Sunday, December 3, 2017

தூய சவேரியார்

நாளைய (4 டிசம்பர் 2017) நற்செய்தி: தூய சவேரியார்

அகில உலகத் திருச்சபை திருப்பலி வாசகம் மத்தேயு 8:5-11 என இருந்தாலும், நம் தாய்த்திருநாட்டில் நாளைய தினம்தான் தூய சவேரியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். ஆக, திருநாளுக்குரிய நற்செய்தி வாசகத்தையே (மாற்கு 16:15-20) சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தான் விண்ணேற்றமடையும் முன் தன் சீடர்களைச் சந்திக்கின்ற இயேசு தன் பிரியாவிடைச் செய்தியாக, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்!' என்ற கட்டளையை விட்டுச்செல்கிறார்.

நம்பிக்கை கொண்டோர் இத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்போர் என்று இயேசு இவ்வாறு பதிவு செய்கின்றார். இந்த அறிகுறிகளை என் பணியோடு பொருத்திப்பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது:

'அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்' - நம்ம பேச்ச மனுசங்களே கேட்க மாட்றாங்க. இதுல பேய்கள் எப்படி கேட்டு ஓடும்!
'புதிய மொழிகளைப் பேசுவர்' - நமக்கு தமிழே தரிகனத்தாம் போடுது!
'பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்' - நமக்கு மண்புழுவைப் பார்த்தாலே பயமா இருக்கு!
'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது' - புது இடத்துல மினரல் வாட்டர் குடிச்சாலே த்ரோட் இன்ஃபெக்ஷன் ஆயிடுது!
'அவர்கள் உடலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்' - இது மட்டும் எக்ஸெப்ஷன். இந்த அறிகுறி மட்டும் என் வாழ்வில் பல நேரங்களில் நடந்துருக்கு!

நிற்க.

இந்த நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து தூய சவேரியார் தூய இஞ்ஞாசியாருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்தக் கடிதம்தான் நாளைய கட்டளை செபத்தின் இரண்டாம் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் நான் இரசித்தவற்றை இன்று பதிவு செய்கிறேன்:

1. கடிதத்தின் தலைப்பு: 'நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு!'

2. தென் இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து இதை எழுதுகிறார். நாள், இடம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

3. 'இங்கு வந்த நாளிலிருந்து நான் ஓய்வெடுக்கவேயில்லை. கிராமங்கள்தோறும் சென்றேன். 'வலது எது இடது எது' என தெரியாத குழந்தைகளும், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் என்னைச் சுற்றியே இருக்கின்றார்கள். எனக்கு கட்டளை செபம் சொல்லக் கூட முடியவில்லை.

இதில் இரண்டு விடயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று, நற்செய்திப் பணி அல்லது பங்கின் மேய்ப்புப் பணி குழந்தைகளிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். குழந்தைகள் வந்துவிட்டால் வளர்ந்தவர்களும் உடன் வந்துவிடுவார்கள். இரண்டு, தன் வேலையை செபத்தோடு இவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. 'நான் செய்யும் வேலையே என் செபம்' என சில அருட்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னதான் நாம் மக்களுக்காக வேலை செய்தாலும், அவை நம் செபத்தோடு சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.

4. 'நல்ல அறிவாளிகளையும் நான் கண்டேன்.' அதாவது, தான் பணியாற்றும் இடத்தில் தனக்குக் கீழ் இருப்பவர்களும், தன்னால் பயன்பெறுபவர்களும் அறிவற்றவர்கள் அல்லர், மாறாக, அறிவாளிகள் என்கிறார். அதாவது, மற்றவர்களின் திறனை மதிக்கின்றார். என் பணித்தளத்திலும் கூட, என்னைவிட அறிவாளிகள், திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறனை நான் மதிப்பதே சால்பு.

5. 'என்னை எங்கு வேண்டுமாலும் அனுப்பும்!' - இது இவரின் செபம்.

இந்தக் கடிதத்தில் புதிய இடத்தில் தான் அனுபவிக்கும் வெயில், குளிர், மழை, பாதுகாப்பின்மை, நோய், வசதிக்குறைவு எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட இல்லை.

'நான் விரும்பித்தானே வந்தேன்!' என்று எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்த ஒருவரால்தான் இப்படி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும்.

சவேரியாரின் வாழ்வியல் விருதுவாக்கு: 'மேன்மை' ('மாஸ்ஸிமோ').

நாம் செய்யும் எல்லாவற்றிலும் இந்த மேன்மை இருக்க இவர் நம்மைத் தூண்டுவாராக.

3 comments:

  1. குமரிமுனை மக்கள் 'கோட்டாறு சாமி' எனக் கொண்டாடும் புனித சவேரியாரின் திருநாளை நாளை கொண்டாடுகிறோம்.சீரியஸாக வடிக்கப்பட்ட இந்தப்பதிவில் கொஞ்சம் நகைச்சுவையையும்்இழைய விடுகிறார் தந்தை.ஒவ்வொரு அருட்பணியாளரின் தாரக மந்திரமான " படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்னும் வரியைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'நம்பிக்கை கொண்டோரின் அறிகுறிகளைத் தன் அறிகுறிகளோடு பொருத்திப் பார்க்கிறார். தந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு இது ' நகைச்சுவைக்காக' சொல்லப்பட்டதேயன்றிஇந்த ஒப்பிடுதலில் உண்மை இல்லை என்பது புரியவே செய்யும்.தூய சவேரியார் தூய இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலின் சாராம்சம் அருமை.அந்த மடல் ஒவ்வொரு அருட்பணியாளருக்குமே வரையப்பட்டதாக எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொரு அருட்பணியாளரைப் பற்றியும் இல்லறத்தோரான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன."நான் விரும்பித்தானே ளவந்தேன்வெயில்,மழை,குளிர்,பாதுகாப்பின்மை,நோய்,வசதிக்குறைவு, இவை எதைப்பற்றியும் கவலைப்படாத என்னை எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்" இறைவனிடம் இவ்வாறு மனம் திறக்கும் இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் " நன்றாகச் செய்தீர்கள்.இன்னும் செய்யுங்கள்,நாங்கள் துணை நிற்கிறோம்" எனும் வார்த்தைகளே! சவேரியாரிடம் காணப்பட்ட "மேன்மை" எனும் விருதுவாக்கு இவர்களையும் பற்றிக்கொள்ள நாம் இவர்களுக்காக செபிப்போம்! அனைவருக்கும் தூய சவேரியாரின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. என்னதான் நாம் மக்களுக்காக வேலை செய்தாலும், அவை நம் செபத்தோடு சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது//

    A good lesson.. ages since I have prayed due to work and family pressure

    ReplyDelete
  3. Great 🤝 dear Mrs.Catherine...

    ReplyDelete