Tuesday, December 26, 2017

மற்றச் சீடர்

நாளைய (27 டிசம்பர் 2017) நற்செய்தி (யோவா 20:2-8)

மற்றச் சீடர்

நாளை திருத்தூதரும், நற்செய்தியாளருமான தூய யோவானின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர் தனது நற்செய்தி நூல்களில் தன்னை 'மற்றச் சீடர்' என்று அழைக்கின்றார். இது ஒரு வகையில் தன்னடக்கம்  என்று சொல்லப்பட்டாலும், இவர் 'மற்ற சீடர்' என்று சொல்வதன் வழியாக இயேசுவின் அருகில் அனைவரும் செல்வதற்கு கதவுகளைத் திறந்துவிடுகிறார். அதாவது, நீங்கள், நான், அவர், இவர் என எல்லாரும் இயேசுவின் 'மற்றச் சீடராய்' இருக்க முடியும்.

மற்றச் சீடராய் இருப்பதற்கான தகுதிகள் என்ன என்பதை நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வசனம் நமக்குச் சொல்கிறது: 'பின்னர் ... மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.'

செல்லுதல், காணுதல், நம்புதல் - இந்த மூன்று செயல்களின் வழியாக எவரும் மற்றச் சீடராய் ஆக முடியும்.

அ. செல்லுதல்
இருத்தல் என்பது வேர் என்றால், செல்லுதல் அல்லது பயணித்தல் என்பது விழுது. 'இருத்தலும்,' 'செல்லுதலும்' இருந்தால்தான் வாழ்க்கை. வெறும் இருத்தல் மட்டும் இருந்தால் அதை நாம் இறப்பு அல்லது தேக்கம் என்று சொல்லிவிடுகின்றோம். யோவான் தன் வாழ்வில் இயேசுவைக் கண்ட நாள் முதல் 'சென்றுகொண்டே' இருக்கின்றார். முதல் சீடர்களை அறிமுகம் செய்கின்றார். இயேசுவின் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கின்றார். கானாவூர் செல்கின்றார். கல்வாரி செல்கின்றார். கல்லறைக்கு ஓடுகின்றார். ஆக, ஓட்டமும், நடையுமாகக் கடக்கிறது இவரது வாழ்க்கை.

ஆ. காணுதல்
காணுதல் என்பது இங்கே வெறும் கண்களைக் கொண்டு பார்த்தல் அல்ல. மாறாக, உள்ளத்தால் பார்த்தல். வெற்றுக்கல்லறைக்குள் காண்பதற்கு ஒன்றுமில்லை. பின் அவர் எதைக் கண்டார்? இல்லாமையில் இறைவனின் இருப்பைக் கண்டார். அதுதான் காணுதல். இதையே தூய பவுலும், 'நாம் இங்கே அரைகுறையாய்க் காண்கிறோம். அங்கே நிறைவாக, அவர் இருப்பதுபோல காண்போம் என்கிறார்.' அந்தக் காணுதலை நாம் இங்கே காணுதலுக்குக் கண்களை மூடுதல் அவசியம்.

இ. நம்புதல்
அதாவது, இயேசுவே மெசியா அல்லது இறைமகன் என்ற நம்பிக்கை அவரின் செல்லுதல் மற்றும் காணுதலின் கனியாக இருக்கிறது. இன்று சில நேரங்களில் நம் பயணம் முதல் இரண்டு நிலைகளில் நின்றுவிட வாய்ப்பும் இருக்கிறது.

இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும் மற்றச் சீடர்களே!


3 comments:

  1. "யோவான்" என்ற பெயரைக்கேட்கும்போதே இயேசுவின் மார்பின் மீது சாய்ந்துள்ள அந்த அழகிய முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.இவர் தன்னை " மற்ற சீடர்" எனக்கூறிக்கொண்டு இயேசுவின் அருகில் அனைவரும் செல்வதற்கு வழி விடுகிறார் என்பது தந்தை இவருக்குச் சூட்டும் மிகப்பெரிய கிரீடம். இயேசுவின் நெருங்கிய வட்டத்திற்குள் இருந்த இவர் ஓட்டமும் நடையுமாகத் தன் வாழ்க்கையைக் கடந்தார் என்பதும்,இல்லாமையிலும் இறைவனின் இருப்பைக்கண்டார் என்பதும்,இயேசுவே இறைமகன் என்ற நம்பிக்கை அவருடைய காணுதலின் கனியாக இருக்கிறது என்பதும் " மற்ற சீடராக" மாற முயற்சிக்கும் யாரும் பின்பற்ற வேண்டியதொரு வாழ்க்கைப்பாடம்.' செல்லுதல்', 'காணுதல்', 'நம்புதல்'....இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும் "மற்ற சீடர்களே!" அழகு தமிழில் தன் எண்ணங்களை வார்த்தைகளாக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. இயேசுவின் 'மற்றச் சீடர்' என்பதற்கு புதுவிதமான விளக்கம் கொடுத்திருப்பது பாராட்டுதற்க்குரியது. செல்லுதல்', 'காணுதல்', 'நம்புதல்' இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும் "மற்ற சீடர்களே!" என்று தமிழ் இலக்கணத்தையும் ஞாபகப்படுத்திய தந்தைக்கு மிக்க நன்றி. "மற்ற சீடராய்" வாழும் தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. இயேசுவின் 'மற்றச் சீடர்' என்பதற்கு புதுவிதமான விளக்கம் கொடுத்திருப்பது பாராட்டுதற்க்குரியது. செல்லுதல்', 'காணுதல்', 'நம்புதல்' இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும் "மற்ற சீடர்களே!" என்று தமிழ் இலக்கணத்தையும் ஞாபகப்படுத்திய தந்தைக்கு மிக்க நன்றி. "மற்ற சீடராய்" வாழும் தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete