Thursday, November 15, 2018

லோத்தின் மனைவி

இன்றைய (16 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 17:26-37)

லோத்தின் மனைவி

'பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும்' என்ற திருக்குறளில் கற்ற நம் மனத்திற்கு, 'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'இன்னொருத்தருடைய மனைவியை நான் எதுக்கு நினைக்கணும்? தப்பு, தப்பு' என்று சொல்லத் தோன்றுகின்றன.

லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கும் நிகழ்வை தொடக்கநூல் 19:26ல் வாசிக்கிறோம்:

'அப்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத்தூணாக மாறினாள்.'

சாக்கடலைச் சுற்றி நிறைய உப்புத்தூண்கள் காணப்படுவதுண்டு. இந்த உப்புத்தூண்கள் எப்படி வந்தன என்ற கேள்விக்கு விடையாகப் புனையப்பட்ட நிகழ்வாகக் கூட இது இருக்கலாம்.

ஆண்டவராகிய கடவுள் சோதோம் நகரை அழிக்கிறார். அவர்கள் செய்த பாவம் ஓரினச் சேர்க்கை. இப்போது கடவுள் இப்படிச் செய்தால் அவரைக் கைது செய்துவிடலாம். ஏனெனில், நம் சட்டம் அப்படி. நகரின் மேல் நெருப்பும் கந்தகமும் விழுகிறது. லோத்தும், மனைவியும் அவர்களின் இரு புதல்வியரும் (காண். 19:30) என நான்கு பேர் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இவர்களில் லோத்தின் மனைவி மட்டும் திரும்பிப் பார்க்கிறார். திரும்பிப் பார்ப்பதெல்லாம் ஒரு குற்றமா?

பெண்கள் இயல்பாகவே திரும்பிப் பார்க்கும் குணம் உள்ளவர்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால், 'அப்புறம் ஏன் லோத்தின் மகள்கள் திரும்பிப் பார்க்கவில்லை?' என்ற கேள்வி எழும். ஆகையால், அப்படிச் சொல்ல வேண்டாம். எதற்காக இவர் திரும்பிப் பார்த்தார்? தன் வீடு எரிகிறது என்றா? அல்லது நகரம் எப்படி எரிகிறது? என்றா.

இங்கே சொல்லப்படும் கருத்து ஒன்றுதான்: 'இலைய எண்ணு அப்படின்னா, தலைய எண்ணுற வேலை உனக்கு எதுக்கு?' ஊரை விட்டு போ அப்படின்னா போ. ஏன் திரும்பிப் பார்க்கிற? இயேசு இந்தப் பண்பிற்குத்தான் எடுத்துக்காட்டு தருகிறார். முன்னோக்கி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே செல்லுங்கள். திரும்பிப் பார்த்து நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காதீர்கள். வீட்டின் மேல் தளத்தில் இருக்கும்போது மானிட மகன் வந்தால் அப்படியே மேல் தளத்திலிருந்து அவரோடு போய்விடுங்கள். கீழே வந்து, குழம்பு கரண்டி, சோற்றுக் கரண்டி தேடாதீர்கள் என்கிறார் இயேசு.

மேலும், அந்நாளில் எப்படி நடக்கும் என்பதும் புதிராக இருக்கிறது:

ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார்.
இருவர் மாவரைத்துக் கொண்டிருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார்.
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார்.

இது ஏன்?

அப்படித்தான்!

இது எப்போ?

'பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்' - எதெது எப்போ நடக்கணுமோ அப்போ நடக்கும்.


3 comments:

  1. "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"
    Any doubt in any of the part in the Bible? என்று தாங்கள் தியானத்தில்
    வினவியபோது, யான் கேட்க விரும்பிய கேள்வி.
    இதற்கான பதில் "எதெது எப்போ நடக்கணுமோ அப்போ நடக்கும் "
    என்பது மட்டும் தானா?
    இல்லை கூடுதல் விளக்கம் தங்களால் தர முடிந்தால் இந்த blog- ல் தயை கூர்ந்து தரும்படி, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  2. " அப்போது லோகத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்."
    By this you mean " அவள் மீண்டும் தன் பாவ வாழ்க்கையை திரும்பிப்பார்த்தாள். என்று நம்புகிறேன்.
    The reflection is exclusively excellent,as it is always so...
    Ideogram too.
    God has wonderfully blessed you.& We are blessed because of you... thank you.

    ReplyDelete
  3. வெறும் பாடமெனப் பார்த்தால் நல்ல பாடமே! ஆனால் சில பழக்கவழக்கங்களை வைத்துப்பார்த்தால்? இதென்ன கொடுமை? என எண்ணத்தோன்றுகிறது. "முன்னோக்கி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்லுங்கள்; திரும்பிப்பார்த்து நேரத்தையும்,ஆற்றலையும் வீண்டிக்காதீர்கள்" கொட்டிய பாலைக்குறித்துக் கவலைப்படும் என்போன்றவர்களுக்கு நல்ல பாடமே! அந்த இறுதிவரிகள்...எனக்கும் கூடப்புதிராகத்தான் இருக்கின்றன..
    சரளமாக வந்துவிழும் தந்தையின் பழமொழிகள் கிராமத்துப் பாட்டிகளை நினைவூட்டுகின்றன.
    'ஓரினச்சேர்க்கைக்காக கைது.' ....இப்போது கடவுள் இப்படிச் செய்தால் அவரைக் கைது செய்து விடலாம்'..... தந்தையின் presence of mind க்கு ஒரு எடுத்துக்காட்டு.
    வயிற்றில் புளியைக்கரைக்கும்,பீதியைக்கிளப்பும் விவிலியத்தின் ஒரு பகுதியை வெகு இலாவகமாக்க் கையாண்டிருக்கும் தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'

    ReplyDelete