Thursday, December 21, 2017

அன்னா

நாளைய (22 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:46-56)

அன்னா

நாளைய நற்செய்தி வாசகத்தில் மரியாளின் பாடலை வாசிக்கின்றோம். மரியாளின் பாடல் சாமுவேல் முதல் நூலில் உள்ள அன்னாவின் பாடலின் தழுவல் என்பது எல்லா விவிலிய ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆக, இந்தப் பாடலின் கதாநாயகியாம் அன்னாவை (நாளைய முதல் வாசகத்தில் சந்திக்கிறோம்) இவரை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

முதல் ஏற்பாட்டு அன்னா எனக்கு என்றும் ஆச்சர்யம் தரக்கூடிய கதாபாத்திரம்.

எதற்காக?

'இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவரின் சக்களத்தி அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.' (1 சாமு 1:7)

அன்னாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதை ஒரு குறையாகச் சொல்லி அவளின் சக்களத்தி அவளைத் துன்புறுத்துகிறாள்.

இந்தக் கண்ணீரை ஆண்டவரிடம் முறையிட வருகிறார் அன்னா.

அங்கு என்ன நடக்கிறது?

ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா, 'இல்லை! என் தலைவரே! நான் உள்ளம் நொந்த பெண்...ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடுச்சாம் என்கிற கதையா, சக்களத்தி கொடுமையை கடவுளிடம் முறையிடப்போன அன்னாவுக்கு, குடிகாரி என்ற பட்டம் கிடைக்கிறது.

ஆனால், இங்கே எனக்கு அன்னாவிடம் பிடிச்சது என்னவென்றால், அவரின் திடமான உள்ளம். 'யார் என்ன சொன்னாலும், யார் என்னை எப்படிப் புரிந்து கொண்டாலும், என்னைப் பற்றி எனக்குத் தெரியும். என் அருமை எனக்குத் தெரியும். என் குறை எனக்குத் தெரியும்' என துணிவாக நிற்கிறார்.

இது எனக்கு நல்ல பாடம். என் அருமையை அடுத்தவரின் பாராட்டில் அல்லது தட்டிக்கொடுத்தலில் அல்லது உற்சாகப்படுத்துதலில் கட்டி வைக்காமல், நானே உணர்வதற்கு அன்னா என்னைத் தூண்டுகிறார்.

இரண்டாவதாக,

'இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன்.' (1 சாமு 1:27-28)

ரொம்ப வருஷமா குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அப்படி பிறந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்? தன்னைக் கேலி செய்த எல்லாரையும் கூப்பிட்டு, 'ஏன்டி, என்னயவா கிண்டல் பண்றீங்க? இங்க பாருங்க லட்டு மாதிரி ஒரு பையன் எனக்கு பிறந்திருக்கான்' என்று காட்டுவாள். அல்லது அவனைத் தன்னுடனே வைத்திருந்து, 'நீ தவமிருந்து பெற்ற மகன்' என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம், உள்ளம் குளிர்ந்திருப்பாள்.

ஆனால், அன்னா இப்படிச் செய்யவில்லை.

ஆண்டவருக்கு அர்ப்பணித்து விடுகிறார்.

இதை இவர் செய்ய இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்:

அ. 'நான் என்னையே யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை.' அதாவது, கேலி பேசியவர்களின் கேலிப் பேச்சை ஒரு பொருட்டாகவே அவர் கருதவே இல்லை. தன் வாழ்வை தான் தேர்ந்து கொண்ட வழியில் வாழ்கிறார். நம்ம வாழ்க்கை பல நேரங்களில் நம்மை அடுத்தவர்களுக்கு 'ப்ரூவ்' பண்ணுவதிலேயே கழிந்துவிடுகிறது. இல்லையா? 'நான் படித்தவன், பட்டம் பெற்றவன், பணம் படைத்தவன், செல்வாக்கு படைத்தவன்' என ஒவ்வொரு நொடியும் அடுத்தவர்கள் முன் நம்மை நிரூபிக்க நினைக்கிறோம். அல்லது அடுத்தவர்களின் கேலிப் பேச்சை பொய்யாக்க நினைக்கிறோம். இந்த முயற்சியில் நமக்கு மிஞ்சியதெல்லாம் களைப்பும், இளைப்புமே.

ஆ. 'தான் அதிகம் அன்பு செய்கின்ற ஒன்றை கடவுளுக்கு கொடுப்பது.' தான் பயன்படுத்தியதையோ, அல்லது தனக்கு தேவையில்லாததையோ கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதை விடுத்து, தன் உயிர், ஆவி என நினைக்கின்ற உயரிய தன் குழந்தையை கொடுத்து விடுகிறார். இது என் அர்ப்பண வாழ்வுக்கு அன்னா விடுக்கும் அழைப்பாகவே பார்க்கிறேன். கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. வருத்தப்படவும் கூடாது. அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது.


2 comments:

  1. சில பெயருக்காகவே சிலபேர் போற்றப்படுகிறார்கள் போலும்...'அன்னா' எனும் பெயரைப்போல்." கண்ணீரோடு விதைப்பவர்கள் களிப்போடு அறுவடை செய்வார்கள்." இன்றைய அன்னா அதற்கொரு சிறந்த உதாரணமாவார்,.இன்றையப்பதிவில் தந்தை நமக்கு நிறைய வாழ்க்கைப்பாடங்களை எடுத்து வைக்கிறார்." என் அருமையை அடுத்தவரின் பாராட்டில்/ தட்டிக்கொடுத்தலில்/ உற்சாகப்படுத்துதலில் கட்டிவைக்காமல் என்னை நானே உணர்வது".இது எல்லோருக்கும் பொருந்தக்கூடியது.ஆனால் தந்தையின் அந்த இறுதி வரிகள்...." கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாது; வருத்தப்படவும் அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது"அர்ப்பண வாழ்வைத் தங்கள் வாழ்வின் தவமாகக் கொண்டிருக்கும் அனைத்து அருட்பணியாளர்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக! அழகானதொரு பதிவு என்றும் போலவே! தந்மைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அன்னாவின் இதய குமுறலை மிகவும் அருமையான கிராமத்து மொழியில் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அன்னாவின் குணநலன்கள் இன்றைய அர்ப்பணவாழ்வுக்கு அவசியம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுதற்குரியது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete