Tuesday, December 19, 2017

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

நாளைய (20 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:26-38)

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எருசலேம் திருக்கோவிலுக்கு வந்து சக்கரியாவை சந்தித்த வானதூதர் ஆறு மாதங்கள் கழித்து நாசரேத்தூரில் உள்ள ஒரு கன்னியிடம் வருகின்றார்.

'வாழ்த்து' ('அருள்நிறைந்த மரியே வாழ்க,' 'ஆண்டவர் உம்மோடு')
'கலக்கம்' ('இந்த வாழ்த்து எத்தகையதோ?')
'வாக்குறுதி' ('அஞ்ச வேண்டாம்')
'தயக்கம்' ('இது எப்படி நிகழும்?')
'இறையுணர்வு' ('உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்')
'சரணாகதி' ('நான் ஆண்டவரின் அடிமை')

என்று ஆறு உணர்வுகளாக கபிரியேலுக்கும், மரியாளுக்கும் இடையே நிகழும் உரையாடல் நிகழ்கிறது. கபிரியேல் - சக்கரியா நிகழ்வில் இறுதி வார்த்தை கபிரியேலுடையதாக இருக்கிறது. ஏனெனில் சக்கரியா ஊமையாக்கப்படுகின்றார். இந்நிகழ்வில் இறுதி வார்த்தை மரியாளின் வார்த்தையாக இருக்கிறது. இங்க ஒரு லைஃப் சீக்ரெட் கற்றுக்கொள்ளலாம்: 'எங்கே இறுதி வார்த்தை பெண்ணின் வார்த்தையாக இருக்கிறதோ அங்கே எவ்வளவு பெரிய உறவுப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும். ஆக, நட்பில், அன்பில் ஆண்-பெண் பிரச்சினை வரும்போது ஒரே தீர்வு பெண்ணின் வார்த்தையை இறுதி வார்த்தையாக வைத்துக்கொள்வது!

கபிரியேல் - மரியாள் உரையாடல் சீக்கிரம் முடிய, அல்லது மரியாளின் சரணாகதியை தூண்டும் வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசித்தால், அது 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்பதுதான் என நினைக்கிறேன்.

ஒருவேளை 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று கபிரியேல் வந்தவுடனேயே சொல்லியிருந்தால் மரியாள் உடனடியாக சரணாகதி அடைந்திருப்பார். ஏனெனில் யூத இளவலான அவருக்கு தங்களின் கடவுள் வரலாற்றில் ஆற்றியிருக்கும் அரும்பெரும் செயல்கள் தெரியும் - படைப்பு, குலமுதுவர்கள் வாழ்வு, எகிப்தின் அடிமைத்தனம், பாஸ்கா கொண்டாட்டம், செங்கடல், பாலும் தேனும் பொழியும் நாடு, மோசே, ஆரோன், நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள், அசீரிய படையெடுப்பு, பாபிலோனிய படையெடுப்பு, சமாரியர்கள், பாபிலோனியர்கள், ஆலயம் இடிப்பு, மறு கட்டமைப்பு, பாரசீக, கிரேக்க, உரோமை படையெடுப்பு - என எல்லாம் அவர் தன் பெற்றோர் சொல்லக் கேட்டிருப்பார். இது எல்லாவற்றிலும் 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' உணர்ந்திருப்பார் அவர்.

ஆக, கபிரியேலின் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், 'நான் ஆண்டவரின் அடிமை' என்று சரணாகதி அடைகின்றார். இதுமுதல் கடவுளே என்னை ஆட்கொள்ளட்டும் என்ற திறந்த மனத்தையே இது காட்டுகிறது.

இந்த இடத்தில் மாற்கு 9:14-29 என்ற நற்செய்திப் பகுதியை நினைவுகூறுவோம்:

தீய ஆவி பிடித்திருந்த சிறுவனை நலமாக்கும் நிகழ்வில் சிறுவனின் அப்பா, 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்று சொல்ல, இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்!' என்றார்.

'கடவுளுக்கு எல்லாம் நிகழும்'
'நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'
ஆக, 'நம்புகிறவர்' அனைவரும் 'கடவுளே'

மரியாள் நம்பினார். நம்பும் அந்த நொடி அவர் கடவுள் ஆனார்.
கடவுள் ஆகிவிட்ட அவரின் வயிற்றில் மனுவுருவாதல் சாத்தியமாகிறது.



1 comment:

  1. அழகான, கண்ணில் ஒத்திக்கொள்ளத்தூண்டும் ஒரு பதிவு.வார்த்தைகளை வைத்து விளையாடுகிறார் தந்தை.யூத இளவல் கபிரியேலுக்குத் தன் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் "-இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை."இவ்வார்த்தைகளைக் கேட்ட மரியா ஒரு இனிய இராகத்துக்குக் கட்டுப்பட்ட இசையாக "நான் ஆண்டவரின் அடிமை" என்று சரணாகதி அடைவதுதான் " மீட்பு நாடகத்தின் உச்ச கட்டம்" என நினைக்கிறேன்."நம்புகிறவர் அனைவரும் கடவுளே" என்பதற்கு வலு சேர்க்க தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணமாக்கும் நிகழ்வோடு இணைத்திருப்பது அழகு." எங்கே இறுதி வார்த்தை பெண்ணின் வார்த்தையாக இருக்கிறதோ,அங்கே எவ்வளவு பெரிய உறவுப் பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிடும்.ஆக, நட்பில்,அன்பில்,ஆண்- பெண் பிரச்சனை வரும்போது ஒரே தீர்வு பெண்ணின் வார்த்தையை இறுதி வார்த்தையாக வைத்துக்கொள்வது."இத்தனை பெரிய லைஃப் சீக்ரெட்டைத் தான் புரிந்து கொண்டது மட்டுமின்றி,அதை வெளிப்படையாகவும் ஒத்துக்கொண்ட தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'

    ReplyDelete