Friday, November 23, 2018

அவர்கள் சாகமுடியாது

இன்றைய (24 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 20:27-40)

அவர்கள் சாகமுடியாது

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்கள், 'ஒரு பொண்ணும் ஏழு கணவர்களும்' என்ற நிகழ்வைக் குறிப்பிட்டு, 'உயிர்த்தபின் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்?' எனக் கேட்கின்றனர்.

சதுசேயர்கள் இந்தக் கதையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள்? என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

உயிர்ப்பு, வானதூதர்கள், மறுவாழ்வு பற்றி நம்பாத இவர்கள், தங்கள் நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட உருவாக்கிய கதையாடலாகக்கூட இது இருக்கலாம். சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய ஒரு சமயக் குழுவினர். இவர்களுக்கு அரசியலில் நிறைய ஈடுபாடு உண்டு. இவர்கள் 'சாதோக்' என்ற தலைமைக்குருவின் வழிமரபினர். குருக்களாக இருந்தவர்கள் மறுபிறப்பு பற்றி நம்பாமல் இருக்கிறார்கள். மேலும், சட்டம்-இறைவாக்கு-எழுத்து என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட 'தனாக்' என்ற எபிரேய விவிலியத்தின் முதல் பகுதியை - அதாவது, சட்டநூல்கள் 5 - மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் இயேசு அவர்களுக்கு சட்டநூல்களில் ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து (3:6) எடுத்துக்காட்டு தருகின்றார்.

அவர்களுக்குப் பதில் தரும் இயேசு, 'உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை' என்கிறார்.
'எதுக்காக கல்யாணம் முடிக்கிறோம்? என்றே பாதிப்பேருக்குத் தெரியவில்லை' என்று ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் புலம்புவார் எம்.ஆர். ராதா.

திருமணம் எதற்காக முடிக்கிறோம்?

இறந்துபோகும் மனிதர்கள் தாங்கள் இறவாதவர்கள் என்று மரணத்திற்குக் காட்டுவதற்காகவே திருமணம் புரிகின்றனர். இல்லையா?

இறப்பு நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைத் தழுவிக்கொள்கிறது. இந்த இறப்பை ஏமாற்றும் ஒரு வழி, நான் இறக்குமுன் எனக்கு ஒரு வாரிசை உருவாக்கிவிடுவது. அவர் இறக்குமுன் அவர் அவருக்கான வாரிசை உருவாக்கிவிடுவார். ஆக, ஒரு மனிதர் இறந்தாலும் அவரின் வித்து இன்னொருவரில் வாழ்கிறது. இப்படியாக, இறப்பை ஏமாற்ற மனிதர்கள் கண்டுபிடித்த ஒருவழிதான், அல்லது இறவாமை என்னும் அனுபவம் தருவதே திருமணம். (இங்கே பெண்கள் வித்துக்கள் விதைக்கப்படும் விதைநிலம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அன்றைய புரிதல் அப்படித்தான் இருந்தது. குடும்ப ஆணின் வித்து நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஏழு ஆண்களும் ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்கின்றனர்).

இயேசுவின் புரிதலும் இதையொத்தே இருக்கின்றது. ஏனெனில், இறவாமைக்காக திருமணம் முடிக்கிறார்கள் என்றால், இறவாமை வந்துவிட்டால் திருமணம் தேவையற்றதாகிவிடுகிறது. ஏனெனில், ஒவ்வொருவரின் வித்தும் அவரவரிடமே வாழ முடியும்.

இயேசுவின் பதில் ஒரே நேரத்தில் நமக்குத் திருமணம் பற்றிய புரிதலையும், மறுவாழ்வு பற்றிய புரிதலையும் தருகின்றது. எப்படி?

எரியும் முட்புதரில் தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள், 'நான் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என அறிமுகம் செய்கின்றார். ஆக, நாம் இறக்கும்போது நம் வித்து இறைவனில் விதைக்கப்படுகின்றது. இறைவன் இறவாதவர். இவ்வாறாக, நாமும் அவரில் என்றென்றும் வாழ முடிகிறது.

இவ்வுலகில் நடக்கும் திருமணம் மறுவாழ்வின் இறவாமையை முன்னுரைப்பதாக இருக்க வேண்டும். திருமணத்தில் ஒருவர் மற்றவரின் வாழ்வு மட்டுமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். சின்ன சின்ன விடயங்களில் கூட அடுத்தவரின் அழிவு முதன்மைப்பத்தப்படக் கூடாது. 'இக்கால வாழ்வு' குறுகியது. இக்குறுகிய காலத்தில் இனிமையாக வாழ்தல் நலம்.

மேலும், மணத்துறவு பற்றிய புரிதலையும் இங்கே காணமுடிகிறது.

மணத்துறவை மேற்கொள்பவர்கள் தாங்கள் விரும்பியே அதை ஏற்கின்றனர். ஆக, அவர்கள் மணத்துறவை தங்களை அழிக்கும் ஒரு சுமையாக பார்க்காமல், இவ்வுலகிலேயே, 'அவர்கள் வானதூதரைப் போல, கடவுளின் மக்களாய் இருப்பதாக உணர்ந்து,' தங்கள் வாழ்வை அவரில் விதைக்க வேண்டும்.

'வாழ்வோரின் கடவுளே' நம் கடவுள். இறப்பில் மெல்லிய வேலியைக் கடந்து நாம் இந்த வாழ்விலிருந்து, அந்த வாழ்விற்குச் செல்கின்றோம். இரண்டு பக்கமும் இருப்பது வாழ்வே.


2 comments:

  1. திருமணம், மறுவாழ்வு பற்றிய சிந்தனை புதிது.தனித்துவம் மிக்கதாக உளது.
    You are always unique in everything YOU do& express.
    Great!

    ReplyDelete
  2. பல சமயங்களில் நம்மை முகம் சுளிக்க வைக்கும் ஒரு பதிவு." இறந்து போகும் மனிதர்கள் தாங்கள் இறவாதவர்கள் என்பதை மரணத்திற்கு காட்டுவதற்காகவே திருமணம் புரிகின்றனர்." எப்படித்தான் தந்தையால் இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க முடிகிறதோ தெரியவில்லை.நெற்றியில் அடித்தது போல் ஒரு ஸ்டேட்மென்ட்.போகிற போக்கில் அவிழ்த்துவிட்டதாகத் தெரியவில்லை.அறிந்து புரிந்தே சொல்லியிருக்கிறார்.ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.' கடவுள்' அபிரகாமின் கடவுளானாலும்,ஈசாக்கின் கடவுளானாலும்,யாக்கோபின் கடவுளானாலும் அவர் வாழ்வோரின் கடவுளே' எனும் புரிதலில் மணம் முடித்த ஒருவர் இறக்கயில் அவரின் வித்து இறைவனில் விதைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.ஆக, இறவாமைக்குரிய இத்திருமண வாழ்வை 'இங்கே' வாழ்பவர்கள் இனிமையாக வாழவேண்டுமென்பது தந்தை விடுக்கும் செய்தி.அழகான,ஏற்றுக்கொள்ளப்பட செய்தியே!,ஆனால் தராசின் மறுதட்டான 'மணத்துறவைக்'குரித்த தந்தையின் வரிகள்"அவர்கள் வானதூதரைப்போல,கடவுளின் மக்களாய் இருப்பதாக உணர்ந்து தங்கள் வாழ்வை அவரில் விதைக்க வேண்டும்." தராசுத்தட்டு கொஞ்சம் கீழே இழுப்பது போல் தெரிகிறதே! பட்டிமன்றத்துக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு தலைப்பை மிக சுமுகமாக அலசி " இறப்பில் மெல்லிய வேலியைக்கடந்து நாம் இந்த வாழ்விலிருந்து அந்த வாழ்விற்குச் செல்கிறோம்" என்ற தீர்ப்பையும் வழங்கிய " நடுவர்" தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete