Monday, November 19, 2018

சக்கேயு

இன்றைய (20 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:1-10)

சக்கேயு

கதைமாந்தர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்வதைவிட அவர்களின் உடல், மனப் பண்புகளைச் சொல்லி அறிமுகம் செய்வது லூக்காவின் இலக்கியத்திறத்திற்கு ஒரு சான்று.

'சக்கேயு பார்க்க விரும்பினார்,' 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' என்ற இரண்டு சொல்லாடல்கள் வழியாக சக்கேயு என்னும் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகப் பகுதியில் அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் விருப்பத்திற்கு முதல் தடையாக இருந்தது அவரின் உடல் அமைப்பு என்பதால் இரண்டையும் ஒரே தொனியில் சொல்கின்றார் லூக்கா.

'சக்கேயு' என்ற பெயர் எந்த வார்த்தையிலிருந்து வந்தது என்று ஆராயும்போது, அறிஞர்கள் இரு வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றனர்: 'சக்கார் யாவே' ('கடவுள் நினைத்தார்' அல்லது 'கடவுளை நினைப்பது'), 'சக்கா யாவே' ('கடவுள் மட்டும்' அல்லது 'கடவுளின் தூய்மை'). இரண்டு வார்த்தைகளுமே சக்கேயுவுக்குப் பொருந்துவதாக இருக்கிறது: 'கடவுள் நினைத்தார்' - ஆகையால்தான், சக்கேயு ஏறி நின்ற மரத்திற்கு அருகில் வருகின்ற இயேசு, அண்ணாந்து பார்த்து, 'விரைவில் இறங்கி வா, உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்கிறார்.

மற்ற வீடுகளுக்கு (மார்த்தா-மரியா, பரிசேயர், தொழுநோயாளர் சீமோன்) உணவருந்தச் செல்லும் இயேசு இங்கே தங்கச் செல்கின்றார். இதைக் கூர்ந்து கவனித்தால் சக்கேயுவின் செயல்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு தங்குவதற்குத் தடையாக இருந்தவை சக்கேயுவின் வீட்டுப் பொருள்கள். அதாவது, 'கடவுள் மட்டுமே' எனப் பெயர் கொண்டிருந்த ஒருவர், 'கடவுளோடு சேர்த்து மற்றவற்றையும் வைத்திருந்தார்.' ஆகையால்தான், கடவுள் வந்தவுடன் மற்றவற்றைக் கழிக்கின்றார்: 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.'

இயேசுவும், 'இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் மீட்பு என்பது பொருளாதார வழக்கில் பிணைத்தொகை. வீட்டில் உள்ள பாதிச் சொத்து போனவுடன் இயேசு 'மீட்பு' வந்துவிட்டது என்கிறார். பகிர்தலும், சுரண்டல் அகற்றுதலும்தான் மீட்பு என உணர்த்துகின்றார் இயேசு.

இப்படியாக, சர்கார் படம் பார்த்துவிட்டு வந்து வீட்டில் உள்ள விலையில்லா மிக்ஸி, ஃபேனை உடைத்ததுபோல, இயேசுவைப் பார்த்துவுடன் தன் வீட்டில் உள்ள விலையில்லாப் பொருள்களை எல்லாம் வீசி எறிகிறார் சக்கேயு.

இதெல்லாம் சரி!

இயேசு விருந்து முடிந்து சென்றபிற்பாடு, தன் சொந்த வீட்டுக்குப் போயிருந்த சக்கேயுவின் மனைவி வுPட்டிற்குத் திரும்பியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

'ஏன்யா, போனா போகுதுன்னு எங்க அப்பாவோட இன்ஃப்லவன்ஸ் பயன்படுத்தி உனக்கு சுங்கத்துறையில் வேலை வாங்கிக் கொடுத்து, உன் சம்பாத்தியத்து வழி வகுத்தால், வர்ற போறவங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் தூக்கிக் கொடுப்பியா? நானும், என் பிள்ளைகளும் என்ன செய்ய முடியும். நீயும் போ அந்த ஆளு கூட' என்று அனுப்பியிருப்பார்.

இருந்தாலும்,

'கடவுளே போதும்' என்ற பெயர் கொண்ட சக்கேயு அவரின் பின்னாலேயே சென்றிருப்பார்.

சுபம்.

2 comments:

  1. பகிர்தலும், சுரண்டல் அகற்றலும் தான்
    மீட்பு என் இயேசு உணர்த்துவதாக,
    எங்களுக்கு அருமையாக உணர்த்திய,
    பாசமிகு. அருட்பணி. யேசுவுக்கு,
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நன்றி.
    பகிர்கிறோம், எங்களிடமுள்ளதை, நிச்சயமாக...
    சுரண்டலுக்கு இடம்கொடாமல்...
    நன்றி.வாழ்க.

    ReplyDelete
  2. ரொம்ப ஸ்ட்ராங்கான கடுங்காப்பியில் ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கலப்பது போல் ஆன்மீகம் கொப்பளிக்கும் ஒரு பதிவில் நகைச்சுவையையும் அள்ளித் தெளித்துள்ளார் தந்தை.'கடவுள் சக்கேயுவை நினைத்தார்' என்பதாலேயே சக்கேயுவின் வீட்டிற்குச் செல்ல மனம் கொள்கிறார் இயேசு.ஆனாலும் கூட அவருக்கு மீட்பைப் பெற்றுத்தந்தது " அவரிடமிருந்த தேவையற்ற விஷயங்களைத் துறந்து விட நினைத்த மனம் தான். நானும் கூட பல சமயங்களில் ஆணவம்,அகம்பாவம்,பேராசை,பொருளாசை எனும் பெயர் தெரியாத மரங்களின் மீது அமர்ந்திருக்கையில் இயேசுவும் என்னை விட்டுத் தூர நிற்கிறார்.அவர் என் இல்லத்திற்குள் நுழைய,எனக்கு மீட்பு வழங்க நானும் இந்த மரங்களை விட்டு இறங்கியே ஆக வேண்டும்." "கடவுளே போதும்" என்ற சக்கேயு போல அவரின் பின்னாலேயே செல்ல வேண்டும்.அப்படி செல்கையில் சர்காரும்,கணவனும்,மனைவியும்,சுற்றம்,நட்பு யாரானாலும் எல்லாமே துச்சம் தான்.புரியவைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete