Thursday, April 25, 2019

மீன்பிடிக்கப் போகிறேன்

இன்றைய (26 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 21:1-14)

மீன்பிடிக்கப் போகிறேன்

இயேசுவின் இறப்பு ஒரு தோல்வி என நினைத்த திருத்தூதர்கள், தங்களின் தொழிலைப் பார்க்கப் புறப்பட்டுவிடுகின்றனர். சீமோன் பேதுரு, 'நான் மீன் பிடிக்கப் போகிறேன்!' என்று சொல்ல, மற்றவர்களும், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று புறப்படுகின்றனர்.

ஏற்கனவே மீன்பிடித்துக்கொண்டிருந்த சீமோன் பேதுருவையும் மற்ற சீடர்களையும், 'உங்களை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்' என்று சொல்லி அழைக்கின்றார். மனிதர்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று மீன்பிடிக்கப் புறப்படுகின்றனர்.

ஏன் பேதுரு அப்படி புறப்பட்டார்? மனிதர்களைக் பிடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லையா?

அ. விரக்தி. 'இயேசுவை மெசியா என நினைத்தோம். உரோமையின் பிடியிலிருந்து மீட்பார் என நினைத்தோம். ஆனால், இப்படி தோல்வியாய் இறந்து போனாரே' என்று சிந்தித்த பேதுரு விரக்தி அல்லது சோர்வு அடைந்திருக்கலாம்.

ஆ. கோபம். இயேசுவின் இறப்புக்குக் காரணமான அவருடைய எதிரிகள் மேல் உள்ள கோபம். இந்தக் கோபத்தால் மனிதர்களையே பிடிக்காமல் போயிருக்கலாம் இவருக்கு. 'நீங்கள் எல்லாம் மனுஷங்களாடா? அவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்?' என்று தனக்குள்ளே கேட்டிருப்பார்.

இ. குற்ற உணர்வு. இயேசுவை தான் மூன்று முறை மறுதலித்ததால், 'ச்சே! நான் இப்படி செய்துவிட்டேனே!' என்ற குற்றவுணர்வு இவருடைய முகத்தில் அறைய, அதிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது தன் மனத்தை மாற்றிக் கொள்வதற்காக, அல்லது, 'இனி நான் சீடர் எனப்பட தகுதியற்றவன்' என்ற தன்னிரக்கத்தில் அவர் மறுபடியும் மீன்பிடிக்கப் போயிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும்,

கலப்பையில் கை வைத்த சீமோன் திரும்பிப் பார்க்கிறார்.

தன் இலக்கை மாற்றுகிறார்.

தன் முதன்மைகளை மாற்றுகிறார்.

வாழ்வில் நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக நடக்கும்போது நாமும் பொறுமை இழந்து பாதையை மாற்றலாமே என்று அவசரப்படுகிறோம். 'புதிய வாழ்க்கை போரடிக்கிறது. பழைய வாழ்க்கைக்கே நான் போகிறேன்' என்று நாம் மீண்டும் நம் பழைய இயல்புக்குள் நுழைகிறோம்.

சீமோனின் இந்தச் செயலையும், திருத்தூதர்களின் இந்தப் பின்பற்றுதலையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. இவர்கள் மீன்கள் இல்லாமல் கஷ்டப்படும்போது அங்கே வருகின்ற இயேசு அவர்கள் மிகுதியான மீன்பாட்டைக் கண்டுகொள்ள உதவுகிறார்.

மேலும், அவர்களை, 'பிள்ளைகளே' என அன்போடு விளித்து, 'உணவருந்த வாருங்கள்' என்று அவர்களை அழைக்கின்றார்.

ஆக, நாம் நம் வாழ்க்கைப் பாதையைத் திருப்பினாலும் நம்மைப் பின்தொடர்கின்ற தந்தையாக, நமக்கு உணவளிக்கும் தாயாக முன்வருகிறார் கடவுள்.

நம் வாழ்வின் விரக்தி, கோபம், குற்றவுணர்வும் கூட இறையனுபவத்தின் வாசல்கள் என்பதை உணர்த்துகின்றது இன்றைய வாசகம்.

'ஐயோ! என்னால் முடியவில்லை!' என்று முன்னேறிச் செல்ல முடியாமல் வாழ்க்கை முட்டுக்கட்டை போட்டாலும், நாம் நம் முடிவுகளில் பின்வாங்க நேரிட்டாலும் கவலை வேண்டாம்.

ஒவ்வொரு பின்னடைவும் இயேசுவோடு உணவருந்துவதற்கான ஒரு வாய்ப்பே!

அவர் நம்மை கடிந்துகொள்ளும் இறைவன் அல்லர்!

1 comment:

  1. உண்மைதான்! நம் வாழ்வின் விரக்தி,கோபம்,குற்றவுணர்வும் கூட இறையனுபவத்தின் வாசல்கள் என்று உணர்த்துகின்றன இன்றைய வாசகமும்,பதிவும்.நாம் சந்திக்கும் எதிர்மறை விஷயங்கள் நம் பாதையில் நமக்கு முட்டுக்கட்டையாக வந்திடினும், அவையே நம் முடிவுகளில் நமக்குப் பின்னடைவைத் தந்திடினும் "கவலை வேண்டாம்" என்று நம்மைத்தேற்றுகின்றன தந்தையின் வார்த்தைகள்.ஏனெனில் ஒவ்வொரு பின்னடைவும் இயேசுவோடு உணவருந்துவதற்கான ஒரு வாய்ப்பே! அவர் நம்மைக்கடிந்து கொள்ளும் இறைவன் அல்லர்.அருமை!அசரீரியாக வந்து விழும் தந்தையின் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்; 'அவரோடு' உணவருந்தும் வாய்ப்புக்காக நன்றி கூறுவோம்.....

    ReplyDelete