Thursday, June 30, 2016

நீதிமொழிகள் - 13

'நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்.
நாவைக் காவாதவன் கெட்டழிவான்.'
(நீமொ 13:3)

'நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவுபெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுபடுத்த வல்லவர்கள்' (யாக் 3:3) என்றும் 'ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை...' (யாக் 3:8) என்றும் நாவடக்கம் பற்றி எழுதுகின்றார் திருத்தூதர் யாக்கோபு.

'வாக்குச் சுத்தம் நாக்குச் சுத்தம்' என்பார்கள்.

அதாவது, நாக்கினால் சொல்வதை நாம் செய்து முடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, தேவையற்றதைப் பேசுவதிலிருந்து நாக்கிற்கு தடை விதிக்க வேண்டும்.

இன்று நாக்கு என்பது வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், செல்ஃபோன் என நீட்சியாகிவிட்டது. யாரும் யாரையும் பற்றி, எதையும் பற்றி, என்னவும் பேசலாம். இந்தப் பேச்சிற்கு யாரும் பொறுப்பாளி கிடையாது. எனக்கு ஏன் அந்த செய்தியை அனுப்பினாய்? என்று நண்பனிடம் கேட்டால், 'எனக்கு வந்தது. உனக்கு அனுப்பினேன்' என நிறுத்திக் கொள்வான். ஆக, நண்பனிடமிருந்து வரும் செய்திக்கு நண்பன் பொறுப்பு கிடையாது. ஆக, பொறுப்பில்லாமல் பேசும் ஒரு கலாச்சாரத்தை இன்று நாம் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். அல்லது அந்தக் கலாச்சாரத்தில் நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாவினால் நாம் கடவுளுக்கும், மற்றவருக்கும் வாக்குறுதி கொடுக்கிறோம்.

இந்த நாவினால் கடவுளைப் புகழ்கிறோம். மற்றவர்களை இகழ்கிறோம்.

'ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் யாக்கோபு.

'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு' (குறள் 127) என்கிறார் வள்ளுவர்.

('ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகி விடும்')

தீய சொல், தேவையற்ற சொல், புறங்கூறும் சொல் தவிர்த்தல் நாவிற்கும் நமக்கும் நலம்!

இன்னும் சொல்வேன்...

Wednesday, June 29, 2016

நீதிமொழிகள் - 12

'கவலை இல்லாமல் வாழ்வது எப்படி?' என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர், அந்தப் புத்தகத்தை எப்படி விற்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

கவலை - நம் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு.

உள்ளம் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும் என்று நாம் நம்மையே உசுப்பேத்திவிட்டு சிரித்தாலும், நாம் தனியாக இருக்கும் அந்தக் கவலை நம் முன்னால் வந்து நம் கன்னத்தில் அறையும்.

இத்தாலியனில் கவலை என்பதற்கு 'preoccupazione' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மற்றொன்று நம்மை occupy  பண்ணுவதற்கு முன் இது வந்து அந்த இடத்தை occupy பண்ணிக் கொள்வதால் அதற்கு இந்தப் பெயர். இது pre-occupy பண்ணிவிடுவதால் நம் மூளையும் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் தவிக்கிறது.

'மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்.
இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்' (நீமொ 12:25) என்கிறார் நீமொ ஆசிரியர்.

நாம் சந்திக்கும் எல்லாரும் ஏதோ ஒரு மனக்கவலையில் இருக்கின்றனர். ஏதோ ஒரு போராட்டத்தை தங்கள் உள்ளத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதமாக இருப்பது நாம் சொல்லும் ஓர் இன்சொல்லே.

திருவள்ளுவர் மனக்கவலைக்கு வேறு ஒரு மருந்து சொல்கிறார்:

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது' (குறள் 7)

ஒருவேளை என் மனக்கவலையை ஆற்ற யாருமே இன்சொல் சொல்லவில்லை என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நான் என்ன செய்வேன்? தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பேனா.

அப்படிப்பட்ட நேரங்களில் வள்ளுவரின் அறிவுரை நமக்குப் பயன்படும்:

'தனக்குவமை இல்லாதவன்' என்பவன் 'இறைவன்'. இறைவனின் தாள் அல்லது பாதங்களைப் பற்றிக் கொள்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மனக்கவலை மாற்றுவது கடினம் என்கிறார் வள்ளுவர். இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்பவர் மனதின் கவலையை வெற்றி கொள்ள முடியும்.

இறைவனின் தாளும், அடுத்திருப்பவரின் இன்சொல்லும் மனக்கவலைக்கு மருந்துகள்.

இன்னும் சொல்வேன்...

Tuesday, June 28, 2016

நீதிமொழிகள் - 11

'நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்.
பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.'
(நீமொ 12:10)

ஒருவர் மற்றவரைக் கண்டும் காணாமல் போகும் போக்கு இன்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இல்லையா?

பரிவு என்பது இன்னும் எட்டாக்கனியாகி விட்டது. அதற்கெல்லாம் நேரமில்லை என்றும், அதெல்லாம் நேரமில்லாதவர்கள் காட்ட வேண்டியதும் என்றும் கூட ஆகிவிட்டது.

பரிவு என்ற உணர்வு வந்துவிட்டால் அது எல்லா உயிர்களையும் நோக்கி நம்மைக் குனிய வைக்கிறது.

பரிவு இல்லாத உள்ளம் கொடுமை வாய்ந்ததாக இருக்கிறது.

பரிவு இருந்தால் நல்லோர்!

பரிவு அற்றவர் பொல்லார்! என்கிறார் ஆசிரியர்.

இன்னும் சொல்வேன்...

Monday, June 27, 2016

நீதிமொழிகள் - 10

'பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,
அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.'
(நீமொ 10:26)

பழமொழிகள் கையாளும் பல இலக்கியக் கூறுகளில் ஒன்று 'எடுத்துக்காட்டு உவமை அணி.' அதாவது, ஒன்றைப்போல மற்றொன்று இருக்கும் என்று சொல்வது. தெரியும் ஒன்றிலிருந்து தெரியாது ஒன்றுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த அணியின் நோக்கம்.

மேற்காணும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

காடி பல்லில் படுவதும், கண்ணில் புகை படுவதும் எல்லாரும் அனுபவித்திருக்கும் ஓர் அனுபவம். இந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, சோம்பேறிகளைத் தூது அனுப்பினால் எப்படி இருக்கும் என சொல்கிறார் ஆசிரியர்.

என் 13வது வயது வரை நாங்கள் கூரைவீட்டில் தான் குடியிருந்தோம். ஜன்னல் எதுவும் இல்லாமல் கட்டப்பட்டிருந்து பழைய காலத்து வீடு அது. ஒரு அடுப்பங்கரை. மற்ற எல்லாவற்றுக்கும் ஓர் அறை. அடுப்பில் உலை கொதித்து வடிந்தாலும் இந்தக் காலத்து கேஸ் அடுப்புகள் அதை எதிர்த்து எரிகின்றன. ஆனால், வெறும் சுள்ளிகளை வைத்து எரிக்கும் மண் அடுப்புக்கு அந்த எதிர்ப்பு சக்தி இல்லை. நெருப்பு அணைந்து புகை வரத் தொடங்கிவிடும். அதிகமாக சோளத் தட்டை மற்றும் மக்காச்சோள கதிர் (கருது!) கொண்டே அடுப்பு எரிக்கப்பட்டதால் புகை குபு குபுவென்று வந்து வீட்டை நிரப்பி விடும். வீட்டில் மின்சாரம் இல்லாததால் புகையை வெளியேற்றும் காற்றாடி மற்றும் வெற்றிட உருவாக்கும் காற்றாடிகள் இல்லை. புகைக்கு பயந்து வெளியே போக நினைத்தால் இருட்டாக இருக்கும். புகையைப் பொறுத்துக் கொண்டே உள்ளே இருக்க வேண்டும். புகைக்கு கண்கள் கலங்கிவிடும்.

காடி பல்லில் பட்ட அனுபவம் கிடையாது. ஆனால், புளிப்பு பல்லில் பட்டு பல் கூசிய அனுபவம் இருக்கின்றது. பற்கூச்சத்தை 10 நிமிடத்தில் சரிபடுத்தும் டெக்னாலஜியை சென்சோடின், எல்மெக்ஸ் போன்ற பற்பசைகள் கொண்டிருக்கின்றன. இந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் சிலருக்கு குளிர் தண்ணீர், மாங்காய் என எது பல்லில் பட்டாலும் பல் கூச்சம் இருக்கும். பல் கூச்சம் பற்றி எழுதும்போதே, 'கூச்சம்' என்ற வார்த்தை என் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பொண்ணுங்க கூச்சப்பட்டு பார்த்திருப்போம். அல்லது பொது மேடையில் முதன் முதலாக ஏறும்போது நாம கூச்சப்பட்டிருப்போம்! பல்லுக்கும் அப்படி ஒரு கூச்சம் இருக்குமா? அப்படி என்றால் பல் என்பது பெண்பாலா?

