் நம்மை அறியாமலேயே அவர்களின் கண்களில் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'ஏசு பென் சீராக்' என்னும் யூத ஞானியே இதன் ஆசிரியர். எபிரேயத்தில் எழுதப்பட்ட நூலை அவருடைய பேரன் சீராக் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கிறார். நிறைய அறிவுரைப் பகுதிகள் காணக்கிடக்கும் இந்நூல் முழுக்க முழுக்க குடும்ப ஞானம் பற்றியதாகவும், குடும்ப வாழ்வுக்குத் தேவையான அறநெறிகள் கொண்டதாகவும் இருக்கிறது. 'உன் தந்தை, தாயை மதித்து நட' என்னும் நான்காவது கட்டளையின் வாழ்வியல் நீட்சியாக இருக்கிறது இன்றைய வாசகப் பகுதி. கீழ்ப்படிதல் என்பதை வெறும் கட்டளையாக அல்லாமல் மதிப்புநிறை மனப்பாங்காகவே மாற்றிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் சீராக். பெற்றோரை மதித்தல் நமக்கு இரண்டுநிலைகளில் ஆசீராக அமைகின்றது: (அ) அது நீண்ட ஆயுளை நமக்குத் தருகிறது. இதை நாம் அப்படியே நேரிடைப் பொருளில் எடுக்கத் தேவையில்லை. 'நீண்ட ஆயுள்' என்பது உச்சகட்ட ஆசீர். ஏனெனில், மற்ற அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். நாம் வாழும் காலத்தை நீட்ட ஆண்டவரால் மட்டுமே இயலும். (ஆ) நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நம் இறைவேண்டல்கள் கேட்கப்படும். பெற்றோரை மதிப்பவர்கள் பாவம் செய்வதில்லை. ஏனெனில், தான் செய்வதை தன் தந்தை அல்லது தாய் ஏற்றுக்கொள்வாரா என்று நான் ஒரு நிமிடம் யோசித்தால் அந்தச் செயலைச் செய்ய மாட்டேன். ஆக, பாவம் தானாகவே குறைந்துவிடுகிறது. மேலும், பெற்றோரிடம் ஒருவர் இணக்கம் கொண்டிருப்பதால், அங்கே இறைவன் உடனிருக்க, நம் இறைவேண்டல்கள் கேட்கப்படுகின்றன.
மேலும், பெற்றோருக்குரிய மதிப்பு அவர்கள் செயலாற்றும் நிலையில் இருப்பதால் அல்ல, மாறாக, அவர்களுடைய முதுமையிலும், அவர்களுக்கு உடல் மற்றும் அறிவாற்றல் குன்றும்போதும் இருக்க வேண்டும். மேலும், அது நிபந்தனையற்றதாக இருத்தல் வேண்டும்.
பெற்றோரைக் கொண்டாடுவதால் ஒருவர் தன் கூட்டாற்றலை அதிகரித்துக்கொள்கின்றார். எனக்கு உடலில் ஆற்றல் இருக்க, என் அப்பாவுக்கு அனுபவத்தில் ஆற்றல் இருக்க, என் அம்மாவுக்கு ஆன்மிகத்தில் ஆற்றல் இருக்க, இம்மூன்று ஆற்றல்களும் இணைந்தால் வல்லசெயல் நடந்தேறுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:12-21), இறைமக்களுக்குரிய அறிவுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொலோசை நகரத் திருஅவை மக்கள் பெற்றிருக்கின்ற அழைத்தலின் மேன்மையை அவர்களுக்கு நினைவூட்டுகின்ற பவுல், 'இறைமக்களுக்குரிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால்' அவர்கள் தங்களை அணிசெய்ய அழைப்பு விடுக்கின்றார். 'அணிசெய்தல்' அல்லது 'உடுத்திக்கொள்தல்' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் பவுல். ஏனெனில், இறைமக்கள் சமூகமே ஒரு குடும்பம்தான்.
தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் குடும்பத்தில் திகழ வேண்டிய அறநெறி பற்றி எழுதுகின்றார் பவுல். 'பெண்கள் ஆண்களுக்குப் பணிந்திருக்க வேண்டும்' என்றும், 'ஆண்கள் பெண்களை அன்பு செய்ய வேண்டும்' என்றும், 'பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார் பவுல். இங்கே பணிதலும், கீழ்ப்படிதலும் அடிமைத்தனப் பண்புகள் என எண்ணுதல் தவறு.
