Sunday, December 10, 2017

புதுமையானவற்றைக் கண்டோம்!

நாளைய (11 டிசம்பர் 2017) நற்செய்தி: புதுமையானவற்றைக் கண்டோம்!

கலிலேய மற்றும் யூதேயா என்ற இரண்டு மாகாணங்களுக்கு நடுவே இருந்த சின்ன ஊர் அது. பெயர் தெரியும் அளவிற்குப் பெரிய ஊர் அல்ல. பார்டரில் இருந்த ஊர் என்பதால் இரண்டு வகையான மக்களும் அங்கே இருந்தார்கள். சாதாரண மக்கள் என்று சொல்லப்பட்ட கலிலேயர்கள். கொஞ்சம் பெரியவர்கள் என்று சொல்லப்பட்ட யூதேயர்கள். 'யார் பெரியவர்?' என்ற போட்டி இந்த இரு குழுக்களுக்குள் தொடர்ந்து வந்தது.

பல ஆண்டுகளாக முடக்குவாதமுற்ற ஒருவர் ஒரு வீட்டிற்கு வெளியே கிடத்தப்பட்டிருந்தார். அந்த வீட்டின் தலைவர் கலிலேயர், தலைவி யூதேயர். இவர் முடக்குவாதமுற்றது எதனால்? என்ற கேள்வி இவர்களுக்குள்ளும், இந்த ஊரார் மத்தியிலும் இருந்தது. 'இவர் செய்த பாவத்தால்' என்றனர் சிலர். 'இல்லை. இவர் பெற்றோர் செய்த பாவத்தால்' என்றனர் மற்றும் சிலர். 'இல்லை. இல்லை. இது முற்றிலும் ஓர் உடலியல் குறைபாடு' என்றனர் இன்னும் சிலர். இப்படி கேள்விகள்தாம் கேட்டார்களே தவிர யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. உண்பது, உறங்குவது, கழிப்பது என எல்லாமே அந்த நபருக்குக் அந்தக் கட்டிலேயே கவிழ்ந்தது.

ஒரு நாள் காலை அந்த ஊரில் பரபரப்பு. 'நாசரேத்து இயேசு' வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு. 'அவர் கலிலேயர்' என்று முகம் சுளித்தனர் சிலர். 'இல்லை. அவர் பிறந்தது பெத்லகேமில். எனவே அவர் யூதேயர்' என்று வாதாடினர் மற்றும் சிலர். அவர் வந்தார். ஒரு வீட்டில் போதித்துக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் அவரின் உதட்டில் தொங்கிக்கொண்டிருந்தது.

'உங்களுள் யாராவது நலமற்று இருந்தால் என்னிடம் வரட்டும்!' என்று போதித்துக்கொண்டிருந்தார் இயேசு. கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவருக்கு இதை உடனடியாக சோதனை செய்துவிட வேண்டும் என்ற பரபரப்பு. 'நம்ம ஊர்லதான் ஒருத்தன கட்டிலேயே ரொம்ப நாளாக கிடத்தியிருக்காங்களே. அவனுக்கு இவரால் நலம் தர முடியுமா?' தன் நண்பர்கள் மூவரோடு கிசுகிசுக்கிறான். மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி கட்டில் நபர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரை அப்படியே தூக்குகிறார்கள். 'டேய்...யார்ரா அது?' என்று அவர் கேட்டு விழிப்பதற்குள் பாதி ஊர் கடந்துவிட்டார்கள். அந்த முடக்குவாதமுற்றவருக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. 'ஊருக்குள் இத்தனை புது வீடுகளா?' 'இந்த ரோட எப்ப போட்டாங்க?' 'இது என்ன?' 'அது என்ன?' என எல்லாவற்றையும் வியந்துகொண்டே வருகிறான். இவனது வாழ்க்கை தன் வீட்டு முற்றத்தில் இவ்வளவு நாள்கள் ஓய்ந்து கிடந்தது.

வீடு வந்தது. கூட்டமாய் இருந்தது. 'எப்படி உள்ளே கொண்டு செல்வது?' 'கூரையைப் பிரிப்போம்' - உடனடியாக முடிவு எடுக்கப்பட்டது. இறக்கப்பட்டார். நலம் பெற்றார்.

'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
ஆம். அன்று எல்லாம் புதுமையாய் தெரிந்தது அவர்களுக்கு.
யாரும் யாரையும் கண்டுகொள்ள மாட்டாங்க இந்த ஊருல! இங்கேயும் நாலு நல்லவங்களா?
நான் ஏன் நல்லவனா இருக்கக் கூடாது.
'நானும் நல்லவராய் இருப்பேன்' என்ற சிந்தனை காய்ச்சல்போல எல்லாரையும் பிடித்துக்கொள்கிறது.
அங்கே எல்லாமே புதுமையாய் நடக்கிறது.
நாலுபேரு தொடங்கிய அந்த நல்ல காரியத்திற்குக் காரணம் இயேசு.
இயேசு வந்து சென்றால் அங்கே எல்லாம் புதுமையே.


1 comment:

  1. எத்தனையோ முறை கேட்ட ஒரு புதுமை தான்.ஆனாலும் அதைத் தந்தை சொல்லும் பாணி இன்னும் புதுமையானது.கலிலேயா மற்றும் யூதேயாவுக்கு இடையே இருந்த சின்ன ஊர் தொடங்கி கலிலேயருக்கும்,யூதேயருக்குமிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள்,முடக்குவாதமுற்றவரின் தற்போதைய நிலமைக்குக் காரணம்,கட்டிலில் முடக்குவாதமுற்றவனைத் தூக்கிச்சென்ற போது அவரின் சிந்தனை ஓட்டம்,அவர் இயேசுவால் நலம் பெற்றது ....இப்படி அனைத்திலும் ஒரு வித்தியாசமான,ஆனால் விரும்பத்தக்க டச்.யாரும் யாரையுமே கண்டு கொள்ளாத அந்த ஊரிலும் நாலு நல்லவர்கள்; அந்த நல்லவர்களை முன்னிட்டு இயேசு செய்யும் புதுமை.இப்படியொரு நல்ல காரியம்/ புதுமை என்னாலும் நடக்குமென்றால் அதற்கு நான் ஏன் காரணியாக இருக்கக்கூடாது? இயேசு வந்து சென்றால் " எல்லாம் புதுமை" எனில் நான் ஏன் அவரை அழைக்கக்கூடாது? யோசிக்கிறேன்! யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!! (இயேசுவின் போதனையை மக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர் என்பதைக் குறிக்கும் " மக்கள் கூட்டம் அவர் உதட்டில் தொங்கிக் கொண்டிருந்தது."அழகானதொரு Expression! தந்தைக்கு ஒரு சபாஷ்!!!)

    ReplyDelete