Monday, December 25, 2017

மன உறுதியுடன் இறுதிவரை

மன உறுதியுடன் இறுதிவரை

நாளைய (26 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 10:17-22)

நாளை திருஅவையின் முதல் மறைசாட்சியான தூய ஸ்தேவான் அவர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாளைய நற்செய்தியில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறிய அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம்.

ஒரு பெரிய தயாரிப்பை உருவாக்கும் நிறுவனம் அதை விளம்பரம் செய்யும்போது அதற்கான சந்தைப்படுத்துதலுக்குப் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தும்.

இறையரசு என்ற தயாரிப்பில் பங்கேற்கும் அனைவரும் அனுபவிக்கும் துயரம் பற்றி பதிவு செய்கின்றார் இயேசு. சங்கங்களில் ஒப்புவித்தல், சாட்டைகளால் அடித்தல், கொல்லப்படுதல், வெறுத்தல் என அனைத்தும் திருத்தூதர்களுக்கு நடக்கும் என்று சொல்கின்ற இயேசு, இரண்டு ஆறுதல் மொழிகளையும் தருகின்றார்: (அ) தூய ஆவி அந்நேரத்தில் அருளுவார், (ஆ) இறுதிவரை மனஉறுதியுடன் இருப்பவர் மீட்பு பெறுவர்.

இறுதிவரை மனஉறுதியுடன் இருத்தல் என்பது இயேசுவின் உள்ளார்ந்த கட்டளையாக இருக்கிறது.

மனஉறுதி என்றால் என்ன?

2017ஆம் ஆண்டு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

இதே ஆண்டு ஜனவரி 1 அன்று நாம் என்ன நினைத்தோம்? என்னென்ன திட்டங்கள் தீட்டினோம்? என்னென்ன முடிவுகள் எடுத்தோம்? அவற்றில் இறுதிவரை என்னால் எத்தனையை நிறைவேற்ற முடிந்தது? 'இறுதிவரை' என்னால் நிறைவேற்ற முடியாமல்போக காரணம் என்ன?

மனஉறுதி என்பது சமரசம் செய்துகொள்ளாத மனம்.

ஆக, திருத்தூதர்கள் எந்த நிலையில், எந்த நபர்கள்முன் நிறுத்தப்பட்டாலும் தாங்கள் முதலில் கொண்டிருந்த நம்பிக்கையில் சமரசம் அறவே கூடாது.

மனஉறுதியைக் குலைக்கும் காரணிகள் பல: பயம், ஒப்பீடு, உடனடி பலன் இல்லாமை போன்ற காரணிகளால் நாம் நம் வாழ்வில் சமரசம் செய்துகொள்கின்றோம். அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கின்றோம்.

ஸ்தேவானிடம் இருந்த ஒரு அழகான பண்பு மனஉறுதி.

இன்று சாதாரண நிகழ்வுகளில் எனக்கு மனஉறுதி இருக்கிறதா? என்று கேட்கிறேன்.


1 comment:

  1. 'முடியப்பர்' எனவும் 'ஸ்டீஃபன்' எனவும் நாம் ஏற்கனவே அறியப்பட்டவர் தான் இன்றைய நாளின் புனிதர் 'ஸ்தேவான்' எனும் முதல் மறைசாட்சி.. இறைவனின் வார்த்தையைப் போதித்ததற்காகவே கல்லாலெறிந்து கொல்லப்பட்டவர்.இவரது வாழ்க்கையின் இறுதி நேரங்கள் கிட்டத்தட்ட சிலுவையில் தொங்கிய இயேசுவின் இறுதி மணித்துளிகளை ஒத்திருக்கிறது. தன்னைக்கொல்பவர்களை மனதார மன்னிப்பதற்குத் தேவை 'மன உறுதி' என்று சுட்டிக்காட்டுகிறது இன்றையப்பதிவு. இது ஒரே நாளில் வருவதல்ல; ஒவ்வொரு நாளும் முயன்றால் மட்டுமே இதை நாம் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இந்த மன உறுதியைச் சீர்குலைக்கின்ற காரணிகளான பயம்,ஒப்பீடு,உடனடி பலன் இல்லாமை இவற்றைப் புறந்தள்ளுவோம்.'சமரசம்' செய்யாத ஒரு மனநிலைக்காக இறைவனை இறைஞ்சுவோம்.கண்டிப்பாக்க் கல்லடி இல்லை எனினும் சொல்லடி படுவோம்.கண்டிப்பாக அதையும் தாங்கிக்கொள்ளும் 'மன உறுதியை' இறைவன் தாமே நமக்கு அருளுவார். 'பெரிய' விஷயங்களை போகிறபோக்கில் எம்முள் விதைக்கும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete