Tuesday, April 2, 2019

மறக்கவே மாட்டேன்

இன்றைய (3 ஏப்ரல் 2019) முதல் வாசகம் (எசா 49:8-15)

மறக்கவே மாட்டேன்

இன்றைய நாள்களில் நம் வீதிகளுக்கு நம் 'பொன்னான' வாக்குகளைக் கேட்டு வரும் வேட்பாளர்கள், 'மறக்காம உங்க ஓட்ட இந்த முத்திரைக்குப் போடுங்க!' என்று சொல்லிக்கொண்டே வருகிறார்கள். என்னதான் நாம 'மறக்காம' போட்டாலும், அவர்கள் நம்மை 'மறந்துவிடுவது' உறுதி. இல்லையா?

'மறத்தல்' - மேலிருப்பவர்கள் கீழிருப்பவர்கள்மேல் தொடுக்கும் ஒரு வன்முறை.

இன்றைய முதல் வாசகம் 'மறத்தல்' என்ற ஒற்றைச் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது. இந்தப் பாடத்தின் சூழல் பாபிலோனிய அடிமைத்தனம். பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், தங்கள் கடவுள் தங்களை மறந்துவிட்டதாக எண்ணினர்.

கடவுளால் மறக்கப்படுவதுதான் உச்சகட்ட துன்பம். ஏனெனில், அவர் அனைத்தையும் நினைவில் கொள்பவர்.

ஆண்டவராகிய கடவுள் தங்களை தூய இனமாகத் தெரிவு செய்ததை மறந்துவிட்டார் என்றும், தங்களோடு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை மறந்துவிட்டார் என்றும், தங்களுக்குச் செய்த வல்ல செயல்களை, தங்களை தமது புனித புயத்தால் வழிநடத்தி வந்ததை மறந்துவிட்டார் எனவும் கருதினர்.

ஏனெனில், கடவுள் மறக்கும் நபர் இறக்கிறார்  - அல்லது இறக்கும் நபர் கடவுளின் நினைவிலிருந்து மறைகிறார் - என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.

இந்நிலையில்தான் கடவுள் எசாயா வழியாக, மாபெரும் வாக்குறுதி ஒன்றைக் கொடுக்கின்றார்: 'பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்.'

இங்கே, கடவுள் தன் நினைவுகூறுதலை, 'குனிந்து பார்த்தல்' என்ற வார்த்தையைக் கொண்டு விளக்குகிறார். எப்படி?

'இரக்கம் காட்டுதல்' ('ஹனான்') என்ற எபிரேய வார்த்தைக்கு 'தன் மடியில் அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் குனிந்து பார்த்தல்' என்பது பொருள். குனிந்து பார்க்கும்போது நம் பார்வை ஒன்றின் மேல் கூர்மைப்படுகிறது. பலவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்கள் ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றன. படிப்பது, பணம் எண்ணுவது, மாத்திரை எடுப்பது, எழுதுவது போன்ற முக்கியமான தருணங்களில் நாம் குனிந்தே இருக்கின்றோம். குனிந்து பார்ப்பது எதுவும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

அப்படியே இறைவன் தன்னை தாய்க்கும் மேலாக உருவகப்படுத்தி தான் மறப்பதில்லை என்றும், தன் நினைவுகூறுதலால் இஸ்ரயேல் மறுபடியும் தழைக்கும் என்றும் உறுதிகூறுகின்றார்.

இந்த வாக்குறுதி நமக்குத் தரும் பாடம் என்ன?

இறைவனின் உடனிருப்பு.

இந்த உடனிருப்பு நமக்கு வாழ்வும் வளமும் தருகிறது.

இன்று அவர் நம்மை மறப்பதைவிட நாம்தான் அதிக நேரம் அவரை மறந்துவிடுகிறோம்.

மறதி - ஒரு வன்முறை. அது மனிதர் மேலும் வேண்டாம். கடவுள் மேலும் வேண்டாம்.


2 comments:

  1. "கடவுள் மறக்கும் நபர் இறக்கிறார்.அல்லது இறக்கும் நபர் கடவுளின் நினைவிலிருந்து மறைகிறார்"..., மறத்தல் குறித்த ஒரு எதிர்மறையான கருத்து இதற்குமேல் இருக்க முடியாது.அதே சமயம் " இரக்கம் காட்டுதல்" குறித்த தந்தையின் நேர்மறையான கருத்து இறைவனின் தாயன்புக்கு வலு சேர்க்கிறது."பால் குடிக்கும் தன் மகவைத்தாய் மறந்திடினும், கருத்தாங்கியவள் தன் பிள்ளையை மறந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன்.".... தன் படைப்பின் மீது அன்பு செலுத்த,இரக்கம் காட்ட வேறொரு தெய்வமுண்டோ? தெரியவில்லை.இந்த அன்பும்,இரக்கமும் நமக்கு எடுத்துச்சொல்லும் விண்ணகத்தந்தையின் 'உடனிருப்பு' நமக்கு வாழ்வும்,வளமும் தருகிறது என்கிறார் தந்தை. ஆனால் இறைவனின், அன்பிற்கெதிராக இருக்கும் மனிதனின் 'மறத்தல்' ஒரு மனிதன் மேலும் வேண்டாம்; இறைவன் மேலும் வேண்டாம். இதுவும் இன்றையப்பாடமே! அழகான விஷயங்களை இன்றே ,இப்பவே செய்ய வேண்டும் எனும் ஒரு தூண்டுதலைத்தரும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இறைவனின் உடனிருப்பு நமக்கு வாழ்வும், வளமும் தருகிறது.
    நாம் தான் அதிக நேரம் இந்த மகத்தான உடனிருப்பை மறந்து விடுகிறோம்.
    மறதி ஒரு வன்முறை...
    அது மனிதர் மேலும் வேண்டாம்;
    கடவுள் மேலும் வேண்டாம்....
    நன்று.... நன்றி!🙏
    Excellent....

    ReplyDelete