Sunday, November 18, 2018

இது என்ன?

இன்றைய (19 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 18:35-43)

இது என்ன?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையற்ற ஒருவருக்கு பார்வை தருகின்றார். அவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார். பிச்சை எடுத்தல் ஒருவரை மற்றவர்மேல் முழுமையாகச் சார்ந்திருக்கச் செய்கிறது. முழுக்க முழுக்க அடுத்தவரின் இரக்கத்தில் இருக்குமாறு தன்னையே கையளிக்கிறார் பிச்சையெடுப்பவர். ஆனால், இந்தச் சார்புநிலையிலிருந்து இவர் இயேசுவின் துணையால் விடுதலை பெறுகின்றார்.

இவரின் வார்த்தைகளையே இன்று சிந்திப்போம்:

1. 'இது என்ன?'

இயேசு எரிகோவைக் கடந்து எருசலேம் சென்றுகொண்டிருக்கிறார். அவருடன் மக்கள் கூட்டம் கடந்து செல்கிறது. மக்களின் சலசலப்பைக் கேட்கின்ற பார்வையற்ற நபர், 'இது என்ன?' என்கிறார். 'இங்கே என்ன நடக்கிறது?' என்று சும்மா சத்தம் போடுகிறார். 'இயேசு போய்க்கொண்டிருக்கிறார்' என்ற அவருக்கு பதில் தருகின்றனர் கூட்டத்திலிருந்த நல்லவர்கள் சிலர். 'டேய்...சும்மாயிரு' - இதுதான் மற்றவர்களின் பதிலாக இருந்திருக்க வேண்டும்.

2. 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!'

இயேசுதான் போகிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவர் அப்படியே நம்புகின்றார். வழக்கமாக, கண்பார்வை இல்லாதவர்களிடம் ஏதாவது சொல்லி அவர்களை ஏமாற்றுவது கூட்டத்தின் இயல்பு. ஆனால், தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று இவர் நினைக்கவில்லை. மக்களின் வார்த்தைகளை அப்படியே நம்புகின்றார். வழக்கமாக, அடுத்தவர்களின் இரக்கத்தில் இருப்பவர்கள் அப்படியே அடுத்தவர்கள் சொல்வதை நம்புவார்கள். இவருக்கு இதுவே வழக்கமாயிருக்கலாம். தன் நம்பிக்கையில் இயேசுவை நோக்கி, 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' எனக் கத்துகின்றார். இவரின் கூக்குரல் இயேசுவின் காதுகளில் விழுகின்றது. 'அவரைக் கூட்டி வாருங்கள்' என்கிறார் இயேசு. இயேசுவிடம் நான் ஆச்சர்யப்படுவது இதுதான். அவருக்கு எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது. தான் எருசலேம் போய்க்கொண்டிருப்பதும், அவசரமாகப் போய்க்கொண்டிருப்பதும், மக்கள் கூட்டத்தோடு போய்க்கொண்டிருப்பதும் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. நடக்கின்ற கடவுள் நிற்கின்றார். அவரால் எந்நேரமும் நிற்க முடியும். அவசரமாக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு நிற்கும் இயேசு நல்ல பாடம். நாம் அவசரமாக ஓடிக்கொண்டே இருப்பதால்தான் பல கூக்குரல்கள் நமக்குக் கேட்பதில்லை.

3. 'ஆண்டவரே, நான் பார்வை பெற வேண்டும்'

இயேசுவிடம் அவர் அழைத்துவரப்பட, 'நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார் இயேசு. வாய்ப்பு ஒருமுறைதான் வரும். வரும் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்தத் துணிகிறார் நபர். 'எனக்கு நிறைய பணம் வேண்டும்' என்றும், 'மக்கள் தங்கள் தாராள உள்ளத்தைக் காட்ட வேண்டும்' என்றும் கேட்கவில்லை. 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.' தன் வாழ்வின் முதன்மையானது எது என்பது அவருக்குத் தெளிவாகத் 'தெரிகிறது.' 'உம் நம்பிக்கை உம்மைக் குணமாக்கிற்று' என்கிறார் இயேசு. அவர் நலம் பெற்று இயேசுவைப் பின்பற்றுகிறார். இறைவனின் இரக்கத்தைப் பெற்ற அவருக்கு இனி யாருடைய இரக்கமும் தேவையில்லை. என்ன ஆச்சர்யம்!

மக்களும் அவரோடு சேர்ந்து கடவுளைப் புகழ்கின்றனர்.

என் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் சந்தடி சத்தம்போல இருக்கும் போது, 'இது என்ன?' என்று நானும் கேட்கிறேன். ஆனால், 'அவர்தான் அருகில் இருக்கிறார்' என்று அறிந்து, 'என் மீது இரங்கும்,' என்று கூக்குரலிடும்போது, 'அவர் மீண்டும் என் பார்வையைச் சரி செய்கின்றார்.' நம்பிக்கையின் பயணமே இந்த மூன்று வார்த்தை நிலைகள்.

இன்றைய முதல் வாசகத்தில் (திவெ 1:1-4,2:1-5) எபேசு நகரத் திருச்சபைக்கு எழுதும் தூய ஆவியார், 'உன்னிடம் முதலில் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்போதும் செய்' என்கிறார்.

தான் முதலில் செய்து வந்த கடவுளைப் பின்பற்றுதலை இப்போதும் செய்கிறார் அந்தப் பார்வையற்ற நபர்.

2 comments:

  1. பார்வையற்ற நபரில், எனை அடையாளம் கண்டேன்.;
    வாழ்வின் சூழல்கள், எனை குருடாக்கும் தருணங்களில்,"இது என்ன?" என்று சற்றே நின்று, அருகிலிருக்கும், அவரை அனுபவித்து," தாவீதின் மகனே என் மீது இரங்கும்" எனப்பணியும்போது,நம்மை நலம் பெற வைத்து,நம் பார்வையை சரி செய்து, "அவரை" மட்டுமே பின்பற்றும்......
    அந்த மேலான படிநிலைக்கு உயர்த்தி, வழிநடத்திய, அருட்பணி, யேசுவுக்கு, நன்றி.
    வழிநடக்கிறோம்...நீர் காட்டிய வழித்தடத்தில்.... வாழ்க!

    ReplyDelete
  2. அழகானதொரு பதிவு.வாழ்வின் முதன்மையானதை நாம் தேடித் தெரிவு செய்யும்போது இறைவன் இறங்கி நம்மருகில் வருகிறார் என்பதை நிருபிக்கும் ஒரு பதிவு. அத்தனை வரிகளுமே நெஞ்சுக்கு உரமேற்றுவது போலிருப்பினும் சில வரிகள் நச்சென்று நெஞ்சில் அப்பிக்கொள்கின்றன.நாம் 'அவரை' நோக்கிக்கதறும் போது " நடக்கின்ற கடவுள் நிற்கிறார்" என்பதும்," நம் வாழ்வின் முன்மையானது நம்மைத்தேடிவருகையில் அதைப்பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டுமென்பதும்," இறைவனின் இரக்கத்தைப் பெற்ற நமக்கு வேறு எதுவுமே தேவையில்லை" என்பதும் இயேசுவும்,பார்வையற்ற நபரும் எனக்குப் புகட்டும் பாடங்கள்.

    தன் வாழ்வில் சில சந்தடிகள் கேட்கையில் அதைக்கையாளும் தந்தையின் அனுபவமும் சேர்ந்தே நமக்குக்கை கொடுக்கிறது.'அவர்' நம்மருகில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ' என் மீது இரங்கும்' எனக் கூக்குரலிடும்போது அவர் நம் பார்வையை சரி செய்வது மட்டுமல்ல; நம்பிக்கையின் பயணமே இந்த மூன்று வார்த்தைகள் தான் என்பதையும் நம்மை உணரவைக்கிறார்.ஆம் தந்தையே! நாம் முன்னிருந்த நிலையையும்,பின் தவறவிட்ட தருணங்களையும் உணர்ந்து "திரும்பவும் அவரைப் பின்பற்றுவோம்" என சபதமெடுப்போம். " இறைவருகை" காலத்தை நோக்கி நகரும் நம்மை ஆயத்தப்படிகளுக்கு இட்டுச்செல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete