Sunday, November 11, 2018

குழு வாழ்வு

இன்றைய (12 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 17:1-6)

குழு வாழ்வு

சீடர்கள் தங்கள் குழுவாழ்வில் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அறிவுறுத்துகின்றார். அவர் அறிவுறுத்தும் பண்புகள் மூன்று:

அ. சக குழு உறுப்பினர்களுக்கு இடறலாக இல்லாமல் இருத்தல்

ஆ. சக குழு உறுப்பினர்கள் மனம் வருந்தினால் மன்னித்தல்

இ. இறைவன்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருத்தல்

'இடறல்' என்பதை நற்செய்தி நூல்களில் இரண்டு நிலைகளில் புரிகிறோம்: முதலில், 'இவர் தச்சனின் மகன்தானே!' என்று இயேசுவைப் பார்த்து அவரது சொந்த ஊரார் சொல்வதை, அவர்கள் இயேசுவைக் குறித்து இடறல் படுகின்றனர் என்கிறோம். இரண்டாவதாக, இலஞ்சம் வாங்காத ஒருவரை இலஞ்சம் வாங்க மற்றவர் தூண்டினால், அந்த மற்றவர் இவரை பாவத்தில் இடறச் செய்கின்றார் (விழச் செய்கின்றார்) என்கிறோம். இன்றைய நற்செய்தியில் 'இடறல்' என்பதன் பொருள் இரண்டாவது நிலையில் உள்ளது.

'பாவ சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், யாரால் வருகிறதோ அவருக்குக் கேடு' என எச்சரிக்கிறார் இயேசு. ஆக, பாவம் செய்ய நான் மற்றவரைத் தூண்டும்போது அவர் பெறும் தண்டனையைவிட நான் பெறும் தண்டனை அதிகமாக இருக்கிறது. எந்தப் பாவம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், கோபம், பொறாமை, ஒப்பீடு போன்ற குழு உறவுப்பிறழ்வு பாவங்களாகவும் இருக்கலாம்.

அடுத்ததாக, 'மன்னிப்பு.' ஒரு குழுவில் மற்றவர் பாவம் செய்து, அதை அவர் உணர்ந்து, மீண்டும் மீண்டும் திரும்பி வரும்போது, அவரை மன்னிப்பது இவரின் கடமையாக இருக்கிறது.

மேலும், 'நம்பிக்கை.' இறைவன்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மற்ற இரண்டு பண்புகளின் அடித்தளமாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (தீத் 1:1-9), சபைக் கண்காணிப்பாளரிடம் எவை இருக்கக் கூடாது, எவை இருக்க வேண்டும் என்று பட்டியல் இடுகின்றார்:

எவை இருக்கக் கூடாது?

1. குறைச்சொல்லுக்கு ஆளாகமல் இருத்தல்
2. அகந்தை
3. முன் கோபம்
4. குடிவெறி
5. வன்முறை
6. இழிவான ஊதியத்தின்மேல் ஆசை

எவை இருக்க வேண்டும்?

1. விருந்தோம்பல்
2. நன்மையில் நாட்டம்
3. கட்டுப்பாடு
4. நேர்மை
5. அர்ப்பணம்
6. தன்னடக்கம்

மேற்காணும் பண்புகளில் இருக்கக் கூடாதவை நம்மில் இருந்தால், இருக்கக் கூடியவை நம்மில் இல்லாமல் இருந்தால், கழிக்கவும், கூட்டவும் முயல்வோம்.

2 comments:

  1. சீடர்கள் தங்கள் பணிவாழ்வில் தங்களின் பணிவாழ்வுக்காக மேற்கொள்ள வேண்டிய விஷயங்களாக இயேசு குறிப்பிடும் "சக உறுப்பினர்களுக்கு இடறலாக இல்லாமல் இருத்தல்", " அவர்கள் மனம் வருந்தும்போது மன்னித்தல்" போன்ற நற்பண்புகளோடு, சபைக் கண்காணிப்பாளருக்கு இருக்கவேண்டிய மற்றும் இருக்கக்கூடாத விஷயங்களாகப் பட்டியலிடும் அனைத்திற்கும் " இறை நம்பிக்கையே" அடித்தளம் என்று ஒத்துக்கொள்ள முடிகிறது.நாம் இறைவனிடம் வரமாக்க்கேட்கும் ஐந்து விஷயங்களில் ஏதேனும் ஒன்றிரண்டு குறைந்தால் கூட இந்த " அடித்தளம்" ஆடிப்போவது இயற்கையே என்பது நாம் பல சமயங்களில் கண்கூடாகக் கண்ட விஷயங்களே! ஆனால் அப்படிப்பட்ட நேரங்களிலும் நம் "அடித்தளம் " ஆடிப்போகாமல் காப்பது "இறை நம்பிக்கையே" என்று கூறும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. "இடறல்" ." பாவச்சோதனை" குறித்த இரு வேறு எடுத்துக்காட்டுகள் அளித்திருப்பது என்போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
    நன்றி அருட்பணியாளர் அவர்களே!
    மற்றபடி கழிக்கவும், கூட்டவும் கண்டிப்பாக செய்கிறோம் என உறுதியளிக்கிறோம்.
    நன்றி! தொடரட்டும் தும் நற்செய்தி பணி!
    துலங்கட்டும் நெஞ்சங்கள் பல கோடி...

    ReplyDelete