Wednesday, April 24, 2019

வேகவைத்த மீன் துண்டு

இன்றைய (25 ஏப்ரல் 2019) நற்செய்தி (லூக் 24:33-49)

வேகவைத்த மீன் துண்டு

'முத்தமிட்டுப் பசியாற முடியுமா? கண்ணீர் விட்டுத் தாகம் தீர்க்க முடியுமா?' என்ற சொலவடை நம் ஊரில் உண்டு.

'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' - இது இன்னொரு சொலவடை.

இயேசு இறந்துவிட்டார். உயிர்த்துவிட்டார். உயிர்த்த இயேசு எம்மாவு சீடர்களுக்குத் தோன்றுகிறார். இயேசுவின் உயிர்ப்பு அவரின் சீடர்களுக்கு பிதற்றலாகவும், வியப்பாகவும், திகிலாகவும், மகிழ்ச்சியாகவும் தோன்றுகிறதே தவிர அவர்கள் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.

இறந்தவர்களின் கல்லறையில் மூன்று நாள்கள் வரை அவர்களின் ஆவி குடியிருக்கும் என்பது யூத நம்பிக்கை. இந்தப் பின்புலத்தில்தான் இயேசுவின் ஆவியை மற்றவர்கள் கண்டிருக்கலாம் என நினைத்து அமைதியாக இருக்கின்றனர். கொஞ்சம் அச்சமும் கொள்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் இயேசு அங்கே வருகின்றார்.

ஆவி போல திடீரென வருகின்றார். ஆனால், வந்தவர், தான் ஆவி அல்ல என்று காட்டுவதற்காக அவர்கள் முன் உணவு உண்கின்றார்.

'வேகவைத்த மீன் துண்டு'

இதுதான் இன்றைய சிந்தனையின் மையம்.

இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதைக் காட்டுகின்ற ஓர் அடையாளம் இது.

இது சீடர்களைப் பற்றி நமக்கு முக்கியமான விடயத்தைச் சொல்கிறது. இயேசு இறந்துவிட்டார் என்று சீடர்கள் வதங்கிவிடவும் இல்லை. உயிர்த்துவிட்டார் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை.

தங்களுடைய வேலையைத் தாங்கள் செய்கிறார்கள். மீன் பிடிக்கிறார்கள். அல்லது மீன் வாங்குகிறார்கள். சமைக்கிறார்கள். உண்கிறார்கள்.

வாழ்வோ, சாவோ, வெற்றியோ, தோல்வியோ நம் வாழ்க்கையை நாம் நகர்த்தியே ஆக வேண்டும். துயரப்பட்டு சோர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

ஆக, நம் வாழ்வின் துன்பமான நேரங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வேகவைத்த மீன் துண்டு நமக்கு உருவகமாகச் சொல்கிறது.

ஒருவேளை, 'எங்களிடம் ஒன்றும் இல்லை' என்று சீடர்கள் சொல்லியிருந்தால் இயேசு கோபப்பட்டிருப்பார். ஏனெனில், தனக்குப் பின் தன் இறையாட்சி நகர வேண்டும் என நினைத்தாரே தவிர, தன் இறப்புக்காக துக்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவ்வாறாக, முதலில் நாம் பசியாற வேண்டும். நம் வாழ்வை எதிர்கொள்ள நம் உடலுக்குத் தெம்பு அவசியம். இலத்தீனில், 'ப்ரீமும் எஸ்த் வீவேரெ' என்ற பழமொழி உண்டு - முதலில் உயிர், மற்றதெல்லாம் அடுத்துதான்.

உயிர் வாழத் தயாராக இருந்த இவர்களின் மனக்கண்களைத் திறக்கிறார் இயேசு. பசியால் புறக்கண்கள் அடைந்துவிட்டால் அகக்கண்களைத் திறக்க முடியாது இயேசுவாலும். மேலும், சீடர்கள் தொடர்ந்து காத்திருக்கவும் வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.

நம் வாழ்வு நாம் எதிர்பார்ப்பதுபோல நமக்கு அமையாதபோது, துன்பம் நம்மைச் சூழும்போது, நம் அன்பிற்குரியவர் நம்மைவிட்டு பிரிந்து வெறுமை ஏற்படும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ரொம்ப சிம்பிள்: 'வேக வைத்த மீன் துண்டை உண்பது'

மற்றதை நேரம் குணமாக்கும்.

1 comment:

  1. "இயேசு இறந்துவிட்டாரென்று சீடர்கள் வதங்கிவிடவும் இல்லை; உயிர்த்து விட்டாரென்று துள்ளிக்குதிக்கவும் இல்லை."அவர்களின் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள். புறக்கண்கள அடைந்துவிட்டால் அகக்கண்களைத் திறக்க முடியாது என்பதால் சீடர்களின் மனக்கண்களைத் திறக்கிறார் இயேசு. தந்தையின் வார்த்தைகள் ஓங்கி ஒலிக்கின்றன..... நம் வாழ்வில் துன்பம் சூழ்கையில்,பிரியமானவரின் பிரிவு நம்மைப் புரட்டி எடுக்கையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் " வேக வைத்த மீன் துண்டை உண்பது" மற்றதை நேரம் பார்த்துக்கொள்ளும். . உண்மையே!
    "வேக வைத்த மீன் துண்டு" எனும் வார்த்தைகளைப் பார்த்தவுடன் என் மனம் நினைத்ததெல்லாம் " அவற்றை வறுத்திருக்கலாமே!" என்பதே! ஆனால் தந்தை அதே வார்த்தைகளை இன்றைய "சிந்தனையின் மையமாக்கி" விட்டார். அதனால் தான் தந்தையை ஒரு குருமடத்தில் குரல் ஒலிக்கச்செய்த இறைவன்,என்னை சமையலறையில் ஐக்கியமாக்கிவிட்டார். அவரவர் தகுதிக்கேற்ப இருக்க வேண்டிய இடம்! அருமையானதொரு பதிவு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete