Monday, April 1, 2019

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

இன்றைய (2 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 5:1-3,5-16)

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

'முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, 'நலம் பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார். 'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.' (யோவா 5:5-7)

இன்றைய நற்செய்திப் பகுதியில் நாம் காணும் இந்த நலமற்ற நபர் ஒருசேர என் உள்ளத்தில் கோபத்தையும் இரக்கத்தையும் வருவிக்கிறார்.

ஏன்?

ஏன் கோபம்?

ஓராண்டல்ல. ஈராண்டல்ல. முப்பத்தெட்டு ஆண்டுகள் இவர் இந்த மண்டபத்தில் இருக்கிறார். 'ஏன் இன்னும் குணமாகவில்லை?' என்று இயேசு கேட்டபோது, 'யாரும் இறக்கிவிடவில்லை' என்று மற்றவர்களைக் குறைசொல்கின்றார். தொல்பொருள் ஆராய்ச்சியின் படி இக்குளத்தில் பதினெட்டு படிகள் உள்ளன. இவர், வருடத்திற்கு ஒரு படி இறங்கினால்கூட பதினெட்டு ஆண்டுகளில் பதினெட்டு படிகள் இறங்கி நலம் பெற்றிருப்பார். ஆனால், இவர் அதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, யார் இறங்குகிறார்? யார் யாரைத் தள்ளிவிடுகிறார்? என்று வேடிக்கை பார்க்கிறவராகவும், ஒரு வேலைக்கும் போகாமல், 'யாராவது கொடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டுவிட்டு தூங்குவோம். எதுக்க சரியாகணும்? எதுக்கு வேலைக்குப் போகணும்?' என்று ஓய்ந்திருக்கிறார். மேலும், தன் வாழ்க்கை இப்படி இருக்கக் காரணம் மற்றவர்களின் கண்டுகொள்ளாமையும், மற்றவர்களின் போட்டிமனப்பான்மையும் என்று குறைகூறுகின்றார்.

ஏன் இரக்கம்?

முப்பத்தெட்டு ஆண்டுகள் குளிரையும், வெயிலையும், மழையும், குளத்தின் ஈரத்தையும் பொறுத்துக்கொண்டு இந்த நபர் எப்படி மண்டபத்துக்குள் கிடந்திருப்பார்? எத்தனை பேர் அவரைக் கண்டும் காணாமலும் சென்றிருப்பார்கள்? எத்தனை பேர் இவரை இடையூறாக நினைத்து முணுமுணத்திருப்பார்கள்? இவருடைய பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் எங்கே போனார்கள்? அவரைத் தேட யாரும் இல்லையா? 'வானத்துப் பறவைகளுக்கு உணவளிக்கும் இறைவன் எனக்கும் உணவளிப்பார். வயல்வெளி மலர்களை உடுத்தும் கடவுள் என்னையும் உடுத்துவார்' என்று எப்படி முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பை இவரால் நம்ப முடிந்தது? அல்லது ஒருவேளை கடவுளின் தூதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்தக் குளத்தில் இறங்கி நீரைக் கலக்காமல் இருந்திருக்கலாம். ஆக, கடவுள் வருவார் என்ற உச்சகட்ட எதிர்நோக்கில் இவர் இருந்திருக்கலாம்.

இப்படியாக ஒரே நேரத்தில் கோபமும் இரக்கமும் தூண்டுகின்ற இந்த நபர் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'பழக்கத்தின் ஆபத்து'

அது என்ன?

ஒன்று நம் வாழ்வில் பழக்கப்படுமுன் அதைக் களைந்துவிட வேண்டும். 

