Wednesday, December 20, 2017

எலிசபெத்து

நாளைய (21 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:39-45)

எலிசபெத்து

நாளைய நற்செய்தி வாசகத்தின் நல்மனிதர் எலிசபெத்து. இவர் சக்கரியாவின் மனைவி. திருமுழுக்கு யோவானின் தாய். மரியாளின் உறவினள்.

'எலிசபெத்து' என்றால் எபிரேயத்தில் 'கடவுளின் வாக்குறுதி,' 'கடவுள் நிறைவாய் இருக்கிறார்,' அல்லது 'கடவுளின் திருப்தி' என்பது பொருள்.

எலிசபெத்து இரண்டு முறை பேசுவதாக நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கின்றார்.

முதல் முறை, தனக்குத்தானே பேசிக்கொள்கிறார் எலிசபெத்து: 'மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்.'
எலிசபெத்தின் இவ்வார்த்தைகளில் நிறைய சோகம் அப்பியிருக்கிறது. தான் இதுவரை தமது சமகாலத்தில் குழந்தைப் பேறு இல்லாததால் அனுபவித்த துன்பங்களையும், பிறரால் தனக்கு வந்த இகழ்ச்சியையும் இது படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும், தான் துன்பங்கள் அனுபவித்தாலும், பிறரால் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றையும் தாண்டிய ஒன்று இருக்கிறது - அதுதான் கடவுளின் அருள் என்பதையும் இது காட்டுகிறது.
'யோவான் - யோஹனான்' என்றால் 'கடவுளின் அருள்' என்பது பொருள். ஆக, எலிசபெத்தின் இந்த வார்த்தையிலேயே பிறக்கப் போகும் குழந்தை என்ன பெயர் பெறப்போகிறது என்பது வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது.
ஆக, ஒவ்வொரு துன்பத்தையும் மிஞ்சி நிற்கும் ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுளின் அருள் என்றும் நமக்குச் சொல்கிறது எலிசபெத்தின் முதல் பேச்சு.

இரண்டாம் முறை, மரியாளிடம் பேசுகின்றார் எலிசபெத்து. எலிசபெத்தின் வீட்டில் அவரைச் சந்திக்கின்ற மரியாள், 'ஷலோம்' ('அமைதி!) என்று வாழ்த்துகின்றார். வாழ்த்தைக் கேட்டவுடன் எலிசபெத்தின் வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன. அப்படியே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவராய் வாய்நிறைய வாழ்த்துக்களை அள்ளி வீசுகின்றார்.

எலிசபெத்தின் வார்த்தைகளில் இரண்டு சொல்லாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன:
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'
மரியாளை தன் உறவனளாக, தன்னைவிட வயதில் சிறிய சின்னப் பொண்ணாக, தனக்குப் போட்டியாக ஒரு மகனை அற்புதமான முறையில் கருத்தாங்குகிறாள் என்று பொறாமைப்படாமல், மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்றும், மரியாள் வயிற்றில் வளரும் குழந்தையை 'ஆண்டவர்' என்றும் அறிக்கையிடுகின்றார். எலிசபெத்துக்கு இதை யார் வெளிப்படுத்தினார்? கபிரியேலா? இல்லை. பின் எப்படி தெரிந்தது இவருக்கு? இதுதான் இவரது உள்ளொளிப் பார்வை.
'ஆண்டவர் உமக்குச் சொன்னவை என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'
'என் வீட்டுக்காரர் நம்பாம இப்போ ஊமையா திரியுறாரு. நீயாவது நம்பினாயே!' என்ற புலம்பலாக இல்லாமல், மரியாளின் ஆழமான நம்பிக்கையைப் பாராட்டுகிறார் எலிசபெத்து.

எலிசபெத்து - தன் வாழ்வின் அஸ்தமனத்திலும் ஆண்டவரின் அருளைக் கண்டுகொள்கின்றார்.
ஆண்டவரின் அருளுக்கு அவசரப்படத் தேவையில்லை.
அவசரப்படுவோருக்கு ஆண்டவரின் அருள் இல்லை.
இது எலிசபெத்து தரும் பாடம்.


1 comment:

  1. இன்றையப்பதிவில் வரும் இரு கதாநாயகிகளுமே இறைப் பிரசன்னத்தைப் பிரகடனப்படுத்துவதில் ஒருவர்்அடுத்தவரை விஞ்சுகிறார். இறைமகனைப் பெற்றெடுக்கும் பேறுபெற்றவளாக மரியா உயர்ந்து நின்றாலும்,வயதில் அவர் எலிசபெத்தைவிட சிறியவர் எனினும் " என் ஆண்டவரின் தாய்" என அவரை உலகிற்குப் பிரகடனப்படுத்துகிறார்..இன்றையப் பதிவைப் பொறுத்தவரை என் பார்வையில் மரியாவைவிட எலிசபெத்தே உயர்ந்து நிற்கிறார்.காரணம்.....எலிசபெத்து தன் வாழ்வின் அஸ்தமனத்திலும் ஆண்டவரைக் கண்டுகொள்கிறார் என்பதே! எலிசபெத் தரும் பாடமாகத் தந்தையின் வரிகள்...."ஆண்டவரின் அருளுக்கு அவசரப்படத்தேவையில்லை; அவசரப்படுவோருக்கு ஆண்டவரின் அருள் இல்லை" ஆண்டவரின் அருளைப்பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம்......அழகான பதிவைத் தந்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete