Tuesday, November 20, 2018

அர்ப்பணம்

இன்றைய (21 நவம்பர் 2018) நற்செய்தி (மத் 12:46-50)

அர்ப்பணம்

இன்று நாம் கன்னி மரியாளை அவரது பெற்றோர் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாளை நினைவுகூர்கிறோம். இந்த நினைவு கொண்டாடப்படாத இடத்தில் நற்செய்தியாக லூக் 19:11-28 வாசிக்கப்படும்.

நம் சிந்தனைக்குத் திருநாளின் வாசகங்களை எடுத்துக்கொள்வோம்.

நீண்ட நாள்கள் குழந்தைப்பேறு இல்லாத சுவக்கீன்-அன்னா தம்பதியினர் தங்களுக்குக் கடவுளால் கிடைத்த மரியாளை அவரது மூன்றாம் வயதில் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணம் செய்தனர் என்று யாக்கோபின் முதற்நற்செய்தி (ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி) கூறுகிறது. மேலும், பிறந்த போதும், பிறந்த பின்னும் அவர் எந்த பாவ மாசுமின்றி இருந்தார் என்று மரியாளின் பிறப்பு நற்செய்தி  நூல் (இதுவும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலே) பதிவு செய்கிறது.

எருசலேம் ஆலயத்தில் ஆண் தலைப்பேறுகள் மட்டுமே அர்ப்பணம் செய்யப்பட்டதை மற்ற நற்செய்தி நூல்களும், ஐந்நூல்களும் சொல்கின்றன. இந்தப் பின்புலத்தில் மரியாளின் அர்ப்பணம் வித்தியாசமாகத் தெரிகிறது.

மேலும், இந்த நிகழ்வைத்தான் 'இறைவனின் தாய் இறை இல்லம் நுழைந்த நாள்' என்று கீழைத்திருச்சபை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது.

'அர்ப்பணம்' என்பதன் ஆங்கிலச் சொல்லின் (டெடிகேட்) மூலச்சொல்லை ஆராயும்போது, 'டெ,' 'டிகாரே' என்ற இரண்டு சொற்களிலிருந்து அது வருகிறது. அதாவது, 'ஒன்றை சத்தம் போட்டுச் சொல்லி ஒதுக்கி வைப்பது' தான் 'டெடிகாரே' அல்லது 'டெடிகேட்'. ஆக, ஆலயத்தில் அர்ப்பணம் செய்யப்படும் குழந்தையை, அக்குழந்தையின் பெற்றோர்கள், சத்தம் போட்டு, 'இது ஆண்டவருக்கான குழந்தை' என்று அறிவிக்கிறார்கள். அந்த நேரம் முதல் அக்குழந்தை ஆண்டவருக்கானது என்றாகிவிடுகிறது.

இந்த நாள்களில் நம் அண்டை வீடுகளில் நிறையப் பேர் ஐயப்பன் மற்றும் முருக கடவுளர்களுக்கு தங்களை நேர்ந்துகொண்ட மாலை அணிந்துகொள்வார்கள். மாலை அணிந்துவிட்டவரை அனைவரும் 'சாமி' என்று அழைப்பர். அவரின் பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட மாட்டார்கள். 'டேய் மாடசாமி, டீ வாங்கிட்டுவா' என்று அதட்டும் மேலதிகாரிகூட, நாற்பது நாள்களுக்கு, 'சாமி டீ வாங்கிட்டு வாங்க' என்பார். மனைவி கணவன் அருகில் வரமாட்டார். கணவருக்கென்று தனி தட்டு, டம்ளர், இலை, பாய் என இருக்கும். இவர் அணிந்திருக்கும் மாலை இவரின் அர்ப்பணத்தின் அடையாளமாகவும், 'இவர் அர்ப்பணிக்கப்பட்டவர்' என்று மற்றவர் அறிந்துகொள்வதற்கு வசதியாகவும் இருக்கிறது.

இவ்வாறாக, ஒன்று குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ அர்ப்பணம் செய்யப்படும்போது, 'அது எதற்காகவோ அதற்காக மட்டுமே' என்ற நோக்கு கூர்மைப்படுத்தப்படுகிறது. மரியாளும், தன் குழந்தைப் பருவம் முதல், கடவுளின் திருவுளம் நிறைவேற்ற அர்ப்பணிக்கப்படுகிறார். ஆக, மரியாள் இயேசுவின் தாய் என்ற நிலைக்கு உயர்ந்தது அவர் இயேசுவைப் பெற்றெடுத்த நிலையைவிட, இறைத்திருவுளம் நிறைவேற்றும் இந்நிலையிலேதான்.

இதையொட்டியே இன்றைய முதல் வாசகத்தில் (செக் 2:10-13), எருசலேம் வந்து சேரும் அனைவரும் 'அவருடைய மக்களாய் இருப்பார்கள்' என்று அனைவருக்குமான அர்ப்பண நிலையை எடுத்தியம்புகிறார்.

நாம் எதற்காக அல்லது யாருக்காக வேலை செய்கிறோமோ அவருடையவராகிறோம்.

எதற்காக அல்லது யாருக்காக எனத் தெரிந்து கொள்வதே அர்ப்பணம்.

3 comments:

  1. எதற்காக அல்லது யாருக்காக எனத் தெரிந்து கொள்வதே அர்ப்பணம்.
    நன்று.
    நன்றி.

    ReplyDelete
  2. " இறைவனின் தாய் இறை இல்லம் நுழைந்த நாள்". அழகான சொற்றொடர்.பிறந்த போதும்,பிறந்த பின்னும் பாவ மாசு இன்றி இருந்த சுவக்கின்- அன்னா தம்பதியரின் மகள் தனது மூன்றாவது வயதில் ' ஆண்டவருக்காக ' அர்ப்பணிக்கப்படுவதாகவும்,அவர் 'இயேசுவின் தாய்' என்ற நிலைக்கு உயர்ந்தது அவர் இயேசுவைப்பெற்றெடுத்த நிலையை விட இறைத்திருவுளம் நிறைவேற்றும் இந்நிலையிலேதான்' என்கிறது இன்றையப்பதிவு. இந்நேரத்தில் எனக்குள் ஒரு எண்ண ஓட்டம்...பிறந்த ஒரு மாத்த்திலேயே நமக்கெல்லாம் 'திருமுழுக்கு' கொடுக்கப்படுகிறதே.... அது 'அர்ப்பணம்' இல்லையா? நமது திருமுழுக்கும் கூட 'இது ஆண்டவருக்கான குழந்தை' என்பதை உலகத்துக்கு உரக்கச்சொல்வது தானே! புரிய வில்லை.ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது...இதில் மரியாளின் அர்ப்பணத்தை விட அவரைப்பெற்றவர்களின் அர்ப்பணமே மரியாளை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது என்று என் சிறிய மூளை சொல்வது என் செவிகளுக்குக் கேட்கிறது.எருசலேம் வந்து சேரும் அனைவரும் ' அவருடைய மக்களாய் இருப்பார்கள்'எனில் " நாமும் கூட அவருடைய மக்களே! நாமும் கூட அர்ப்பணமானவர்களே!"...... என்னை நான் யாரென ஒரு கேள்வியைக்கேட்டுப் பதிலைப்பெற உதவிய தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  3. "அர்ப்பணம்" என்றால் என்ன என்று அற்புதமாக வரைந்திருப்பது
    அருமை.
    நன்று.
    நன்றி.

    ReplyDelete