Tuesday, November 13, 2018

மற்ற ஒன்பது பேர் எங்கே?

இன்றைய (14 நவம்பவர் 2018) நற்செய்தி (லூக் 17:11-19)

மற்ற ஒன்பது பேர் எங்கே?

விவிலியத்தில் வரும் கேள்விகளில் இரண்டு வகை உண்டு. விடைக்காக கேட்கப்படும் கேள்விகள் முதல் வகை. எடுத்துக்காட்டு, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் கீழ்த்திசை ஞானியர் கேட்ட கேள்வி. விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் இரண்டாம் வகை. எடுத்துக்காட்டு, இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னிடம் திரும்பி வந்த சமாரியரிடம் கேட்கும் கேள்வி: 'மற்ற ஒன்பது பேர் எங்கே?'

மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை.

கலிலேய-சமாரிய எல்லைப் பகுதியில் இருக்கும் இயேசு தன்னிடம் வந்து 10 தொழுநோயாளர்கள் தங்களிடம் இரக்கம் காட்ட (நலம் தர) வேண்டியபோது, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். போகும் வழியில் அவர்களின் நோய் நீங்கியது. அவர்களில் ஒருவர் தான் நலம் பெற்றது இயேசுவால்தான் என அறிந்து உடனே இயேசுவிடம் திரும்புகின்றார். மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர் சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம் பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ நினைத்திருக்கலாம்.

யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே. அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர் என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர் திரும்பினாரோ?

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப் போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத் தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த வித்தியாசம்.

முதலில், இயேசுவே நலம் தந்தார் என நம்புகிறார்.

இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார்.

மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர் என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார்.

நான்காவது, 'நலம் பெற்ற பிறகு ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என தேடுகிறார் இயேசுவை.

ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம் அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.

ஆகையால்தான், திரும்பிவந்தவரிடம், 'உன் நம்பிக்கை நலம் அளித்தது. எழுந்து செல்லும்' என அவரின் தன்மதிப்பை உயர்த்துகின்றார் இயேசு.

இதையொட்டியே இன்றைய முதல் வாசகத்தில் (தீத்து 3:1-7), 'நம்பிக்கையாளர்கள் அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிக்க வேண்டும்' என்று அறிவுறுத்துமாறு தீத்துவுக்கு எழுதுகிறார் பவுல்.

3 comments:

  1. வித்தியாசமான கோணம்; வித்தியாசமான பார்வை; வித்தியாசமான செய்தியும் கூட. "இந்த சமாரியர் நன்றிக்கான பாடம் அல்ல.அதைவிட,நம்பிக்கையான பாடம்." இதுதான் இன்றையப் பதிவின் மூலம் தந்தை நமக்குணர்த்தும் பாடம்."அந்தப் பத்தாவது நபர் மற்றவரைப்போல் இருக்கவில்லை. மற்ற ஒன்பது பேரும் குருவைத் தேடிச்செல்ல அந்த பத்தாவது நபர் கடவுளைத்தேடி வந்தார்"....என்பதே இன்றைய செய்தி என நான் உணர்கிறேன்.நமக்கும் கூட எத்தனை விதமான ( தொழு) நோய்கள்.நாம் தேடிச்செல்வது யாரை? யோசிப்போம்.இறைவன் திருவடியை நாடுவோம்.அவரின் " உன் நம்பிக்கை நலம் அளித்தது"எனும் வார்த்தைகளை செவிகள் குளிரக் கேட்போம்.கொடைகள் கேட்கும்போது மட்டுமல்ல; கிடைத்தபிறகும் அவரையே சரணாகதியடைவோம். பல செய்திகள்; பல கோணங்கள்; பல பார்வைகள்.அனைத்திற்கும் தந்தைக்கு நன்றிகள்! பாராட்டுக்கள!!

    ReplyDelete
  2. Marvelous reflection!
    இறைவன் தங்களை சற்று அதிகமாகவே அன்பு செய்திருக்கிறார்....
    அன்பு செய்கிறார்...
    தொடரட்டும் தங்கள் புனித பணி...
    தொலைவிலிருந்து என் வாழ்த்துகளும் தொடரும்...
    ஆம் அந்த சமாரியர் சற்றே வித்தியாசமானவர்;
    அதோடு நம்பிக்கைக்கான பாடமும் கூட
    அந்த நம்பிக்கான பாடமாய் யானும் பிறர்க்கு திகழ, இறைவா!எனக்குள் புரிவாய்!
    நன்றி!

    ReplyDelete
  3. *இறைவா எனக்கருள் புரிவாய்!

    ReplyDelete