Wednesday, April 3, 2019

மோசே

இன்றைய (4 ஏப்ரல் 2019) முதல் வாசகம் (விப 32:7-14)

மோசே

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகத்தில் பேசப்படும் ஒரு நபர் மோசே.

'தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப் போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார் ...' என்கிறார் இயேசு.

மோசே மக்கள் சார்பாக நிற்கும் நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

மோசே சீனாய் மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் இருக்கின்றார். இந்த நேரத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆரோனின் தலைமையில் தங்களுக்கென்று பொன்னாலான கன்றுக்குட்டி ஒன்றைச் செய்து அதை வழிபடுகின்றனர். கடவுளின் கோபம் பற்றி எரிகிறது. 'என் மக்கள், என் அன்புக்குரியவர்கள்' என்று தூக்கிவந்த கடவுள், 'உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர்' என்று மோசேயிடம் சொல்கின்றார் கடவுள். அவர் மக்களை அழித்தொழிக்கப் போவதாகச் சொன்னபோது அவர்களுக்காக மன்றாடுகிறார் மோசே.

மூன்று காரணங்களைச் சொல்லி கடவுளின் கோபத்தைத் தணிக்கிறார் மோசே.

(அ) நீர் அரும் பெரும் செயல்கள் புரிபவர். உமக்கு இம்மக்களின் செயல் எல்லாம் ஒரு பொருட்டா - என்று கடவுளின் மாண்பையும் ஆற்றலையும் சுட்டிக்காட்டுகின்றார்.

(ஆ) எபிரேயர்களின் ஏளனப் பேச்சு - அதாவது, நீர் மக்களை அழித்துவிட்டால் அது பகைவர்கள் உம்மைக் குறித்து ஏளனம் செய்யுமாறு ஆகிவிடும்.

(இ) மூதாதையருக்கு அளித்த வாக்குறுதி - வானத்து விண்மீன் போல கடற்கரை மணலைப் போல பலுகச் செய்வதாக வாக்களித்த கடவுள் இப்போது அழிக்க முற்படலாமா?

இந்தப் பின்புலத்தில்தான் 'மோசே தங்கள் சார்பாக நிற்பதாக' மக்கள் எண்ணினார்கள். ஆனால், தங்களிலேயே இயல்பு மாற்றம் இல்லாமல் வெறும் ஒருவரின் சான்றை மட்டும் வாழ்தல் நல்லதன்று என்கிறார் இயேசு. மோசேயின் பரிந்து பேசுதல் மக்களைக் காப்பாற்றியது எனினும், கடவுள் மக்களைக் கொள்ளை நோயால் தண்டிக்கவே செய்தார்.

ஆக, மோசே என்பவர் ஒளியைச் சுட்டிக்காட்டினார். அவரின் சுட்டிக்காட்டுதலைக் கைக்கொண்டு ஒளியை நோக்கி வருதலே சால்பு.

1 comment:

  1. " என் மக்கள் என் அன்புக்குரியவர்கள்" என்று உரைத்த இறைவனே " உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டார்கள்" என்று மோசேயைப் பார்த்துக் கூற,தன் மக்களுக்காக சாம,பேத,தான,தண்டம் என அத்தனையையும் அவிழ்த்து விட்டு அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார் மோசே.நம் வாழ்க்கையிலும் கூட நாம் தத்தளித்து நின்ற தருணங்களில் நமக்காகப் பரிந்து பேச வேண்டியது நாம் செய்த நல்லது/ கெட்டது அன்றி வேறு யாருமல்ல...அது இறைவனாகவே இருப்பினும் கூட. எத்தனை பேர் நமக்காகப் பரிந்து பேச வரிசை கட்டி நின்றிடினும் மாற வேண்டியது "உள்மன இயல்பு மட்டுமே" என்கிறார் தந்தை.ஒரு டார்ச் லைட்டானது ஒளியைத்தான் பாய்ச்ச முடியுமேயன்றி நம் பின்னே வருமென எதிர்பாப்பது முட்டாள் தனமன்றி வேறென்ன? ஆனாலும் தன் மக்களுக்காக மோசே எடுத்து வைக்கும் அனைத்துக் காரணங்களும் என்னை நெகிழவைத்தது உண்மை. இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களிலிருந்து யாரையேனும் எப்பொழுதேனும் என் வார்த்தைகள் காப்பாற்றியுள்ளனவா? யோசிக்க வைப்பது மோசே மட்டுமல்ல; தந்தையின் வார்த்தைகளும் தான். என் நெஞ்சம் நிறை நன்றிகள்!!!

    ReplyDelete