ஒருவர் மருந்துக்கடைக்கு சென்று அடிக்கடி அமிர்தாஞ்சன் தைலம் வாங்கினாராம். கடைக்காரர் அவரிடம், 'சார், இத அடிக்கடி பயன்படுத்தாதீங்க! அப்புறம் இதுவே பழக்கமாயிடும்! அப்புறம் ஆபத்தாயிடும்!' என்றார். அதற்கு வேடிக்கையான இந்த வாடிக்கையாளர், 'பதினெட்டு ஆண்டுகளாக நான் தைலம் தேய்க்கிறேன். இது என்ன பழக்கமாவா ஆகிவிட்டது?' என்று கேட்டாரம்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தைலம் தேய்த்தல் தன் விடமுடியாத பழக்கம் ஆகிவிட்டதை அவர் உணரவில்லை. 

முடக்குவாதம் நம் நற்செய்திக் கதைமாந்தரின் பழக்கமாகிவிட்டது. அந்த இடம் பழகிவிட்டதால் அந்த நோயும் அவருக்குப் பழகிவிட்டது. தீய பழக்கங்களை நாம் உள்வாங்கிக்கொள்ளும்போது நாமும் அடுத்தவரைக் குறை சொல்ல ஆரம்பிப்போம். பழக்கத்தை விட மறுப்போம். சாக்குப் போக்குகள் சொல்வோம். 'எல்லாரும்தான் இந்த மண்டபத்தில் இருக்கிறார்கள். நான் மட்டுமா இருக்கிறேன்?' என்று அந்த நபர் கேட்டதுNபுhல, 'எல்லாரும்தான் இதைச் செய்கிறார்கள். நான் மட்டுமா இதைச் செய்கிறேன்?' என்று கேள்விகள் கேட்க ஆரம்பிப்போம் நாம்.

இன்று நான் கற்றுக்கொண்ட அல்லது என்னைச் சுற்றிக்கொண்ட பழக்கம் எது?

அதை விட நான் என்ன முயற்சி செய்கிறேன்?

'நல்லாதானே இருக்கேன்! இப்பழக்கம் இன்னும் கொஞ்சநாள் இருக்கட்டும்' அல்லது 'இப்பழக்கம் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' என்று பயப்படுகிறேனா?

'அவர் வந்து விடுவிப்பார்' என்று ஆண்டவருக்காக காத்திருக்கிறேனா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கட்டுக்களில் இறங்க நான் ஆரம்பிக்கிறேனா?

எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் ஒருநாள் விடத்தான் வேண்டும். அந்த நாள் இந்நாளாக ஏன் இருக்கக் கூடாது?

மண்டபத்தில் படுத்திருந்தது போதும். எழுவோம். இல்லம் செல்வோம்.

1 comment:

  1. அழகானதொரு,யோசிக்க வைக்கும் பதிவு. இன்றையக் கதை மாந்தரின் மேல் கோபமும்,இரக்கமும் ஒரு சேர வருவதாகக் கூறுகிறார் தந்தை.ஒரு சாமான்யனுக்கு இரக்கம் மட்டும் தான் வரும்.தந்தை போல் மெத்தப்படித்தவர்களுக்கு...... இதன் காரண காரியத்தை ஆராய்பவர்களுக்கு மட்டுமே கோபம் வரலாம். எதையுமே அனுபவிப்பவரின் நிலையில் இருந்து பார்த்தால் தான் நம் கண்களும்,உள்ளமும் ஒருசேரத் திறக்கும்.அதே வேளையில் தந்தை சொல்லும் " ஒரு பழக்கம் நம்மை அடிமைப்படுத்துமுன் அதைக்களைந்து விட வேண்டும்." முற்றிலும் உண்மையே! என்னிடம் உள்ள கெட்ட பழக்கத்தை களைய ஆண்டவருக்காக காத்திருக்கிறேனா? ஆத்தும சோதனைக்கு அறைகூவல் விடுகிறார் தந்தை.ஒருநாள் விட்டுத்தான் ஆக வேண்டும் எனும் பழக்கத்தை ஏன் இன்று விடக்கூடாது? மண்டபத்தை விட்டு எழுவோம்; இல்லம் செல்வோம். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete