Wednesday, November 14, 2018

இறையாட்சி

இன்றைய (15 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 17:20-25)

இறையாட்சி

'இறையாட்சி எப்போது வரும்?' என்று இயேசுவிடம் பரிசேயர்கள் கேட்க, 'கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது ... இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது' என்கிறார்.

'உங்கள் நடுவே' என்றால் 'பரிசேயர்கள் நடுவே' என்று இயேசு சொல்கிறாரா?

அல்லது

இறையாட்சி 'உங்கள் நடுவே' என்று ஒட்டுமொத்த உலகைச் சொல்கிறாரா?

வான்நோக்கிப் பார்க்கும் இறையாட்சி விடுத்து தான்நோக்கிப் பார்க்கும் - தன்னையும், தன்னைச் சுற்றியும் பார்க்கும் - இறையாட்சி நினைக்க அழைப்பு விடுக்கிறார் இயேசு.

இறையாட்சி நம் நடுவில் இருக்கிறது என்பதை எண்பிக்கும் விதமாக அமைகிறது இன்றைய முதல் வாசகம் (காண். பிலமோன் 7-20).

பிலமோனிடமிருந்து தப்பி வந்த அவரின் அடிமை ஒனேசிமுவைத் திரும்ப அவரிடம் அனுப்புகின்றார் பவுல். அப்படி அனுப்பும்போது அவர் ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அதில் உள்ள சில கூறுகளைப் பார்ப்போம். அக்கூறுகளில்தான் இறையாட்சி இருக்கிறது.

1. அன்பின் பெயரால்

இறையாட்சி என்ற வட்டத்தின் மையப்புள்ளி அன்பு. 'கட்டளை' அல்லது 'மேல்-கீழ்' பிரிவு மறைந்து, எங்கே 'வேண்டுகோள்' அல்லது சரிநிகர் நிலை வருகிறதோ அங்கே இறையாட்சி தொடங்குகிறது.

2. பயனற்றவர்கள் பயனுள்ளவர்கள் ஆகிறார்கள்

இன்று உறவுகள் பெரும்பாலும் பயன்பாட்டு நிலையில்தான் பார்க்கப்படுகின்றன. வயதான அருள்பணியாளர்கள் அல்லது அருள்சகோதரிகளைச் சந்திக்கும்போதெல்லாம், அல்லது நம் இல்லங்களில் வயதானவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த எண்ணம் என்னில் எழும். இவர்கள் பயனுள்ளவர்களாக இருந்தபோது எத்தனை பேர் இவர்களைத் தேடி வந்தார்கள்? பயன்பாடு குறைந்தவுடன் அவர்கள் சுமைகளாக ஆகிவிடுகிறார்கள். சுமையாகக் கருதப்பட்ட ஒனேசிமுவை பயனுள்ளவராக ஆக்குகின்றார் பவுல்.

3. உம்முடைய உடன்பாடு

அதாவது, அடுத்தவரின் உடன்பாடு இல்லாமல் செய்யப்படும் அனைத்தும் - அது அவருக்கு நன்மையே தந்தாலும் - காலப்போக்கில், சுமையாக மாறிவிடும். பிலமோனுக்கும் அதே நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் உடன்பாட்டை நாடுகிறார் பவுல்.

4. அடிமையாக அல்ல சகோதரனாக

இவ்வளவு நாள் இவன் அடிமையாக இருந்தான். ஆனால், நீர் பெற்றிருக்கிற நம்பிக்கையை இவனும் பெற்றிருக்கிறான். ஆக, நாம் எல்லாம் சகோதரர்கள்.

5. நான் ஈடு செய்வேன்
அடிமையின் கடனுக்குத் தன்னைப் பிணையாக்குகிறார் பவுல்.

6. எனக்குப் புத்துயிர்

பிலமோன் செய்யும் இந்த நற்செயலால் பவுல் புத்துயிர் பெறுவார்.

இவ்வாறாக, நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் நாம் கைக்கொள்ளும் மதிப்பீடுகளில் இருக்கிறது இறையாட்சி.


2 comments:

  1. " இறையாட்சி" எப்போது வரும் எனக்கேட்ட பரிசேயர்களுக்கு இயேசு கூறும் " இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது." எனும் பதிலுக்கு தந்தையின் " வான் நோக்கிப்பார்க்கும் இறையாட்சி விடுத்து தான் நோக்கிப்பார்க்கும்- தன்னையும்,தன்னைச்சுற்றியும் பார்க்கும் இறையாட்சி" எனும் விளக்கம் இறையாட்சி பற்றிய அத்தனை விஷயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 'அன்பு','பயன்','உடன்பாடு', ' சகோதரத்துவம்','ஈடு செய்தல்' மற்றும் ' புத்துயிர் அளிப்பது' என்பவையே 'அந்த' விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. "உன்னில் என்னைப்பார்க்கிறேன்".... என்ற பாசத்தின் வெளிப்பாட்டைக் கேட்டிருப்போம். "எனக்கு என்னவெல்லாம் வேண்டுமென நினைக்கிறேனோ, அவையெல்லாம் உனக்கும் கிடைக்க வேண்டுமென விழைகிறேன்".....என்பதுதான் அந்த வரிகளுக்கு அர்த்தமாக இருக்குமோ? "இறையரசு" எனும் வார்த்தைக்கு இதைவிட மேலான அர்த்தம் இருக்க முடியுமோ? தெரியவில்லை.தேர்ந்து,தெரிந்த வார்த்தைகளின் 'அகராதி'க்குச் சொந்தக்காரரான தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில், நாம் கைக்கொள்ளும் மதிப்பீடுகளில், இறையாட்சியை காண அழைப்பு விடுக்கிற யேசுவுக்கு நன்றிகள்!...

    ReplyDelete