Sunday, November 25, 2018

எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

இன்றைய (26 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:1-4)

எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை வாசித்த நற்செய்திப் பகுதியை நாம் இன்று மீண்டும் வாசிக்கின்றோம். எருசலேம் ஆலயத்தில் காணிக்கைப் பெட்டி அருகே அமர்ந்திருக்கின்ற இயேசு, வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டு, 'இந்த ஏழைக் கைம்பெண் எல்லாவற்றையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் ... இவர் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்' என்று பாராட்டுகின்றார்.

மற்றவர்கள் தங்களிடம் உள்ள மிகுதியான செல்வத்திலிருந்து போட்டார்கள். அதாவது, முழுவதையும் போடவில்லை.

ஆனால், இக்கைம்பெண் எல்லாவற்றையும் போட்டுவிட்டார்.

வணிக அல்லது குடும்ப கணக்கு வழக்குப் பார்க்கிறவர்களுக்கு பரிச்சியமான ஒரு வார்த்தை 'பிஎஃப்' (ப்ராட் ஃபார்வர்ட்). அதாவது, முன்பக்கம் உள்ள வரவு செலவைக் கூட்டி, மீதம் இருப்பதை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதுவதுதான் 'ப்ராட் ஃபார்வர்ட்'.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபிஎம் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தானாகவே தன் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் தொடங்குகின்றார். இப்படியாக புதியதாகத் தொடங்குவதை 'ஸ்டார்ட்டிங் ஃப்ரம் தெ ஸ்க்ராட்ச்' என்று சொல்கின்றோம். அதாவது, ஒரு கார் பொலிவாக இருக்கிறது என்றால், அதன் தொடக்கம் 'ஸ்க்ராட்ச்'. ஆனால், உண்மையில் இந்த வார்த்தை உருவானது கிரிக்கெட் அல்லது கோல்ஃப் விளையாட்டிலிருந்துதான். ஒரு பேட்ஸ்மேன் கிரீஸூக்குள் வந்தவுடன், தன் பேட்டை, தன் உடல் அளவைப் பொறுத்து அளந்து ஒரு கோடு கிழிப்பார். அந்தக் கோடுதான் ஸ்க்ராட்ச். தனக்கு முன் இருந்தவர் கிழித்த கோட்டிலிருந்து அவரால் விளையாட முடியாது. புதியதாக அவரே தொடங்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண் செய்தவை இரண்டு:

1. அவருடைய குடும்ப கணக்கு ஏட்டில் 'ப்ராட் ஃபார்வர்ட்' என்ற குறிப்பு கிடையாது. ஏனெனில் அவர் முழுவதையும் போட்டுவிட்டார். அவர் 'ஜீரோ பேலன்ஸில்'தான் தன் அடுத்த நாள் வாழ்வைத் தொடங்க வேண்டும்.

2. ஒவ்வொரு நாளையும் அவர் ஸ்க்ராட்சிலிருந்து தொடங்கினார்.

இவருடைய இந்தச் செயல்கள் நம் வாழ்க்கை மேலாண்மைக்குப் பயன்படுபவையாக இருக்கின்றன. எப்படி?

பல நேரங்களில் நாம் புதிய செயல்களை அல்லது நம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்ய முடியாததன் காரணம், நாம் ஒவ்வொரு நாளும் 'ப்ராட் ஃபார்வர்ட்' செய்தே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான் கல்லூரியில் கற்பிக்கிறேனா? நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். நான் மருத்துவரா? நேற்று பார்த்த நபரிலிருந்து தொடங்குகிறேன். இப்படிச் செய்வதால் என் வாழ்வு இழுத்துக்கொண்டே போகும். புதியதாக என்னால் எதையும் செய்ய முடியாது.

மேலும், உறவு நிலைகளில் நாம் பழைய காயங்கள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் ஆகியவற்றை மறுபடி ஃப்ராட் ஃபார்வர்ட் செய்து வாழும்போது, உறவு நிலைகள் மேலும் மேலும் கசந்துகொண்டே இருக்கும். ஆக, கைம்பெண் மாதிரி அன்றன்றுள்ளதை அன்றன்றே முடித்துவிட வேண்டும்.

அதே வேளையில், வாழ்வில் சில உறவுகளை நாம் இழக்கும்போது, சில பணிகளை நாம் விடுகின்ற சூழல் எழும்போது, 'என்னாலும் ஸக்ராட்சிலிருந்து தொடங்க முடியும்' என்ற நம்பிக்கை வேண்டும்.

ஒரு நாளாவது, இந்தக் கைம்பெண்ணைப் போல, என்னிடம் உள்ளது அனைத்தையும் அப்படியே மொத்தமாகப் போட்டுவிட்டு, புதிய நாளை, எந்தவொரு ப்ராட் ஃபார்வர்டும் இல்லாமல், ஸக்ராட்சிலிருந்து தொடங்க வேண்டும்போல இருக்கிறது.

ஆனால், அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சல் எனக்கு இல்லை.

அந்தப் பெண்ணின் துணிச்சலுக்குக் காரணம் அவருடைய மனச்சுதந்திரம். தன் வாழ்வைத் தான் வாழ்ந்தார். இழப்புக்கள் கூடக்கூடத்தான் மனம் அந்தப் பக்குவம் பெறும் என நினைக்கிறேன்.

4 comments:

  1. ' ப்ராட் ஃபார்வர்ட்', 'ஜீரோ பேலன்ஸ்', ' ஸ்டார்ட்டிங் ஃப்ரம் த ஸ்க்ராட்ச்' ஒரு சில ஏரியாக்களுக்கு மட்டுமே சொந்தமான சில வார்த்தைகளை அன்றாடம் நமக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கை முறையோடு இணைத்துப் பேசுகிறார் தந்தை. அதுவும் உறவு நிலைகளோடு முடுச்சுப் போடுவது ரொம்பவே இயல்பாகத் தோன்றுகிறது.இவை எல்லாமே 'கைம்பெண்' எனும் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது இன்னும் அழகான விஷயம்.ஒருவரின் வாழ்வை ஸ்க்ராட்ச்சிலிருந்து தொடங்கவோ,ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணவோ வேண்டியது மனச்சுதந்திரமா,துணிச்சலா இல்லை இரண்டுமா? எனக்குத் தெரியவில்லை.ஆனால் இழப்புகளோடு வாழவும் ஒரு துணிச்சல் வேண்டும். பலபேருக்கு அது இல்லாமற் போவதன் விளைவுகளும்,விபரீதங்களும் நாம் கண்கூடாகப் பார்ப்பவையே! ஆனால் தந்தை சொல்லும் அந்த கடைசி வரி... "இழப்புக்கள் கூடக் கூடத்தான் மனம் பக்குவப்படும் என நினைக்கிறேன்." உண்மைதான்." தன்னிடமிருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்ட கைம்பெண் எத்தனை பெரிய பாடத்தை நமக்குப்புகட்டிவிட்டார்! மனதை திறந்து வைத்தால் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பாடம் படிக்கலாம் என்ற வாழ்க்கைப்பாடத்தை முன்னிறுத்திய தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete
  2. " அந்த பெண்ணிடம் இருந்த துணிச்சலை" நான் என்னுள் உருவாக்கப்போகிறேன்...
    Yes..
    மனச்சுதந்திரம்" அதை மெல்ல மெல்லத் நானும் எனதாக்கப்போகிறேன்... நிச்சயமாக..
    வழிநடத்திய அருட்பணி யேசுவுக்கு நன்றிகள்!
    அன்பு--இழப்பு--- வலி-----வாழ்க்கை..
    ம்ம்.

    ReplyDelete
  3. உறவு நிலைகளில் நாம் பழைய காயங்கள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் ஆகியவற்றை மறுபடி ஃப்ராட் ஃபார்வர்ட் செய்து வாழும்போது, உறவு நிலைகள் மேலும் மேலும் கசந்துகொண்டே இருக்கும். ஆக, கைம்பெண் மாதிரி அன்றன்றுள்ளதை அன்றன்றே முடித்துவிட வேண்டும். இது மிகவும் புதுவிதமான விளக்கம். பாராட்டுக்கள் Fr.Yesu.

    ReplyDelete