Friday, November 2, 2018

இடத்தை விட்டுக்கொடுங்கள்

நாளைய (3 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 14:1,7-11)

இடத்தை விட்டுக்கொடுங்கள்

பங்குகளில் நடைபெறும் விழாக்களில் ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் பங்கேற்கும்போது, பொதுவிழாவில் ஆயருக்கு என தனி இருக்கை போடாமல், எல்லா இருக்கைகளையும் போல ஒரு இருக்கை போட்டு அங்கே அமரச் செய்ததாகவும், இப்படியாக அனைவரும் சமம் என்ற தன் எண்ணத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் அருள்பணியாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

தனி இருக்கை, முதன்மையான இருக்கை, சிறப்பான இருக்கை

இருக்கையில் என்ன இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம்.

இருக்கைகள் எல்லாம் ஒன்றல்ல.

ஒரு காரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் போனாலும், அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்தில் இருந்தாலும் ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநர் மட்டும்தான் அமர முடியும்.

ஏன், அதே அருள்பணியாளரே, தான் அந்தப் பள்ளியின் தாளாளராக இருந்தாலும், அப்பள்ளியில் மாணவர் வகுப்பறையில் போய் அங்கிருக்கும் இருக்கையில் அமர்வாரா? இல்லையே! தாளாளர் அறையில், தாளாளரின் இருக்கையில்தானே அவர் அமர்வார்?

நாளைய நற்செய்தி வாசகத்தில், ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்வதை வாசிக்கின்றோம். இங்கே இயேசுவின் நேர மேலாண்மை ஆச்சர்யத்திற்கு உரியதாக இருக்கிறது. வாரத்தின் ஆறு நாள்களில் பணி, ஏழாம் நாளில் விருந்து என வாழ்க்கையை இனிமையாக வகுத்துக்கொள்கின்றார்.

அந்த விருந்துக்கு அவர் மட்டும் செல்லவில்லை. நிறையப் பேர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஏனெனில் விருந்துக்கு வருபவர்கள் எந்த இருக்கையை தேர்வு செய்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கின்றார் இயேசு.

யூத மரபில் முதன்மையான விருந்தினராக அழைக்கப்படுபவர் விருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பார். இயேசு, எல்லாருக்கும் முன் அமர்ந்திருந்ததால் எல்லாரையும் கவனித்தாரா? அல்லது எல்லாருக்குப் பின்னும் அமர்ந்திருந்ததால் எல்லாரையும் கவனித்தாரா? என்பது தெரியவில்லை.

ஆனால், 'பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்' என தன் அறிவுரையைத் தொடங்குகின்றார் இயேசு.

ஏன்?

நாமாக முதன்மையான இடத்தை விரும்பி தேர்ந்தெடுக்கும்போது நாம் மூன்று அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டும்:

அ. 'நாம் அடுத்தவருக்கு இடத்தை நாமாக விட்டுக்கொடுக்காதபோது நாம் அதை வலிந்து விட்டுக்கொடுக்க வேண்டும்'

ஆ. 'விருந்தினர் கூட்டத்தின்முன் நாம் வெட்கப்பட வேண்டும்'

இ. 'நாம் நம் திட்டத்திற்கு மாறாகச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்'

ஆனால்,

இறுதி இருக்கையை விரும்பித் தேர்ந்தெடுத்தால், மூன்று அற்புதங்கள் நடக்கலாம்:

அ. 'முதன்மையான இருக்கை நமக்காக ஒதுக்கி கொடுக்கப்படும்'

ஆ. 'விருந்தினர்முன் நாம் பெருமைப்படுத்தப்படுவோம்'

இ. 'நம் திட்டத்தைவிட உயர்ந்த திட்டம் நமக்குக் கைகூடும்'

ஆனால், இந்த அற்புதம் நடக்க நாம் ஒரு சின்ன விடயம் செய்ய வேண்டும்.

அடுத்தவரைப் பார்த்தவுடன், 'அவரைவிட நான்தான் பெரியவன்' என்று எனக்குள் தோன்றும் அந்த உணர்வை அரை லாரி மண்ணைப் போட்டு போட வேண்டும்.

பின் அடுத்தடுத்து அற்புதம் நடக்கும்.

'எல்லாரும் சமம்தானே!' 'எல்லாரும் ஒன்றாக இருக்க வட்டமாக நாற்காலிகள் போடலாமே!' என்ற எண்ணம் எழலாம். ஆனால், வாழ்வில் நம் எல்லா எண்ணங்களுக்கும் விடைகள் இல்லை.

இதையொட்டியே திருவள்ளுவரும்,

'பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து' (குறள் 978)

என்கிறார்.


5 comments:

  1. என்னே ஒரு விளக்கம் இந்த இருக்கைகள் குறித்து!.... தந்தையின் கண்களுக்கு மட்டும் எப்படி எல்லா விஷயங்களும் இப்படி மண்டியிட்டு நிற்கின்றனவோ தெரியவில்லை... சரி, விஷயத்திற்கு வருவோம். முன் இருக்கையைத் தேரந்தெடுத்தவரை நாம் கண்டுகொள்ளத்தேவையில்லை.ஏனெனில் அவரால் அங்கே அதிக நேரம் அமரமுடியாது.ஆனால் இறுதி இருக்கையைத் தேர்வு செய்யும் மனிதருக்கு நேரும் அழகான விஷயங்களை அடுக்குகிறார் தந்தை.ஆனால் அது நடக்க " அவனை விட நான் பெரியவன்" எனும் எண்ணத்தை அரை லாரி மண் போட்டு மூடவேண்டுமாம்.( சத்தமாக சொல்லாதீர்கள். இதற்கா அரை லாரி மண்?என எடப்பாடி அரசு தங்களைக் கைது செய்யப்போகிறது!) முதன்மையான இருக்கையையே நமக்கு ஒதுக்கியான பிறகு 'அதற்கும் மேலே' என்ன அற்புதம் நடக்க இயலும்? "பெருமை பணிவதையும்,சிறுமை தன்னையே வியந்து நோக்குவதையும்" பற்றித் திருவள்ளுவரே நேரில் வந்து சொன்னால்கூட கேளாத மக்கள் இருக்கும் பூமியில் வாழ்வின் எல்லா எண்ணங்களுக்கும் பதில் இல்லை தான். "எல்லாரும் சம்ம்" எனக்காட்ட வட்டமாக நாற்காலிகள் போடலாமே!".... ஆமால்ல! ! சரியான யோசனை தந்த தந்தைக்கு என்ன தரலாம்? ஒரு சபாஷ்! தவிர?

    ReplyDelete
  2. Wonderful message!
    அடுத்தவரை பார்த்தவுடன்," அவரைவிட நான் தான் பெரியவன்" என்ற உணர்வை அரை லாரி மண்ணை போட்டு மூட வேண்டும்.---- சிறந்த நகைச்சுவை உணர்வு..
    அடுத்தடுத்து
    அற்புதங்கள் நிகழ நீங்கள் சொல்லும் வழிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
  3. Wonderful message!
    அடுத்தவரை பார்த்தவுடன்," அவரைவிட நான் தான் பெரியவன்" என்ற உணர்வை அரை லாரி மண்ணை போட்டு மூட வேண்டும்.---- சிறந்த நகைச்சுவை உணர்வு..
    அடுத்தடுத்து
    அற்புதங்கள் நிகழ நீங்கள் சொல்லும் வழிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
  4. ஆனால் படத்தில் போட்டிருக்கிற இருக்கை எல்லாம் aeroplane இருக்கையாக அல்லவா உள்ளது???

    ReplyDelete
  5. " உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?" லூக்கா: 24:5
    Then why this graveyard visit & graveyard mass? Can you please give me a genuine answer?..

    ReplyDelete