இறைமக்கள் குடும்பம் நற்பண்புகளால் தன்னை அணிசெய்யும்போதும், தனிநபர் குடும்பங்கள் பணிதல், அன்பு, மற்றும் கீழ்ப்படிதல் கொண்டிருக்கும்போதும் அங்கே கூட்டொருங்கியக்கம் சாத்தியமாகிறது.
நற்செய்தி வாசகத்தில், திருக்குடும்பம் முதன்முதலாக எருசலேம் செல்லும் நிகழ்வை வாசிக்கின்றோம். மூன்று காரணங்களுக்காக அவர்கள் எருசலேம் செல்கின்றனர்: (அ) குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க - ஏனெனில், தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு உரியது. எனவே, நாம் விலைகொடுத்து அதை மீட்டுக்கொள்ள வேண்டும். விலையாக ஒரு இளம் ஆடு அல்லது இரு மாடப்புறாக்கள் கொடுக்க வேண்டும். (ஆ) தாயின் தூய்மைச் சடங்கு நிறைவேற்ற - ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் 40 நாள்கள் தீட்டாக இருக்கிறார். அவர் 40 நாள்களுக்குப் பின் தன்னையே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் - பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 80 நாள்கள் தீட்டு என்கிறது மோசேயின் சட்டம். (இ) குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய - விருத்தசேதனம் என்பது உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது.
இயேசுவின் திருக்குடும்பம், இறைவனின் குடும்பத்திலிருந்த சிமியோன் மற்றும் அன்னாவை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கிறது. இந்நிகழ்வில், இயேசுவின் பெற்றோர் ஆண்டவரின் திருச்சட்டத்துக்குப் பணிந்து நடப்பவர்களாகவும், குழந்தை இயேசு, கடவுளுக்கு உகந்தவராகவும் இருக்கிறார்.
இவ்வாறாக, திருக்குடும்பம் இறைவனின், இறைவனின் அடியவர்களின் கூட்டாற்றலின் இயங்குதளமாக இருக்கிறது.
திருக்குடும்பத் திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் குடும்பம் நம் வேர்கள்
நம் குடும்பத்தில்தான் நம் கால்கள் நிலைபெற்று நிற்கின்றன. அங்கே நாம் வேர்விட்டு நிற்கின்றோம். நம் வேர்கள் கசப்பானதாக, பார்ப்பதற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் அவை இல்லையேல் நாம் இல்லை. அவற்றால் நாம் வந்தோம், வளர்ந்தோம், ஊட்டம் பெற்றோம், நலம் பெற்றோம். நம் குடும்பம் என்னும் வேர்களுக்காகவும், நாம் வளர, வளர நம்மை அணைத்துக்கொண்ட குடும்பங்களுக்காகவும், நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களுக்காகவும், இறைச்சமூகம் என்னும் குடும்பங்களுக்காக நன்றி கூறுவோம் இன்று. தொடர்ந்து, நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் நாம் கற்றுக்கொண்ட அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பண்பை எடுத்து அதை நம் வாழ்வாக்க முயல்வோம். அப்பாவின் நேர்மை அல்லது கடின உழைப்பு, அம்மாவின் தியாகம் அல்லது கனிவு, சகோதரியின் குழந்தை உள்ளம் அல்லது துடிப்பு, சகோதரரின் உற்சாகம் அல்லது துணிச்சல் என எண்ணிப் பார்த்தல் சிறப்பு.
(ஆ) வலுவற்ற நிலையில் தாங்குவோம்
நம் அப்பா மற்றும் அம்மாவின் வலுவின்மை எது என்று சற்று நேரம் யோசிப்போம். நோய், முதுமை, ஆற்றல் இழப்பு, பொருளாதார ஏழ்மை, தனிமை, வறுமை, சோர்வு இப்படி பல்வேறு துன்பங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவற்றை அவர்கள் பெரும்பாலும் நம்மிடம் காட்ட மாட்டார்கள். அவற்றை நாம் எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நம் உடனிருப்பை உறுதி செய்தல் சிறப்பு.
(இ) இறைமையக் குடும்பம்
எல்லாவற்றிலும் இறைவன் மட்டுமே நம் சிந்தனையில் இருந்தால், நாம் ஒருவர் மற்றவரை அன்புடனும் நடத்தி, பணிவுடனும், பரிவுடனும் வழிநடப்போம்.
மனிதர்கள் குடும்பங்களை உருவாக்கலாம். இறைவன் மட்டுமே திருக்குடும்பத்தை உருவாக்கின்றார்.
ஆகையால்தான், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் குடும்பத்தில் ஆசீராகப் பொழிகிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்:
'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
உம் இல்லத்தில் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்.
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர்!' (திபா 128)