Friday, November 16, 2018

மனந்தளராமல்

இன்றைய (17 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 18:1-18)

மனந்தளராமல்

'மனந்தளராமல்' எப்போதும் இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு ஓர் எடுத்துக்காட்டு தருகின்றார். நகரில் இருந்த கைம்பெண் ஒருவரிடம் கைம்பெண் தனக்கு நீதி வழங்கக் கேட்டுச் செல்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் தங்களின் கணவன் சொத்தைப் பெறுவதற்கு வழக்காட வேண்டியிருந்தது. அந்தப் பின்புலத்தில்தான் தனக்கு நீதி கிடைக்க இந்த நடுவரிடம் செல்கின்றார் கைம்பெண்.

இயேசு குறிப்பிடும் நடுவரின் வாழ்க்கை இலக்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது: 'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.' வித்தியாசமானதாக இருக்கிறது இது. இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால் வாழ்வு எத்தனையோ நலம்! கடவுளுக்கு அஞ்சுவதால் நமக்கு தேவையற்ற குற்றவுணர்வு வருகிறது. மனிதர்களை மதிப்பதால் தேவையற்ற மனப்பாரம் வருகிறது. கடவுளும் தேவையில்லை. மனிதர்களும் தேவையில்லை. நாம் இப்படித்தான் படைக்கப்பட்டோம். ஆனால், காலப்போக்கில் கடவுளும், மனிதர்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பதுபோல வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நிகழ்வுக்கு வருவோம்.

இப்படிப்பட்ட ஒரு தத்துவ ஞானியிடம் மாட்டிக்கொண்ட கைம்பெண் தொடர்ந்து வேண்டுகிறார்.

நாம் ஒரு வேலையை முடிக்க இரண்டு காரணங்கள்தாம் உள்ளன:

அ. கடவுளுக்கு அச்சம்

ஆ. நமக்கு மேல் இருக்கும் மனிதர்களுக்கு மதிப்பு

இந்த இரண்டும் இருப்பதால்தான் நாம் வேலையைக் குறித்த காலத்தில் செய்து முடிக்கிறோம். இந்த நடுவரிடம் இந்த இரண்டும் இல்லை. 'கடவுளுக்கு அஞ்சுபவராக' இருந்தால், 'நீர் செய்வது திருச்சட்டத்திற்கு எதிரானது' என்று கடவுளை மையப்படுத்தி முறையிட்டிருப்பார் கைம்பெண். அல்லது 'மனிதர்களை மதிப்பவராக' இருந்தால், 'உனக்கு மேலதிகாரியிடம் சொல்லி விடுவேன்' என மிரட்டியிருப்பார் கைம்பெண். ஆனால், இந்த இரண்டிற்கும் வழியில்லாததால், அந்தப் பெண் மூன்றாவது ஆயுதத்தைத் கையில் எடுக்கிறார். அதுதான் 'விடாமுயற்சி.' இங்கே, 'ஒருவரின் விடாமுயற்சி மற்றவரின் தொல்லை' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, 'ஒருவரின் மனவுறுதி மற்றவரின் பிடிவாதம்' என்பதைப் போல.

கைம்பெண்ணின் விடாமுயற்சியைத் தொல்லையாக உணரும் நடுவர் நீதி வழங்குகிறார்.

ஆனால், கடவுள் அப்படிப்பட்டவர் அல்லர் என்கிறார் இயேசு.

மேலும், இறுதியில், 'ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்ற தன் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கைம்பெண்ணின் விடாமுயற்சியை உந்தித் தள்ளியது நம்பிக்கையே.

4 comments:

  1. நம்மில் பலருக்கு இந்த வாழ்க்கை சற்று சுவையாக உள்ளது எனில் அது நம்மில் உள்ள " நம்பிக்கை" எனும் கொடையாலேயே! இறைநம்பிக்கை மட்டுமின்றி மனிதநம்பிக்கையும் கண்டிப்பாக இதில் அடங்கும்.ஒருவரிடம் கடன் வாங்கி, வட்டி அசலை விழுங்க, கடன் வாங்கியவரின் அத்தனை சொத்தையும் சூறையாடும் கணவான்களோ,அந்த கணவான்களின் பேராசைக்கு இரையான அபலைகளோ நாம் அன்றாடம் சந்திக்கும் கதைமாந்தர்களே! இப்படிப்பட அபலைகளுக்கு 'அபயக்குரலாக' வருகிறார் இன்றையப்பெண்மணி.பல சமயங்களில் மனிதருடன் சேர்ந்து ஆண்டவனும் நம்மைக் கைவிட்ட மாதிரி தோன்றிய சமயங்களை நாம் சந்திக்கலாம்.அந்த நேரத்தில் நமக்கு கைகொடுக்க வேண்டியது 'அந்த' மூன்றாவது ஆயுதமான ' விடாமுயற்சி' என சொல்ல வருகிறார் இன்றைய நாயகி.' கடவுளுக்கு அஞ்சாத,மனிதர்களை மதிக்காத ஒரு மனிதனிடமே ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு 'கருணை' சுரக்கையில் அண்ட சராசரத்தையிம் தன் கைகளில் அடக்கி வைத்திருக்கும் நம் ஆண்டவரிடம் இரக்கம் பிறக்காதா என்ன?
    'ஒருவரின் விடாமுயற்சி மற்றவரின் தொல்லை"; " ஒருவரின் மனவுறுதி மற்றவரின் பிடிவாதம்"..... சிந்திக்க வைக்கும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு " சிந்தனைக் களஞ்சியம்" எனும் ஒரு பட்டத்தை சூட்டுதல் தகுமே!!!

    ReplyDelete
  2. கைம்பெண்ணின் விடாமுயற்சியை
    உந்தித்தள்ளியது நம்பிக்கையே!
    Great!
    இறைத்தந்தையே! அந்த நம்பிக்கையை
    எனக்கு தாரும்!

    ReplyDelete
  3. கைம்பெண்ணின் விடாமுயற்சியை
    உந்தித்தள்ளியது நம்பிக்கையே!
    Great!
    இறைத்தந்தையே! அந்த நம்பிக்கையை
    எனக்கு தாரும்!

    ReplyDelete
  4. Ideogram --simply marvelous...பாறையின் இடுக்கில் மலர நினைக்கும் அந்த பனிமலரின் நம்பிக்கை
    என் வாழ்விற்கும் வளம் சேர்க்கிறது.
    நன்றி rev. Yesukarunanidhi!
    God bless you!

    ReplyDelete