பல்லில் காடி, கண்ணில் புகை - இரண்டும் விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் நாம் உணரும் ஓர் உணர்வை உருவாக்குகின்றன.

மின்னஞ்சல், கட்செவி அஞ்சல், குறுஞ்செய்தி என இல்லாத காலத்தில் தூது அனுப்புதல் மிக முக்கியமானதாக இருந்தது. அரசர்கள், அலுவலர்கள், பணம் படைத்தவர்கள், இறைவாக்கினர்கள், குருக்கள் என்ற மேல்தட்டு மக்கள் மட்டும்தான் தூது அனுப்ப முடியும். தூது அனுப்புவதற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சோம்பேறிகளாக இருந்தால் தூதின் முக்கியத்துவமே கெட்டுவிடும். 'போருக்குத் தயாராக இரு! எதிரி வருகின்றான்!' என்று தூது அனுப்ப, அதை எடுத்துச் செல்பவன் சோம்பேறியாக இருந்தால், போர் முடிந்தபின்தான் அந்தச் செய்தி மற்ற அரசனுக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட சோம்பேறியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அவனை எங்கே தேடுவது! அவனைக் கண்டுபிடிக்க இன்னொரு தூது அல்லவா அனுப்ப வேண்டும்!

இப்படியாக, இருதலைக்கொள்ளி எறும்பாக நாம் உணரும் அனுபவத்தைக் கொடுப்பவர்கள்தாம் புகையும், காடியும், சோம்பேறி தூதனும்!

இன்னும் சொல்வேன்...

Sunday, June 26, 2016

நீதிமொழிகள் - 9

'பழமொழிகள்' நமக்குப் பிடிக்கின்றன. அல்லது 'பழமொழிகள்' நம்மைப் பிடிக்கின்றன.

பழமொழிகள் நமக்குப் பிடிக்கக் காரணங்கள் இரண்டு: ஒன்று, அவைகள் மிகக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துபவை. 'கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு' என்பது பழமொழி. இதை சாதாரணமாக ஒருவர் சொன்னால், 'நாம் வைத்திருக்கும் ஆடை கிழிந்து போய் இருந்தாலும் அதை துவைத்து அல்லது சலவை செய்து கட்ட வேண்டும். ஏனெனில் உடை சுத்தமாக இருத்தல் அவசியம்' என நீண்ட பத்தியை எழுது வேண்டியிருக்கும். நீண்ட பத்தியில் சொல்ல வேண்டியதை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லிவிடுவதால் பழமொழிகள் நமக்குப் பிடிக்கின்றன. இரண்டு, அவைகள் தன்னகத்தே கொண்டிருக்கும் முரண் பொருள். 'கந்தையானால் அதை தூக்கி வீசி விடு!' என்று ஒருவர் சிந்திக்க நினைக்கும் போது, பழமொழி 'கசக்கிக் கட்டு' என்ற ஒரு முரண்பொருளை முன்வைத்துவிடும் பழமொழியின் குணம் நமக்குப் பிடிக்கிறது.

இந்தப் பழமொழிகளை உருவாக்கியது யார்?

இவைகளை உருவாக்கியது தனிநபரா? அல்லது இவை அனைத்தும் ஒரு சமூகத்தின் உருவாக்கங்களா?

இவைகள் தனிமனித உள்ளத்தில் இருந்த எழுந்தவையா? அல்லது

இவைகள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடா?

பழமொழிகள் இந்தக் கேள்விகளுக்கு விடை தராமல் இருப்பது இன்னும் நம்மை அவற்றின் பக்கம் இழுக்கின்றது.

கற்பு, நேர்மை, கடின உழைப்பு என வௌ;வேறு தலைப்புக்களில் பேசிக்கொண்டுவந்த ஆசிரியர் அதிகாரம் 10 முதல் தனித்தனி பழமொழிகளாகப் பேச ஆரம்பிக்கின்றார். நேர்மை, கற்பு, கடவுள் பக்தி, செல்வம் ஈட்டுதல், பெண், ஆண், முயற்சி என தலைப்புகள் வேகமாக மாறுகின்றன. ஒரு பழமொழிக்கும் அடுத்த பழமொழிக்கும் தொடர்பு இல்லாதது போல இருக்கிறது.

உதாரணத்திற்கு, 'கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது. முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது' (11:1) எனச் சொல்லும் ஆசிரியர், தொடர்ந்து, 'இறுமாப்பு வரும் முன்னே இகழ்ச்சி வரும் பின்னே என்கிறார்' (11:2). நேர்மை வேறு, தன்னடக்கம் வேறு இல்லையா?

இப்படி ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருப்பதும் மனித உள்ளத்தின் வெளிப்பாடுதானே.
ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து நம் எண்ண ஓட்டங்களை அலச ஆரம்பித்தால், 60 நொடிகளில் 6000 (!) எண்ணங்கள் வந்து போகின்றன நம் உள்ளத்தில். காலையில் சாப்பிட்டது, பத்து வருடங்களுக்கு முன் நடந்தது, நாளை நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்கு சோப்பு எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற குழப்பம், உதட்டில் புன்னகை, கண்களில் சீரியஸ்னஸ், எங்கோ கேட்கும் சிரிப்பு சத்தம், அந்த குரல் நம் உள்ளத்தில் எழுப்பும் கலக்கம் என ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவைகள் வந்து போகின்றன. ஆனால், தொடர்பு இல்லாத இந்த குணம்தான் இவற்றின் அழகே.

பழமொழிகளும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருந்தாலும், ஒரு தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பல்வேறு மலர்களாய் நம் கண்களுக்கு அழகு தருகின்றன. நம் உள்ளத்தைப் புதுப்பிக்கின்றன.

இன்னும் சொல்வேன்...

Saturday, June 25, 2016

நீதிமொழிகள் - 8

ஆண்டவர் வெறுப்பவை ஆறும், ஒன்றும் என ஏழு விடயங்களை முன்வைக்கின்றார் ஆசிரியர் (நீமொ 6:16-19)

1. இறுமாப்புள்ள பார்வை
2. பொய்யுரைக்கும் நாவு
3. குற்றமில்லாரைக் கொல்லும் கை
4. சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்
5. தீங்கிழைக்க விரைந்தோடும் கால்
6. பொய்யுரைக்கும் போலிச்சான்று
7. நண்பர்களிடையே சண்டை மூட்டிவிடும் செயல்

ஆண்டவர் வெறுப்பவை ஏழு என்று சொல்வதற்குப் பதிலாக, 'ஆண்டவர் வெறுப்பவை ஆறு. ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது' (6:16) என்கிறார் ஆசிரியர்.

இது ஒரு இலக்கிய நடை. கேட்பவரின் கேட்கும் திறனை தன்வயப்படுத்தும் ஒரு முயற்சியே இது.

இதில் குறிப்பிடப்படும் முதல் விடயத்தைப் பார்ப்போம்:
'இறுமாப்புள்ள பார்வை'

ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் ஆணவம் அல்லது இறுமாப்பு அவரின் பார்வையில்தான் வெளிப்படுகிறது. 'என் பார்வையே அப்படித்தான்!' என்று சிலர் சொல்வார்கள். 'கண்தான் உடலுக்கு விளக்கு' என்று சொல்வதன் பொருள் இதுவே. அதாவது, நம் கண்கள் வழியாகவே நாம் யார் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம். பார்வையை நாம் இரக்கப் பார்வை, ஏளனப் பார்வை, கருணைப் பார்வை, கண்டுகொள்ளாப் பார்வை என வயப்படுத்துகிறோம்.

'என்னைவிட பெரியவர் யாரும் இல்லை' என்ற உணர்வு மட்டும் இறுமாப்பு அல்ல. மாறாக, அடுத்தவருக்கு தன் உள்ளத்தை பூட்டிவிடுவதும் இறுமாப்பே.

இன்னும் சொல்வேன்...

Friday, June 24, 2016

நீதிமொழிகள் - 7

'சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்'

அதாவது, 'சோம்பேறிகள் வறுமையில் வாடித் திரிவர்' என்கிறது ஒளவைப் பாட்டியின் கொன்றை வேந்தன் (எண். 36).

திருவள்ளுவர் 'மடியின்மை' என சோம்பல் நீக்குதலுக்கு ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார் (எண். 61).

சோம்பலை இருள் என்று சொல்லும் தெய்வப்புலவர்,

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்' (குறள் 605)

('காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்)

'இடிபுரிந் தௌ;ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்' (குறள் 607)

('முயற்சி செய்வதில் அக்கறையின்றி சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவர்கள்)

என்கிறார்.

'சோம்பேறியாயிராதே' (6:6-11) என்னும் நீதிமொழிகள் நூல் ஆசிரியரின் படிப்பினையும் இதையொட்டியே இருக்கிறது.

கடின உழைப்பு என்பது ஞானிகளின் செயல்முறை என முன்வைக்கும் ஆசிரியர் தொடர்ந்து, 'எறும்பை' உதாரணமாக முன்னிறுத்துகின்றார். 'எறும்புகளுக்கு தலைவனுமில்லை. கண்காணியுமில்லை. இருந்தாலும் வேலை செய்கின்றன.'

நம் சோம்பலுக்கு முதற்காரணம் நம்மைக் கேள்வி கேட்க அல்லது நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற நிலைதான். எனக்குச் செய்ய ஒன்றுமில்லை, அல்லது என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஒருவருக்கு வந்தால் அவரின் நடுவீட்டில் சோம்பல் வந்து படுத்துக்கொள்ளும்.

ஆகையால்தான் தான் வள்ளுவரும் சோம்பல் பற்றி எழுதும் அதிகாரத்தை 'அரசனுக்குச் சொல்லும் அறிவுரையின்' ஒரு பகுதியாக வைக்கின்றார். 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று நினைக்கும் அரசன் சோம்பேறியாய் இருந்துவிட்டால் அது அவனுக்கு பெரிய இழுக்கை வருவிக்கும்.

கடின உழைப்பு. இதற்கு எதிர்ப்பதம் சோம்பல்.

உழைப்பு நம்மை முன்னேறிச் செல்ல வைக்கிறது. சோம்பல் நம்மை பின்னோக்கி இழுக்கிறது.

சோம்பல் கொண்டிருப்பவர்களை வறுமை எப்படி பற்றிக் கொள்ளுமாம்?

அ. வழிப்பறி கள்வரைப் போல - அதாவது, திடீரென்று
ஆ. போர்வீரனைப் போல - அதாவது, முழுமையாக, தப்பிக்க வழியில்லாமல்

காலையில் அலாரம் அடிக்கும்போது, கை நம்மை அறியாமல் ஸ்னூஸ் பட்டன் நோக்கி செல்கிறது என்றால், நம் நடுவீட்டிற்கும் சோம்பல் வந்துவிட்டான் என்றே அர்த்தம்.

இன்னும் சொல்வேன்...

Thursday, June 23, 2016

நீதிமொழிகள் - 6

கடனுக்குப் பிணையாக நிற்றல், அல்லது சாட்சிக் கையெழுத்து போடுதல், அல்லது நம் வார்த்தையின் பொருட்டு மற்றவரிடம் மாட்டிக் கொள்ளுதல்.

இத்தகைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது நீமொ 6:1-5.

கடன் வாங்குபவர் ஒருவர். கடன் கொடுப்பவர் மற்றவர். இந்த இரண்டு பேருக்கும் இடையில் நிற்பவர்தான் கடனுக்குப் பிணையாக நிற்கும் மூன்றாம் நபர். இந்த மூன்றாம் நபரின் மேலுள்ள நம்பிக்கையில்தான் அல்லது மூன்றாம் நபரின் நற்சான்றில்தான் முதலாமவருக்குக் கடன் கொடுக்கப்படுகிறது.

இவர் இரண்டு பேருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும்.

கடன் வாங்கியவர் ஒருவேளை இறந்துவிட்டால், அல்லது கடனைத் திருப்பித் தர இயலாவிட்டால், சட்டத்தின்படி இவர்தான் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும். கடன் வாங்கும் வரை நல்லவராக இருந்த ஒருவர், கடன் வாங்கியபின் நடத்தை தவற தொடங்கினாலும் இவர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

சில நேரங்களில் கடன் வாங்கியவரும், கொடுத்தவரும் நிம்மதியாக இருப்பர். இடையில் நிற்கும் இவர்தான் நிம்மதியின்றித் தவிப்பார்.

கடன் பத்திரம், கணிணி வழி ஆய்வு, உறுதி செய்தல் இல்லாத காலத்தில் இவரின் பொறுப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

இவர் அடுத்தவருக்கு வாக்கு கொடுத்தவர். ஆக, அந்த வாக்கை அவர் எப்படியாகிலும் காப்பாற்ற வேண்டும்.

அதை எப்படி காப்பாற்ற வேண்டும்?

விரைந்தோடிச் செல்ல வேண்டும்
கையில் காலில் விழுந்தாவது தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்

ஏனெனில் இவர் வேடன் கையில் அகப்பட்ட மான்போலவும், கண்ணியில் சிக்கிய குருவி போலவும் இருப்பார். எந்நேரமும் இவருக்கு ஆபத்து ஏற்படலாம்.

வங்கியில் லோன் வாங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

கடவுச் சீட்டு வாங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

வங்கியில் கணக்கு தொடங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

திருமண ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்து போடுதல்,

நிலம் வாங்கும் போது, விற்கும் போது சாட்சி கையெழுத்து போடுதல்

என எல்லாமே ஒருவகை பிணைதான்...

வேகமாக பேனாவை எடுத்து விறுவிறு என்று கையெழுத்துபோடுமுன் சற்று யோசிக்கலாமே!

இன்னும் சொல்வேன்...

Wednesday, June 22, 2016

நீதிமொழிகள் - 5

நீதிமொழிகள் நூலின் ஆசிரியரின் முதல் போதனை 'கற்புநெறி தவறாமை' (5:1-14) மற்றும் 'பிறன்மனைவி நயவாமை' (5:15-23) என்று இருக்கிறது.

அவரின் போதனை குடும்பம் அல்லது சமூகத்தை மையப்படுத்தி தொடங்குகிறது.

விலைமகள் அல்லது பாலியல் தொழில் என்பது மனித இனம் தொடங்கிய காலம் தொட்டு இருக்கின்றது. குடும்ப உறவின் எதிர்ப்பதம் இந்த விலைமகள் உறவு.

நேர்முகமானது ஒன்று இயங்க வேண்டுமென்றால் எதிர்மறையானது ஒன்று இயங்க வேண்டும் என்பது இயற்கை நியதி. மேலும், சமூகவியல் அறிஞர்களின் கருத்துப்படி குடும்பம் என்ற நிறுவனம் உடைந்துவிடாமல் இருக்க, அல்லது அதில் உள்ளவர்களின் உணர்வு நீட்சியாகப் பயன்படுவதே பாலியல் தொழில் அல்லது விலைமகள் உறவு.

எதற்காக நீதிமொழிகள் நூல் ஆசீரியர் கற்புநெறி தவறாமை பற்றி முதலில் எழுத வேண்டும்?

மனித ஆழ்மனதில் மேலோங்கி நிற்கும் உள்ளுணர்வுகள் இரண்டு: ஒன்று, வன்முறை. இரண்டு, பாலியல் உணர்வு. இந்த இரண்டும் சரியான நிலையில் வடிகால் செய்யப்பட வேண்டும். வன்முறை உணர்வை மனிதர்கள் தங்கள் வேலையின் வழியாக ஓரளவுக்குச் சரிகட்டி விடுகின்றனர். பாலியல் உணர்வுக்கு வடிகால் திருமண உறவு.

திருமணத்திற்கு முன்பாக நடக்கும் பாலியல் பிறழ்வு விலைமகளை நாடுவது.

திருமணத்திற்கு பின்பாக நடக்கும் பாலியல் பிறழ்வு பிறன்மனையாளை நாடுவது.

இரண்டுமே பிறழ்வுகள்தாம்.

இங்கே ஆண்தான் பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் ஆண்களைத் தேடிச் செல்லவில்லை என்று நாம் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. பிறழ்வுகள் இரண்டு பாலர் நடுவிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

நீதிமொழிகள் நூல் எழுதப்பட்ட இடம் பாலஸ்தீனம். பாலஸ்தீனம் இயல்பாகவே பாலைநில நாடு. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். யார் எங்கே இருக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆண்கள் தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு நீண்ட காலம் சென்றுவிடுவதுண்டு. இந்த நாட்களில் பெண்கள் வீடுகளில் தனியாக இருக்க நேரிடும். ஆக, யாரும் என்னைப் பார்க்கவில்லை என்ற உறுதி ஒரு பக்கம். கண்ணுக்கு எதிரே தனியாக பெண் மறு பக்கம். இந்தச் சூழலில் பிறழ்வு மிக எளிதாக நடந்தேறிவிடுகிறது.

இதைச் சரி செய்வதற்கு ஒரே வழி போதனை அல்லது படிப்பினை.

இந்த போதனையைச் செய்கிறார் ஆசிரியர்.

கற்புநெறி தவறினால் என்ன நடக்கும்?

பிறர் முன்னிலையில் மானம் பறிபோகும் (5:9)
நீ சம்பாதித்தது வேறு குடும்பத்திற்குப் போகும் (5:10)
நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய் (5:11)

'இரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் வரும் மோகன் கதைமாந்தர் இந்த உறவிற்கு நல்ல உதாரணம். வெளி நாட்டு படிப்பு முடித்து பந்தாவாக நாடு திரும்பும் மோகன், கற்புநெறி தவறியதால் மானம் இழந்து, பொருள் இழந்து, நோய் பீடித்து கேட்பாரற்றுக் கிடக்கின்றார்.

பிறன்மனை விரும்பாமல் இருப்பதற்கு, 'உன் நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி!' என உருவகத்தால் பேசுகிறார் ஆசிரியர்.

'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு' (குறள் 148)

(பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை அறம் மட்டும் அன்று. சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்!)

என்கிறார் திருவள்ளுவர்.

'கற்புநெறி தவறாமையும்' 'பிறன்மனை நயவாமையும்' ஞானியரின் குணங்கள் என்கிறார் ஆசிரியர்.

இன்னும் சொல்வேன்...

Tuesday, June 21, 2016

நீதிமொழிகள் - 4

'பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்.
இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்திவை.
இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்.
உன் கால் ஒருபோதும் இடறாது.
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது.
உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.'

(நீமொ 3:21-24)

பள்ளிக்குழந்தைகளும் தூக்கத்திற்கு மருந்து எடுத்து தூங்கச் செல்லும் அளவிற்கு நம் மனமும், வேலையும் மாறிக்கொண்டு வரும் இந்நாட்களில், நன்றாகத் தூக்கம் வருவதற்கான மருத்துவக் குறிப்பைச் சொல்கின்றார் நீமொ நூல் ஆசிரியர்.

'விவேகம்' மற்றும் 'முன்மதி'

இவற்றை, 'ஞானம்' மற்றும் 'தேர்ந்து தெளிதல்' என்றும் மொழிபெயர்க்கலாம்.

இந்த இரண்டும் இருந்தால் என்னென்ன நடக்கும் நம் வாழ்வில்?

அ. அச்சம் இருக்காது நம் உள்ளத்தில்

ஆ. நாம் கால் இடறாமல் நடப்போம்

இ. நன்றாக அயர்ந்து தூங்குவோம்

'விவேகம்' மற்றும் 'முன்மதி' இரண்டும் ஏறக்குறைய ஒரே பொருள் கொண்டதாகவே இருக்கின்றது. இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

'முன்மதி' என்பது நல்லது எது, தீயது எது என பகுத்தாய்ந்து, தேர்ந்து தெளியும் ஆற்றல். 'விவேகம்' என்பது அப்படி தேர்ந்து தெளிந்ததில் நன்மையானதைப் பற்றிக் கொண்டு தீமையானதை விட்டுவிடுவது.

இந்த இரண்டும் இல்லாதபோது நம் உள்ளத்தில் அச்சம் குடிகொள்கிறது.

'ஐயோ! நான் செய்தது சரியா?' 'நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதா?' 'நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்?' இப்படிப்பட்ட கேள்விகள் நாம் விவேகம் அல்லாமல், வெறும் வேகத்தோடு செயல்பட்டதால் வருபவை. முன்மதி பல நேரங்களில் தேவையற்றை ஒன்றாகக் கருதப்படுகிறது. அல்லது இன்றைய நம் ஓட்டத்தில் நின்று நிதானமாக முடிவெடுப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறோம்.

நன்மை எது, தீமை என பகுத்தாய்வது பிறருக்கு பயன் தருகிறதோ இல்லையோ, அப்படி செய்வது நமக்கு நல்ல தூக்கத்தையாவது கொடுக்கும்.

அரசனுக்கு அறிவுறுத்தும் வள்ளுவப் பெருந்தகையும்,

'தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்' (குறள் 509) என்றும்

அதாவது, யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது. ஆராய்ந்து கண்ட ஒருவரை முழுமையாக நம்ப வேண்டும்.

'நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்' (குறள் 511) என்றும் சொல்கின்றார்.

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள், எப்பணியினையும் ஆற்ற தகுதி பெற்றவர்கள்.

எனக்கு இப்பவே தூக்கம் வருது...

இன்னும் சொல்வேன்...

Monday, June 20, 2016

நீதிமொழிகள் - 3


'அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக!
அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்.
அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.'
(நீமொ 3:3-4)

ஆண்டவர், அப்பா, அம்மா என்று உறவுநிலைகளை மூன்றாகப் பிரித்த ஆசிரியர், தொடர்ந்து ஒட்டுமொத்த உலகை 'ஆண்டவர்,' 'மனிதர்' என இரண்டாகப் பிரிக்கின்றார்.

இந்த இரண்டு பேருக்கும் உகந்தவராயிருக்கத் தேவை இரண்டு குணங்கள் அல்லது மதிப்பீடுகள்:

''அன்பு,' 'வாய்மை' (எபிரேய வார்த்தையை 'பிரமாணிக்கம்,' 'வாக்குப்பிறழாமை,' 'நம்பகத்தன்மை' என்றும் மொழிபெயர்க்கலாம்).

இந்த இரண்டையும் ஒருவர் கழுத்தில் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும்.

அன்பு, வாய்மை - கடவுள், மனிதர்

இப்படி இந்த நான்கு வார்த்தைகளை இணைத்துப் பார்த்தால், 'அன்பு' நம்மை 'கடவுளுக்கு' உகந்தவராகவும், 'வாய்மை' நம்மை 'மனிதருக்கு' உகந்தவராகவும் மாற்றுகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், 'அன்பு' மனிதருக்கும், 'வாய்மை' கடவுளுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. ஆனால், ஆழமாகப் பார்த்தால் கடவுள் நம் வாய்மை மற்றும் பொய்மையை ஆய்ந்தறிபவர். அவரிடம் நாம் வாய்மையாக மட்டுமே இருக்க முடியும். மனிதர்களோடு கொண்டுள்ள உறவில்தான் நாம் வாய்மையை குறைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆக, கடவுளை நோக்கி அன்பு, மனிதர்களை நோக்கி வாய்மை.

'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' (குறள் 291)

(வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு தீங்கு இல்லாத சொற்களைச் சொல்வதாகும்)

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்' (குறள் 298)

(புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரால் ஏற்படும். அதுபோல அகத்தில் தூய்மையாக விளங்குவது வாய்மையால் உண்டாகும்)

என்று வாய்மைக்கும்,

'புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு' (குறள் 79)

(அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?)

'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு' (குறள் 80)

(அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிராகும். இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய உடலாகும்)

என்று அன்புக்கும் அணி செய்கின்றார் தெய்வப்புலவர்.

Sunday, June 19, 2016

நீதிமொழிகள் - 2

'உன் தந்தை தந்த நற்பயிற்சி...
உன் தாயின் போதனை...

அவை உன் தலைக்கு அணிமுடி
உன் கழுத்துக்கு மணிமாலை!'

(நீமொ 1:8-9)

மேற்காணும் வார்த்தைகள் எபிரேயத்தில் இன்னும் அழகாக இருக்கின்றன:

'உன் தந்தை தந்த ஒழுக்கம்
உன் தாய் தந்த அறநெறி

அவை உன் தலைக்கு அருளின் மாலை
உன் கழுத்தை அணி செய்யும் மணிமாலை!'

தந்தை மற்றும் தாய் என்னும் உறவு நிலைகளை ஆண்டவர் என்னும் நிலைக்கு இணையாக வைக்கிறார் நீமொ நூலின் ஆசிரியர்.

'தந்தை' மற்றும் 'தந்த' ('கொடுத்த') என்னும் வார்த்தைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 'தந்தவர்'தான் தந்தை. தன் குழந்தைக்கான விதை தந்தவர். தன் குழந்தைக்காக தன் உழைப்பைத் தந்தவர். தன் வியர்வை தந்தவர். தன் எல்லாம் தந்தவர்.

ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் மிகப்பெரிய 'தருதல்' 'ஒழுக்கமே!'

ஒழுக்கத்திற்கு என்று ஒரு முழு அதிகாரத்தை ஒதுக்கியிருக்கும் வள்ளுவர் பெருமான்,

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்' என்கிறார். (குறள் 131)

அதாவது, 'ஒழுக்கமே மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கம் உயிரைப் போலக் கருதப்படும்.'

ஒரு தாய் தன் குழந்தைக்கு உயிரைத் தருகிறாள் என்றால், அந்த உயிருக்கு இணையான ஒழுக்கத்தை தன் குழந்தைக்குத் தருகின்றார் தந்தை.

இரண்டாவதாக, அறநெறி.

அறநெறி என்பது நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து, தீமையை விலக்கி, நன்மையைப் பற்றிக் கொள்வது. வெறும் பகுத்தாய்தல் அல்லது நன்மை-தீமை அறிதல் மட்டும் போதுமா? இல்லை. ஆய்ந்தபின் அதற்கேற்ற செயலில் ஈடுபட வேண்டும். இன்றைய சமூகவியல் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதரின் 'மனச்சான்று உருவாக்கத்தைப் பொறுத்தே அவரின் அறநெறி இருக்கின்றது.' இந்த மனச்சான்று உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் தாய்.

தந்தை-மகன் கடமைகளை பின்வருமாறு சொல்கிறார் வள்ளுவர்:

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்' (குறள் 67)

கற்றாரின் அவையில் முதலிடம் பெறும் அளவிற்கு நல்லொழுக்கம் மற்றும் அறிவுடன் மகனை வளர்க்க வேண்டியது தந்தையின் கடமை.

இதற்கு பதில் உதவியாக மகன் செய்ய வேண்டியது,

'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனும் சொல்' (குறள் 70)

இந்த மகனைப் பெறுவதற்கு இவனது தந்தை என்ன பாக்கியம் செய்தானோ என்று மற்றவர்கள் எண்ணுமளவிற்கு இருக்க வேண்டும் மகனின் வாழ்க்கை முறை.

இதையொட்டியே தாயின் மகிழ்வையும்,

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்' (குறள் 69) என்கிறார்.

- தன் மகனைப் பிறர் 'அறிவொழுக்கங்களில் சிறந்த சான்றோன்' எனச் சொல்லக் கேட்கும் தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.

ஒழுக்கம் மற்றும் அறநெறியை 'அருளின் மாலை' என்றும் 'கழுத்தணி' என்றும் உருவகப்படுத்துகின்றார் நீமொ ஆசிரியர்.

இந்த இரண்டு வார்த்தைகளும் போர்க்களத்திற்குச் செல்லும் ஓர் அரசனின் அணிகலன்களைக் குறிக்கின்றன. மணிமகுடம் ஓர் அரசனின் அதிகாரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அதன் வேலை போர்க்களத்தில் அவன் தலையைப் பாதுகாப்பதே. அதுபோலவே, கழுத்தணியும் எதிரிகளின் வாள்வீச்சிலிருந்து அரசனின் உயிரைக் காப்பாற்றுகின்றது. இவை இரண்டும் வெறும் அலங்காரப் பொருள்கள் அல்ல. மாறாக, உயிர் காக்கும் கவசங்கள்.

ஆக, தந்தை மற்றும் தாயின் நற்பயிற்சி மற்றும் அறநெறி போன்றவையும், விரும்பினால் அணிந்து கொள்ளவும், விரும்பாவிட்டால் கழற்றிவிடவும், அல்லது மாற்றிவிடவும் என நாம் வைத்திருக்கும் அணிகலண்கள் அல்ல. மாறாக, அவை நம் இருப்பையும், வாழ்வையும் உறுதி செய்பவை.

இன்னும் சொல்வேன்...

Saturday, June 18, 2016

நீதிமொழிகள் - 1

ஏறக்குறைய இரண்டு மாதங்களாக திருத்தூதர் பணிகள் நூலோடு நாம் பயணம் செய்தோம்.

தூய ஆவியால் உந்தப்பட்டு, மகிழ்வுடன் வாழ்ந்த தொடக்க திருஅவை. அந்த திருஅவையின் உடன் நின்ற திருத்தூதர்கள். திருத்தூதர்களின் துணிச்சல், விடாமுயற்சி. அவர்கள் நடுவில் எழுந்த விவாதங்கள், விட்டுக்கொடுத்தல்கள். காலம் மற்றும் இடம் என்னும் இரண்டு நிலைகளில் இந்த நூல் நம்மைவிட்டுத் தூரமாக நின்றாலும், அது நம் வாழ்வில் இன்றும் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தவே செய்கிறது.

இன்று நாம் நீதிமொழிகள் நூலோடு நம் பயணத்தைத் தொடங்குவோம்.

நீதிமொழிகள் நூலில் என்னைக் கவர்ந்த சில பழமொழிகளை எடுத்து, அதற்கு உப்பு, மிளகாய் போட்டு, அல்லது கொஞ்சம் சீனி, க்ரீம் போட்டு, உறைப்பாக, அல்லது இனிப்பாக பரிமாற முயற்சிக்கிறேன்.

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்.
ஞானத்தையும், நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.

பிள்ளாய்! உன் தந்தை தந்தை நற்பயிற்சியைக் கடைப்பிடி.
உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே.
அவை உன் தலைக்கு அணிமுடி.
உன் கழுத்துக்கு மணிமாலை'

(நீமொ 1:7-8)

நம் திருப்பலி, அருளடையாளங்கள், மறைக்கல்வி வகுப்புகள் போன்றவற்றை, 'தந்தை-மகன்-தூய ஆவி' என்ற மூவொரு இறைவன் ஃபார்முலா கொண்டு தொடங்குகின்றோம். நீமொ நூலின் ஆசிரியர் 'ஆண்டவர்-அப்பா-அம்மா' என்ற புதிய ஃபார்முலா கொண்டு தொடங்குகின்றார்.

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்'
'அப்பா தரும் நற்பயிற்சி'
'அம்மா தரும் வாழ்க்கைப்பாடம்'

இந்த மூன்றையும் ஒருவர் மனத்தில் இருந்தால் அவர் ஞானியாகி விடுவார்.

ஆக, ஞானி ஆதல் அல்லது ஞானம் பெறுதல் என்பது எட்டாக்கனி அன்று. உங்களுக்கும், எனக்கும் சாத்தியானதே.

இந்த புதிய மூவொரு இறைவன் ஃபார்முலாவைக் கொண்டு, தன் நூலை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர். இந்த முகவுரையில் மூன்று விடயங்கள் துலங்குகின்றன:

அ. 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்'

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என தன் ஞானத்தின் அறிவுரை நூலாம் திருக்குறளைத் தொடங்குகின்றார் திருவள்ளுவர். எழுத்திற்கு முதலாக 'அ' இருப்பது போல, உலகின் எல்லாவற்றிற்கும் முதலாக - ஞானத்தின் முதலாக - 'இறைவன்' இருக்கின்றான்.

'ஆண்டவரைப் பற்றிய அச்சம்' என்று ஆசிரியர் சொல்லக் காரணம் என்ன?

'அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது' என்றும், 'அன்பில் அச்சம் தேவையில்லை' என்பார்கள். உளவியிலில் அச்சத்தை முதல் எதிர்மறை உணர்வாக பட்டியலிடுகிறார்கள். 'அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்று அச்சத்தைச் சாடுகின்றார் பாரதியார். இப்படி இருக்க, 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்' தேவையா? ஆம். தேவையே. ரொம்ப சிம்பிள். நாளை எப்படி இருக்குமோ என்ற நம் அச்சம்தான் நம் இன்றைய நாளை பயனுள்ள முறையில் வாழத் தூண்டுகிறது. தேர்வு பற்றிய அச்சம், பெற்றோரின் கண்டிப்பு பற்றிய அச்சம், அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது என்ற அச்சம் என நிறைய அச்சங்கள் நம்மை உருவாக்கவும் செய்கின்றன. மேலும், அச்சம்தான் பல நேரங்களில் நம் நடத்தையை ஒழுங்கு செய்கிறது.

ஆ. 'மூடரே அவமதிப்பர்'

'ஞானம்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தவுடன், 'மூடத்தனம்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர். ஆக, இந்த நூலை வாசிக்கும் வாசகர் தொடக்கத்திலேயே ஒரு முடிவு எடுக்க வேண்டும்: 'நான் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறேன்? ஞானத்தின் பக்கமா? மூடத்தனத்தின் பக்கமா?'

இ. 'பிள்ளாய்!'

தன் நீதிமொழிகளை ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வழியாக சொல்கின்றார். 'பிள்ளாய்' அல்லது 'குழந்தாய்' என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த நூலின் வாசகர்தாம் இந்த 'பிள்ளாய்' அல்லது 'குழந்தாய்'. இந்த வார்த்தைகள் வருமிடத்தில் எல்லாம் இந்த ஆசிரியர் நம் முன் வந்து குனிந்து நின்று, நம் காதில் அறிவுறுத்துவதுபோல இருக்கிறது.

இன்னும் சொல்வேன்...

Friday, June 17, 2016

உரோமை

மால்தாவில் இருந்து புறப்படும் பவுலின் பயணம் உரோமையில் நிறைவடைகிறது.

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்' என்ற இயேசுவின் கட்டளை இங்கு நிறைவேறுகிறது. ஏனெனில், 'உலகின் எல்லையை அடைவது' என்பது 'உரோமையை அடைவதுதான்' என்று கருதப்பட்டது.

'முழுத்துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்' பவுல்.

இனி தடையேதுமில்லை!

Thursday, June 16, 2016

மால்தா

மால்தாவின் கரையில் ஒதுங்குகின்றனர் பவுலும், அவர் உடன் வந்தவர்களும்.

'மால்தா மக்கள் மிக்க மனிதநேயத்துடன் நடந்துகொண்டனர்' என எழுதுகின்றார் லூக்கா.

மழைபெய்து குளிராயிருந்த ஒரு மாலை வேளையில் தீமூட்டி குளிர் காய்கின்றனர் அம்மக்கள். அவர்களுடன் போய் உடன் அமர்கின்றார் பவுல். இவரும் சேர்ந்து சுள்ளிகளைப் போட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விரியன் பாம்பு ஒன்று இவரின் கையைக் கவ்விக்கொள்கின்றது. 'இவன் ஒரு கொலைகாரன். தெய்வம் தண்டித்துவிட்டது' என குற்றம் சொன்ன மக்கள், பவுலுக்கு எதுவும் நேராததால், 'நீரே தெய்வம்' என மாற்றிப் போடுகின்றனர் தட்டை.

மேலும், அங்கிருந்தவர்களில் நலமற்றவருக்கு நலம் தருகின்றார் பவுல்.

