Wednesday, September 9, 2015

அன்பிற்கினிய இறைமக்களே!

'அன்பிற்கினிய இறைமக்களே!' - ஏறக்குறைய இந்த வார்த்தைகளோடுதான் ஒரு பங்கு அருட்பணியாளரின் மறையுரையோ, அறிவிப்போ தொடங்கும்.

'இறைமக்கள்' என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்தது இரண்டாம் வத்திக்கான் சங்கம். அதாவது, திருச்சபை என்றால் இறைமக்கள் என்ற புதிய அர்த்தத்தின் வழியாக, திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் என்ற பிரமிடு போல இருந்த திருஅவை, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இறைமக்கள், அருட்பணியாளர்கள், ஆயர்கள், அவர்களோடு இணைந்த திருஅவை என தலைகீழ் பிரமிடு ஆனது.

தூய பவுலடியார் கொலோசை நகர திருஅவை உறுப்பினர்களை 'இறைமக்கள்' என அழைக்கின்றார் (காண். கொலோசை 3:12-17).

'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம், நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்!' என்ற எரேமியாவின் புதிய உடன்படிக்கை (எரே 31:33) பற்றிய இறைவாக்கு பகுதியிலேயே 'இறைமக்கள்' என்ற சொல்லாடல் ஒளிந்து நிற்கிறது. 'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்' (யோவான் 1:12) என யோவான் நற்செய்தியாளரும், இயேசுவில் அனைவரும் இறைமக்கள் ஆவதை முன்வைக்கின்றார்.

கொலோசை நகர மக்களை இறைமக்கள் என அழைக்கின்ற பவுலடியார், இறைமக்களுக்குரிய அணிகலன்களாக எட்டு பண்புகளைக் குறிப்பிடுகின்றார்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு, நன்றி.

இந்த எட்டையும் ஒரே வாக்கியமாக அவரே எழுதுகின்றார்: 'எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்யுங்கள்...'

'நான் இறைவனின் மகன் அல்லது மகள்' என்ற எனக்கு நானே கொடுக்கும் வாக்குறுதி, எனக்கு அளவில்லா ஆற்றல் தருகின்றது. மேலும், இந்த வாக்குறுதி எனக்கு அருகிருப்பவரையும் சகோதரன் அல்லது சகோதரி என அழைக்க எனக்குத் தூண்டுதலாக இருக்கின்றது.

ஆக, இறைமக்களே என்று நாம் எந்த இடத்தில் இந்த வார்த்தையைக் கேட்டாலும், தூய பவுலடியார் சொல்லும் பண்புகளை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கலாமே!



2 comments:

  1. கொலோசிய நகர மக்களை ' இறை மக்கள்' என அழைத்து அவர்களுக்கு பரிவு,இரக்கம்,நல்லெண்ணம்,மனத்தாழ்மை,கனிவு,பொறுமை,இரக்கம்,நன்றி எனும் எட்டுக்கனிகளைக் கொடுப்பதன் மூலம் ,அவர்களின் சந்ததிகளாக வரும் நாமும் அந்த இறைமக்கள் எனும் பெயருக்கும் ,அதோடு ஒட்டிவரும் அந்த எட்டுப் பண்புகளுக்கும் வாரிசுதார்ர்களாகிறோம்.இந்த 'வாரிசுதார்ர் எனும் உரிமையில் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவருமே ' நான் இறைவனின் மகன்,மகள்' என்று மார்தட்டிக்கொள்ளலாம்.அது மட்டுமா...எனக்கருகிருப்பவரும் ' சகோதரன்.சகோதரி' ஆகின்றனர்.இத்தனை பேர் நம்மைச் சுற்றி நமக்காக இருக்கையில் நமக்கென்ன குறை? நம்பிக்கை விதை தூவிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.அன்பிற்கினிய இறைமக்களே! என்று தங்களின் பதிவை பார்த்தவுடன் நான் சற்று பயந்து போனேன் எங்கே மறையுரை ஆற்ற போகுறீர்களோ என்று நன்று தந்தையே மிக அருமையாக பதிவை படைத்ததற்கு. தாங்கள் கூறியுள்ளவாறு கொலோசை நகர மக்களை இறைமக்கள் என அழைக்கின்ற பவுலடியார், இறைமக்களுக்குரிய அணிகலன்களாக எட்டு பண்புகளைக் குறிப்பிடுகின்றார்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு, நன்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நான் படித்த ஒரு கதை அதாவது ஹில்லல் என்கிற மிகச்சிறந்த யூதப்போதகரிடம் ஒருவர், ”ஒரே நிமிடத்தில், எனக்கு திருச்சட்டம் முழுவதையும் கற்றுக்கொடுக்க முடியுமா?” என்று கேட்டாராம். அதற்கு ஹில்லல், ”எதை நீ வெறுக்கிறாயோ, அதை நீ மற்றவருக்குச் செய்யாதே. இதுதான் திருச்சட்டம். மற்றவை அனைத்துமே வெறும் விளக்கவுரை தான்” அவர் பதிலளித்தாராம். அதையே சற்று மாற்றிச்சொன்னால், நம்மை நாம் நேசிப்பது போல, மற்றவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.எனவே, நமது நேரம், ஆற்றல்கள், திறமைகள், கொடைகள், அன்பு, ஆறுதல், ஊக்கம், செல்வம், பொருள்கள் இவற்றைப் பிறருக்குத் தாராளமாகக் கொடுப்போம். கொடுப்பதைவிட அதிகமாக இறைவனிடமிருந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம்.தூய பவுலின் நல்லெண்ணம் நமக்கும் இருக்கட்டும். தந்தை ஏசு அவர்களின் பதிவு படி நாம் என்ன செய்தாலும், அது பிறருக்கு, குறிப்பாக நம் சகோதர சகோதரிகளுக்கு இடறல் இல்லாதபடி பார்த்துக்கொள்வோம்.அவ்வாறு வாழ்ந்தால் நானும் நீங்களும் அன்பிற்கினிய இறைமக்களே !வாழ்வேன் இறை மகளாக !பிறரையும் வாழ வைப்பேன் இறை மகனாக மற்றும் இறை மகளாக!தந்தைக்கு நன்றிகள்!...

    ReplyDelete