Sunday, November 4, 2018

கைம்மாறு

இன்றைய (5 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 14:12-14)

கைம்மாறு

இயேசு இன்னும் விருந்து நடக்கும் இடத்தில்தான் இருக்கிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் (லூக் 14:1,7-11) விருந்தினர்களிடம் பேசிய இயேசு, இன்றைய நற்செய்திப் பகுதியில் விருந்துக்கு அழைத்தவரிடம் பேசுகின்றார்.

இன்றைய விருந்துகள் தங்களின் பொருளை இழந்துகொண்டே வருகின்றன என்பது கண்கூடு. 'என்னால் எவ்வளவு முடியும் பார்!' என்று மற்றவரைக் கூப்பிட்டுக் காட்டுவதாகவும், விருந்திற்கு வருபவர்களும், 'என்னிடமும் நிறைய உள்ளது' என்று காட்டுவது போலவும் இருக்கிறது. வருகின்ற விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அனுப்புவதோடு அல்லாமல், இப்போது 'ரிட்டர்ன்' கிஃப்ட் என்ற ஒன்றும் பிரசித்தியாக உள்ளது. அதாவது, வருகின்ற விருந்தினர்களின் பிரசன்னத்தையும், அவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புக்களையும் திரும்பச் செலுத்தும்விதமாக இப்போது ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிறோம். இதன் பொருள் என்ன? 'நானும் உனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீயும் எனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீ கொடுத்ததை நான் உனக்கு கை மாற்றிவிட்டேன்' என்பதுதான்.

இவ்வாறாக, ஒருவர் கொடுத்ததை நாம் நம் கைகளால் வாங்கி, அதே கைகளில் வேறொன்றைக் கொடுத்து விடுகிறோம். இதுதான் கைம்மாறு.

கிராமங்களில் கடன் வாங்குவதை, 'கைமாத்து வாங்குவது' என்று சொல்வார்கள். ஆக, கைம்மாறு செய்யாமல் இருக்கும்போது ஒருவர் கடன்பட்டவராகவே இருக்கிறார்.

தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், 'விருந்துக்கு யாரை அழைக்க வேண்டும்?' என அறிவுறுத்துகின்றார் இயேசு. நண்பர்களையும், சகோதர, சகோதரிகளையும், உறவினர்களையும், செல்வம் படைத்த அண்டை வீட்டாரையும் அழைத்தால் அவர்கள் திரும்ப அழைத்து கைம்மாறு செய்துவிடுவார்கள். ஆக, கைம்மாறு செய்ய முடியாத ஏழைகள், உடல் ஊனமுற்றவர்கள், கால் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள் அழைக்கப்பட்டால் அவர்களால் கைம்மாறு செய்ய முடியாது. ஆனால், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக கைம்மாறு செய்வார். எப்போது? மறுவுலகில். பல நேரங்களில் அதை அவர் இவ்வுலகிலேயே செய்துவிடுவார்.

இங்கே, விருந்து கொடுப்பவரை மனிதர் நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார் இயேசு.

திரும்ப விருந்து கொடுக்க முடிபவர்களை நாம் விருந்துக்கு அழைக்கும்போது நாம் மனிதர் நிலையில் இருக்கிறோம்.

திரும்ப விருந்து கொடுக்க முடியாதவர்களை நாம் அழைக்கும்போது நாம் கடவுள் நிலையில் இருக்கிறோம்.

மேலும், கடவுள் செய்யும் செயல்களுக்கு நாம் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, அடுத்தவர்கள் நமக்கு கைம்மாறு செய்ய முடியாத நிலையில் நாமும் கடவுளாகத்தான் இருக்கிறோம்.

இதையே திருவள்ளுவரும்,

'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு' (குறள் 211) என்கிறார்.

நம் மேல் பொழியும் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்ய இயலாது. அம்மழை நம்மிடம் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை.

இதையொட்டி, இன்றைய முதல் வாசகத்தில் (பிலி 2:1-4) பவுலடியாரும், 'நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்' என்கிறார். தன்மையம் கைம்மாறு கருதும். பிறர்மையம் கருதாது.


2 comments:

  1. "நாம் கொடுக்கும் விருந்திற்கு பதில் விருந்து தர இயலாதவரையே நாம் விருந்திற்கு அழைக்க வேண்டும்" எனச் சொல்கிறது இன்றையப்பதிவு. காரணம் அவர்கள் சார்பாக இவ்வுலகிலும்,மறுவுலகிலும் இறைவனே நமக்கு கைமாறு செய்துவிடுவார்.( ஆக ஏதோ ஒரு விதத்தில் மைமாறு பெறத்தானே செய்கிறோம்?) விருந்து கொடுக்க முடிந்தவரை நாம் அழைக்கையில் 'மனிதர்' நிலையிலும்,கொடுக்க இயலாதவர்களை அழைக்கையில் நாம் 'கடவுள்' நிலையிலும் இருப்பதாகச் சொல்வது நாமும் 'கடவுள்' நிலைக்கு மாற அழைக்கப்படுகிறோம் என்பதைக்காட்டுகிறது. அடுத்தவரால் நமக்கு கைமாறு செய்ய இயலாத நிலையில் நாமும் 'கடவுளே!'.... எத்துணை அழகான வரிகள்! கடவுளாவது இத்துணை எளிதா? என்று மனம் கேட்கிறது.தன்னுடைய வார்த்தைகளுக்குக் கட்டியம் கூற திருவள்ளுவரையும் பவுலடியாரையும் சாட்சிக்கழைக்கிறார் தந்தை என்பதே அவர் கூற்றில் உள்ள உண்மையை விளம்புகின்றன. "நாமெல்லோரும் தன்மையம் பாராது பிறர் மையம் பார்க்க வேண்டும்."..... பிறவிப்பயனை அடைய வழி சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்...

    பி்கு..இந்த 'ரிடர்ன் கிஃப்ட்'... ஒன்றும் தப்பான விஷயமாகப் படவில்லை.தந்தையே! நானும்,நீங்களும் பிறக்கும் முன்னரே ஒரு பழக்கம் இருந்தது.சுக,துக்கம் நடக்கும் வீடுகளுக்குச் செல்பவர்கள் உணவருந்திவிட்டு " மொய்" எனும் பெயிரில் தங்களால் இயன்றதைக் கொடுப்பார்கள் அந்த வீட்டாருக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு செலவை உடன் தாங்கும் நல்லெண்ணத்தில்.அந்த " மொய்" தான் இன்று நம்முடைய கையிலிருக்கும் "பசை" க்குத் தகுந்தவாறு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.'மொய்'.. 'ரிடர்ன் கிஃப்ட்'....புதிய மொந்தையில் பழைய கள்ளு!அவ்வளவே! தப்பான விஷயமில்லை!

    ReplyDelete
  2. "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்."
    தந்தையே! இச்சிந்தனை விருந்துக்கு மட்டுமல்லாது உறவுக்கும் தானே...
    "எசமானின் மேசையிலிருந்து விழும் ரொட்டித்துண்டுகள் நாய்களுக்கும் கிடைக்குமே" என்று இயேசுவையே " இஸ்ரேலில் இத்துணை நம்பிக்கையை நான் பார்த்ததில்லை" என்று இயம்ப வைத்த கனானயப் பெண், இங்கு என் நினைவுக்கு வருகிறாள்.
    இயேசுவை பிரதிபலிக்கும் என் அன்புக்குரிய அருட்பணியாளர்களே!
    பதின் குருக்கள் பங்கேற்கும் ஒரு திருமண திருப்பலிக்கும், ஏழை திருமண ஒப்பந்த்திற்கும் தங்களுக்கு அழைப்பு கிடைத்தால்,.. எதை தேர்ந்தெடுப்பீர்கள்???
    பொதுநிலையினரான யான் உறுதியாக கூறுகிறேன்... நான் ஏழை வீட்டையே, விருப்பமுடன் ஏற்பேன்...
    ஒருவர் வரம்பின்றி செலுத்தும் அன்பிற்கு கைமாறு கிடைக்காவிட்டால்...
    முதல்வர் கடவுளோ?...
    நன்றி! வாழ்க! வளர்க நும் எழுத்தோவியம்....

    ReplyDelete