மால்தா மக்கள் இவர்களுக்கு மதிப்பு அளித்து பல கொடைகளையும் தந்தார்கள். மேலும், கப்பல் பயணத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்தார்கள்.

ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையராய் மால்தா மண்ணில் அடியெடுத்து வைத்தவர்கள் கைகள் அவர்கள் வெளியேறும்போது நிரம்பி வழிகின்றன.

சில நேரங்களில் நம்மிடம் வெறுங்கைதான் இருக்கிறது என்றாலும், துணிந்து முன்சென்றால் நம் கைகள் நிரப்பப்பட்டு விடும்.

மால்தா மக்களின் மனிதாபினம் நமக்கு நல்ல பாடம்.

இந்த வார ஆனந்தவிகடனில் பேருந்தில் கேசட் போட்டு இசை கேட்கும் வழக்கம் பற்றி துணுக்கு ஒன்று வெளியாகியுள்ளது.

'கேசட்டில் சில பாடல்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், மிகவும் யோசித்து, முடிவெடுத்து, தேர்ந்தெடுத்து பாடல்களை பதிவு செய்தனர் பேருந்து நடத்துனர்கள்.

ஆனால், இன்று விரல் நுனி அளவு சிப்பில் ஆயிரக்கணக்கான பாடல்களை அடைத்துவிட முடிகிறது. ஆகையால்தான் நாம் தேவையானவை, தேவையற்றவை, பிடித்தவை, பிடிக்காதவை என அத்தனையையும் போட்டு நிரப்பி விடுகிறோம்!'

இது நம் இன்றைய வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கிறது.

மால்தா மக்கள் எது தேவையோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்தனர்.

ஆனால் இன்று தேவையில்லாத பலவற்றை நாம் போட்டு அடைத்துவிட்டதால், தேவையானவற்றைப் பிரித்துப் பார்க்க நேரம் கூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

Wednesday, June 15, 2016

யாவரும் நலம்

புயலில் அலைக்கழிக்கப்பட்ட கப்பல் தரைதட்டி நிற்கின்றது.

சகதியில் சிக்கியதால் கப்பலின் முன்பகுதி அசையாமல் நிற்க, பின்பகுதி அலைகளால் அடித்து உடைக்கப்படுகிறது. கப்பல் உடைந்தால் கைதிகள் தப்பிவிடுவர் என்று நினைக்கின்ற படைவீரர்கள் கைதிகளைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார்கள்.

ஆனால், அதிலும் ஒரு நல்லவர் இருக்கிறார். அப்படி கைதிகளைக் கொன்றுவிட்டால் பவுலையும் கொல்ல நேரிடும் என்று சுதாரித்துக் கொள்ளும் நூற்றுவர் தலைவர் அந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றார்.

மாற்றுத்திட்டம் ஒன்று உருவாகின்றது.

'நீச்சல் தெரிஞ்சவங்க நீந்தி வந்துடுங்க!'

'தெரியாதவங்க பலகையைப் பிடிச்சு வந்துடுங்க!'

'நாங்க உங்கள நம்புறோம்! நீங்க எங்க நம்பிக்கைக்கு துரோகம் செய்திடாதீங்க!'

கைதிகளும், பவுலும் நீந்திக் கரை சேர்கின்றனர்.

யாரும் தப்பிக்க விரும்பவில்லை - ஆச்சர்யமாக இருக்கிறது.

அதவாது, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காமல் இருக்கும் இந்த நல்ல மனதை நாம் இந்த கைதிகளிடம் கற்றுக்கொள்ளலாம்.

'நாணயம் என்பது யாரும் உன்னைப் பார்க்காதபோது நீ எப்படி இருக்கிறாயோ என்பதுதான்!'

எல்லாரும் பாதுகாப்பாய் கரை சேர்ந்தார்கள்.

ஆனால், அவர்கள் சேர்ந்த கரை இத்தாலியக் கரை அல்ல. இத்தாலிக்குக் கொஞ்சம் கீழே உள்ள மால்டாவின் கரை.

Tuesday, June 14, 2016

மனவுறுதி

கையில் கொஞ்சம் பணமும், நல்ல உடல்நலமும் இருந்தால் இந்த பூமிப்பந்தையே ஏறக்குறைய 36 மணிநேரங்களில் நம்மால் சுற்றி வந்துவிட முடியும்.

உரோமையில் விசாரிக்கப்படுவதற்காக பவுல் கப்பலில் அழைத்துச்செல்லப்படுகின்றார். அவருடைய பயணம் மற்றும் பயணத்தில் அவர் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி விரிவாகச் சொல்கின்றது திப 27-28. வீசும் காற்றை மட்டும் நம்பி விரிக்கப்படும் பாய்மரத்தின் துணையோடுதான் பவுலின் பயணம் இருக்கிறது. சில நேரங்களில் எதிர்க்காற்றால் பயணம் திசைமாறுகிறது. அவர்கள் தங்கும் துறைமுகம் குளிர்காலத்திற்கு ஏற்றதாக இல்லை. புயலில் இருந்து தங்கள் கப்பல் மூழ்காமல் காக்கப்பட தங்களின் உணவுப்பொருள்களையும் கடலில் இருந்துவிட்டு பசியோடு கிடக்கின்றனர். 14 நாட்கள் பட்டினி கிடக்கின்றனர். திடீரென்று கப்பல் தரைதட்டுகிறது.

பவுல் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் மிகவும் சாந்தமாக இருக்கின்றார்.

தன் கப்பலின் கேப்டனுக்கு ஊக்கம் தருகின்றார். 'உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒரு முடி கூட விழாது' என்கிறார்.

இறுதியாக, மிக எளிமையாக நற்கருணையைக் கொண்டாடுகின்றார்.

அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்கின்றார். அனைவரும் மனவுறுதி பெற்று உண்கின்றனர்.

பவுலின் இந்த மனவுறுதி நம் வாழ்வின் இன்னல்கள் நேரத்தில் நமக்கு இருந்தால் எத்துணை நலம்!

Monday, June 13, 2016

பெலிக்சு

உரோமைக்குச் செல்லும் முதற்கட்டமாக பவுல் ஆளுநர் பெலிக்சு முன் நிறுத்தப்படுகிறார்.

பவுலை வெளியேற்ற இலஞ்சம் எதிர்பார்க்கிறார் பெலிக்சு.

அரசியல் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள் காலங்காலமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
ஆனால், நேர்வழியையே தேர்ந்து கொள்கிறார் பவுல்.

சீசரிடம் அழைத்துச்செல்லுமாறு வேண்டுகிறார்.

பவுலுக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது?

பவுலின் வார்த்தைகளே இதற்கு விடை:

'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்...

தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்'

(உரோ 8:28, 30)

Sunday, June 12, 2016

அன்பு என்பது

எபேசிலிருந்து புறப்படும் பவுல் மற்றும் திருத்தூதர்கள் செசரியா வந்து சேர்கின்றனர். அங்கே அகபு என்ற பெயருடைய இறைவாக்கினர் பவுலின் இடைக்கச்சையை எடுத்து தம் கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு, 'இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் இப்படித்தான் கட்டுவார்கள்!' என இறைவாக்குரைக்கின்றார். அதைக் கேட்ட சீடர்கள் அழுது புலம்புகின்றனர். பவுல் எருசலேமுக்குப் போக வேண்டாம் எனப் பணிக்கின்றனர். ஆனால் பவுலோ, 'ஆண்டவருக்காக கட்டுப்படுவதற்கு மட்டுமல்ல. இறப்பதற்கும் தயாராய் இருக்கிறேன்' என துணிச்சலோடு சொல்கின்றார்.

சொன்னது மட்டுமன்றி, எருசலேமுக்குப் புறப்பட்டும் செல்கின்றார். அங்கே அவர் கோவிலில் கைது செய்யப்படுகின்றார். கைது செய்யப்பட்ட நிலையிலும் துணிச்சலோடு நற்செய்திக்குச் சான்று பகர்கின்றார்.

மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, 'துணிவோடிரும்! எருசலேமில் என்னைப் பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்' என்கிறார்.

(காண். திப 21:1 - 23:11)

இன்றைய நாள் நற்செய்தியில் பாவியான பெண் மற்றும் பரிசேயரான சீமோன் பற்றி வாசித்தோம் (காண். லூக் 7:36-50)

'அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்கிறாரோ அவர் அதிகம் அன்பு செய்வார்'

இதுதான் குட்டிக்கதையின் வழியாக சீமோனுக்கு இயேசு சொன்ன பாடம்.

பவுலிடம் அதிகம் மன்னிக்கப்பட்டது. ஆக, அவர் அதிகம் அன்பு செய்கிறார் கடவுளை.

அகுஸ்தினாரிடம் அதிகம் மன்னிக்கப்பட்டது. ஆகவே அவரும், 'தாமதமாக உன்னை அன்பு செய்தேன்' என உருகி வழிகின்றார்.

அன்பு என்பது நாம் தரும் வாக்குறுதி.

அந்த வாக்குறுதியில் தளராமல் துணிந்து நிற்கின்றார் பவுல்.

கயிறுகளும், விலங்குகளும் அவரின் உடலைக் கட்ட முடியுமே தவிர, அவரின் உள்ளத்தைக் கட்ட முடியாது.

Saturday, June 11, 2016

எபேசு உரை

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப்பணியின் முக்கியத்துவம் என நிறைய கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்தாலும், மூன்று விடயங்களுக்காக எனக்கு இந்த உரை மிகவும் பிடிக்கும்:

1. 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை'

எபேசின் மூப்பர்களோடு பழகி, உறவாடி, ஊக்குவித்த பவுல் அவர்களைவிட்டு இப்படிச் சொல்லித்தான் பிரிகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் அவரின் மனப்பக்குவத்தை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றன: ஒன்று, அவர் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்பட்டார். அந்த வழிநடத்துதலை அவர் தன் தன்னலத்திற்காக ஒருபோதும் உடைக்க விரும்பவில்லை. இரண்டு, பவுல் வாழ்வின் எதார்த்தம் அறிந்தவராக இருந்தார். நம் வாழ்வில் நாம் நம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் பவுலைப் போல சொல்லியிருக்க மாட்டோம். ஆனால், நம் வாழ்வில் பார்த்த, பழகிய பல நபர்களை நாம் அதற்குப் பின் பார்க்கவே இல்லை. நாம் இனி பார்க்க மாட்டோம் என்று பழகினால் ஒருவேளை நம்மால் முழுமையாக ஒருவரை அன்பு செய்ய முடியுமோ எனத் தோன்றுகிறது.

2. 'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை'

அதாவது, என்னுடைய ஆடம்பர தேவைக்கும் நான் ஆசைப்படவில்லை. என் அத்தியாவசியத் தேவைக்கும் ஆசைப்படவில்லை. என்னே ஒரு உன்னதமான பக்குவம்! எல்லாம் இழக்கும் ஒருவருக்கு எல்லாவற்றையும் விட ஆசை இருக்கும் என்கிறது ஜென் மரபு. ஆனால், பவுல் அதையும் வென்றெடுக்கிறார். மேலும், தன் தேவைக்கு தானே, தனது கைகளே உழைத்ததாக பெருமிதம் கொள்கின்றார். 'Nothing worth having ever comes without pain' - என்பார்கள். ஆக, என் கைகள், என் ஆற்றல், என் முயற்சி என வரும் ஒன்றில் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளல் வேண்டும்.

3. 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை!'

'நான் யார் பொருளுக்கும் ஆசைப்படவில்லை' என்று சொல்லி சில நேரங்களில் நாம் ஒதுங்கிக்கொள்வதுண்டு. பவுல் இன்னும் ஒருபடி மேலே போய், 'நான் ஆசைப்படாவிட்டாலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கிறேன்' என்கிறார். 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவே சொன்னதாக பவுல் குறிப்பிடுகிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள் நற்செய்தி நூல்களில் இல்லை. ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் இருக்கலாம். கொடுக்கும்போது நாம் நிறைய அடைகிறோம் என்பதைக் குறிக்கவே அதை பேறுடைமை என்கிறார் பவுல்.

Monday, June 6, 2016

நெஞ்சம்நிறை நன்றியோடு

என் பணி மற்றும் படிப்பு முடிந்து நாளை தாயகம் திரும்புகிறேன்.
'நன்றி' என்ற ஒற்றைச்சொல்தான் என் உள்ளத்திலும், உதட்டிலும் இருக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஆயராகக் கொண்ட உரோமைத் மறைமாவட்டத்திலேயே அருள்பணியாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, என் குருமாணவ நாட்களில் என் கனவான பாப்பிறை விவிலிய நிலையத்தில் முதுகலைப் படிப்பு, புதிய முகங்கள், புதிய உணவுமுறை, புதிய உறவுகள், புதிய அறிமுகங்கள் என நினைத்து நன்றி கூற நிறைய மனத்தில் இருக்கின்றன.

'நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தை நான் உங்களுக்குத் தருவேன்.
நீங்கள் கட்டாத நகரத்தில் உங்களைக் குடியேற்றுவேன்.
நீங்கள் விதைத்து வளர்க்காத திராட்சைக் கனிகளையும், ஒலிவக் காய்களையும் உண்பீர்கள்.
இந்த ஆண்டுகளில் உங்கள் மேலாடை நைந்து போகவில்லை.
உங்கள் பாதங்கள் வீங்கவில்லை'

என்னும் யாவே இறைவனின் வாக்குறுதி என் வாழ்வில் நிறைவேறியதாக உணர்கிறேன்.

இந்த நான்கு ஆண்டுகளில் நான் கற்ற வாழ்க்கைப் பாடங்களைப் புத்தகமாகப் பதிவு செய்ய ஆவலாக இருக்கிறேன்.

என் பயணம், பணி சிறக்க தொடர்ந்து என்னை வாழ்த்துங்கள். ஆசீர்வதியுங்கள்.

விரைவில் சந்திப்போம்.

நன்றி.

கெங்கிரேயா

பவுல் பணி என்ற முறையில் திருத்தூதராக இருந்தாலும், அவரின் தனிமனித அளவிலும் நிறைய மதிப்பீடுகளைக் கொண்டவராக இருக்கிறார்.

கொரிந்து நகரைத் தொடர்ந்து பவுல் அந்தியோக்கியா செல்கின்றார் (காண். திப 18:18-22).

1. தம் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கெங்கிரேயா துறைமுகத்தில் முடிவெட்டிக் கொள்கின்றார் பவுல்.

இது என்ன நேர்த்திக்கடன்? எந்தக் கடவுளுக்கு பவுல் நேர்ந்து கொண்ட கடன் இது? இவ்வளவு நாள்கள் பவுல் முடிவெட்டாமல் இருந்தாரா? முதல் ஏற்பாட்டு சிம்சோன் போல கடவுளுக்கான நாசீராக இருந்தாரா? - இந்தக் கேள்விகளுக்கு இங்கே பதில் இல்லை. ஆனால், பவுல் தான் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்றை இங்கே நிறைவு செய்கின்றார்.

ஆக, கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கம்.

2. எபேசில் திருச்சபையார் அவரைத் தங்குவதற்கு கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை.

பவுல் அடுத்தவர்களுக்கு 'இல்லை' என்ற சொல்ல அறிந்திருந்தார். எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் 'ஆமாம்' சொல்லிவிட்டு, பின்னால் கஷ்டப்படும் நிலையில் நான் பல நாள்கள் இருந்திருக்கிறேன் முன்னால்.

'இல்லை' என்பதை 'இல்லை' எனச் சொல்லும் துணிச்சல் பெற்றிருந்தார் பவுல்.

மற்றொரு வகையில், மேற்காணும் இரண்டு மதிப்பீடுகளும் ஒன்றுதான்: வார்த்தை அல்லது வாக்கு சுத்தம்.

Saturday, June 4, 2016

கொரிந்து

இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, 'அஞ்சாதே! பேசிக்கொண்டேயிரு! நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்' என்று சொன்னார்.
(திப 18:9-10)

நேற்று திருத்தந்தை அவர்கள் தலைமையில் அருள்பணியாளர்களின் யூபிலி கொண்டாட்டம் தூய பேதுரு சதுக்கத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் திருஇருதய ஆண்டவரின் திருநாள் என்பதால் 'ஆயன் காணாமற்போன ஆட்டைத் தேடிச்செல்லும் உவமை' நற்செய்தியாக வாசிக்கப்பட்டது. அந்த உவமையையும், அருள்பணியாளரின் வாழ்வையும் இணைத்துப் பேசிய திருத்தந்தை பின்வருமாறு சொன்னார்:

'இயேசுவின் இதயத்தை ஒட்டியே அருள்பணியாளரின் இதயமும் இருக்க வேண்டும். ஒரு ஆடுதானே. போனால் போகட்டும். 99 சதவிகிதம் கைவசம் இருக்கிறதே என்று ஓய்ந்துவிடக்கூடாது. காணாமல் போன ஆட்டைத் தேட வேண்டும். அந்தத் தேடல் எளிதன்று. வெயிலையும், கரடு முரடான பாதையையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். கண்களை அயர விடாமல் தேட வேண்டும். சில வேளைகளில் அந்த ஆடு ஆயனோடு வர மறுத்து, அந்த ஆயனுக்கு எதிராக பாயலாம். அதையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆக, நம் பணியில் 50 அல்லது 60 சதவிகிதம் தேர்ச்சி கிடைத்தது என தேங்கிவிடல் கூடாது.'

கொரிந்து நகரில் ஆண்டவர் பவுலுக்குத் தோன்றி ஆறுதல் சொல்லும் நிகழ்விலும் திருத்தந்தையின் வார்த்தைகளையே நான் பார்க்கின்றேன்:

அ. 'அஞ்சாதே!' 'நிறுத்தாதே!' என கட்டளையிடுகின்றார் ஆண்டவர். ஆக, என் பணிக்கு மக்கள் எப்படி செவிகொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து என் பணி சுருங்கி விடக்கூடாது. 'யாரும் கோவிலுக்கு வருவதில்லை, வருபவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை' என்றுகூட தளர்ந்துவிடக்கூடாது. ஏனெனில் அருள்பணியாளரோடு உடனிருப்பவர் ஆண்டவரே.

ஆ. 'எனக்குரிய மக்கள்'. ஆண்டவர் கொரிந்து நகர மக்களை 'என் மக்கள்' என அழைக்கின்றார். ஆக, ஓர் அருள்பணியாளர் எப்போதும் தன் பங்குத்தள மக்களை 'ஆண்டவரின் மக்கள்' என்றும், 'தான் ஒரு கண்காணிப்பாளர்' என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி எண்ணுவது மிகப்பெரும் மனச்சுதந்திரத்தை அருள்பணியாளருக்குக் கொடுக்கும்.

இ. 'காட்சி கண்டார் பவுல்.' இன்று ஏன் காட்சிகள் வருவதில்லை? பவுலுக்கு ஆண்டவரே காட்சி கொடுத்தாரா? அல்லது பவுல் தன் மனத்தின் ஆழத்தில் தனக்குத் தானே ஊக்கம் கொடுத்துக்கொண்டாரா? அல்லது கொரிந்து நகரின் நல்ல உள்ளம் ஏதாவது ஒன்று கடவுளின் குரலாக பவுலுக்கு ஆறுதல் தந்ததா?

Friday, June 3, 2016

அக்கிலா பிரிஸ்கில்லா

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இருந்த இவர்கள், கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க, இத்தாலியாவை விட்டு வெளியேறி கொரிந்து வருகின்றனர்.

இவர்களின் தொழில் கூடாரம் செய்வது.

கூடாரம் செய்வது என்பது எப்படிப்பட்ட வேலை என்று சரியான தகவல் இல்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா, அல்லது கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீட்டுக்கூரை வேய்பவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களா - எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார்.

மேலும், இவர்கள் செய்யும் கூடாரத் தொழிலையும் செய்கின்றார்.

பவுலின் தொழில் இதுதான் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (காண். திப 18:3).

பவுல் தான் செய்யும் கூடாரத் தொழில் பற்றி மிகவும் பெருமைப்படுவது உண்டு. தன் செலவுக்கு தன் கைகளே உழைத்தது எனவும், தான் திருத்தூதராக இருந்தாலும், யார் கையையும் நம்பியிருக்கவில்லை என்றும் சொல்கின்றார். தன் திருத்தூது பணிக்கு நடுவிலும் கூடாரத் தொழில் செய்ய பவுலுக்கு ஆற்றலும், நேரமும் எப்படிக் கிடைத்தன?

என் பசிக்கு நான் வேலை செய்து உண்ணவேண்டும் என்பது என் கனவும்கூட.

அக்கிலா - பிரிஸ்கில்லா - பவுல் இவர்களின் தொழில் செய்யும் ஆர்வத்திலிருந்து நான் கற்றுக்கொள்வது இதுதான்:

திருத்தூதுப் பணியால் வரும் பொருள் ஆதாரத்தை என் தனிப்பட்ட வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளாமல், என் வாழ்வை என் கையால் வாழ வேண்டும்!

Thursday, June 2, 2016

ஏதென்சு

'ஏதென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அன்னியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர்' (திப 17:21)

'ஒருவர் இரண்டு மொழிகளைத் தெரிந்திருந்தால் அவர் இரண்டு உலகங்களை அறிந்தவர்' என்பது சொலவடை.

மொழிதான் நம் எண்ணங்களின் வாய்க்கால். எனக்கு வெளியே இருப்பவரையும், எனக்கு வெளியே இருக்கும் உலகத்தையும், என்னையும் இணைப்பது மொழியே.

எபிரேயத்தில் புலமை பெற்ற பவுல் கிரேக்கம் மற்றும் இலத்தீனும் அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான் எல்லா இடங்களுக்கும் எளிதாக செல்லவும், எல்லா மக்களோடும் எளிதாக உரையாடவும் அவரால் முடிகிறது.

பவுல் ஏதென்சில் ஆற்றிய உரையை நாம் திப 17:16-34ல் வாசிக்கின்றோம்.

பவுல் ஏதேன்சு நகரில் உள்ள எல்லா ஆலயங்களையும் சுற்றி வருகின்றார். 'யாரும் அறியாத கடவுளுக்கு' என்ற ஒரு பலிபீடத்தை அங்கே காண்கின்றார். அதை மையமாக வைத்து தன் உரையைத் தொடங்குகின்றார்.

திருத்தூதர் பணிகள் நூலில் நாம் திருத்தூதர்களை மட்டுமல்ல. அவர்கள் சந்தித்த மக்கள் மற்றும் இடங்கள் பற்றியும் அறிந்து கொள்கின்றோம்.

ஏதென்சு மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று:

'புதியவற்றை ஏற்றுக்கொள்வது' அல்லது 'புதியவற்றைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பது'

நிக்கோலினா என்ற ஒரு பாட்டியை அவரது இல்லத்தில் கொண்டு விடுவதற்குச் சென்றிருந்தேன். அவருக்கு வயது 87. உள்ளே சென்ற அடுத்த நொடி தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வந்து எனக்குக் காட்டினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இத்தாலியனுக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதினம் அது. ஒன்றை ஆங்கிலத்தில் சொல்வதற்கும், இத்தாலியனில் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, ஒரு உணர்வை பதிவு செய்வதில் மொழிகள் எப்படி வேறுபடுகின்றன என சொல்லிக்கொண்டே போனார் நிக்கோலினா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. புதியதை கற்றுக்கொள்ள குழந்தை உள்ளம் மட்டும் போதும் என்று நான் உணர்ந்தேன்.

அந்தக் குழந்தை உள்ளம் ஏதென்சில் உள்ளவர்களிடம் இருந்தது.

Wednesday, June 1, 2016

பிலிப்பி

நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா, அது இன்னொரு பக்கம் போகுது! என்ற நிலை திருத்தூதர்கள் பவுலுக்கும், சீலாவுக்கும் கூட வருகின்றது.

பிலிப்பி நகரில் பவுலும், சீலாவும் பணி செய்துகொண்டிருக்கின்றனர் (காண். திப 16:16-40). குறி சொல்லும் ஆவியைக் கொண்டிருந்த ஓர் அடிமைப்பெண் இவர்களை யார் என்று அறிந்து, இவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்: 'இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்.' பவுல் மற்றும் சீலாவைப் பற்றிய நல்ல வார்த்தைகளே இவை என்றாலும், பவுல் கோபப்பட்டு இவரிடமிருந்து ஆவியை விரட்டி விடுகின்றார். ஆவி போய்விட்டதால் இவரை அடிமையாக வைத்து வேலை பார்த்து வந்த தலைவருக்கு வருவாய் போய்விட்டது. கோபமும், பொறாமையும் கொண்ட அவர், திருத்தூதர்களுக்கு எதிராக கலக்கம் உருவாக்க, பவுலும், சீலாவும் சிறையிடப்படுகின்றனர்.

சிறையிடப்பட்ட இரவில் இவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு, கதவுகள் உடைகின்றன. கைதிகள் தப்பித்திருக்கலாம் என நினைக்கிற சிறைத்தலைவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார். 'நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்! உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்!' என்று பவுல் ஆறுதல் சொல்ல, அவசர அவசரமாக வந்த அவர், 'பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?' என்கிறார்.

இதற்கிடையில் பவுலும், சீலாவும் போகலாம் என அறிவிக்கப்பட, 'உரோமைக்குடிமக்களை இப்படியா தொந்தரவு செய்வது?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார் பவுல்.

இவர்கள் உரோமைக்குடிகள் என்றவுடன் பதறியடித்து வந்த தலைமை அதிகாரிகள் இவர்களிடம் மன்னிப்பு வேண்டுகின்றனர்.

சிறைக்கதவுகள் திறந்திருந்தும் பவுலும், சீலாவும் ஏன் வெளியே போகவில்லை?

இதை நான் காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகத்தோடு ஒப்பிட விழைகிறேன்.

நம்மை அழிக்க நினைக்கும் எதிரியிடமிருந்து தப்பி ஓடாமல், நேருக்கு நேர் நின்று நம் உரிமை நிலைநாட்டப்படும் வரை இறங்கிவராமல் இருப்பதுதான் அது.

மேலும், திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் முதன்மையானது என்பதை அறிந்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து தப்புவது முக்கிமல்ல. 'கதவு திறந்து கிடந்தது. நாங்கள் வந்தோம்' என சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் தங்களை நினைக்கவில்லை. தப்பி ஓடாமல் இருந்ததால் சிறைக்காவலரின் குடும்பமே மனமாற்றம் அடையவும், தலைவர்கள் தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.

வளைந்து கொடுக்காத இந்த தன்மாண்பு (self-respect) நமக்கு நல்ல பாடம்.