Wednesday, December 27, 2017

மாசில்லாக் குழந்தைகள்

நாளைய (28 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 2:13-18)

மாசில்லாக் குழந்தைகள்

நாளை மாசில்லாக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படுதல் நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வா அல்லது ஒரு இறையியல் நிகழ்வா என்றால், 'இறையியல் நிகழ்வே' என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.

ஏன்?

அ. இந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசேவாக யூத மக்களுக்கு அறிமுகம் செய்கின்றார். எகிப்து இல்லாமல் மோசேயை முன்வைக்க முடியாது. எப்படி பழைய மோசே எகிப்திலிருந்து வெளியே வந்தாரோ, அதே போல புதிய மோசேயும் வரவேண்டும் என்பது மத்தேயு நற்செய்தியாளரின் எண்ணமாக இருந்திருக்கலாம். 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்ற இறைவாக்கு நிறைவேறுவதற்காக இயேசுவை எகிப்திற்கு வம்படியாக அனுப்பி வைக்கின்றார் மத்தேயு.

ஆ. பல குழந்தைகள் கொல்லப்பட ஒரு குழந்தை மட்டும் தப்பி அரசனாவதும், ஆளுகை செய்வதும் ஒரு இலக்கிய உத்தி. மற்றவர்களை விட இக்குழந்தை முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்படுகின்றது. இதே நிகழ்வை நாம் மோசே வாழ்விலும் (காண். விப 2:1-10), யோத்தாம் வாழ்விலும் (காண். நீத 9:3-6) பார்க்கின்றோம். எல்லாக் குழந்தைகளும் கொல்லப்பட மோசே மட்டும் தப்பிக்கின்றார். 70 சகோதரர்கள் கொல்லப்பட யோத்தாம் மட்டும் தப்பிக்கின்றார். தப்பிக்கின்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தலைவர்கள் ஆகின்றனர். இயேசுவை மற்ற குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாகக் காட்டுவதற்காக மத்தேயு இந்த உத்தியை கையாண்டிருக்கலாம்.

இ. குழந்தைகள் இறப்பு என்பது எந்த வரலாற்று நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இயேசு பிறந்த காலத்தில் யூதேயா மற்றும் கலிலேயாவை ஆண்டவர்கள் உரோமையர்கள். ஏரோது போன்றவர்கள் வெறும் குறுநில மன்னர்களே. இவர்களைக் கண்காணிக்க ஆளுநர்கள் இருந்தார்கள். ஆக, ஏரோது தான் விரும்பியதுபோல குழந்தைகளைக் கொன்று குவிப்பது இயலாத காரியம். அப்படி இவன் செய்திருந்தால் உடனடியாக மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டிருப்பான். இன்னும், பெத்லகேமில் மிஞ்சிப்போனா 10 குழந்தைகள் இருந்திருப்பார்கள். இறந்திருப்பார்கள். ஆயிரக்கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் சொல்வதெல்லாம் மிகைப்படுத்துதலே.

இந்த மூன்று காரணங்களுக்காக மாசில்லாக் குழந்தைகள் நிகழ்வை ஒரு இறையியல் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிகழ்வு நம்மில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன:

அ. தன் மகன் இயேசுவை வியத்தகு முறையில் காப்பாற்றத் திருவுளம் கொண்ட எல்லாம் வல்ல, 'அன்பு' இறைவன் எல்லாக் குழந்தைகளையும் ஏன் காப்பாற்ற 'திருவுளம்' கொள்ளவில்லை? மற்ற குழந்தைகள் இறந்துதான் இவரது மகன் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் கடவுள்தான் முதல் குற்றவாளி. இவருடைய மகனுடைய உயிர்தான் உயிர். மற்ற உயிரெல்லாம் இவருக்கு உயிரல்லையா?

ஆ. இதே காலகட்டத்தில் பிறந்த திருமுழுக்கு யோவான் தப்பித்தது எப்படி? பெத்லகேமிற்கும் எய்ன் கரிமிற்கும் (சக்கரியா - எலிசபெத்து - திருமுழுக்கு யோவான் குடும்பத்தின் ஊர்) உள்ள தூரம் மிகக் குறைவு.

இ. ஞானிகள் ஏரோதிடம் வராமலேயே போயிருக்கலமே? அல்லது குழந்தையைப் பார்த்துவிட்டு ஏரோதிடம் வந்து, 'அப்படி எந்த அரசனும் பிறக்கவில்லை அரசே!' என்று பொய்யாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! இவர்களும் குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆகிறார்களே.

ஈ. ஏரோது - மூன்று ஏரோதுக்குள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். இவர் எந்த ஏரோது என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இல்லை.

நிற்க.

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படுவதற்குக் காரணம் - கடவுள், ஏரோது, குழந்தை இயேசு, ஞானியர், அகஸ்து சீசர், கபிரியேல் வானதூதர், நான், நீங்கள் - என எண்ணற்ற பேரை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

'மாசில்லாக் குழந்தைகள்' பலிகடா ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை அனைத்தும் மற்றவரின் சுயநலத்திற்காக பலிகொடுக்கப்படுகின்றன.

பலிகடா ஆவதும், பலிகடா ஆக்குவதும்தான் நம் வாழ்வில் ஆற்ற முடியாத அம்மைத் தழும்புகளாக இருக்கின்றன.

மாசில்லாக் குழந்தைகள் இன்று நம் பரிதாபத்தையோ, கருணையையோ எதிர்பார்க்கவில்லை.

'நான் உன்னை திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நீ என்னை அடித்தாய்!'

- இந்த வார்த்தைகள்தாம் மாசில்லாக் குழந்தைகள் இறக்குமுன் தங்கள் உள்ளத்தில் எண்ணிய வார்த்தைகளாக இருந்திருக்கும்.

நம் இயலாமை, கையறுநிலை, மௌனம் ஆகியவை மற்றவர்களால் பயன்படுத்தப்படும்போதெல்லாம் நாமும் மாசில்லாக் குழந்தைகளே!

(இன்றைய வலைப்பூவை அலங்கரிக்கும் மாசில்லாப் பூ நான் அண்மையில் நான் கண்டு க்ளிக்கிய குட்டிப்பூ)

1 comment:

  1. அதிகமான விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் தந்தை. அதிகம் படித்தவர்களுக்கு சந்தேகங்கள் அதிகம் வருவதும் இயற்கையே! 'மாசில்லாக் குழந்தைகள் நிகழ்வு' வரலாற்று நிகழ்வா இல்லை இறையியல் நிகழ்வா...நமக்குக் கவலை "இல்லை.ஆனால் மாசில்லா குழந்தைகள் கொல்லப்படுவதற்குக் காரணம் நானும், நீங்களும்.கூட என்பதும்,அவர்களின் மென்மை,இயலாமை, கையறு நிலை போன்றவை நம் சுயநலத்திற்காக பலி கொடுக்கப்படுகின்றன என்பதும்,பலிகடா ஆவதும், பலிகடா ஆக்கப்படுவதும் தான் நம் வாழ்வின் ஆற்ற முடியாத அம்மைத்தழும்புகளாயிருக்கின்றன என்பதும் மனத்தைக் கனக்க வைக்கின்றன."நான் உன்னைத் திருப்பி அடிக்க முடியாதென்று தானே நீ என்னை அடித்தாய்?" உறக்கத்தை மறக்கடிக்கும் வார்த்தைகள்.நம் இயலாமை, மௌனம், கையறுநிலை ஆகியவை பிறரால் பயன்படுத்தப்படும் போதெல்லாம் நாமும் மாசில்லாக்குழந்தைகளே!... சுயபச்சாதாபத்தைத் தூண்டும் வார்த்தைகள்.இத்தனைக்குப் பிறகும் இன்றையப் பதிவின் ஆறுதல், தந்தை அண்மையில் க்ளிக்கிய அந்தக் ' 'குட்டிப்பூ' மட்டுமே! இறைவன் தந்தையை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete