Friday, December 22, 2017

சுற்றமும் நட்பும்

நாளைய (23 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:57-66)

சுற்றமும் நட்பும்

'வீரபத்திரன் துணை...நிகழும் மங்களகரமான...'
என்று தொடங்கும் திருமண பத்திரிக்கை ('அழைப்பிதழ்' என்பது புது வார்த்தை)
எல்லாம் பெரும்பாலும்,
'தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து' என்று நிறைவடையும்.

ஒரு பேச்சுக்குத்தான், இல்லை ஒரு எழுத்துக்குத்தான், அப்படி எழுதுகிறார்கள். இதற்காக, நம் ஃபேஸ்புக் நண்பர்கள் 2000 பேரையும் கூட்டிக்கொண்டு போனால் என்ன ஆகும்?

எலிசபெத்தின் சுற்றமும், நட்பும்தான் நாளைய நற்செய்தி வாசகத்தின் மையம்.

'ஆண்டவர் எலிசபெத்துக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு மகிழ்ந்தனர்.'

நாளைய நற்செய்தியில் வரும் எலிசபெத்தின் சுற்றத்தார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறார்கள்.

அ. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்
ஆ. 'என்ன பெயர் வைக்கலாம்?' என ஆர்வம் காட்டுகின்றனர்
இ. 'இந்த குழந்தை எப்படிப்பட்டதா இருக்குமோ?' என ஆச்சர்யப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றத்தார் அமைவது மிக அபூர்வம். ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு குடும்பம் எப்படி அவசியமோ, அதேபோலத்தான் சுற்றமும் அவசியம். தன் சுற்றத்தில், அக்கம் பக்கத்தில் தன் குழந்தைகளுக்கு வகுப்பு தோழர்கள் அல்லது தோழிகள் இருந்ததால், தங்களின் வெளியூர் வேலைக்கு 'நோ' சொன்ன பெற்றோர்களை அறிவேன்.

மற்றொரு எக்ஸ்ட்ரீம் என்னவென்றால், சில வீடுகளில் ஒரு குறிப்பிட்ட ஜன்னலைத் திறக்கவே மாட்டார்கள். ஏன்? திறந்தால் அடுத்த வீட்டுக்காரரின் முகம் தெரியும். அல்லது குரல் கேட்கும். இப்படியாக நாம் அறவே வெறுக்கும் சுற்றத்தார்களும் இருக்கிறார்கள்.

இது நம் மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் கூட பொருந்தும். நம் சுற்றத்து மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை. நம் சுற்றத்து நாடுகள் எந்நேரம் நமக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

சுற்றமும், நட்பும் என்னைப் பொறுத்தவரையில் நாம் சாப்பாட்டில் போடும் உப்பு மாதிரி. உப்பு போடாமலும் சாப்பிடலாம். உப்பு சரியான அளவில் இருந்தால் தான் அது ருசி. இல்லையென்றால் அது சாப்பாட்டையே கெடுத்துவிடும்.

'மகிழ்ச்சி,' 'ஆர்வம்,' 'ஆச்சர்யம்' - இந்த மூன்று பண்புகளை சக்கரியா-எலிசபெத்தின் சுற்றம் நமக்குக் கற்றுத்தருகிறது.

நமக்கு அருகில் இருப்பவர் வாழ்வில் நல்லது நடக்கும்போது அது கண்டு பொறாமைப் படாமல், அவர்களோடு ஒப்பிட்டு சோகத்தை வருவித்துக்கொள்ளாமல், அவர்களோடு மகிழ்ந்திருப்பது.

'குழந்தைக்கு என்ன பெயரிடலாம் உம் விருப்பம் என்ன?' என்று சக்கரியாவிடம் சைகை காட்டிக் கேட்கின்றனர். ஆக, சக்கரியாவின் மொழியில் பேச அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். சக்கரியாவின் நிலைக்கு இறங்கி வருகின்றனர். மேலும், குழந்தையின் பெயர்சூட்டும் நிகழ்வில் முழுமையாகப் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்று என் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின்மேல் எனக்கு எந்த அளவு ஆர்வம் இருக்கிறது? 'ஓ! இது தெரியாதா?' என நான் அவசரப்படுகிறேனா? அல்லது ஆர்வம் காட்டுகிறேனா?

ஆச்சர்யம் - 'இந்தக் குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' என்ற இவர்களுடைய வியப்பில் இவர்கள் கடவுளின் பிரசன்னத்தைக் குழந்தையில் கண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.


'நல்ல வேலி நல்ல சுற்றத்தை உருவாக்கிறது' என்பதும்,
'நல்ல சுற்றத்தார் உனக்கு அமைய நீ நல்ல சுற்றத்தாராய் இரு' என்பதும் ஆங்கில பழமொழிகள்

எலிசபெத்துக்கு அமைந்தது நல்ல சுற்றமும், நட்பும்.

1 comment:

  1. 'மகிழ்ச்சி', 'ஆர்வம்', 'ஆச்சரியம்' இந்த மூன்று பண்புகளை சக்கரியா- எலிசபெத்தின் குடும்பம் நமக்குக் கற்றுத்தருகிறது என்பதைவிட , அந்தக் குடும்பத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருத்தமாயிருக்கும்.சக்காரியாவின் குடும்பம் அவரது குழந்தை மேல் காட்டிய அந்தப் பாசத்தை,இணக்கத்தை யாரும் தாம் காணும் எந்தக்குழந்தையிடமும் காட்டினால் எந்த ஊரிலும் இளம் குற்றவாளிகளோ இல்லைக் குழந்தைத் தொழிலாளர்களோ உருவாக மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.ஒரு குழந்தையை ஒரு சமுதாயம் என்னவாகப் பார்க்கிறதோ,அதேவாகத்தான் பின்னால் அந்தக் குழந்தை உருவாகிறதெனில் அதற்கு முழுப்பொறுப்பும் நம்முடையதே!" நல்ல சுற்றத்தார் உனக்கு அமைய நீ நல்ல சுற்றத்தாராய் இரு"எனும் ஆங்கிலப்பழமொழி வழி நடந்தால் எலிசபெத்தைப்போல் நமக்கும் அமையும் நல்ல சுற்றமும்,நட்பும் .உண்மையே!அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான விஷயத்தைச் சொல்லும் பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete