Thursday, November 22, 2018

என்ன செய்வது?

இன்றைய (23 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:45-48)

என்ன செய்வது?

நேற்றைய நற்செய்திப் பகுதியில் எருசலேம் நகரின் ஆலயத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்ட இயேசு, இன்றைய நற்செய்தியில் அதன் உள்ளே நுழைந்து, அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை வெளியே துரத்துகின்றார். மேலும், ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வருகின்றார்.

இயேசு கோவிலில் செய்ததும், அவர் செய்வதும் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மற்றும் மக்களின் தலைவர்களின் கண்களில் விழுந்த தூசியாக உறுத்துகிறது.

இந்த இடத்தில் லூக்கா அழகாக ஒன்றைப் பதிவு செய்கின்றார்: 'ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.'

இயேசுவின் நாணயத்திற்கும் நன்மைத்தனத்திற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை என நினைக்கிறேன்.

இன்று காலை டுவிட்டரில் பவுலோ கோயலோ அவர்களின் வரி ஒன்றை வாசித்தேன்: 'வாழ்வில் வெற்றி அடைய ஒரே வழி: நீ உன்னிடமே பொய் சொல்லாதே!'

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எடுத்துக்காட்டாக, காலை 5 மணிக்கு நான் எழுவேன் என்று எனக்கு நானே சொல்லிவிட்டு, காலையில் 6 மணிக்கு எழும்போது நான் என்னிடமே பொய் சொல்கிறேன். சின்னச் சொல்லையே என்னால் காப்பாற்ற முடியாதபோது பெரிய சொல்லைக் காப்பாற்ற என்னிடம் தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. ஏனெனில், என் மூளை நான் எதைச் சொன்னாலும், 'இவன் பொய் சொல்கிறான்' என்று சொல்ல ஆரம்பிக்கும். அப்படி இருக்கும்போது, 1000 பேர் என்னை நம்பினாலும், என்மேல் எனக்கு நம்பிக்கை வராது. ஆனால், அதுவே நான் ஒன்றைச் சொல்லி அதை அப்படியே செய்தால் என் மூளை என்னை நம்ப ஆரம்பிக்கும். 'இவனுக்கு கறுப்பு என்றால் கறுப்பு, வெள்ளை என்றால் வெள்ளை, 1 என்றால் 1, 5 என்றால் 5' என்று தன்னம்பிக்கையை வளர்க்கும். அப்படி இருக்கும்போது, 1000 பேர் என்னை நம்பவில்லையென்றாலும், என் மனம் என்னை நம்பும். வேலையும் எளிதாக முடியும்.

இயேசுவிற்கும் நான் இதைப் பொருத்திப் பார்க்கிறேன்.

இயேசு ஒருபோதும் தன்னிடம் பொய் பேசியதே இல்லை.

'இது கோவில் என்றால் கோவில்' - அவ்வளவுதான் அவருக்கு. 'கோவில்தான், ஆனால் வியாபாரம் செய்யலாம்' என்று அவர் சொல் ஒன்று, செயல் மற்றொன்று என்று இல்லை. இயேசு அப்படி இருந்ததால்தான், தலைவர்கள், 'இவரை என்ன செய்வதென்று தெரியவில்லை' என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தனக்குத் தானே பொய் சொல்லாதவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. அப்படியே அவர்கள் எதைச் செய்ய நினைத்தாலும் அவர்கள் தங்களை முழுவதும் நம்புவதால் வெகு எளிதாக அதிலிருந்து எழுந்துவிடுவர்.

என் வாழ்விலும், 'இவனை என்னை செய்வது என்றே தெரியவில்லையே?' என்று மற்றவர்கள் நினைக்கும்படி என் வாழ்வு இருக்கிறதா? என்பதுதான் என் கேள்வியாக இருக்கிறது.

என்னிடம் நானே பொய் சொல்லும்போது மற்றவர்கள் என்னை எளிதில் வீழ்த்திவிட நானே அதற்கு வழி அமைத்துக் கொடுத்துவிடுவேன்.

என்னிடம் நான் பொய் பேசும்போது அது எப்படி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 10:8-11) உருவகமாகச் சொல்கிறது (அது சொல்லப்படும் சூழல் வேறு!).

'வாயில் தேனைப் போல இனித்தது. ஆனால், தின்றபோது என் வயிற்றில் கசந்தது.'

'5 மணிக்கு எழுகிறேன்' எனச் சொல்லிவிட்டு, '6 மணிக்கு' எழுந்தால் அது தேனைப் போல இனிக்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் வயிற்றில் இறங்கியவுடன் - நாள் நகர நகர - அது கசக்கும்.

இயேசு தனக்குத் தானே உண்மையாய் இருந்ததால் இன்றைய நற்செய்தி இப்படி முடிகிறது: 'மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக் கொண்டிருந்தனர்.' அதாவது, இயேசுவின் உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர்!

7 comments:

  1. அன்றாடம் நம்மை வருத்தும்,பாதிக்கும் ஒரு விஷயத்தை விவாதப்பொருளாக கொண்டுவந்துள்ளார் தந்தை.பொதுவாகவே நாம் நமக்கு உண்மையாக இருக்கையில் நமது மனமே நமக்கு உரிய மரியாதையைக் கொடுக்கும் என்பதும், என் மேல் என் மனம் வைத்திருக்கும் மரியாதை என்னையுமறியாமல் உலகத்திற்கே என்னைக் காட்டிக்கொடுக்கும்; என் மதிப்பைக்கூட்டும் என்பதும் நமக்குப் பரிட்சயமான உண்மை.நல்லதோ,கெட்டதோ...நான் இதுதான்; என் வழி இப்படித்தான் என அப்பட்டமாகத் திரிபவனே அடுத்தவரின் பார்வையிலும் மரியாதைக்குரியவராகிறான். நாமே உணர்ந்திருப்போம்.....நமது பொய்யால் எதிராளியை நம்ப வைக்க முடிந்த நம்மால் நமது மனத்தை ஏமாற்றுவது அத்தனை சுலபமல்ல.எனக்கு நானே பொய்யனாக மாறும்போது எனக்கு என்ன நடக்கிறது என்பதை முதலில் இனிக்கும் தேனாக இருக்கும் ஒரு விஷயம் பின் எப்படி கசக்கும் விஷமாக மாறுகிறது என்பதை தந்தை அன்றாடம் நடக்கும் ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார்.யார் அதை மறுக்க முடியும்? நமது வார்த்தைகள் "ஆம். என்றால் ஆம்! இல்லையென்றால் இல்லை!" என இருக்கையில் மட்டுமே நாம் நமக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.அப்பொழுது மட்டுமே " இவனை/ இவளை என்ன செய்வதென்று" பிறர் நம்மைப்பார்த்து புலம்புவது நம் செவிகளைத்தொடும்.இயேசுவின் உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்ததைப் போலவே நம்மைச்சுற்றியும் பலர் தொங்குவதை உணர முடியும்.. நிமிர்ந்த நன்னடைக்கும்,நேர்கொண்ட பார்வைக்கும் நம்மைச் சொந்தக்கார்ராக்கும் ஒரு பதிவு! தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. "இயேசு ஒரு போதும் தன்னிடம் பொய் பேசியதில்லை."
    நன்று.

    ReplyDelete
  3. இயேசுவின் "சிலபஸ்" நமது வாழ்க்கையாகும் போது "இவனை என்ன செய்வது என்றே தெரியவில்லை"என்று உலகம் புரியாமல் தடுமாறும்...
    "தன்னெஞ்சறிவது பொய்யற்க"என்பது வள்ளுவம்.மெய் என்பது உடம்பு.அது நோய்மையைக் காட்டும் கண்ணாடி.பொய் சொல்லாமையால் அது மெய்.ஆனால்,முகமூடி அணிந்த மனம் பொய் சொல்கிறது.ஆழ்மனம் பொய் சொல்வதையும்,மெய் சொல்வதையும் உணர்வதில்லை.அதில் பதியும் நம்பிக்கை நடந்தே தீருகிறது.தீபக் சோப்ராவின் மருத்துவமும் இதையே உலகிற்கு நிரூபித்தது.தந்தை இயேசு எடுத்த சொற்றொடர்"ஆனால்,என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை"
    சுகானுபவம் தந்த சொற்றொடர்;சொன்ன பொருள் புதிது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Your comment is GREAT..mr.Stanislaus!
    Hereby a friendly suggestion to rev.Yesu.
    If you want to be successful,....
    EVER be truthful to yourself...
    ( Reframing Paulo Coelho's version)
    A Little more positive...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete