Monday, November 5, 2018

தீபஒளித் திருநாள்

இன்றைய (6 நவம்பர் 2018) திருநாள்

தீபஒளித் திருநாள்

இன்று நாம் தாய்த்திருநாட்டில் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தீவாளி, தீபாவளி என்ற சொல்லாடல்கள் மாறி, மாறி இன்று நாம் 'தீப ஒளி' என்று சொல்கின்றோம். 'தீபம்' ('விளக்கு') மற்றும் 'ஆவளி' ('வரிசை') என்ற இரண்டு சொற்களின் கலப்பே தீபாவளி. இன்று, தீபங்கள் வரிசையாக ஏற்றி வைக்கப்படும். மேலும், பட்டாசு, சங்குசக்கரம், வானவெடி அனைத்திலும் நாம் தீபங்களின் வரிசையைத்தான் பார்க்கிறோம். இல்லையா?

தீபஒளித் திருநாள் கொண்டாட்டத்தில் வழக்கமாக இரண்டு கேள்விகள் எழுப்பப்படும்:

அ. கிறிஸ்தவர்கள் தீபஒளி கொண்டாடலாமா?

ஆ. தமிழர்கள் தீபஒளி கொண்டாடலாமா?

'கிறிஸ்துவே உலகின் ஒளி' என்று நாம் கிறிஸ்துவை தீபஒளி கலாச்சாரத்திற்குள் நுழைத்துவிடுகிறோம். ஆக, முதல் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.

இரண்டாம் கேள்விக்கான பதில் ரொம்பவும் சிரமமானது. ஏனெனில், தீபஒளி திருநாள் என்பது ஆரியர்களின் திருநாள் என்றும், 'அசுரனின் அழிவு' என்று இன்று கொண்டாடப்படுவது திராவிடர்கள் அல்லது தமிழர்களின் அழிவு என்றும், 'கார்த்திகை திருநாளை' 'தீபாவளி' பெயர் மாற்றிக் கொண்டாடுகிறது என்பதும் பரவலான கருத்து.

இந்தத் தீப ஒளித் திருநாளில் மூன்று சிந்தனைகளை பகிர விழைகிறேன்:

அ. ஒளி மாற்றக் கூடியது

'ஒளி' கண்டுபிடிக்கப்பட்டவுடன், அதாவது மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனுக்குலம் ஒரு புதிய நிலைக்கு உயிர்த்துவிட்டது. பணம் இருந்தால் இப்போது நாம் இரவையும் ஒளியாக்கிவிடலாம். மருத்துவமனைகள், விமான நிலையங்கள் போன்றவற்றிற்குச் சென்றால் பகல் - இரவு இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாத அளவிற்கு இருக்கின்றது. ஒளி அல்லது வெப்பம் மாற்றம் தரக் கூடியது. உணவு சமைக்க, உணவு செரிக்க, உடல் வளர, உயிர் வளர, விவசாயம் பெருக ஒளி தேவைப்படுகிறது. ஆகையால்தான், இயேசுவும், 'இரவு வருகிறது. யாரும் செயலாற்ற இயலாது' என்கிறார். ஆக, ஒளியைப் போல நாமும் நாம் இருக்கும் இடத்தில் மாற்றத்தை, சுழற்சியை ஏற்படுத்த வேண்டும்.

ஆ. தீப ஒளி

தீபம் என்பது பரமாத்மா (கடவுள்). ஒளி என்பது ஜீவாத்மா (மனிதர்). ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. ஒளி தீபத்தைச் சார்ந்திருந்தால்தான் ஒளிர முடியும். ஆக, ஒளி ஒளிர அது சார்ந்திருக்க வேண்டும். கதிரவன் போன்ற ஒளியைத் தவிர, மற்ற எல்லா ஒளியும் மற்றொன்றைச் சார்ந்தே இருக்கிறது. ஆக, இன்று நாம் நம் சார்ந்திருத்தலைக் கொண்டாடுவோம். 'சுதந்திரம்' அல்லது 'தனிநபர் எல்கை' (ப்ரைவஸி) என்று சொல்லி இன்று நமக்கு நாமே தனிமைப்படுத்தப்பட்ட பூட்டு போட்டுக்கொள்கிறோம். இன்றைய நாளில் நம் சார்புநிலையைக் கொண்டாடுவோம்.

இ. ஒளியும் இருளும்

ஒளிரும் மெழுகுதிரியின் அடிப்பகுதி எப்பவும் இருட்டாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பல நேரங்களில் ஒளியை நாம் அதிகமாகப் புகழ்ந்து பேசி இருளைப் பழிக்கிறோம். 'ஒளி இனிமையானது. கதிரவனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியூட்டும். ஆனால் இருள்சூழ் நாள்கள் விரைவில் வரும்' (சஉ 11:7-10) என ஒளியும் இருளும் இணைந்திருப்பதைப் பதிவு செய்கிறார் சபை உரையாளர். நம் வாழ்வின் ஆழ்ந்த புதையல்கள் இருளில்தான் இருக்கின்றன. முதல் உயிரி அமீபா தோன்றியது கடலின் அடித்தளத்தில் உள்ள இருளில்தான். ஒரு குழந்தை உருப்பெறுவது தாயின் கருவறை என்னும் இருளில்தான். ஒரு விதை முளைக்க ஆரம்பிப்பது நிலம் என்னும் இருளில்தான். நாம் இறந்தபின் மறுவாழ்வுக்குள் நுழைவதும் இருளில்தான். மேலும், நாம் செபிக்கும்போது, முத்தமிடும்போது, கண்ணீர்விடும்போது, கனவு காணும்போது என வாழ்வின் இன்பமான நிகழ்வுகள் எல்லாம் நம் கண்கள் மூடியிருக்கும் இருளில்தான் நடக்கின்றன. ஆக, ஒளியைக் கொண்டாடும் நாம் அதன் மறுதுருவமாகிய இருளையும் கொண்டாடுவோம். நம்மில் இருக்கும் இருள் நிறைந்த பகுதியும்கூட இனிமையான பகுதியே என ஏற்போம்.

தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

3 comments:

  1. ' ஒளி மாற்கூடியது', 'தீப ஒளி', 'ஒளியும் இருளும்'....பல கோணங்களில் தீப ஒளித்திருநாளை அலசும் தந்தை இறுதியாக சரண்டைவது 'இருளிடமே!' சபை உரையாளரின் கூற்றுப்படி ஒளியின் விளிம்பை நாம் இரசிக்க நமக்குத் தேவைப்படுவது இருளே! முதல் உயிரி அமீபாவிலிருந்து ஒரு உயிர் மற்றும் விதை வரை அவற்றின் ஆதியே இருளென்றும்,நம் வாழ்வின் இன்பமான பல நிகழ்வுகள் நடப்பதும் இருளில் தான் என்றும் நமக்குத்தெரியும் எனினும்,அதை தந்தையைப்போன்ற ஒருவர் எடுத்துச் சொல்லும்போது தான் அதில் ஒளிந்திருக்கும் உண்மை நமக்கு உரைக்கிறது. அந்த இறுதிவரி.." நம்மில் இருக்கும் இருள் நிறைந்த பகுதியும் கூட இனிமையான பகுதியே என ஏற்போம்".... அழகு.தீபங்களின் வரிசையை இரசிப்பது போலவே நம் வாழ்வின் அடுத்தடுத்து நடந்த ஒளியான பொழுதுகளுக்காக மகிழ்வு கொள்வோம்; இறைவனுக்கு நன்றி சொல்வோம்.இந்து- கிறிஸ்துவ,ஆண்- பெண்,ஏழை- செல்வந்தன்,கருப்பு- சிகப்பு, பெரியவர்- சிறியவர் பேதமின்றி அனைவருக்கும் ' தீப ஒளி'யின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Excellent Exclusive explanation...
    Merging of Science & Spirituality...
    Interlocking of Light & Darkness...
    Well done Rev.Yesu...

    ReplyDelete
  3. Excellent,Exclusive, Explanation...
    Science merging in Spirituality...
    Light interlocking darkness...
    Well done Reverend Yesu...
    GOD guide us to celebrate the darkness too.

    ReplyDelete