Wednesday, November 21, 2018

கண்ணீர்

இன்றைய (22 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:41-44)

கண்ணீர்

கஜா புயல் தாக்கிச் சென்ற பகுதிகளைப் பற்றிய காணொளிகளைப் பார்க்கும்போதெல்லாம் மக்கள் எழுப்பும் அழுகைக் கூக்குரல் இரண்டு நிலைகளில் இருக்கிறது:

ஒன்று, 'ஐயோ, எங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே' என்பது. இந்த அழுகையில் அவர்களின் சோகம், இழப்பு, கலக்கம் அனைத்தும் தெரிகிறது.

இரண்டு, 'ஐயோ, இந்த அரசு இப்படி இருக்கிறதே' என்பது. இந்த அழுகையில் அரசின் கையாலாகாத நிலையும், அதை எண்ணிய கோபமும் தெறிக்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில் 'இயேசு அழுதார்' என்று வாசிக்கிறோம். இயேசுவின் அழுகை, மேற்காணும் இரண்டு வகையும் தாண்டி, ஒருவகையான பரிவு அல்லது கருணையை வெளிப்படுத்தும் அழுகையாக இருக்கிறது.

இயேசு இரண்டு நிகழ்வுகளில் கண்ணீர் வடித்ததாக நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர்: ஒன்று, லாசரின் கல்லறையின் முன் (யோவா 11:35), இரண்டு, இன்றைய நற்செய்திப் பகுதி.

கல்லறையின் முன் நின்று அழுத இயேசு இறந்துபோன தன் நண்பன் லாசருக்காக அழுதிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும் லாசரை உயிர்ப்பிக்கலாம் என்று. ஆனால், இறப்பு என்ற எதார்த்தம்தான் அவருடைய அழுகைக்குக் காரணமாக இருந்திருக்கும். 'இன்று நான் உயிர்க்கச் செய்யும் லாசர் மீண்டும் இறப்பானே' என்ற ஆதங்கமும், இறப்பின்முன் அவர் உணர்ந்த கையறுநிலையும்தான் அவருடைய கண்ணீருக்குக் காரணமாக இருந்திருக்கும்.

எருசலேம் நகரத்தைப் பார்த்து இயேசு அழுத நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.

'இயேசு எருசலேம் நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார்' என லூக்கா பதிவு செய்கிறார். கோவிலைப் பார்த்து யாராவது அழும்போது வழக்கமாக அழுபவர் தன்னை முன்னிறுத்தி அழுவார். எடுத்துக்காட்டாக, எனக்கு தாங்க முடியாத கஷ்டம் வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் கோவிலின் முன் நின்று நான் அழும்போது, அங்கே நான் என் கஷ்டத்தை நினைத்து அல்லது என் இயலாமையை நினைத்து நான் அழுகிறேனே தவிர, 'கோவில் இப்படி இருக்கிறதே' என நான் அழுவதில்லை.

ஆனால், இயேசுவின் அழுகை கோவிலை மையப்படுத்தியதாக இருக்கிறது.

'இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா?' எனக் கேட்கிறார் இயேசு. 'எருசலேம்' என்ற பெயரிலேயே 'சலேம்' அல்லது 'சலோம்' ('அமைதி') ஒளிந்திருக்கிறது. அமைதிக்குரிய வழி என இயேசு சொல்வது மெசியாவின் வருகையை அறிந்துகொள்ளுதலைக் குறிக்கிறது. ஆகையால்தான், 'அறிந்திருக்கக் கூடாதா?' எனக் கேட்கின்ற இயேசு, 'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை' என்கிறார்.

இதற்கு இடையில் இயேசு சொல்கின்ற அனைத்தும் - பகைவர்களின் முற்றுகை, அழிவு, தரைமட்டமாக்கப்படுதல் - அனைத்தும் கிபி 70ல் பேரரசர் டைட்டஸ் அவர்களால் நடந்தேறுகிறது. அன்று இழந்த எருசலேம் ஆலயத்தின் மாட்சி அதன்பின் அதற்கு வரவே இல்லை. ஆகையால்தான், இன்றும் யூதர்கள் எருசலேமின் மேற்குச் சுவர்மேல் விழுந்து அழுகின்றனர்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'அமைதிக்குரிய வழியை நான் அறிகிறேனா?' என்ற கேள்விதான் அது.

அந்த வழி எது? கடவுள் என்னைத் தேடி வருவது.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும், நபர்களிலும் அவர் என்னைத் தேடி வருகிறார்.

நான் அவரைக் கண்டுகொள்ளாதபோது அவர் இன்றும் எனக்காகக் கண்ணீர் வடிக்கிறார்.

2 comments:

  1. கண்களக் கசிய வைக்கும் ஒரு பதிவு. " கண்ணீர்" எத்துணை வலிமையானதொரு விஷயம்.அர்த்தமற்ற கண்ணீரை 'முதலைக் கண்ணீர்' என்கிறோம்; ஆனால் அர்த்தமுள்ள கண்ணீர் சரித்திரங்களைப்படைக்க வல்லது.இலாசரின் கல்லறைமுன் இயேசு வடித்த கண்ணீரின் நிதர்சனத்தைக்கூறுகிறார் தந்தை.'இலாசரை எத்தனை முறை உயிர்ப்பித்தாலும, அவன் இறப்பிற்கு இறுதி முறை என ஒன்று இருக்குமே' எனும் கையறுநிலையே இயேசுவின் கண்ணீருக்குக் காரணம் என்கிறார்.ஆனால் இயேசுவின் இந்தக்கண்ணீரை இயற்கை என எடுத்துக்கொள்ளும் நம்மால் அவர் எருசலேம் தேவாலயத்தைப்பார்த்து அழுததை இயல்பாக எடுத்துக்கொள்ள இயலவில்லை." கடவுள் உன்னைத் தேடிவந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை."
    இயேசுவின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகு எருசலேம் தேவாலயத்தின் மாட்சி திரும்ப வரவே இல்லை என்பதும்,அதனால் தான் இன்னும் யூதர்கள் மேற்கு சுவர்மீது விழுந்து அழுகின்றனர் என்பதும் சரித்திரம்.இங்கே தந்தை குறிப்பிட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளின் வலிமையை,வலியை,வேதனையை அந்த தரைமட்டமாக்கப்பட்ட எருசலேம் தேவாலயத்தின் சிதிலங்களைக்கண்டு ஆறாத்துயரில் கண்ணீர் விடும் மக்கள் கூட்டம் நமக்கு உணர்த்துகிறது."
    ஒவ்வொரு நபரிலும்,நிகழ்விலும் நம்மைத்தேடிவரும் இறைவனை நாம் கண்டுகொள்வோம்....அவரின் கண்ணீருக்கு நாமும் காரணமாயில்லாதவாறு.
    "கண்ணீர்".... இதன் வலிமையை,வலியைக் கண்ணீர் வழியாகவே சொல்லும் தந்தையை இறைவன் தன் கண்களாக,இமைகளாகப் பாதுகாப்பாராக!!!

    ReplyDelete
  2. Do I recognise and accept Jesus?...
    Do I invite HIM into my heart & home?
    Am I making Jesus weep over me?
    Or allowing HIM to feel content over me?
    Hereby trying to have a check on me...
    Thank you Rev.Yesu.

    ReplyDelete