Friday, November 30, 2018

ஆண்டின் இறுதிநாள்

இன்றைய (1 டிசம்பர் 2018) முதல் வாசகம் (திவெ 22:1-7)

ஆண்டின் இறுதிநாள்

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 21:34-36) வருகின்ற ஞாயிறு (டிசம்பர் 2) நற்செய்தியாக அமைவதால் அதை விடுத்து, முதல் வாசகத்தைப் பற்றிச் சிந்திப்போம்.

இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதிநாள்.

நாள்காட்டி ஆண்டின் இறுதிநாள், கல்வி ஆண்டின் இறுதிநாள், நிதி ஆண்டின் இறுதிநாள் போலவே, வழிபாட்டு ஆண்டும் முக்கியமான நாள் என நினைக்கிறேன். கிறிஸ்தவர்களாகிய நமக்கு, கிறிஸ்தவ நம்பிக்கையே வழிபாடு சார்ந்ததாகவே இருக்கிறது. கடந்து செல்லும் இந்த வழிபாட்டு ஆண்டு என்னில் எத்தகையை நம்பிக்கை வளர்ச்சியை விட்டுச்செல்கிறது? இந்த ஓர் ஆண்டில் என் ஆன்மீக முதிர்ச்சி எப்படி இருக்கிறது? என் வழிபாடுகள் கூடி ஆன்மீகம் குறைந்திருக்கிறதா? இப்படி நம்மையே ஆராய்ந்து பார்க்கும் நாளாக இதை எடுத்துக்கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் காணும் இறுதிக் காட்சியை வாசிக்கின்றோம். எசேக்கியேல் இறைவாக்கினரின் இறுதிக் காட்சி போலவே இருக்கிறது யோவானின் காட்சியும். எசேக்கியேலைப் போலவே (காண். எசே 47:1-12) யோவானும் வாழ்வளிக்கும் தண்ணீர் ஓடும் ஆற்றைக் காட்சியில் காண்கின்றார். அங்கே ஆலயத்திலிருந்து புறப்படுகிறது தண்ணீர். இங்கே ஆட்டுக்குட்டியின் அரியணையிலிருந்து புறப்படுகிறது தண்ணீர்.

இந்த ஓர் ஆண்டில் நாம் ஆண்டவரின் இல்லத்திலிருந்து வந்த தண்ணீரை அருளாகவும், இரக்கமாகவும், கருணையாகவும் அள்ளிப் பருகியிருக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் காணும் பசுமை, நிறைவு, மகிழ்ச்சி என் வாழ்வில் இருக்கிறதா?

- என் வழிபாட்டின் மையமாக இறைவன் இருந்தாரா? அல்லது நான் இருந்தேனா?

- நகரின் நடுவே பாய்ந்தோடியது தண்ணீர். நான் வாழும், பணி செய்யும், படிக்கும் இடத்தின் நடுவில் நான் எப்படி இருந்தேன்? என் பிரசன்னம் மற்றவர்களை நனைத்ததா? அல்லது வெற்று ஓடையாக நான் கிடந்தேனா?

- என் ஆளுமை, குடும்பம், உடல்நலம், பணி, உறவுநிலைகள் ஆகிய மரங்கள் கனி தந்தனவா? இவற்றில் வாழ்வு இருந்ததா?

- என் இலைகள் - என் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றவர்களை குணமாக்குபவையாக இருந்தனவா?

- என்னிடம் உள்ள என் சாபங்கள் - கோபம், பொறாமை, சீற்றம், அடிமைத்தனம், சிறுமை போன்றவற்றை - நான் அகற்ற முயன்றேனா?

- என் நடுவில் இறைவன் இருக்கிறாரா? அவரின் முகத்தை நான் எந்நேரமும் என் கண்முன் வைத்துள்ளேனா? அவருடைய பெயர் என் நெற்றியில் இருக்கிறதா? அவரின் ஒளி என்மேல், என்னில், என் வழியாக ஒளிர்கிறதா?

- இறைவார்த்தையை வாசிக்க, தியானிக்க, வாழ்வாக்க நான் முயற்சி செய்தேனா?

- இந்த ஆண்டு என் குடும்பத்தில் நடந்த அருள்சாதனக் கொண்டாட்டங்கள் எவை?

- வழிபாட்டுத் தளங்களுக்கான என் செல்கை எப்படி இருந்தது?

- இந்த வழிபாட்டு ஆண்டு என்னில் விட்டுச் செல்லும் அருள் என்ன?

தளர்ந்தவற்றைத் தள்ளி வைத்து, மலர்ந்தவற்றை நம் மனங்களில் ஏந்தி புதிய வழிபாட்டு ஆண்டிற்குள் நுழையத் தயாராவோம்.

'மாரநாதா! என் ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!'

4 comments:

  1. திருவழிபாட்டு ஆண்டின் இறுதிநாளில் எம் ஆன்மீக வாழ்வை அலசி ஆராய்ந்து திருப்பி ப்பார்க்க வைத்த நும் வாஞ்சையான அழைப்பு மாண்புமிக்கது.
    Ever in my life had I such an opportunity .
    Thank you Lord for meeting rev.fr.Yesu.
    I also assure you that I will promote this message atleast 101 persons today itself.
    To look back into the"திருவழிபாட்டுக்காலம்"

    ReplyDelete
  2. சுடர் விட்டு எரியும் அழகான மெழுகு வர்த்திகள். இவை பொதுவாக நம்மில் கரைந்து நிற்கும் ஒரு தியாகத்தையும், குறிப்பாக இந்த நாட்களில் வரப்போகும் திருவருகை காலத்தின் நான்கு வாரங்களையும் குறிப்பவையாக இருப்பினும்,இன்று இவை என்னில் நாளை மற்றும் நாளைய மறுநாள் புலரவிருக்கும் புது மாதத்திற்கும்,திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளுக்கும், அவை நமக்கு கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களுக்குமே சான்றாக நிற்கின்றன.எத்தனையோ கேள்விகளை அடுக்கும் தந்தை நம்மை ஆத்தும சோதனைக்கு இட்டுச்செல்கிறார்.சில கேள்விகளுக்கு நம் பதில் " ஆம்" எனவும்,பிறவற்றிற்கு " இல்லை" எனவும் இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் நம் அனைவரது பதிலுமே ஒன்றாகவே இருக்கும்.ஆம்! இந்த ஒரு ஆண்டில் நாம் அனைவருமே "ஆண்டவரின் இல்லத்திலிருந்து வந்த தண்ணீரை அருளாகவும்,இரக்கமாகவும்,கருணையாகவும் அள்ளிப்பருகியிருக்கிறோம்". அதற்காக இறைவனுக்கு அளப்பரிய முறையில் நன்றி கூறுவோம்.வரப்போகும் நாட்களிலும் அந்தத் தண்ணீர்....அது ஆலயத்திலிருந்து புறப்படுவதானாலும் சரி....இல்லை ஆட்டுக்குட்டியின் அரியணையிலிருந்து புறப்படும் தண்ணீரானாலும் சரி...அந்த தண்ணீர் நம் தாகம் தீர்க்கட்டும்; பாவம் கழுவட்டும். தந்தையின் வார்த்தைகளில் "தளர்ந்தவற்றைத் தள்ளி வைத்து,மலர்ந்தவற்றை நம் மனங்களில் ஏந்தி புதிய வழிபாட்டு ஆண்டிற்குள் நுழையத் தயாராவோம்." தந்தையுடன் இணைந்து 'மாரநாதா! என் ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!' என்போம்.ஒரு தயாரிப்பு வேலையை என்னுள்ளும்,இந்தப்பதிவின் வாசகர் அனைவருள்ளும் விதைத்த தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வாதிப்பாராக!!!

    ReplyDelete
  3. நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே திவழிபாட்டு ஆண்டினை முடித்துவிட்டு (Roto Ambrosiano) திருவருகைக் காலம் இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். இருப்பினும் உண்மையிலேயே இன்றைய சிந்தனைகள் மீண்டும் ஒருமுறை வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்க வாய்ப்பாக இருந்தது. நன்றி. ..நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. (RITO AMBROSIANO) புனித அம்புரோசியார் வழிபாட்டு முறை

    ReplyDelete