Monday, April 8, 2019

உயர்த்திய பின்

இன்றைய (9 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:21-30)

உயர்த்திய பின்

ஆங்கில இலக்கியக்கூறுகளில் ஒன்று 'ஐரனி' ('முரண்' அல்லது 'நேர் எதிர்ப் பொருள் கொடுக்கும் சொற்றொடர்'). அதாவது, சொல்லுகின்ற ஒன்றாகவும் பொருள் வேறொன்றாகவும் இருப்பது.

யோவான் நற்செய்தியில் இது நிறைய இடங்களில் காணக்கிடக்கிறது. எப்படி? இயேசு ஒன்றைச் சொல்வார். அவருடைய சொற்களைக் கேட்பவர்கள் வேறொன்றைப் புரிந்துகொள்வார்கள். அல்லது வாசிக்கும்போது மேலோட்டமான ஒரு பொருள் தெரியும். ஆழ்ந்து வாசித்தால் பொருள் மாறுபடும். சிறந்த உதாரணம். கானாவூரில் திருமணம் ஒன்று நடந்தது (யோவா 2:1-12) என யோவான் எழுதுகிறார். திருமணத்தில் அங்கே எல்லாம் இருந்தது. ஆனால், மணமக்கள் இல்லை. இதுதான் முரண். ஆனால், ஆழமாக வாசித்தால் இயேசுவே அங்கே மணமகனாக இருப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என இயேசு சொல்ல, யூதர்களோ, 'ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?' என்று கேட்கின்றனர்.

இயேசுவை எவ்வளவு மனம் உடையச் செய்ய முடியுமோ அவ்வளவு மனமுடையச் செய்திருக்கிறார்கள் அவருடைய எதிரிகள். நாம் பேசுவது ஒன்றாக இருக்க அடுத்தவர் அதை வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளும்போது நாம் பெரிய தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு சூழலில்தான் இயேசு இருக்கின்றார். ஆனாலும், மிக இலகுவாக இதைக் கையாளுகின்றார்.

'மானிட மகனை உயர்த்திய பின்பு' என்ற ஒரு புதிய கருத்தை அவர்களுக்கு முன்வைக்கின்றார். 'உயர்த்தப்படுதல்' என்பது யோவான் நற்செய்தியில் இயேசுவின் 'சிலுவை இறப்பையும்' 'அவரின் விண்ணேற்றத்தையும்' குறிக்கிறது.

அதே வேளையில், இயேசு உயர்த்தப்படுவதை அறிய மனித மனமும் உயர்த்தப்பட வேண்டும். உயர்த்தப்பட்ட மனம் மட்டும்தான் நம்பிக்கை கொள்ளும். தாழ்வான எண்ணங்களிலும் செயல்களிலும் சிக்கிக்கொள்கிற மனம் மன்னிப்பு பெறாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்' என்ற வாக்கியம் ஆறுதல் தருவதாக இருக்கிறது.

ஆக, முரண்கள் நம் வாழ்வில் வருவது இயல்பு. பல நேரங்களில் நம் வாழ்வே ஒரு முரணாகவும் இருக்கும். ஆனால், முரண்களிலிருந்து நாம் வெளியேற எண்ணங்களை உயர்த்துதல் அவசியம்.


1 comment:

  1. " உயர்த்தப்படுதல்"... இயேசு உயர்த்தப்படுவதை அறியவும்,நாம் நம்பிக்கை கொள்ளவும்,தாழ்வான எண்ணம்,செயல்களில் சிக்கிக்கொள்வதை விடுத்து, மன்னிப்பு பெறவும் நம்முடைய " மனித மனமும்" உயர்த்தப்பட வேண்டுமென்கின்றன இன்றைய வாசகங்கள்.இவற்றை எடுத்துச்சொன்ன இயேசுவைப்புரிந்து கொண்ட மக்கள் போல் நாமும் அவர் வாயினின்று உதிரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள முயல்வோம்.முரண்கள் நிறைந்த வாழ்விலிருந்து நம்மை உயர்த்த, நம் எண்ங்களை உயர்த்துவது முக்கியமெனக் கூறும் தந்தைக்கு செவிமடுப்போம்.
    புனித வெள்ளி நெருங்க,நெருங்க தந்தை தரும் செய்தி நம் மனத்தை விண்ணோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறது.அழைப்பை ஏற்போம்; ஆண்டவனை தரிசிப்போம்; தந்தைக்காக வேண்டுதல் செய்வோம்!!!

    ReplyDelete