Tuesday, December 12, 2017

கற்றுக்கொள்ளுங்கள்

நாளைய (13 டிசம்பர் 2017) நற்செய்தி: கற்றுக்கொள்ளுங்கள்

'பைடியோன்' ('குழந்தை') என்ற வார்த்தையும், 'பெடகாவோ' ('கற்றுக்கொள்') என்ற வார்த்தையும் ஒரே கிரேக்க மூலத்தில் இருந்து வருகிறது என்பதன் பொருள் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 11:28-30) நமக்கு தெளிவாகிறது.

'ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் இயேசு. கற்றுக்கொடுப்பவரும், கற்றுக்கொள்பவரும் எப்போதும் முறையே மேல்-கீழ் நிலையிலேயே இருக்கின்றனர். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதன் பொருள் இதுவே. 'ஐந்தில்' நம்மால் கீழே அமர்ந்து கற்றுக்கொள்ள முடியும். ஆனால் 'ஐம்பதில்' நம்மால் கீழே அமர்வதற்கு நம் மனம் வளைவதில்லை. 'நான் அவனை விட, அவளைவிட பெரியவன், பெரியவள்' என்ற நிலை வந்துவிடுவதால் நம்மால் அடுத்தவர் முன் அமர அல்லது வளைய முடிவதில்லை.

'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள்' என்று மக்களைத் தன்னிடம் அழைக்கின்ற இயேசு அவர்களின் சுமைகளைத் தான் எடுத்துக்கொள்வதாகவோ, அகற்றுவதாகவோ வாக்களிக்கவில்லை. மாறாக, 'என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று அவர்களுக்கு மேலும் ஒரு சுமையைத் தருகின்றார். ஒரே கழுத்தில் இரண்டு நுகங்கள் இருக்க முடியாது. அப்படி இருந்தால் வண்டிகளும் ஓடாது. மாடும் இறந்துவிடும். ஆக, நான் ஏற்கனவே வைத்திருக்கும் என் நுகத்தைக் கீழே இறக்கிவிட்டு இயேசுவின் நுகத்தை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் நுகத்தை நான் ஏற்றுக்கொள்ள எனக்கு அவசியமாக இருப்பது 'கற்றுக்கொள்தல்.' அதாவது 'வளைந்து கொடுத்தல்,' அல்லது 'குழந்தைபோல் மாறுதல்.'

'அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்' (எபி 5:8) என இயேசுவின் கற்றுக்கொள்ளுதலைப் பதிவு செய்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர். ஆக, இயேசுவின் வாழ்விலும் நுகம் ஏற்றலும், கற்றுக்கொள்ளுதலும் நடக்கிறது.

இதை இரண்டு நிலைகளில் நாம் நம் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்:
அ. புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்
'கற்றுக்கொள்ளுதல்' என்பது குழந்தைகளுக்கான ஒன்று என்று நாம் நினைத்து, கொஞ்சம் வளர்ந்தவுடன் நம் கற்றுக்கொள்ளுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றோம். ஆனால், நாம் புதிதாய் கற்றுக்கொள்ள இந்த உலகில் நிறைய இருக்கிறது. கற்றுக்கொள்ள எனக்குத் தேவையானது கொஞ்சம் திறந்த மனமும், ஆர்வமும் மட்டுமே.

ஆ. நுகம் ஏற்றல்
நுகம் ஏற்றலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நுகம் நம் கழுத்தில் ஏற்றப்பட வேண்டும் என்றால் நாம் அதன் வளையத்திற்குக் கீழ் செல்ல வேண்டும். அல்லது நுகம் நம்மைக் காயப்படுத்திவிடும்.

பாலஸ்தீனத்தின் பெத்லகேமில் இயேசு பிறந்த ஆலயத்தின் நுழைவாயில் சுவற்றில் இடப்பட்ட ஓட்டைபோலவே இன்றும் இருக்கிறது. அதில் நுழைய வேண்டுமென்றால் ஒருவர் தன்னையே வளைத்து அதில் நுழைய வேண்டும். அப்படி வளையும்போது ஏதோ அந்தச் சுவரே நம் கழுத்தில் நுகம்போல நிற்கும். ஆனால், அந்த நுகத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் இயேசு பிறந்த இடத்தைக் காண முடியும். நுகம் ஏற்றலில் - கற்றுக்கொள்வதில் - வலி இருக்கும். ஆனால் அதன் கனிகளோ மிகவும் இனிமையானவை.

சுருக்கமாக சொன்னா, டிரைவிங் கற்றுக்கொள்வதுபோல. கற்றுக்கொள்ளும் வரை கடினமாக இருக்கும் அந்தக் கலை கற்று முடித்தவுடன் நம்மை புதிய உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

அவரிடம் கற்றுக்கொள்தல் புதிய அனுபவமே. கற்றுக்கொள்தலுக்கு அவரின் கனிவும், மனத்தாழ்மையும் நமக்கு முன்மாதிரி!


1 comment:

  1. "" சுமை சுமந்து சோர்ந்துருப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்று கூறும் இயேசு நம் நுகத்தை இறக்கிவிட்டு அவர்தரும்்நுகத்தை சுமக்க அழைக்கிறார். "அவர் இறை மகனாயிருந்தும்் துன்பங்கள் வழியே கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார்" அவரே கீழ்ப்படிந்தது மட்டுமின்றி, நுகம் ஏற்றது மட்டுமின்றி அதை நாமும் பின்பற்ற வேண்டுமென விரும்புகிறார.பாலஸ்தீனத்தின் நுழைவாயிலில் உள்ள ஓட்டையில் நுழைவதன் வலியை எடுத்துரைக்கும் தந்தை அந்த வலி பின் கனியாகும் வித்தையைப் பற்றியும் இயம்பகிறார்.."அவர் நமக்கு முன்வைத்துள்ள கனிவும்,மனத்தாழ்மையும் நம்மிடம் இருப்பின் அவரிடம் எதையுமே கற்றுக்கொள்ளலாம்" என்கிறார் தந்தை. திருவருகைக் காலத்தில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்துதான் பார்ப்போமே! அழகான,அர்த்தமுள்ளதொரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete