அந்திரேயா
இன்று திருத்தூதர் அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)
கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)
இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?
'அந்திரேயா!'
யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.
மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.
ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.
இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!
புதிய, வித்தியாசமான சிந்தனை!
ReplyDeleteஅந்திரேயா.. அறிமுகம் அற்புதம்..
ஆனா ஒண்ணு மட்டும் இடிக்குதே...
மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்வது?
அது தான் இயேசுவுக்கு எல்லாரையும் தெரியுமே அருட்பணி.யேசு?
எதுக்கும் என்னை தாங்கள் இயேசுவிடம் அறிமுகம் செய்து வையுங்களேன்....
Today'' presentation is also differently good!
ReplyDeleteநம்மில் பலருக்கு ஞாபகமிருக்கலாம்..நம் பள்ளிப்பருவத்து நிறைவுகள்.ஒரு சிறிய கடலை மிட்டாய் கிடைத்தால் கூட,அதைப்பத்துக் காக்காய் கடி கடித்து மற்றவரோடு பகிர்ந்து கொள்வது.இன்று நினைவலைகளை சுழலவிட்டால் நம்முடைய அன்றைய செயல் அந்தக்கடலை மிட்டாய் தந்தை இனிப்பையும் மிஞ்சியிருக்கும்.எனக்கு கிடைத்த ஒரு நல்ல விஷயத்தை நாலுபேருடன் பங்கு வைக்கும்போது அதன் சுவையே தனி; அந்த நினைவுகள் தரும் சுகமே தனி.இப்படியொரு இனிமைமிகு விஷயத்திற்குச் சொந்தக்காரராகவே நான் திருத்தூதர் 'அந்திரேயா'வைப் பார்க்கிறேன்.இயேசுவுடன் தனக்குக் கிடைத்த அனுபவம் தன்னைச்சார்ந்த அனைவருக்கும் கிடைக்க அவர் விரும்புகிறார்; ஆவன செய்கிறார்.என் வாழ்வில் நானும் ஒரு அந்திரேயாவாக மாற நான் செய்ய வேண்டிய விஷயத்தை வித்தியாசமான முறையில் சொல்கிறார் தந்தை.நமக்கு வேண்டிய ஒரு நபருக்கு ஒரு முக்கியமானவரின் அறிமுகம் தேவைப்பட்டால் நாம் அந்த பெரிய மனிதரை அந்த நபரிடம் கூட்டிவருவதில்லை; அந்த நபரைத்தான் பெரியமனிதரிடம் இட்டுச்செல்லகிறோம். தந்தை சொல்வதும் கூட இதுவே. நான் அறிந்த இயேசுவை என்னைச்சுற்றியிருப்போரும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் நான் அவர்களை இயேசுவிடம் இட்டுச்செல்ல வேண்டும்; இட்டுச்செல்வேன்.
ReplyDeleteவழக்கம்போல நமக்குத் தெரிந்த ஆலுக்காஸையும்,நல்லியையும்,கோணார்மெஸ்ஸையும் துணைக்கழைத்து தெரியாத 'அந்திரேயா' போன்ற தெரியவேண்டியவர்களின்
புகழ்பாடும் தந்தைக்கு என் நன்றிகள்!!!