Tuesday, May 31, 2016

ஆற்றங்கரை

அலங்கரிக்கப்பட்ட அரங்கங்களிலும், தூய்மையான ஆலயங்களில் நடக்கவில்லை திருத்தூதர்களின் தூதுப்பணி.

ஆற்றங்கரைகளிலும், காற்றுத் தூசியிலும் தான் நடந்தேறியது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் திப 16:11-15ல் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவர் செய்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார்.

'...அவற்றுக்குச் சொல்லுமில்லை. பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.'
(திபா 19:3-4)

Monday, May 30, 2016

துரோவா

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத் தொடக்கத்தில் பவுல்-சீலா-திமொத்தேயு என மூவர் இருந்தாலும், இவர்களோடு லூக்காவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உள்ள கதையாடல்களில், 'நாங்கள் சென்றோம்,' 'நாங்கள் தங்கினோம்' என்று தன்மை பன்மையில் எழுதுகின்றார்.

திருத்தூதர்கள் ஆசியா, பித்தினியா போன்ற பகுதிகளுக்குச் செல்ல விரும்புகின்றனர் (காண். திப 16:6-10). ஆனால், இயேசுவின் ஆவியார் அவர்களைத் தடுக்கின்றார். ஆக, அவர்கள் துரோவா செல்கின்றனர். மேலும், துரோவாவில் ஒரு காட்சி கண்டு, மாசிதோனியாவுக்குச் செல்கின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. தூய ஆவியார், 'அங்கே போகக்கூடாது!' என்று தடுக்கின்றார்
ஆ. கனவில் 'இங்கே வாங்க!' என்று அழைக்கப்படுகிறார்கள்

அதாவது, முழுக்க முழுக்க தூய ஆவியானவரின் உடனிருப்பையும், தங்களுக்கு வரும் கனவுகள் மற்றும் காட்சிகளையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

உள்ளுணர்வு (intuition) கொண்ட ஒருவரால்தான் இந்த இரண்டையும் உணர முடியும்.

காலங்காலமாக கனவுகள் நமக்கு மறைபொருளாகவே இருக்கின்றன.

என்ன நடந்தாலும், 'கடவுளின் தீர்மானம் என்ன?' என்பதை உணர்ந்து அதன்படி நடக்கின்றனர் திருத்தூதர்கள்.

திமொத்தேயு

கடவுள் ஒரு கதவை அடைத்தால், இரண்டு கதவுகளைத் திறந்துவிடுவார் என்ற வாக்கு பவுலின் வாழ்வில் உண்மையாகிறது.

தன்னை திருத்தூதர்களுக்கு அறிமுகம் செய்த, தன் முதல் தூதுரைப் பயணத்தில் உடனிருந்த உற்ற தோழன் பர்னபா அவரிடமிருந்து பிரிய நேரிட்டது.

அந்தப் பிரிவை, வருத்தத்தை கடவுள் உடனே ஈடுசெய்கிறார்.

தன் அன்பு பிள்ளையான திமொத்தேயு பவுலுக்கு அறிமுகம் ஆகிறார் (காண். திப 16:1-5)

பவுல் திமொத்தேயுவின் மேல் கொண்டிருந்து அளவுகடந்த அன்பிற்கு அவர் அவருக்கு எழுதிய கடிதங்களே சான்று.
திமொத்தேயுவின் தாய் யூதர். தந்தை கிரேக்கர்.

இரண்டு பின்புலங்களில் இருந்து வருபவர்கள் வாழ்வில் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரண்டு உலகங்களுக்கு, இரண்டு மதங்களுக்கு, இரண்டு சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனவர்கள். ஒன்றைவிட இரண்டு பெரிதுதானே.

தகுந்த நேரத்தில் தகுந்த நபரை அறிமுகம் செய்வது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று.

Saturday, May 28, 2016

பிரிவு துன்பமே

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணம் ஒரு சோகமான நிகழ்வோடு தொடங்குகிறது (காண். திப 15:36-42)

முதல் தூதுரைப் பயணத்தில் நகமும் சதையும்போல இணைந்தே பணியாற்றிய பவுலும், பர்னபாவும் சண்டையிட்டுப் பிரிகின்றனர்.

'நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பப் போவோம்' - பவுல்.

'நம்மோடு மாற்குவையும் அழைத்துச் செல்வோம்!' - பர்னபா.

'வேண்டாம்! மாற்கு நம்மைப் பாதிவழியிலேயே விட்டுவிட்டுப் போனவர்! அவர் நம்முடன் வேண்டாம்!' - பவுல்.

'மாற்கு வந்தால்தான் நான் வருவேன்!' - பர்னபா.

'அப்படியா? அப்போ நீ மாற்குவைக் கூட்டிட்டுப்போ. நான் சீலாவைக் கூட்டிட்டுப்போறேன்!' - பவுல்.

மாற்குவை முன்னிட்டு பவுலும், பர்னபாவும் பிரிகின்றனர்.

எந்தக் காரணத்திற்காக மாற்கு பாதிவழியில் இவர்களைவிட்டுப் பிரிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மாற்கு பவுலைவிட இளவயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும். இளவயதுக்கே உள்ள துடிப்பு பவுலுக்கு பிடிக்கவில்லையோ? அல்லது உடல்நலமின்மையை முன்னிட்டு அவர் பாதிவழியில் திரும்ப நேரிட்டதோ? அல்லது பவுலுக்கும், மாற்குவிற்கும் இடையே உள்ள ஒரு வாக்குவாதத்தை லூக்கா பதிவு செய்யவில்லையோ?

ஒவ்வொருவரும் தான் செய்யும் செயலுக்கு ஒரு காரணம் வைத்திருப்பார்.

'பாதிவழி அர்ப்பணம்' பவுலுக்குப் பிடிக்கவில்லை.

'அர்ப்பணம் செய்தால் முழுமையாகச் செய்யணும். அல்லது செய்யக்கூடாது.' - இதுதான் பவுலின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

பவுலிடம் இன்னொரு விஷயத்தையும் பாராட்ட வேண்டும்.

அதாவது, நாம் பணியாற்றும் இடத்தில் நம் உடன் பணியாளரே நம்மோடு ஒத்துழையாவிட்டால், நாம் சோர்ந்து போகவோ, அல்லது 'எனக்கென்ன?' என்று ஓய்ந்துவிடவோ கூடாது. 'அடுத்து என்ன செய்யலாம்?' என முடிவெடுத்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

பவுல் தெளிவாக இருக்கிறார் தன் பணியில்.

'நான் உனக்காகவோ, மாற்குவிற்காகவோ நற்செய்திப் பணியைத் தேர்ந்து கொள்ளவில்லை. என் ஆண்டவருக்காகத் தேர்ந்து கொண்டேன். நீ பிரிந்தாலும் நான் என் பாதையில், என் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறேன்!' என புறப்படுகிறார் பவுல்.

ஆண்டவருக்காக தன் நட்பை தியாகம் செய்யும் பவுல் எனக்கு ஆச்சர்யமாகவே படுகிறார்.

பர்னபாவைப் பிரிந்த பின் பவுல் தன் தனிமையில் அழுதிருப்பாரா? அவரைக் காண ஏங்கியிருப்பாரா? சீலாவுடன் அவருடைய நட்பு எப்படி இருந்தது?

பவுல்-பர்னபா பிரிவு துன்பமே.

Friday, May 27, 2016

யூதா, சீலா

எருசலேம் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அந்தியோக்கியா நகர மக்களுக்கு யூதா மற்றும் சீலா வழியாக அறிவிக்கப்படுகிறது (காண். திப 15:30-35)

தகவல் தொழில்நுட்பம் கடித பரிமாற்றங்களை மட்டுமே நம்பியிருந்த காலத்தில், கடிதங்களைக் கொண்டு செல்பவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அத்தகைய பிரமாணிக்கம் கொண்டிருந்தவர்கள் யூதாவும், சீலாவும். தொடக்க காலத்தில் இந்த சீலா என்ற பெயரை பெண்ணின் பெயர் என நினைத்தேன். சைலஸ் என்பதையே சீலா என்று மொழிபெயர்த்துள்ளார்கள். இங்கே இது ஓர் ஆணின் பெயரே.

யூதாவும், சீலாவும் அந்தியோக்கியா மக்களைக் கூட்டி கடிதத்தை வாசித்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர். மக்களும் ஊக்கம் அடைகிறார்கள்.

இந்த ஆறு வசனங்களில் 'ஊக்கம்' என்ற வார்த்தை இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது.

யார் ஊக்கம் கொடுக்க முடியும்?

துள்ளலாக ('enthusiastic') இருக்கக்கூடிய ஒருவரே ஊக்கம் கொடுக்க முடியும்.

'Enthusiasm' என்ற ஆங்கில வார்த்தை 'en' மற்றும் 'theos' என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் 'கடவுளுக்குள் இருப்பது.'

ஆக, கடவுளுக்குள் இருக்கும் நபர் இயல்பாகவே மற்றவருக்கு ஊக்கம் கொடுக்கிறார். இத்தகையை நபருக்கு எல்லாமே நேர்முகமாகவே தெரியும்.

இன்று நமக்கு அதிகம் ஊக்கம்தான். நம்மை யாராவது ஊக்கப்படுத்தமாட்டார்களா என அன்றாடம் ஏங்குகின்றோம்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தரும் ஊக்கம் அவர்களின் சாதனையாக மாறியிருக்கிறது என்பதை கடந்த வாரம் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் பார்க்கின்றோம்.

வாக்காளர்கள் தந்த ஊக்கம் இன்று நம் முதல்வரை பரந்த நோக்கத்தோடு அனைத்தையும் பார்க்கத் தூண்டுகிறது.

ஊக்கம்...சின்ன நெருப்புப்பொறி போல. அதை நாம் அவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வாழ்வும் பிரகாசமாகிவிடும்.

யூதா, சீலா - ஊக்கம்

Thursday, May 26, 2016

யாக்கோபு

'நாம் ஒன்றிற்கு நேரம் செலவிட்டால் அது வளரும்.
நேரம் செலவிடாவிட்டால் அது அழியும்!'

- இது டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை மற்றும் பகவத் கீதையின் ஒரு துளி.

ஆக, ஒன்றை நாம் வளர்க்க வேண்டுமெனில் அதற்கு நேரம் செலவழிக்க வேண்டும். ஒன்றை நாம் விட வேண்டுமெனில் அதற்கு நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால், அதற்காக நாம் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். நேரம் குறைந்தால் பழக்கம் குறைந்துவிடும்.

பவுலும், பர்னபாவும் எருசலேம் சங்கத்தில் தங்கள் திருஅவையின் பிரச்சினையை முன்வைத்தார்கள் என்று நேற்று பார்த்தோம்.

இந்தப் பிரச்சினையை யாக்கோபு கையாளும் திறனை இன்று பார்ப்போம் (காண். திப 15:12-28).

அ. 'மற்றவர்கள் பேசுவதை முழுவதும் கேட்பது'

பவுலும், பர்னபாவும் பேசி முடிக்கும் வரை காத்திருக்கிறார் யாக்கோபு.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடவோ, அல்லது 'அதெல்லாம் இல்ல! இப்படித்தான் செய்யணும்!' என தன் வாதத்தை முன்வைக்கவோ இல்லை.

அடுத்தவரை நாம் முழுமையாகக் கேட்கும்போது, அங்கே கேட்பவரின் பொறுமை மட்டும் அல்ல. மாறாக, கேட்கப்படுபவருக்கு நாம் தரும் மதிப்பும் வெளிப்படுகிறது.

ஆக, யாக்கோபு பொறுமைசாலி. மற்றவர்களை, குறிப்பாக மாற்று கருத்து கொண்டவர்களை, மதிக்கத் தெரிந்தவர்.

ஆ. 'பரந்த மனம்'

'கடவுளே இதை விரும்புகிறார். கடவுளே தன்னை வெளிப்படுத்துகிறார். அப்படியிருக்க நாம் மனிதர்கள் அதற்கு தடைபோட முடியுமா?' என்ற யாக்கோபின் கேள்வி, அவரின் கடவுள் பக்தியையும், தன்னேற்பையும் காட்டுவதோடு, அவரின் பரந்த மனத்திற்கும் சான்றாக இருக்கிறது.

இ. 'சமரசம் தேவையில்லை'

அதே நேரத்தில் புறவினத்தார் தங்களின் பழைய பழக்கங்களையும், வழிபாட்டு முறைமைகளையும் விட்டுவிட வேண்டும் என வலியுறுத்துகின்றார். ஆக, கிறிஸ்துவைத் தழுவுவது என்பதில் உரிமைகளும், கடமைகளும் ஒருசேர அமைந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் பிடித்தக்கொண்டு, மற்றதை விடல் ஆகாது.

இறுதியாக, பிரச்சினைக்கான தீர்வை அதற்கென நாம் நேரம் ஒதுக்கும்போதே கண்டுபிடிக்க முடிகிறது.

யாக்கோபு - இதில் திறமைசாலி!

Wednesday, May 25, 2016

எருசலேம் சங்கம்

திருத்தூதர்கள் எல்லாரும் இயேசுவின் இறையரசுப் பணியைச் செய்தாலும், ஒரே தலைவரையும், ஒரே ஆண்டவரையும் கொண்டிருந்தாலும், கருத்தியல் என்று வந்தபோது தங்களுக்குள் பிளவுபடத்தான் செய்தனர்.

'விருத்தசேதனம்' பற்றிய பிரச்சினைதான் முதல் பிரச்சினை.

கிறிஸ்தவர்களாக மாறுவது எப்படி?

யூதர்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு திருமுழுக்கு பெற்றனர். யூதரல்லாதவர்கள் நேரிடையாக திருமுழுக்கு பெறலாமா? அல்லது முதலில் அவர்கள் விருத்தசேதனம் பெற வேண்டுமா?

பேதுரு குழுவினர் விருத்தசேதனம் அவசியம் என்றும், பவுல் குழுவினர் விருத்தசேதனம் தேவையில்லை என்றும் வாதிடுகின்றனர். திருச்சட்டத்தில் கைதேர்ந்த, உடல்-மனம்-ஆன்மா என முழு யூதராக இருந்த பவுல் இப்படிப்பட்ட மாற்றுச்சிந்தனை கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

பிரச்சினை இரண்டு திருத்தூதர்களுக்கு இடையே என்பதால், மேலிடம் தலையிட வேண்டியிருக்கிறது. அக்காலத்தில் எருசலேம் திருஅவையின் ஆயராக இருந்தவர் யாக்கோபு. இவர் இயேசுவின் உறவினர் என்பதாலும், எருசலேம் மீட்பு வரலாற்றில் மிக முக்கிய இடம் வகித்ததாலும், பிரச்சினை இவரிடம் கொண்டு செல்லப்படுகிறது (காண். திப 15:1-35). அவர் தானே முடிவெடுக்காமல் எருசலேம் சங்கத்தைக் கூட்டுகின்றார். இரண்டாம் வத்திக்கான் சங்கம் வரை இன்று நிறைய சங்கங்கள் நடந்தேறியிருந்தாலும், எருசலேம் சங்கமே அனைத்து சங்கங்களின் முன்னோடி.

பவுல் தன் விவாதத்தை ரொம்ப எளிதாக முன்வைக்கிறார்:

கடவுள் எல்லார் மேலும் தூய ஆவியைப் பொழிகிறார். அவர் பாரபட்சம் காட்டவில்லை. அப்படியிருக்க நாம் ஏன் காட்ட வேண்டும்?

மேலும், அடுத்தவர் சுமக்க முடியாத சுமையை நாம் ஏன் அவர்கள் மேல் சுமத்த வேண்டும்?

இது இன்று நம் திருஅவை தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடம்.

பல நேரங்களில், 'சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுப்பதில்லை' என்பதுபோல, விவிலியம் அனுமதித்தாலும், நம் திருஅவை பாரம்பரியம் அனுமதிப்பதில்லை. மேலும், திருஅவையின் சட்டங்கள் பல நேரங்களில் சுமக்க முடியாத சுமைகளாக மாறிவிடுகின்றன.

பவுலின் இரண்டாவது வாதத்தை நம் வாழ்க்கை சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்:

'அடுத்தவர் சுமக்க முடியாத சுமையை நாம் அவர்கள் மேல் சுமத்தக் கூடாது.'

அதாவது, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு கண்ணீர்க்கடல். தன் உள்ளத்தில் நிவர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை வைத்துக்கொண்டு அதை நிரப்ப நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட வேளையில், நம் சொல் மற்றும் செயலினால் அடுத்தவரைக் காயப்படுத்தி, அவர் சுமக்க முடியாதவாறு சுமையை, வெற்றிடத்தை நாம் அதிகமாக்கிவிடல் கூடாது.
பவுலின் இந்த பரந்த மனத்தால்தான் இன்று நாம் நேரிடையாக திருமுழுக்கு பெற முடிகிறது. அல்லது முதலில் நாம் விருத்தசேதனம் பெற வேண்டி இருந்திருக்கும்!

Tuesday, May 24, 2016

அந்தியோக்கியா

'நான் வாழும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ வேண்டும்.
நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் இறுதியாகச் சந்திப்பதுபோல எண்ணி முழுமையாக உறவாட வேண்டும்!'

இந்த இரண்டு வாக்கியங்களையும் வாழ்வாக்கியவர்கள் பவுலும், பர்னபாவும்.

நாம் ஒரு மியூசியத்திற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட கால அளவுக்குள் நாம் அதைப் பார்த்து முடிக்க வேண்டும். ஆனால், அதே மியூசியத்தை நாம் மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம். இப்படிப்பட்ட சூழலில் நாம் முழுமையாக மியூசியத்தை ரசிப்போமா? இல்லை. 'அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்!' என்று அரையும் குறையுமாகப் பார்த்து முடிப்போம்.

ஆனால், இந்த உலகம் என்ற மியூசியத்திற்குள் நமக்கு குறிக்கப்பட்ட ஆண்டுகள் மட்டுமே உள்ளன. மேலும், மீண்டும் இந்த மியூசியத்திற்கு வரும் வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? செய்கின்ற அனைத்தையும் முதல் முறை எனவும், இறுதி முறை எனவும் நினைத்து முழுமையாகச் செய்ய வேண்டும்.

அந்தியோக்கியாவிற்குச் செல்கின்றனர் பவுலும், பர்னபாவும் (காண். திப 14:21-28)

தாங்கள் செல்ல வேண்டிய பயணம் நீடியது என்றும், மீண்டும் இந்த ஊருக்கு திரும்பி வர வாய்ப்பில்லை என்றும் எண்ணுகின்ற பவுலும், பர்னபாவும், தாங்கள் சென்றாலும் மக்களின் நம்பிக்கை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க, அவர்களுக்காக மூப்பர்களை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பண்பு இவர்களின் இரண்டு மதிப்பீடுகளைக் காட்டுகிறது:

அ. செய்கின்ற பணியை நிறைவாகச் செய்வது.

ஆ. நான் இல்லாவிட்டாலும், அடுத்தவரால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று விட்டுக்கொடுப்பது - அதாவது, நானே தான் எல்லாம்! என்னால் மட்டுமே எல்லாம் முடியும்! என்ற மனநிலையை விட்டொழிப்பது.

இந்தப் பக்குவம் நமக்கும் இருந்தது என்றால்,

படிப்பது, படம் பார்ப்பது, உண்பது, உறவாடுவது, தூங்குவது - என எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய முடியும்.

நான் உறவாடும் என் நண்பரோடு பேசுவது இதுதான் இறுதியானது என்று நினைத்து நான் பேசினால், அங்கே சண்டையிடுவதற்கும், வாதம் செய்வதற்கும் இடமில்லை.

ஒருவேளை நான் என் நண்பரோடு சண்டையிட்டு, அதுவே என் இறுதி நாளாகவும் இருந்துவிட, நான் எப்படி அவரோடு சமாதானம் செய்ய முடியும்?

அல்லது கொடுக்கப்பட்ட வேலையை அரைகுறையாகச் செய்து, நாளை சரி செய்து விடலாம் என நான் சொல்ல, அந்த நாளை காலையில் நான் எழுந்திராவிட்டால், அந்த வேலையை யார் சரி செய்ய முடியும்?

சிறிய மூச்சுக் காற்று போல குறுகி நிற்கும் வாழ்க்கையை நிறைவாக வாழ நம்மை ஊக்குவிக்கின்றது திருத்தூதர்களின் அந்தியோக்கியா பணி.

Monday, May 23, 2016

லிஸ்திரா

பவுல் மற்றும் பர்னபா லிஸ்திராவில் செய்த பணியை திப 14:8-20ல் வாசிக்கின்றோம்.

லிஸ்திராவில் பிறவியிலேயே கால் ஊனமாக இருந்த ஒருவர் பவுலின் போதனையை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் ஆர்வத்தைக் கண்ட பவுல் அவருக்கு நலம் தருகின்றார். கால் ஊனமுற்றிருந்த அந்த நபர் துள்ளி எழுந்து நடந்ததைக் கண்ட லிஸ்திரா மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன,' என்று சொல்லி பர்னபாவை சேயுசு என்றும், பவுலை எர்மசு என்றும் தங்கள் தெய்வங்களின் பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். அத்தோடு விட்டார்களா? அர்ச்சகர்களைக் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் முன் பலியிடவும் தொடங்குகின்றனர். இதைக் கண்ட பவுல் மிரண்டு போய், 'நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்!' என்று அவர்களைச் சாந்தப்படுத்துகின்றார்.

ஆனால். கொஞ்ச நேரத்தில் இதே மக்களின் மனம் மாறுகின்றது.

இக்கோனியாவிலிருந்து வந்திருந்த யூதர்களின் பேச்சைக் கேட்டு பவுல் மேல் கல் எறிகின்றனர். அவர் இறந்துவிட்டதாக நினைத்து வெளியே தூக்கிப் போடுகின்றனர். ஆனால் பவுல் எழுந்து செல்கின்றார்.

'சட்டென்று மாறும் வானிலை போல' மாறுகின்றது லிஸ்திராவின் மக்கள்.

பிளவுபட்ட உள்ளம், அல்லது இருமனம், அல்லது உறுதியற்ற மனம் இறைவனால் அதிகம் கடிந்து கொள்ளப்படுகிறது.

நம் மனம் உறுதியற்று இருப்பதற்குக் காரணம், நாம் நம் உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதுதான். நம் மனதில் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இப்படி மின்னல் போல தோன்றும் உணர்வுகள் நாம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளை மாற்றும் வலிமை கொண்டிருந்தன என்றால், நம் உள்ளமும் பிளவுபட்டே இருக்கின்றது.

ஒன்றை தேர்ந்து தெளியவும், தேர்ந்து தெளிந்தபின் அதில் நிலைத்து நிற்கவும் உறுதி கொண்டிருந்தால் எத்துணை நலம்!

Sunday, May 22, 2016

இக்கோனியா

'இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது...ஆயினும் அவர்கள் அங்குப் பல நாள் தங்கி ஆண்டவரைப் பற்றித் துணிவுடன் பேசினார்கள்.' (காண். திப 14:1-7)

நேற்றைய வலைப்பதிவில், 'திருத்தூதர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதபோது, தங்கள் கால்களின் தூசியை உதறிவிட்டு அடுத்த ஊருக்குச் சென்றார்கள்' என்று எழுதினோம்.

அங்கே ஒரு கேள்வியை விட்டாயிற்று:

அதாவது, ஒருவேளை எல்லா நகரங்களிலும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்திருந்தால், அவர்கள் அடுத்தடுத்த நகருக்கு ஓடிக்கொண்டே இருந்தால், கிறிஸ்துவின் நற்செய்தியை எப்படி அறிவிக்க முடியும்?

அதற்கான விடை திப 14:1-7ல் கிடைக்கிறது.

'இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது' என பதிவு செய்கிறார் லூக்கா.

எப்படி நடந்தது?

யூதர்கள் பொறாமை கொண்டு திருத்தூதர்களை அழிக்க நினைக்கின்றனர்.

ஆனால், இம்முறை திருத்தூதர்கள் அந்த ஊரை விட்டு ஓடவில்லை.

இயேசுவின் மற்றொரு போதனையை இங்கே செயல்படுத்துகிறார்கள்: 'உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். ஒரு கிமீ தூரம் வரக் கட்டாயப்படுத்தினால் இரண்டு கிமீ தூரம் செல்லுங்கள். மேலாடையை எடுத்துக்கொள்ள விரும்புபவருக்கு உள்ளாடையையும் கொடுத்து விடுங்கள்!'

மொத்தத்தில், 'துணிவோடு இருங்கள்!'

அதாவது, அடுத்தவர்களின் செயல்பாடு நம் செயல்பாடைப் பாதிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு, நான் ஒரு செய்தித்தாள் கடைக்குப் போகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் சரியான சில்லறை கொடுத்து வாங்கினாலும், அந்த கடைக்காரார் வேண்டா வெறுப்பாக என்மேல் எரிந்து விழுகிறார் என வைத்துக்கொள்வோம். என் தொடர் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்? அவர் என்மேல் எரிந்து விழுகிறார் என்பதற்காக நான் வேறு கடைக்குச் செல்ல வேண்டுமா? அப்படி நான் செல்லத் தொடங்கிவிட்டால், அவரின் செயலுக்கு எதிர்செயலாக என் செயல் அமைந்துவிடும். 'நான் எங்கே செய்தித்தாள் வாங்க வேண்டும்' என்பதை அவரின் செயல் தீர்மானிப்பதாக ஆகிவிடும். மாறாக, கொஞ்சம் துணிவோடு அவரின் எரிச்சலை எதிர்கொண்டேன் என்றால், என் செயல் அவரின் எரிச்சலையே மாற்றக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இப்படித்தான் நடக்கிறது திருத்தூதர்களின் வாழ்விலும்.

மக்களின் செயலுக்கு எதிர்செயல் ஆற்றாமல், அவர்களின் வெறுப்பிலிருந்து தப்பி ஓடாமல், அவர்களை நேருக்கு நேர் எதிர் கொள்கின்றனர்.

இதற்கு நிறைய துணிச்சல் தேவை.

அந்தத் துணிச்சலுக்கு உறுதுணையாக ஆண்டவரும் அவர்களோடு சேர்ந்து அரும் செயல்கள் ஆற்றுகின்றார்.

ஆக, தங்கள் பணிக்கு பிரமாணிக்கமாக இருக்கும் திருத்தூதர்கள் பவுல் மற்றும் பர்னபாவுக்கு ஆண்டவரும் பிரமாணிக்கமாக இருக்கின்றார்.

Saturday, May 21, 2016

பிசிதியா

பிசிதியாவிற்கு பவுலும் பர்னபாவும் சென்ற போது, அங்கிருந்த யூதர்களின் செபக்கூடத்திற்குச் செல்கின்றனர்.

பிசிதியா யூதர்கள் அதிகமாக வாழ்ந்த இடம். இவர்களின் வருகையை அறிந்து செபக்கூடத் தலைவர், 'சகோதரர்களே, மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லுங்கள்!' என அழைக்கின்றார்.
இரண்டு நாட்கள் அவர்கள் விரட்டி விரட்டி நற்செய்தியைக் கேட்கிறார்கள்.

ஆனால் மூன்றாம் நாள் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் பின்னால் வந்த கூட்டம் அப்படியே அவர்களுக்கு எதிராக திரும்புகிறது.

'இது புதிய சிந்தனை,' 'இது புதிய நம்பிக்கை' என்று திருத்தூதர்களை நாடி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் இவர்கள்மேல் பொறாமை கொண்டு இவர்களை தங்கள் நகரை விட்டுத் துரத்துகின்றனர். அப்படி துரத்தப்பட்ட திருத்தூதர்கள் தங்கள் கால்களில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டிவிட்டு அடுத்த நகருக்குச் செல்கின்றனர்.

இந்த நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களைக் கற்பிக்கிறது:

அ. சமநிலை

'வாங்க! வாங்க!' என்று மக்கள் சொன்னபோது, மகிழ்ச்சியால் துள்ளவோ, 'போங்க! போங்க!' என்று அதே மக்கள் சொன்னபோது, வாடி வதங்கவோ இல்லை பவுலும், பர்னபாவும். மக்களின் இந்த இரண்டு செயல்களையும் ஒரே உணர்வோடு எடுத்துக்கொள்கின்றனர். தன்னைப் பற்றி முழுமையாக உணர்ந்த, தன் திறன்கள் மற்றும் ஆற்றல்களை உணர்ந்த ஒருவரால் மட்டுமே இந்த சமநிலை உணர்வைப் பெற முடியும்.

ஆ. காலில் தூசி

மேலேயுள்ள சிந்தனையை ஒட்டியதே இது. அதாவது, தங்கள் மேல் காட்டப்பட்ட வெறுப்பு, கண்டுகொள்ளாத்தன்மை, கோபம் அனைத்தையும் அவர்கள் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அடுத்த ஊருக்கு எடுத்துச் செல்லவில்லை. நாம் நம் அன்றாட செலவினங்களை எழுதும்போது, முன்னிருப்பு என்று சொல்லி, முந்தைய மாதத்தில் எஞ்சியதை எடுத்துக் கொண்டு வந்து முதலில் வைப்போம். ஆனால், அதை  கணக்குப்பதிவியலோடு நிறுத்திக் கொள்ளல் வேண்டும். உறவுநிலைகளிலும், வாழ்க்கை நிகழ்வுகளிலும், நாம் ஏற்கனவே கொண்டிருந்த எதிர்மறை உணர்வுகளை முன்னிருப்பாக அடுத்த நாளுக்கு, அடுத்த இடத்துக்குக் கொண்டு சென்றால், அது அந்தப் பக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த வரவு, செலவைப் பாதிக்கிறது.

Friday, May 20, 2016

எலுமிச்சம் பழம்

நீண்ட பயணங்கள் - சுற்றுலா, திருயாத்திரை - செல்வதற்கு முன் பேருந்தின், சிற்றுந்தின் சக்கரங்களுக்குக் கீழ் எலுமிச்சம் பழத்தை வைத்து ஏற்றிப் புறப்படும் பழக்கம் இன்னும் நம் ஊரில் இருக்கின்றது.

பயணத்திற்கு தடையாக இருக்கும் தீய சக்திகள் எல்லாவற்றையும் இந்த எலுமிச்சம் பழங்களுக்குள் அடக்கி, அவற்றை சக்கரத்தால் நசுக்கிவிட்டால், பயணத்தில் தடங்கல் எதுவும் இருக்காது என்பதும், தீய சக்திகள் நம் வாகனத்தை நெருங்காது என்பதும் நம்பிக்கை.

லூக்காவிற்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

பவுலும், பர்னபாவும் தங்கள் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இவர்களின் முதல் மற்றும் நீண்ட பயணம் என்பதால் இவர்கள் தொடக்கத்திலேயே ஒரு தீய சக்தியை எதிர்கொள்கின்றனர்.

ஒரு மந்திரவாதி பற்றி எழுதுகின்றார் லூக்கா (காண். திப 13:6-12) 'எலிமா' என்பது அவரின் பெயர். 'எலிமா' என்றாலே மந்திரவாதி. ஆக, இது அவரின் காரணப்பெயராக அல்லது பொதுப் பெயராகக் கூட இருக்கலாம்.

'அவன் அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான்' என எழுதுகின்றார் லூக்கா.

நாம் சுற்றுலா செல்லும்போது தீய சக்திகள் நம் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்புகின்றன என்பது நம் எலுமிச்சம் பழ நம்பிக்கை.

அவன் என்ன செய்தான்? எப்படி திசை திருப்பினான்? - என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஆனால், பவுல் அவனைச் சபிக்கின்றார்:

'நீ கதிரவனைக் காணமாட்டாய்!'

'கதிரவனைக் காணுதல்' என்றால் 'உயிரோடு இருத்தல்' என்பது பொருள் (காண். சபை உரையாளர் 11:7). ஆனால், நம்ம எலிமா சாகவில்லை. கண் பார்வை மட்டும் போகிறது.

'அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்' என நிகழ்வை முடிக்கின்றார் லூக்கா.

அதாவது, அடுத்தவர்களுக்கு திசை காட்டிய - திசை திருப்பிய - ஒருவனுக்கே இப்போது திசை காட்டு ஓர் ஆளின் துணை தேவைப்படுகிறது.

மேலும், இந்த இடத்தில் பவுலை லூக்கா ஆண்டவரின் அளவுக்கு உயர்த்துகின்றார்.

அதாவது, ஆண்டவரைக் கண்ட சவுலுக்கு (பவுலுக்கு) பார்வை போனது. இங்கே பவுலைக் கண்ட எலிமாவுக்கு பார்வை போகிறது.

நாம் எலிமா மாதிரி இல்லாமல் மற்றவர்களை இறைவனை நோக்கி மட்டும் திசை திருப்பலாமே!


Thursday, May 19, 2016

சாதாரண கைகள்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

வாக்கு எந்திரத்தில் மக்கள் வைத்த கை இன்று தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகின்றது.

தொடக்கத் திருஅவையில் திருப்பணியில் அமர்த்துவது என்பது மிக எளிய, ஆனால் அர்த்தமுள்ள, சடங்காக இருந்தது.

முதல் ஏற்பாட்டில் அருள்பொழிவு செய்யும்போது, ஒருவரின் கைகள் நிரப்பப்பட்டன (காண். நீத 18). கைகளுக்கும் அருள்பொழிவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

பர்னபாவும், சவுலும் தங்கள் முதல் தூதரைப் பயணத்தைத் தொடங்குகின்றனர் (காண். திப 13:1-3). இங்கே அவர்களை இப்பயணத்திற்கு வழியனுப்புவோர் யார்?

மிகவும் சாதாரண மக்கள்.

சிமியோன், லூக்கியு, மனாயீன் என்பவர்கள் - இவர்களின் பெயரையே நாம் இங்கேதான் கேள்விப்படுகிறோம். இவர்கள் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருக்கின்றனர். இவர்கள் நடுவில் இருந்த பர்னபாவையும், சவுலையும் கடவுள் தனிப்பட்ட பணிக்கென தேர்ந்து கொள்கிறார்.

பணி அமர்த்துதல் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது:

அ. நோன்பிருத்தல்
ஆ. இறைவேண்டல் செய்தல்
இ. கைகளை வைத்து அருள்பொழிவு செய்தல்

ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையும், ஆற்றலும் அவரின் உள்ளங்கைகளில் பிரதிபிலிக்கிறது என்கிறது ஜப்பானின் 'காந்த சக்தி' ஆராய்ச்சி நிறுவனம். நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களும் நம் கைகளின் நீட்சியே - சுத்தியல், பேனா, கத்தி, செல்ஃபோன், கணிணி.

தொடுதல் - இதற்கு இரண்டு குணங்கள் உண்டு. இது காயப்படுத்தவும் செய்யவும். காயத்திற்கு மருந்திடவும் செய்யும். அடிக்கவும் செய்யும். அரவணைக்கவும் செய்யும்.

அருள்பணி நிலை மிக சாதாரண அளவில்தான் தொடங்கியிருக்கிறது. அது காலப்போக்கில் ரொம்ப கடினமாக்கப்பட்டுவிட்டது.

கடவுளின் ஆற்றல் இயங்குவதற்கு சாதாரண கைகள்போதும்!

Wednesday, May 18, 2016

வானதூதர்

கடந்த ஞாயிறன்று ரோசாப் பாட்டிக்கு நன்மை கொடுக்கச் சென்றபோது, அவரது பக்கத்து வீட்டு பாட்டி பவுலாவும் அங்கே வந்திருந்தார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, பவுலா பாட்டி, 'இசுலாமியர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள். ஏனெனில் அவர்கள் ஐந்து முறை கடவுளைத் தொழுகிறார்கள்!' என்றார். ரோசாப் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது, 'நான் அவர்களை விட அதிக முறை கடவுளைத் தொழுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் நடந்து அந்த அறைக்கும், இந்த அறைக்கும் செல்லும்போது என் வானதூதர்களிடம், 'என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள்!' என்கிறேன். அதுவும் செபம் தானே!' என்று என்னைக் கேட்டார்.

'என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள்!' என்று ரோசாப்பாட்டி வானதூதரிடம் சொல்வது எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றியது.

என்னதான் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்று, பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பாடம் எடுத்திருந்தாலும், நிறையக் கற்றிருந்தாலும், ரோசாப்பாட்டியின் இந்த எளிய நம்பிக்கை பாராட்டுதற்குரியதே.

தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்களும் தாங்கள் வானதூதர்களால் வழிநடத்திச் செல்லப்படுவதாகவே உணர்கின்றனர்.

லூக்கா நற்செய்தியாளருக்கு வானதூதரின் மேல் அதிக ஈடுபாடு உண்டு. எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் - பிறப்பு முன்னறிவிப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் - என எல்லாவற்றிலும் வானதூதர்களைச் சேர்த்துவிடுவார்.

திப 12:6-19ல் அழகான வானதூதர் நிகழ்வு ஒன்று இருக்கிறது.

பேதுரு சிறையில் அடைக்கப்படுகிறார். படைவீரர் இருவருக்கு நடுவே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே தோன்றுகின்ற ஆண்டவரின் தூதர் பேதுருவைத் தட்டி எழுப்புகின்றார். 'இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்!' என்கிறார். பின், 'உம் மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்' என்கிறார்.

இப்படி சிறையை விட்டு வெளியே வரும் பேதுரு மாற்குவின் அம்மா வீட்டுக்குப் போகின்றார்.

அங்கே அவரைப் பார்க்கும் பணிப்பெண் ரோதி வீட்டுக்குள் ஓடி பேதுரு வந்துவிட்டதாகச் சொல்கின்றார். அதற்கு அவர்கள் வீட்டார் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

'அது பேதுரு அல்ல. அவருடைய வானதூதராக இருக்கலாம்!'

இதிலிருந்து என்ன புலனாகிறது?

ஒவ்வொருவருக்கும் ஒரு வானதூதர் அல்லது காவல்தூதர் இருக்கிறார். என் காவல் தூதர் என்னைப் போலவே இருப்பார். உங்கள் காவல் தூதர் உங்களைப் போலவே இருப்பார். இவர் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களினின்று நம்மைக் காக்க வல்லவர்.
வானதூதர் நமக்குச் சொல்வது என்ன?

நாம் மனிதர்களாக இருந்தாலும், மனித இயல்பை விட்டுக் கடந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்கள்நாம். மனித நிலையை விட்டு உயர்ந்து நிற்கவும் நம்மால் முடியும். மனித நிலையை விட்டு மிகத் தாழ்ந்து போகவும் நம்மால் முடியும். நாம் உயர்ந்து நிற்கும்போது வானதூதரைப் போலவும், தாழ்ந்து போகும்போது பேய்க்குட்டியைப் போலவும் இருக்கிறோம்.

Tuesday, May 17, 2016

பார்வை

'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்' (திப 10:34-48)

கொர்னேலியுவின் இல்லத்திற்கு வருகின்ற பேதுரு அவர்கள் முன் உரையாற்றுகின்றார்.

திருத்தூதர்கள் பணி செய்த நாட்களில் ஒவ்வொரு நாளும் அவர்கள் மற்றவர்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே அளவிற்கு அவர்களும் வளர்கிறார்கள்.

குறிப்பாக, கொர்னேலியுவின் இல்லத்தில்தான் பேதுரு 'ஆள்பார்த்துச் செயல்படாத தன்மையை' (impartiality) கற்றுக்கொள்கின்றார்.

காலங்காலமாக அருள்பணி நிலை வாழ்வில் இருப்போரையும், நம் கத்தோலிக்கத் திருச்சபையையும் ஆட்டுவிக்கும் ஒரு சோதனை 'ஆள்பார்த்து செயல்படுதல்' (partiality or favouritism) அல்லது 'சொந்தங்களுக்குச் சார்பாகச் செயல்படுதல்' (nepotism).

இப்படிச் செய்கின்ற போது நம் பார்வை சுருங்கி விடுகிறது.

ஒரு குதிரை தன் போக்கில் வேகமாக சென்று கொண்டிருக்க கடிவாளமும், கண்பட்டையும் தேவைப்பட்டாலும், இந்தக் கடிவாளமும், கண்பட்டையும் குதிரையின் பார்வையைச் சுருக்கி விடுகிறது.

பார்வை சுருங்கி விட்டால் நம் எண்ணமும் சுருங்கிவிடுகிறது. எண்ணம் சுருங்கிவிட்டால் நம் ஏற்றுக்கொள்ளுதலும் சுருங்கிவிடுகிறது.

பேதுரு மற்றும் அவரின் உடனிருந்தவர்களும் சுருங்கிய மனத்தையே கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான் புறவினத்தார்மேல் - விருத்தசேதனம் செய்யாதவர்மேல் - தூய ஆவி இறங்கி வருவதைக் கண்டு மலைத்துப் போகின்றனர்.

பேதுரு இன்று பெரும் ஞானம் அவரின் ஒட்டுமொத்த திருப்பணியையும் மாற்றிப் போடுகின்றது.

தன் சபைக் கண்காணிப்பாளர்களாக இருக்கும் திமொத்தேயு, தீத்துவுக்கு, தூய பவுலும் இந்தப் பரந்த உள்ளத்தையே முதன்மை மதிப்பீடாக முன்மொழிகின்றார்.


Monday, May 16, 2016

கொர்னேலியு

யூதர்கள் தூய்மையானவர்கள். யூதரல்லாத அனைவரும் தீட்டானவர்கள்.

'தூய்மை-தீட்டு' என்ற இரு வார்த்தைகள்தாம் மனித பிரிவுகளுக்கே காரணம்.

ஆணைத் தூய்மை என்றும், பெண்ணைத் தீட்டு என்றும் சொல்கிறோம்.

ஒரு சாதியைத் தூய்மை என்றும், மறு சாதியை தீட்டு என்றும் சொல்கிறோம்.

'தூய்மை' 'தீட்டு' இரண்டும் நெருங்கி வரக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாய் இருக்கிறோம்.

அப்படி இருந்த பேதுருவைப் புரட்டிப்போடுகிறது ஒரு காட்சி. கொர்னேலியு என்ற புறவினத்து உரோமையரை எதிர்கொள்ள பேதுரு காட்சியின் வழியாக அறிவுறுத்தப்படுகின்றார் (காண். திப 10:1-33).

இரண்டு காட்சிகள்.

முதல் நாள். பிற்பகல் மூன்று மணி. கொர்னேலியு காட்சி காண்கின்றார்.

'நீ போய் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரச் செய்!'

இரண்டாம் நாள். பிற்பகல் பன்னிரண்டு மணி. பேதுரு காட்சி காண்கின்றார்.

'கொர்னேலியுவின் வீட்டிற்குப் போ!'

கொர்னேலியு ஒரு உரோமையர். புறவினத்தார். என்னதான் பெரிய படைத்தலைவன் என்றாலும், அவர் யூதர்களைப் பொறுத்தவரையில் தீண்டத்தகாதவர்.

'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே!' என்பதுதான் பேதுரு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

பேதுரு மட்டுமல்ல. இது நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் பாகுபாடு என்ற ஒன்று இருக்கும் வரைதான் மனித சமூகம் முன்னேறிச் செல்லும் என்பது சமூகவியலாரின் கருத்து.

ஒன்றை மட்டும் கற்றுக்கொள்ளலாம்:

'மனிதர் பார்ப்பதுபோல பார்க்காமல் கடவுள் பார்ப்பது போல பார்க்கும் பார்வை பெறுதல் சால்பு'

பேதுருவைப் பார்த்த கொர்னேலியு அவரின் கால்களில் விழுகின்றார்.

அப்போது பேதுரு சொல்லும் வார்த்தைகள் அவரின் பாவ அறிக்கையாக இருக்கின்றன: 'எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்.' ஆம். இவ்வளவு நாட்கள் பேதுரு மனிதர் பார்ப்பதுபோலத்தான் பார்த்தார். இனி அவர் இறைவன் பார்ப்பது போலப் பார்க்க வேண்டும்.

Sunday, May 15, 2016

தொற்கா

கடந்த வெள்ளிக்கிழமை (13 மே 2016), வத்திக்கானில் அகில உலக பெண் துறவியர்களின் தலைமைச் சகோதரிகளைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ், 'பெண் திருத்தொண்டர்கள் நியமனம்' குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்படும் என்று முன்மொழிந்துள்ளார்.

பெண்களை அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்துவது குறித்து யாரும் பேசக்கூடாது என்று சவப்பெட்டியில் ஆணி அறைந்தார் (இது ஒரு ஆங்கில சொலவடை) முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல். அந்த ஆணியை மெதுவாக உருவி எடுத்துவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, முன்மொழியப்பட்டு, நடைமுறைக்கு வர இன்னும் பல வருடங்கள் ஆகலாம். அதுவும், பெண் திருத்தொண்டர்கள் நம் ஊரில் மறையுரை வைக்கும் நிலைக்கு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.

எம்.ஆர். ராதா சொல்வது போல, 'நாம் இதுபற்றி எல்லாம் பேசக்கூடாது' என்று சொல்லிவிட்டு நம் நிகழ்வுக்கு வருவோம்.

திருத்தூதர் பணிகள் நூலில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் பற்றிய குறிப்பு இருக்கின்றது (காண். 9:36-43).

இவருக்கு மக்கள் செல்லமாக வைத்த பெயர் 'தொற்கா' (நம்ம ஊர் 'துர்க்கா' மாதிரி இருக்கு!). 'தொற்கா' என்றால் கிரேக்கத்தில் 'பெண்மான்' என்பது பொருள்.

இவர் 'நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தவர்.' ஒருநாள் இவர் இறந்துவிட பேதுரு உடனடியாக அழைத்துவரப்படுகின்றார். எலியா, எலிசா, இயேசு என்ற வரிசையில் பேதுருவும் இறந்த இந்தப் பெண்ணுக்கு உயிர் கொடுக்கின்றார்.

இந்த நிகழ்வில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கிறேன்:

அ. இவர் அழகாக இருந்திருக்க வேண்டும். அல்லது ஓடியாடி வேலை செய்திருக்க வேண்டும். ஆகையால்தான் இவர் 'பெண்மான்' என அழைக்கப்படுகின்றார். அதுவும் நன்மை செய்யவும், இரக்கச் செயல்கள் செய்யும் ஓடியிருக்கின்றார். நிறைய கைவேலைப்பாடுகளால் துணிகளும் செய்து கொடுக்கின்றார் தன் அண்டை வீட்டாருக்கு. என்னை மற்றவர்கள் எப்படி அழைப்பார்கள்? என்பது நான் கேட்க வேண்டிய முதல் கேள்வி.

ஆ. கைம்பெண்கள். இந்த நிகழ்வில் கைம்பெண்கள்தாம் உடனடியாக எல்லா வேலைகளையும் செய்கின்றனர். அதாவது, இறந்த பெண்ணைக் குளிப்பாட்டுகிறார்கள். பேதுருவுக்கு ஆள் அனுப்புகிறார்கள். அவர் வந்தவுடன் தொற்காவைப் பற்றிப் பாராட்டிப் பேசுகின்றனர். உயிர் பெற்று எழுந்த தொற்காவை ஆரத் தழுவிக்கொள்கின்றனர். 'கைம்பெண்கள்' எல்லாம் கடவுளர்கள் என்றே நான் எண்ணுவதுண்டு. அதாவது, அவர்கள் கணவன் என்ற கட்டைக் 'கடந்தவர்கள்.' இருந்தாலும் இல்வாழ்க்கையில் தொடர்ந்து 'உள்ளவர்கள்.' ஆக, அவர்கள் 'கடந்து உள்ளவர்கள்' - 'கடவுளர்கள்.' கடவுளைப் போலவே மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் கைம்பெண்கள். (மனிதர்கள் இருக்கும்வரைதான் கடவுளர்களும் இருப்பார்கள்!). இந்தக் கைம்பெண்கள் தங்கள் நிலை பற்றி வருந்திக் கொண்டிராமல், அடுத்து புதியதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். உலகில் ஒரு புதிய உயிரைப் படைத்த கைம்பெண் தொடர்ந்து தன் படைப்புத் திறனைப் பயன்படுத்தி புதிய படைப்புச் செயலை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறாள்.

தொற்கா - தன் அன்பால் இந்த கைம்பெண்களை வென்றாள்.

கைம்பெண்கள் - தங்கள் பதிலன்பால் அவளுக்கு மறுஉயிர் தந்தனர்.

Saturday, May 14, 2016

மத்தியா

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். (திப 1:26)

இன்று (மே 14) திருத்தூதர் மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

யூதாசு இஸ்காரியோத்துவின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தெரிவு செய்யப்பட்டவர் மத்தியா.

'மத்தியா' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுளால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள். இவரைப்பற்றிய வரலாற்று குறிப்பு திருத்தூதர் பணிகள் நூல் தவிர (காண். 1:12-26) வேறெங்கும் இல்லை. 'மத்தியாவின் நற்செய்தி' என்ற ஒரு ஏற்றுக்கொள்ளப்படாத நூலும் உள்ளது.

இரண்டு பேர் முன்னிருத்தப்படுகிறார்கள்: 'பர்சபா' மற்றும் 'மத்தியா'

இவர்களில் சீட்டு மத்தியா பேருக்கு விழுகின்றது.

இவர் அதிர்ஷ்டக்காரர்.

'திருவுளச்சீட்டு' எடுப்பது என்பது யூத மரபில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று. குறிப்பாக, நீதித்தலைவர்களின் காலத்தில் போருக்குச் செல்லுமுன் திருவுளச்சீட்டு போட்டு பார்க்கும் வழக்கம் இருந்தது. இறைவாக்கினர்கள் இல்லாத காலத்தில் திருவுளச்சீட்டு முறைதான் நடைமுறையில் இருந்தது.

மேலும் தலைமைக்குருவின் மார்பில் இருந்த பொன்பட்டையில் 'யூரிம்,' 'தும்மிம்' என்ற இரண்டு தாயக்கட்டைகள் இருந்தன. அவற்றை வைத்தும் பிற்காலத்தில் இறைவனின் திருவுளம் அறியப்பட்டது.

இறைவனின் திருவுளத்தை இன்று நாம் எப்படி அறிவது?


Friday, May 13, 2016

பர்னபா

'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்' அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்' எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). 'இறைவாக்கும்' 'ஆறுதல் தருவதும்' சேர்ந்தே செல்லும் என்பது பவுலின் கூற்று (காண். 1 கொரி 14:3).

சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

சைப்பிரசு நாட்டின் பாதுகாவலராக இன்று வரை அவர் கொண்டாடப்படுகிறார்.

திப 9:26-27ல் இவரின் முக்கியமான பண்பு வெளிப்படுகிறது:

'பவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.'

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் சவால் விடுகிறது:

1. இணைப்புக்கோடு
பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அல்லது ஒருவரை சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நம் உறவுநிலைகளில் நாம் இணைப்புக்கோடாக இருத்தல் அவசியம் என்பதை நாம் அறிவோம். இதை அருள்பணி வாழ்விற்குப் பொருத்திப் பார்த்தால், ஓர் அருள்பணியாளர் என்பவர் இறைவனுக்கும், மக்களுக்கும் உள்ள ஓர் இணைப்புக்கோடு. இவர் இந்த இருவரையும் முழுமையாக அறிந்தால்தான் தன் பணியைச் சரியாகச் செய்ய முடியும்.

2. நம்பிக்கை
'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. 'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.'
பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது 'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார். இது அவரின் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. மற்ற திருத்தூதர்களோடு சேர்ந்து கொண்டு இவரும் பவுலை நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. என்னே இவரின் தாராள உள்ளம்!

பர்னபா - நம் ஆறுதல்!


அனனியா - ஆண்டவர்

சவுல் (பவுல்) மனமாற்றம் அடைந்தவுடன் என்ன நடந்தது என்பதை வர்ணிக்கிறது திப 9:10-19.

தமஸ்கு நகர் செல்லும் வழியில் சவுலுக்கு தோன்றிய இயேசு, சற்று நேரத்தில் அனனியா என்னும் சீடர் ஒருவருக்குத் தோன்றுகின்றார். இங்கே நாம் 'அனனியா-சப்பிரா' தம்பதியினரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர் வேறு அனனியா. அவர் இறந்துவிட்டார். இவர் மற்றொரு சீடர். 'அனனியா' என்பது பொதுவாக வழங்கப்பட்ட பெயர்.

'அனனியா!'

'ஆண்டவரே, இதோ அடியேன்!'

'நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்பொழுது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார்.'

'ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான்...'

'நீ செல். அவர் பிற இனத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்'

... ... ...

அனனியா - ஆண்டவர் உரையாடலில் நான் மூன்று விநோதங்களைக் கவனிக்கிறேன்:

அ. 'நேர்த்தெரு'

அதாவது, இவ்வளவு நாள்கள் பாதை மாறி, பாதை வளைந்து, பாதை திரும்பிச் சென்ற சவுலை, கடவுள் நேர்த்தெருவிற்குக் கொண்டு வருகின்றார். இங்கே அகுஸ்தினாரின் வாழ்வையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அங்கும், இங்கும், எங்கும் அலைந்த அவரின் உள்ளத்தையும் ஆட்கொண்ட இறைவன், அவரோடு மல்லுக்கட்டி அவரை வழிக்குக் கொண்டுவருகின்றார்.

ஆ. 'மனிதர்கள் இறந்தகாலத்தை நினைக்கின்றனர். கடவுள் எதிர்காலத்தை நினைக்கிறார்.'

ஆண்டவரின் சீடர் அனனியாவுக்குக் கண் முன் நின்றது சவுலின் இறந்தகாலம் மட்டுமே. 'அவன் அப்படியிருந்தான், இப்படியிருந்தான், அடித்தான், வெட்டினான், அவனைப்போயா நீங்க சீடராக ஆக்குறீங்க!' என முணுமுணுக்கிறார் அனனியா. 'அவன் எப்படி இருந்தான் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. பார்! அவன் இன்னும் எப்படி ஆகப்போகிறான்!' என்று அனனியாவை மாற்றுச் சிந்தனைக்கு அழைக்கிறார். இங்கே மனம் மாறுவது சவுல் மட்டுமல்ல. அனனியாவும் தான்.

இ. 'புற இனத்தார் முன், அரசர்கள்முன்!'

நமக்கு பெரிய வேலையை அல்லது பெரிய சவாலைக் கடவுள் கொடுத்து, நாம் அதனோடு மல்லுக்கட்டுவதைப் பார்த்து ரசிக்கின்றார். நம்மால் சமாளிக்க முடியும் என்பதற்காகத்தான் கடவுள் நமக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கின்றார். சவுலுக்கு கடவுள் கொடுக்கும் வேலையும் அப்படித்தான் இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களுக்கும், அரண்மனைகளில் வாழ்வோருக்கும் பணி செய்யக் கடவுள் அவரை அனுப்புகின்றார். 'சின்ன'ப்பரை தேர்ந்து கொண்ட கடவுள் அவருக்கு 'பெரிய' வேலையைக் கொடுக்கின்றார்.

Monday, May 9, 2016

பவுலுஸ்

'பவுலுஸ்' என்ற ஓர் உரோமையை குடும்பப் பெயர் கிறிஸ்தவத்தின் முக்கியமான தூணாக மாறும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

லத்தீன் மொழியில் 'பவுலுஸ்' என்றால் 'சிறிய,' 'சின்னதான,' அல்லது 'தாழ்ந்த' என்பது பொருள். ஆகையால்தான் தமிழில் இவரை 'சின்னப்பர்' என அழைக்கின்றோம்.

சவுல் பவுலாக மாறிய நிகழ்வு இரண்டாம் ஏற்பாட்டில் நான்கு முறை சொல்லப்பட்டுள்ளது: திப 9:1-9, 22:6-16, 26:12-18, மற்றும் கலா 1:11-24. இந்த நான்கு பதிவுகளில் முதல் மூன்று லூக்காவினுடையது. நான்காம் பதிவு பவுலின் சொந்தப் பதிவு.

பவுலின் பதிவை லூக்காவின் பதிவோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பவுலின் மனமாற்ற நிகழ்வில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், தன் மூன்று பதிவுகளிலும் லூக்கா முன்பின் முரண்படுகின்றார். உதாரணத்திற்கு, திப 9ல் இயேசுவின் குரலை எல்லாரும் கேட்கின்றனர். ஆனால் 22ல், பவுல் மட்டுமே கேட்க, மற்றவர்கள் கேட்க முடியவில்லை.

இந்த நான்கு பதிவுகளில் எது உண்மையானது?

சவுலின் மனமாற்றம் அவரின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த நிகழ்வு எந்த அளவுக்கு வியப்புக்குரியதாக இருந்தது என்றால், அதை யாரும் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை. அப்படி விளக்க முடிந்துவிட்டால் அந்த நிகழ்வின் வியப்பு மறைந்துவிடும். ஆகையால்தான், லூக்கா இந்தக் குழப்பத்தை சரி செய்யாமல் அப்படியே விடுகின்றார்.

இயேசுவுக்கும் சவுலுக்கும் இடையே நடந்த உரையாடலை இங்கே பார்ப்போம்:

'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'

'ஆண்டவரே, நீர் யார்?'

'நீ துன்புறுத்தும் இயேசு நானே!'

சவுல், 'ஆண்டவரே' என இயேசுவை அழைக்கும்போது, அந்நாளில் வழக்கத்தில் இருந்த, 'ஐயா, சார்' என்ற அர்த்தத்தில்தான் அழைக்கின்றார்.

இயேசு தன்னைத் தன் மக்களோடு ஒன்றிணைத்துக்கொள்கின்றார்.

'நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்று இறுதித்தீர்ப்பு பற்றிச் சொல்லும் இயேசு, இங்கே தன் மக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தனக்கே இழைக்கப்படுவதாகச் சொல்கின்றார்.

கிறிஸ்தவத்தின் கடவுளின் தனிச்சிறப்பு இதுதான்.

இவர் தன்னை நம்பும் மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார்.

ஆக, பவுலின் மனமாற்ற நிகழ்வு அவருக்கு முக்கிய அனுபவமாக இருந்ததுபோல, அது நமக்கும் புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றது.

என்னில் இறைவன் தன்னையே ஒன்றிணைக்கின்றார்.

இது என் வாழ்வை நான் மேன்மையாக வாழ என்னை தூண்டுகிறது.

Sunday, May 8, 2016

கமாலியேல்

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' (காண். திப 5:34-39)

திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் இரண்டு முறை யூத தலைமைச் சங்கத்தால் கைது செய்யப்படுகின்றனர்.

இரண்டாம் முறை கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஆண்டவரின் தூதர் சிறைக்கதவுகளைத் திறந்து அவர்களை விடுவிக்கின்றார். இப்படி விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து அழைத்து வருகின்றனர் தலைமைச் சங்கத்தார்.

தலைமைச்சங்கத்தாரின் கோபத்துக்கு இரண்டு காரணங்கள்:

ஒன்று, புதிய நம்பிக்கை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு, இயேசுவின் இரத்தப்பழியை திருத்தூதர்கள் தங்கள்மேல் சுமத்தியது.

இந்த இரண்டு காரணங்களுக்காகத் திருத்தூதர்களைக் கொன்றழிக்கத் திட்டமிடுகின்றனர். அவர்கள் இப்படி திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த திருச்சட்ட ஆசிரியர் கமாலியேல் பேசியதைத்தான் நாம் மேலே வாசித்தோம்.

'கமாலியேல்' என்றால் 'கடவுளின் பரிசு' என்பது பொருள்.

ரபி ஹில்லேல் அவர்களின் பேரனும், ரபி சிமியோன் அவர்களின் மகனுமான கமாலியேல், திபேரியு, கலிகுலா மற்றும் கிளவுதியு காலத்தில் தலைமைச்சங்கத்தின் முதல்வராக இருந்தவர். எருசேலம் ஆலயம் உரோமையர்களால் அழிக்கப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். திருத்தூதர் பவுல் இவரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது (காண். திப 22:3).

'கடவுள் அனுப்பிய பரிசாகவே' இங்கு வருகிறார் கமாலியேல்.

'நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!' என்று தம் சகாக்களைப் பார்த்துச் சொல்கின்ற கமாலியேல், இரண்டு வரலாற்று சான்றுகளை முன்வைக்கின்றார்.

அ. தெயுதா. இவன் தன்னையே பெரியவன் என்று சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 400 பேரை தன்னோடு சேர்த்துக் கொண்டவன். ஆனால் அவன் இறந்தபின் இயக்கம் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது.

ஆ. கலிலேயனான யூதா. இவனும் சிலரைச் சேர்த்துக் கொண்டு கிளர்ச்சி செய்கிறான். ஆனால், இவன் இறந்தபின் இவனது கூட்டாளிகள் சிதறுண்டு போகின்றனர்.

இந்த இரண்டு சான்றுகளையும் சொல்லிவிட்டு, அவர் தொடர்ந்து சொல்வது ஓர் இறைவாக்காகவே இருக்கின்றது:

அ. 'இவர்களின் திட்டமும் செயலும் மனிதரிடமிருந்து வந்தால் அவை அழிந்துபோகும்.'
ஆ. 'கடவுளிடமிருந்து வந்தால் அவற்றை ஒழிக்க முடியாது. மேலும் ஒழிக்க நினைப்பவர்கள் கடவுளோடு போரிடுபவர்களாவர்.'

கிறிஸ்தவத்திற்கான அமிலச் சோதனையாக மாறிவிடுகிறது இந்த வார்த்தைகள். அன்று முதல் இன்று வரை அதை அழித்துவிட உள்ளிருந்தும், வெளியிலிருந்து நிறையப்பேர் புறப்பட்டு வந்தாலும், அது இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. கடவுளிடமிருந்து இது வந்தது என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.

கமாலியேல் நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களை முன்வைக்கின்றது:

அ. கமாலியேலின் நிதானமும், விவேகமும். தலைமைச்சங்கம் அல்லது வழக்காடு மன்றத்தில் கூச்சல் குழப்பமும் மிகுந்திருக்கும். மக்கள் தங்கள் அறிவினால் அன்றி, தங்களின் உணர்வுகளாலேயே வழிநடத்தப்படுவர் இங்கு. 'வெட்டுவோம்,' 'குத்துவோம்,' 'கொல்வோம்' என்று மக்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, நிதானமாகவும், விவேகமாகவும் இந்த பிரச்சினையைக் கையாளுகின்றார் கமாலியேல். நம் வாழ்வில் வரும் பிரச்சினைகள் -  சின்னதோ, பெரியதோ - நாம் சத்தம் போடுவதாலோ, அழுது புலம்புவதாலோ தீரப்போவதில்லை. சில நேரங்களில் அவை பெரிதாகவிடவும் வாய்ப்பிருக்கின்றது. இந்த நேரங்களில் நிதானமாகவும், விவேகமாகவும் சிந்தித்து முடிவெடுத்தல் நலம்.

ஆ. 'திட்டம், செயல்' - இந்த இரண்டிற்கும் ஊற்று இறைவன். இந்த இரண்டின் ஊற்றாக இறைவன் இருந்தாலும் அவை அழிவதில்லை. ஏனெனில், அழிவுறும் மனிதர்களிடமிருந்து புறப்படும் எதுவும் அழிவுறும் தன்மையையே கொண்டிருக்க முடியும்.

இறுதியாக, ஓர் எச்சரிக்கை.

கமாலியேலின் வார்த்தைகளை அப்படியே திருப்பிப் போட்டு, 'இது கடவுளிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டுமென்றால், அது நீடிக்க வேண்டும்' என்பதற்காக வன்முறை வழியாகவும், இரத்தம் சிந்தியும் ஒருவரின் நம்பிக்கையையும், இருப்பையும் முன்வைப்பது சால்பன்று.

'கமாலியேல்' - 'கடவுளின் பரிசு'

Saturday, May 7, 2016

அழகுவாயில்

பேதுரு அவரிடம், 'வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. (காண். திப 3:1-10)

எங்கே பணியைத் தொடங்கினால் அது அதிக மக்களிடம் போய்ச் சேரும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்கின்றனர் பேதுருவும், யோவானும்.

இவர்களின் முதல் அறிகுறி எருசலேம் ஆலயத்தின் 'அழகுவாயில்' அருகே நடக்கின்றது. எருசலேம் ஆலயத்தைச் சுற்றி 12 வாயில்கள் இருந்தன. 'அழகுவாயிலை' 'அலங்கோலமாக்கிய' ஒரு ஊனமுற்றவருக்குத்தான் முதல் அறிகுறி நடந்தேறுகிறது. 'அழகுவாயிலில்' அவர் அமரக் காரணம் அந்த வாயில் வழியாகத்தான் பலர் ஆலயத்திற்குள் நுழைவர், வெளியேறுவர். மேலும், அந்த நபர் எல்லாருக்கும் அறிமுகமானவராயிருக்கிறார். எல்லாரிடம் உதவி கேட்டிருப்பதால் அவரை எல்லாரும் நினைவில் கொண்டிருந்தனர். பிற்பகல் மூன்று மணிக்கு ஆராதனை செய்ய கோவிலுக்கு வந்த திருத்தூதர்கள் பேதுருவையும், யோவானையும் உற்றுப்பார்க்கின்றார் இவர். தொடக்கக் கிறிஸ்தவர்கள் முதலில் யூதர்களாகவே இருந்தனர். ஆக, ஆலயத்திற்கும் சென்றனர்.

'ஏதாவது கிடைக்கும்' என்று உற்றுப்பார்க்கின்றார் இவர்.

'வெள்ளியும், பொன்னும் இல்லை' என்கிறார் பேதுரு.

இங்கே லூக்காவின் வார்த்தை விளையாட்டைக் கவனிப்போம். நாம் ஒருவரிடம் 'என்னிடம் இது இல்லை' என்று சொல்லும்போது, மேலிருந்து தொடங்கி கீழ் செல்வோம். உதாரணத்திற்கு, சாப்பாடு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை, வண்டி இல்லை, ஐஃபோன் இல்லை எனச் சொல்வோம். இங்கே முதன்மையானது உணவு. தேவையற்றது ஐஃபோன். ஆனால் பேதுருவோ, 'பொன், வெள்ளி' என்று சொல்வதற்குப் பதிலாக, 'வெள்ளி, பொன்' என்கிறார். ஆக, இந்த வரிசையில் இதைவிட மதிப்புக்குரிய ஒன்று வரப்போகிறது என்பதை இவ்வார்த்தைகள் முன்குறித்துக் காட்டுகின்றன. 'வெள்ளி, பொன், இயேசுவின் பெயர்' - இயேசுவின் பெயர் வெள்ளி, பொன் என இன்னும் அதிகம் மதிப்பு பெற்றதாகிவிடுகிறது.

இயேசு தன் வாழ்வில் செய்த அறிகுறிகள் அவர் தன் பெயரால் நிகழ்த்தியவை. ஆனால், இன்றுமுதல் அறிகுறிகள் இயேசுவின் பெயரால் செய்யப்படுகின்றன. இயேசுவிடமிருந்து இறையரசுப்பணி அவரின் திருத்தூதர்கள் கைகளுக்கு வருகின்றது.

பேதுரு இயேசுவின் பெயரை மட்டும் சொல்லாமல், ஊனமுற்றவரைத் தூக்கிவிடுகின்றார்.

ஆக, ஒரு அறிகுறி நம் வாழ்வில் நடக்கவேண்டுமென்றால் அதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்குச் சொல்கிறது:

அ. 'நம்பிக்கை.' இது ஊனமுற்ற இனியவரிடம் நிறைய இருந்தது.

ஆ. 'இயேசுவின் பெயர்.' இதை திருத்தூதர்கள் உச்சரிக்கின்றனர்.

இ. 'தூக்கிவிடுதல்.' இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு பண்புகள் இருந்தும், மூன்றாவது இல்லையென்றால் அறிகுறி நடப்பதில்லை.

ஆக, நான் என் கையை நீட்டி எனக்கருகிருப்பவரைத் தூக்கிவிடும்போது நானும் அறிகுறி நடக்கக் காரணமாகிறேன்.

Friday, May 6, 2016

சைமனி

ஆங்கிலத்தில் 'simony' ('சைமனி') என்ற ஒரு வார்த்தை உண்டு.

இந்த வார்த்தை உருவான கதையைச் சொல்கிறது திப 8:9-24

சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தி அறிவித்தார்கள் - என்கிறார் லூக்கா.

சிதறிய மக்கள் போகுமிடத்தில் தங்கள் வயிற்றுக்குத் தேவையானதைப் பார்க்காமல் இப்படி நற்செய்தி அறிவித்தார்கள் என்று வாசிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பிலிப்பு சமாரியா பகுதியில் இவ்வாறு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

அந்த ஊரில் சீமோன் என்ற மந்திரவாதி இருக்கிறார். இவர் தன் மாயவித்தைகளால் மக்களை மயக்கி வைத்திருக்கின்றார். இந்த நேரத்தில் இங்கே உருவான புதிய திருச்சபையைக் காண திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் வருகின்றனர். இதுவரை அங்கே இருந்தவர்கள் திருமுழுக்கு மற்றும் பெற்றிருந்ததால், இந்த இரண்டு தூதர்களும் அவர்களுக்கு தூய ஆவியானவரைக் கொடுக்க நினைத்து, அவர்கள் மேல் கைகளை வைத்து செபிக்கின்றனர். அவர்களும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்ம மந்திரவாதி சீமோனுக்கு ஒரு குட்டி ஆசை.

'நானும் கைகளை வைத்து அடுத்தவர்கள்மேல் தூய ஆவி பொழிய வைக்கலாமே!' என நினைத்தவர் திருத்தூதர்களிடம் போய், 'நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்' என்று கூறி, அதற்காக பணம் கொடுக்க முன்வருகிறார்.

காச வாங்கினோமா, கல்லாவை நிரப்பினோமா என்று இல்லாமல், நம்ம மிஸ்டர் பெர்ஃபெக்ட் பேதுரு, 'கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ. உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை. உரிமையுமில்லை. இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம். ஏனெனில் நீ கசப்பு நிறைந்தவனாய் தீமைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்!' என்று சபிக்கிறார்.

சீமோன் உடனடியாக மனம் திரும்புகின்றார். 'நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்' என்கிறார்.

சீமோன் வாங்க நினைத்தது தூய ஆவியை அல்ல. மாறாக, தூய ஆவியைக் கொடுக்கும் அருள்நிலையை. அதாவது, திருஅவை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், சீமோன காசு கொடுத்த பிஷப் ('ஆயர்') ஆக நினைத்தார்.

ஆக, 'சைமனி' என்றால் 'அருளை வழங்கும் ஒரு பதவி அல்லது பொறுப்பு அல்லது அதிகாரத்தை' விலைகொடுத்து வாங்குவது.

அந்தக் காலத்திலேயே திருஅவையின் அருள்பணி நிலைகள் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்திருக்கின்றன என்பதே இங்கே புலனாகிறது.

ஸ்தேவான்

‘கிரேக்க மொழி பேசும் இளம்பெண்கள்’ பந்தியில் கவனிக்கப்படாததால் என்னவோ, திருத்தொண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழு பெயர்களும் கிரேக்கப் பெயர்களாகவே இருக்கின்றன:

ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்னபா, நிக்கோலா.

இவர்களில் ஸ்தேவானுக்கு மட்டும் 68 வசனங்களை ஒதுக்குகின்றார் லூக்கா.

‘ஸ்தேஃபானுஸ்’ என்றால் கிரேக்கத்தில் ‘மணிமுடி’ என்று பொருள். ஆகையால்தான், தமிழில் இவரை ‘முடியப்பர்’ என அழைக்கின்றோம்.

பந்தியில் பரிமாறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தேவானை பெரிய அருளுரை நிகழ்த்துபவராகவும், நல்ல பேச்சாளராகவும் முன்வைக்கின்றார் லூக்கா. ஆக, திருத்தொண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலதிறன்கள் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஸ்தேவானின் இந்த அருளுரை ஓர் எடுத்துக்காட்டு.

அ. ஸ்தேவானின் அருளுரை இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றின் ஏழு முக்கியமான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறது:

1. ஆபிரகாமின் கானான் பயணம்
2. யாக்கோபின் எகிப்துப் பயணம்
3. யோசேப்பின் வழி நடந்த மீட்புச் செயல்
4. மோசே வழி வந்த மீட்பு
5. கன்றுக்குட்டியால் இஸ்ரயேல் செய்த பாவமும், கடவுளின் கோபமும்
6. சந்திப்புக் கூடாரத்தில் தணிந்த கடவுளின் கோபம்
7. தாவீது, சாலமோன் வழி ஆண்டவரின் ஆலயம்

இந்த ஏழு நிகழ்வுகளின் நிறைவாக இருப்பவர் இயேசு என்பதை தான் இறக்குமுன் சொல்லி முடிக்கின்றார் ஸ்தேவான்.

ஆ. ஸ்தேவான்-இயேசு ஒற்றுமை

ஸ்தேவானுக்கும், இயேசுவுக்கும் மூன்று ஒற்றுமைகளைப் பதிவு செய்கின்றார் லூக்கா.

1. இருவருமே நகருக்கு வெளியே இறக்கின்றனர்.
2. இருவருமே, ‘என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்’ என்று தங்கள் உயிரைக் கையளிக்கின்றனர்.
3. இருவருமே, ‘இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்!’ என்று தங்களைக் கொன்றவர்களுக்காக பரிந்து பேசுகிறார்கள்.

இ. ஸ்தேவான் நிகழ்வு எதற்காக?

ஒன்று, கிரேக்க மொழி பேசுவோர் - எபிரேய மொழி பேசுவோர் என எல்லாருமே சான்று பகர்வதில் சிறந்து விளங்கினார்கள் என்று காட்டுவதற்காக.

இரண்டு, சவுல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக. ஏனெனில், “சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்” (7:58) என எழுதுகின்றார் லூக்கா. ‘இதோ, இதை வைத்திருப்பா! நாங்க வந்து வாங்கிக்கொள்கிறோம்!’ என்று சொல்லி சவுலிடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை. மாறாக, ‘ஆடை என்பது ஒரு சான்று அட்டை போல’ பயன்படுத்தப்படுகிறது இங்கே. சவுல் ஏற்கனவே இந்த புதிய நம்பிக்கையை அழிக்கும் பொறுப்பை ஏற்றவராக இருந்திருக்க வேண்டும். இவரிடம் தங்கள் ஆடையை ஒப்படைப்பதன் வழியாக தங்களையும் அந்த எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்கள் சாட்சிகள்.

இறுதியாக, ‘சவுல் என்ற இளைஞன்.’

தன் பணிக்கான கடவுளின் தெரிவு இப்படித்தான் இருக்கிறது. தான் விரும்பியவர்களை அவர் தெரிவு செய்து, அவர்களை தன் கையில் வைத்துப் புதிய உருவமாகப் பிசைகின்றார். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்றறிந்த கடவுள், ‘வளைக்கக்கூடிய’ வயதிலேயே சவுலை தன் பக்கம் வளைத்துப் போடுகின்றார்.

Wednesday, May 4, 2016

பந்திக்கு முந்து

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல...நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்' (திப 6:2-4)

திப நூலின் 6ஆம் பிரிவிலிருந்து புறவினத்தாரை நோக்கி நற்செய்தி அறிவிக்கப்படுதல் தொடங்குகிறது. திரையை விலக்குமுன் லூக்கா ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே எழுதுகிறார்.

என்ன நிகழ்வு?

'கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் அன்றாட பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை!'

நம்ம வீட்டுல கல்யாண நிகழ்வு வைத்து, நாம் எல்லாரையும் விழுந்து விழுந்து கவனித்தாலும், 'என்னை அவன் கவனிக்கவே இல்லை!' என்று நம் சொந்த தாய்மாமன், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, அத்தை என்ற உறவினர் கூட்டம் இதுவரை நம்மை முறைத்துக்கொண்டு இருக்கும் அனுபவம் நமக்கு இருந்தால், இந்த பந்திப் பிரச்சினை எவ்வளவு பெரியதென்று நமக்குப் புரியும்.

யார் இந்த கிரேக்க மொழி பேசுவோர்?

'கிரேக்க மொழி பேசுவோர்,' 'எபிரேயம்-அரமேயம் மொழி பேசுவோர்' என்று இரண்டு குழுக்களைப் பதிவு செய்கிறார் லூக்கா. இவர்கள் இருவருமே யூதர்கள்தாம். பாலஸ்தீனாவிலேயே இருந்த யூதர்கள் எபிரேயம்-அரமேயம் பேசுபவர்கள். பாலஸ்தீனாவிலிருந்து போரினால் சிதறடிக்கப்பட்டு, அல்லது வேற்றினத்தாரோடு திருமண உறவு வைத்துக்கொண்டு, அல்லது வேற்று நாட்டில் பணி அல்லது படிப்புக்காக நெடுங்காலம் தங்க நேர்ந்து தங்கள் சொந்த தாய்மொழி மறந்து அந்நிய மொழி - அதாவது கிரேக்க மொழி பேசுவோர் மற்ற குழுவினர்.

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து, ஒரு பிள்ளையின் பிள்ளைகள் மதுரையில் இருப்பதால் தமிழ் பேசுகின்றார்கள். மற்ற பிள்ளையின் பிள்ளைகள் நியுயார்க்கில் பிறந்ததால் அமெரிக்கன் (இது ஆங்கிலம் அல்ல) பேசுகிறார்கள். ஆக, என் வீட்டில் இப்போது இரு குழுவினர் இருப்பார்கள்: 'அமெரிக்கன்' பேசும் தமிழர்கள். 'தமிழ்' பேசும் தமிழர்கள். இந்த இரண்டு குழுக்களும் கோடை விடுமுறைக்காக (ஒரே மாதத்தில் விடுமுறை வருகிறது என வைத்துக்கொள்வோம்) என் வீட்டிற்கு வருகிறார்கள். சாப்பாட்டு அறையில் சாப்பாடு எடுத்து வைக்கும் என் வீட்டு புதிய இளவல் தட்டு வைத்துவிட்டு, ஸ்பூன்-ஃபோர்க் வைக்க மறந்துவிடுகிறாள். முன்பின் பழக்கம் இல்லாததால் அவள் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. அமெரிக்கன் பேசும் தமிழர்கள் ஒரு நாள் பொறுக்கிறார்கள். இருநாள் பொறுக்கிறார்கள். மூன்றாம் நாள் என்னிடம் புகார் செய்கிறார்கள். நான் என்ன செய்வேன்? 'உங்களுக்காக நான் என் வேலையை விட்டுவிட்டு வந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. அமெரிக்கன் கலாச்சாரமும் (அப்படி ஒன்று இருந்தால்!) அறிவும் உள்ள ஒருவரை நீங்களே கண்டுபிடியுங்கள். நீங்கள் இருக்கும் வரை அவரையே வேலைக்கு வையுங்கள்!' என்று சொல்லிவிட்டு நான் என் வேலையைப் பார்ப்பேன்.

இப்படித்தான் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

அ. சாப்பாடுதானே! என்று திருத்தூதர்கள் இந்த பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவில்லை. அதற்காக, தங்கள் வேலையையும் சமரசம் செய்து கொள்ள விழையவில்லை. 'சாப்பாடும்,' 'ஆன்மீகமும்' ஒரே சமநிலையில் பார்க்கப்பட்டது. இது மார்க்சியத்தையும் தாண்டிய பார்வை. மார்க்சியம், சாப்பாட்டை கீழேயும் (base structure), ஆன்மீகத்தை மேலேயும் (super structure) வைத்துப் பார்க்கிறது. ஆனால் திருத்தூதர்கள் இதற்கு விடைகாணும் முறை எனக்கு வியப்பாக இருக்கிறது. 'பைபிள் படிங்க, செபமாலை சொல்லுங்க!' என அவர்கள் மாற்று வழி சொல்லவில்லை. செபமாலை செபித்தால் பசி அடங்காது என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், அடுத்தவர்களின் பிரச்சினையை தங்கள் பிரச்சினைகளாக ஏற்று அதற்கு தீர்வு காண்கின்றனர்.

ஆ. புதியவர்களுக்கு எளிதில் வேலை. தொடக்கத்திருச்சபையில் அடுக்குமுறை அதிகாரம், வட்டம், சதுரம் என்ற மேலாண்மை என்று எதுவும் இல்லை. தேவைக்கேற்றாற்போல தங்கள் வட்டத்தை, சதுரத்தை மாற்றிக் கொண்டனர். பந்தியில் தொண்டு செய்ய என்று எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் இரண்டு: ஒன்று, தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இரண்டு, ஞானம் வேண்டும். இவர்கள் திருத்தொண்டர்கள் என்று இங்கே அழைக்கப்படவில்லை. 'திருத்தொண்டு' என்ற வார்த்தைதான் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, 'திருத்தொண்டர்' என்ற பணிநிலை கத்தோலிக்க திருமுகங்களின் காலத்தில்தான் வருகின்றது.

இ. திருத்தொண்டர்கள் முதன்மையானதை முதன்மையானதாக வைத்திருந்தனர். 'எங்கள் வேலை இறைவேண்டலும், இறைவார்த்தையைக் கற்பிப்பதுமே' என்று தங்கள் இலக்கில் தெளிவாக இருந்தனர். 'சரிப்பா, நம்ம ஆளுக்கு ஒருநாள் சுற்று எடுத்து இதை சரி பண்ணுவோம் என்றோ, அல்லது இதற்கு என்று நம்மில் 2 பேர் பொறுப்பாக இருக்கட்டும்' என்றும் சொல்லவில்லை. எதை அடுத்தவர்கள் செய்ய முடியுமோ அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு (delegation), தாங்கள் மட்டுமே செய்யக்கூடிய அல்லது தங்களால் மட்டுமே செய்யப்பட வேண்டிய வேலையைத் தாங்களே செய்கின்றனர். இது மிகப்பெரிய மேலாண்மைப் பாடம்.


Tuesday, May 3, 2016

அனனியா - சப்பிரா

'அனனியாசு - சப்பிரா' தம்பதியினரை நாம் திப 5:1-10ல் சந்திக்கின்றோம்.

'அனனியா' என்றால் 'ஆண்டவர் இரக்கமுள்ளவர்' என்றும், 'சப்பிரா' என்றால் 'கவர்ந்திழுப்பவர்' அல்லது 'நீலக்கல்' (நவரத்தினங்களில் ஒன்று) என்றும் பொருள். (அனனியா என்ற பெயர் திப நூலில் மற்ற இடங்களிலும் வருகிறது. காண். 9:10-18, 22:12, 23:2, 24:1. ஆனால் இவர்கள் யாவரும் வௌ;வேறு நபர்கள்).

தொடக்கக் கிறிஸ்தவ சமூகத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் தலைவனும், தலைவியுமே அனனியாவும், சப்பிராவும். இவர்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கின்றது. அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்கின்றனர். விற்ற பணம் முழுவதையும் திருத்தூதரின் காலடியில் கொண்டு போய் வைக்காமல், பாதியை மட்டும் கொண்டு போய் வைக்கின்றார் அனனியா. இதற்கிடையில், 'இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று நானும் சொல்லிவிடுகிறேன், நீயும் சொல்லிவிடு!' என்று தன் மனைவி சப்பிராவிடம் சொல்கின்றார். பணத்தை எண்ணிப் பார்த்த பேதுரு, 'அனனியா, இவ்வளவுக்குத்தான் விற்றீர்களா?' என்கிறார். அனனியாவும், இவர் என்ன வந்தா பார்த்தாரு என்று எண்ணிக்கொண்டு, 'ஆம்!' என்கிறார். 'நீ கடவுளிடமே பொய் சொன்னாய்!' என்று பேதுரு சொல்ல, அங்கேயே மடிகின்றார் அனனியா. இது தெரியாத மனைவி மூன்று மணி நேரங்கள் கழித்து அங்கே வருகின்றார். அவரிடம் அதே கேள்வி. அவருடையதும் அதே பதில். 'ஆண்டவரை நீங்கள் சோதிக்க உடன்பட்டதேன்!' எனச் சொல்ல, அங்கேயே உயிர்விடுகின்றார் சப்பிரா.

அ. 'ஒரு பகுதியைத் தனக்கென்று வைத்துக் கொண்டார் அனனியா'

தொடக்க கிறிஸ்தவர்கள் ஏன் சொத்துக்களை விற்றார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருத்தூதர்களின் போதனையில் மிக முக்கியமாக இருந்தது 'பருசியா' ('இரண்டாம் வருகை' அல்லது 'இறுதி நாள்'). அதாவது, உலகம் அழியப்போவதாகவும், இயேசு மீண்டும் அரசராக வரப் போகிறார் என்றும், நீதித்தீர்ப்பு உடனடியாக நடக்கப் போவதாகவும் உறுதியாக நம்பினார்கள் தொடக்கக் கிறிஸ்தவர்கள். ஆகையால்தான், நிலம் எதற்கு, சொத்து எதற்கு, வீடு எதற்கு, எல்லாம் அழியப்போகிறது என்றெண்ணி, இந்த நம்பிக்கை இல்லாத புறவினத்தாரிடம் அவற்றை விற்கின்றனர். விற்றதை பொதுவில் வைத்து, இயேசு வரும் வரை சமைத்து சாப்பிடுவோம் என்று முடிவெடுக்கின்றனர்.

இப்படி அவசர அவசரமாய் தன் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றவர்தான் அனனியா. விற்ற பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, அவர் மனத்தில் அந்த சந்தேக எண்ணம் உதிக்கிறது: 'ஒருவேளை இரண்டாம் வருகை இல்லையென்றால் என்ன செய்வது?' 'ஒருவேளை உலகம் அழியாமல் போனால் என்ன செய்வது?' என்ற கேள்விகள் ஒருபக்கமும், 'ஐயயோ, அவசரப்பட்டுவிட்டோமோ' என்ற குற்ற உணர்வும் அவரை வதைக்க, அவற்றின் கைதியாகி, பாதிப் பணத்தை தன் அலமாரியில் பதுக்குகின்றார். அதை மனைவியிடமும் சொல்லிவிடுகின்றார். ஆக, இவர் முழுமையான பொய்யர் அல்ல.

முன்பின் தெரியாத கிறிஸ்தவம் என்ற குதிரையின் மேல் இவ்வளவு பந்தயம் கட்டுவதா? இது ஓடுமா? பாதியிலேயே படுத்துக்கிடுமா? என்று கூட நினைத்திருக்கலாம்.

ஆ. 'அது விற்கப்படுவதற்கு முன் உன்னுடையதாகத்தானே இருந்தது. அதை விற்றபின்பும் அந்தப் பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது?'
பேதுருவின் இந்த கேள்வி என்னை நிறைய யோசிக்க வைக்கிறது. 'உன் உரிமையை நீ ஏன் சாத்தானுக்கும், பொய்மைக்கும் விற்றாய்?' அல்லது 'நீ ஏன் உன் நேர்மையை விலைபேசினாய்?' என்று கேட்கின்றார் பேதுரு. நாம் எந்தப் பாவம் செய்தாலும், பொய் சொன்னாலும், களவு செய்தாலும் நம்மை நாமே அந்தப் பாவத்திற்கு விலை பேசுகிறோம். அங்கே நாம் நம்மேல் உள்ள உரிமையை இழந்துவிடுகிறோம். ஏனெனில் ஒன்று விலை குறித்து அதை நம்மைவிட்டுப் போனபின், அந்தப் பொருளின்மேல் நமக்கு எந்த உரிமையும் இல்லைதானே.

இ. 'அவள் அறிந்தாள்' - 'அவள் அறியவில்லை'

'அறிதல்' என்ற வார்த்தையை வைத்து இங்கே விளையாடுகின்றார் லூக்கா. அதாவது, கதையின் தொடக்கத்தில் தன் கணவன் பாதிப்பணத்தை வைத்துக் கொண்டு, மீதிப்பணத்தை பேதுருவிடம் கொண்டு செல்கிறார் என்பதை சப்பிரா அறிகின்றாள். ஆனால், தன் கணவன் இறந்துவிட்டான் என்பதை அவள் அறியவில்லை. மேலும், 'இளைஞர்கள் துணியால் மூடி எடுத்துச் சென்றார்கள்' என்று லூக்கா எழுதக் காரணமும் இதுவே. அவர்களின் ஊர் சின்ன ஊராகத்தான் இருந்திருக்கும். இறந்த ஒருவரை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் யாரென எல்லாருக்கும் தெரியும். ஆனால் மனைவிக்குத் தெரியக்கூடாது என்பதற்காக 'துணியிட்டு மூடுகின்றார்' லூக்கா. இதில் உள்ள irony என்னவென்றால், தன் அலமாரியில் துணியிட்டு பாதிப் பணத்தை மூடியதால் இங்கே தன் கணவன் துணியிட்டு மூடி அழைத்துச் செல்லப்படுகின்றான். அங்கே துணிக்குள் இருந்ததை இவள் அறிவாள். ஆனால், இங்கே இருப்பதை அவள் அறியவில்லை.

இறுதியாக,

இரண்டு கேள்விகள்:

1. பேதுருவுக்கு
'ஆமா...அந்த மீதிப் பணத்தை அவங்க வீட்டுல இருந்து எடுத்தீங்களா?'

2. அனனியாவுக்கு
எங்க ஊருல தெனாலிராமன் பூனை விற்ற கதை ஒன்று உண்டு. தன் நோயைக் குணமாக்கிய மருத்துவருக்கு தன் குதிரையை விற்று முழுப்பணத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற தெனாலிராமன், தன் வீட்டுப் பூனையையும் சந்தைக்கு அழைத்துச் சென்று, 'பூனை விலை 100 வராகன்,' 'குதிரை விலை 10 வராகன்,' 'இரண்டையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்!' என்கிறார். விற்றாயிற்று. மருத்துவருக்கு 10 வராகன் கொடுத்தாயிற்று. அனனியா பாய், நீங்களும் இப்படி ஏதாவது creative-ஆ யோசிச்சிருக்கலாம்?


பிலிப்பும் திருநங்கையும்

'நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகின்றதா?'

'யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் புரிந்து கொள்ள முடியும்?'

(காண் திப 8:26-40)

திருத்தூதர் பணிகளில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் ஒன்றுதான் 'பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும்' (8:26-40). நாளை பிலிப்புவின் திருநாள் என்பதாலும், இது பிடித்த பகுதி என்பதாலும் இதைப் பற்றி இன்று எழுதுகிறேன்.

திருத்தூதர் பிலிப்பு செய்த பற்றிய ஒரே குறிப்பு இதுவே.

எத்தியோப்பிய அரசி கந்தகி நிதியமைச்சராக இருக்கிறார் திருநங்கை ஒருவர். 'கந்தகி' என்பது எத்தியோப்பிய அரசியின் பெயர் என்று சொல்வதைவிட, பட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 'கந்தகி' என்ற வார்த்தைக்கு 'அரசியான அம்மா' என்ற பொருளும் உண்டு. 'அலி,' 'அண்ணகர்,' 'திருநங்கை' என்று நாம் எந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றுதான். அரசர்கள் தங்கள் மனைவியரின் 'நலன்' கருதி, தங்கள் அரண்மனையில் தங்கி பணிபுரியும் அமைச்சர்களாக 'திருநங்கைகளை' மட்டுமே நியமித்தார்கள். நம் கதைமாந்தர் அரசியின் நிதியமைச்சர். ஆக, நன்றாகப் படித்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். படித்தவர் மட்டுமல்ல. பக்திமானும் கூட. பல நேரங்களில் படிப்பும், பக்தியும் இணைந்து செல்வதில்லை. எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு வீடு திரும்புகிறார். எருசலேம் சென்று வணங்கக்கூடியவர் ஒரு யூதராகத் தான் இருக்க வேண்டும். மேலும், அவரின் கைகளில் இருப்பதும் யூத இறைவாக்கு நூலின் ஒரு பகுதியே - எசாயா 53:7-8.

இவர் இப்படி வாசித்துக்கொண்டிருக்கும் நேரம், இவரின் தேரை ஒட்டி ஓடுமாறு பிலிப்புவுக்குக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். தேரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு பிலிப்பு ஆற்றல் பெற்றிருக்கின்றார். மேலும், அந்த ஓட்டத்திலும் தேரில் இருப்பவர் என்ன வாசிக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றார். திருநங்கை அமைச்சரே இந்த இறைவார்த்தையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் தேரில் உடன் வந்த அவரின் செயலரோ, அல்லது குருவோ, அல்லது லேவியரோ வாசித்து இவர் கேட்டிருக்கலாம்.

'நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?' என பிலிப்பு கேட்க, 'யாராவது விளக்கிச் சொன்னால்தானப்பா புரியும்' என்கிறார் திருநங்கை அமைச்சர். அத்தோடு, பிலிப்பையும் தன் தேரில் ஏற்றிக்கொள்கின்றார். தொடர்ந்து அந்த இறைவாக்குப் பகுதி பற்றி நிறைய கேள்விகள் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்பு அவர் வாசித்த இறைவார்த்தையில் தொடங்கி, இயேசுவைப் பற்றி எல்லாவற்றையும் அறிவிக்கின்றார்.

வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடம் வருகின்றது.

'இதோ, தண்ணீர் உள்ளதே. நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?' எனக் கேட்கின்றார் அமைச்சர்.

பிலிப்புவும், அமைச்சரும் தண்ணீருக்குள் இறங்குகின்றனர்.

பிலிப்பு அமைச்சருக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார்.

ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் ஆண்டவர் பிலிப்பை அப்படியே 'தலைமுடியைப் பிடித்து' தூக்கிச் சென்று விடுகிறார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்புகிறார்.

திருநங்கை-அமைச்சர் எனக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. 'குழந்தை உள்ளம்.' தான் ஒரு நிதியமைச்சர் என்றாலும், தனக்குத் தெரியாததும் இந்த உலகில் உண்டு என்பதை உணர்ந்து, 'எனக்கு இது புரியவில்லையே?' என்று மறைநூலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

ஆ. 'உடனடி மனமாற்றம்.' 'அப்படியா? நாளைக்குப் பார்க்கலாம்!' என்று தன் மனமாற்றத்தைத் தள்ளிப்போடாமல், தண்ணீரைக் கண்ட இடத்திலேயே திருமுழுக்குப் பெறுத் துடிக்கின்றார் அமைச்சர். யூதராக வீட்டை விட்டு புறப்பட்டவர், கிறிஸ்தவராக வீடு திரும்புகின்றார். என்னே ஒரு தலைகீழ் மாற்றம்! அவரின் தேரின் வேகம் போலவே இருக்கின்றது அவரின் மனமாற்றமும்.

இ. 'மகிழ்ச்சி.' இதுதான் அவரின் இறுதி உள்ளுணர்வு. மனமாற்றத்தின் வெளி அடையாளம் மகிழ்ச்சி. இயேசுவை அறிந்து கொண்டவர்கள் கொண்டிருக்க வேண்டிய ஒரே உணர்வு இதுதான்: மகிழ்ச்சி.

பிலிப்பு எனக்குச் சொல்லும் மூன்று பாடங்கள்:

அ. 'தயார் நிலை.' பிலிப்பு இருப்பது எருசலேம். அமைச்சரின் தேர் ஓடிக்கொண்டிருப்பது அதற்கு நேரெதிர் திசையின் ஒரு பாலைவனப்பாதை. 'நீ அங்கே போ!' என்று ஆண்டவர் சொன்னவுடன் எழுந்து ஓடுகின்றார் பிலிப்பு. ஆண்டவர் நேரடியாகப் பேசியிருப்பாரா? அல்லது பிலிப்பு ஆண்டவரின் குரலை தன் உள்ளத்தில் கேட்டிருப்பாரா? எந்த மன தைரியத்தில் அவ்வளவு தூரம் ஓடியிருப்பார்?

ஆ. 'கையிலிருப்பதை வைத்து தொடங்குவது.' நற்செய்தி அறிவிப்பதற்கான மிக எளிய மந்திரத்தை பிலிப்பு கடைப்பிடிக்கின்றார். அமைச்சர் வாசித்துக் கொண்டிருந்த இறைவார்த்தையை புள்ளியாகக் வைத்து, அதில் இயேசு என்ற கோலத்தை வரைகின்றார். 'அத மூடி வைங்க! நான் உங்களுக்கு இதைவிட பெரிய ஆளைப் பற்றிச் சொல்கிறேன்!' என்று அவர் தொடங்கியிருந்தால், 'தம்பி, நீ தேரை விட்டு கீழே இறங்கு!' எனச் சொல்லியிருப்பார் அமைச்சர்.

இ. 'முடியைப் பிடித்து தூக்கிச் செல்கிறார் ஆண்டவர்.' முதல் பகுதியில் பிலிப்பு ஓடினார். இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவரைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இந்த வார்த்தையில் மிகப் பெரிய பொருள் இருக்கிறது. அதாவது, நிதியமைச்சர் திருமுழுக்கு பெறத் தயாராகிவிட்டார் என்று நினைத்ததும் பிலிப்புவின் உள்ளத்தில் நிறைய கற்பனை எண்ணங்கள் ஓடியிருக்கும்: 'ஆகா! எவ்வளவு பெரிய சாதனை இது! நிதியமைச்சரையே நான் மனம் மாற்றியிருக்கிறேன்! பேதுருவும், யோவானும் சும்மா எருசேலம் நகரத்துக்குள்ளேயே இருந்து சாதாரண மக்களை மனம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அவங்க எல்லாம் சுஜூபி பாய்ஸ். கிணற்றுத் தவளைகள்! வெளியே வந்து நாலு ஜனங்கள பார்த்தாதான நல்லா இருக்கும்! நாளைக்கு போய் நான் இதைப் பற்றி அவர்களிடம் சொல்லணும்! திருமுழுக்கு கொடுத்துவிட்டு, இவர் வண்டியிலேயே இவர் ஊருக்குப் போய், இவர் அரசியையும் மனம் மாற்றணும். அரசியை மனம் மாற்றிவிட்டால் மக்களையும் மனம் மாற்றிவிடலாம். மேலும் அரசியை வைத்து நிறைய காரியங்கள் சாதிக்கலாம். நம்ம மக்களுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்கலாம்!' - இப்படி நிறைய எண்ணங்கள் ஓடியிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார் கடவுள். 'அவரின் வழிகள் நம் வழிகள் அல்ல' என்பது இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 'முடியைப் பிடித்து' அலேக்காகத் தூக்கிக் கொண்டு போகிறார் கடவுள். அருள்பணி நிலையில் இப்படி ஒரு உடனடி மகிழ்ச்சி வந்துவிட்டால் உடனே தேக்கநிலை வந்துவிடும். 'நான் செய்வதுதான் சரி' என்ற மனநிலையும், தற்பெருமையும் உடன் ஒட்டிக்கொள்ளும். இந்த நேரத்தில் கடவுள் என் தலையைப் பிடித்து தூக்கிச் செல்வதே சால்பு.

இறுதியாக, இறைவனின் நற்செய்தி முதலில் திருநங்கை ஒருவருக்கே அறிவிக்கப்படுகிறது என்பதையும் நாம் இங்கே அடிக்கோடிட வேண்டும்.

Monday, May 2, 2016

பண்புகள்

நேற்றைய பகுதியைத் தொடர்ந்து, தொடக்கக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறையில் உள்ள 11 பண்புகளை இங்கே பட்டியலிடுவோம்:

1. அர்ப்பணம்
2. புத்துணர்வு
3. மகிழ்ச்சி
4. நம்பிக்கை
5. விடாமுயற்சி
6. தூய்மை
7. ஆன்மீக ஆற்றல்
8. தைரியம்
9. தாராள உள்ளம்
10. இறைவேண்டல்
11. உள்ளிருந்து தொடங்கும் மாற்றம்