Monday, September 14, 2015

கண்ணீர் விடுவதற்கே

பெண் -

கண்ணீர் விடுவதற்கே கடவுள் படைத்த உயிரா இவர்?

என்று தண்ணீர்குடம் உடைத்து ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாரோ,

அன்றே இவரின் கண்ணீர்குடமும் உடைந்து விடுகிறது போல!

நாளை தூய மரியாளை வியாகுலத்தாய் எனக் கொண்டாடுகிறோம்...

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகள் பொய்யாய்ப் போனதோ இவரிடம்!

இவரின் மகனைப் பற்றி இவரிடம் என்ன சொல்லியிருப்பார்கள் மற்றவர்கள்?

அந்த நேரத்தில் இவரின் உள்ளக்கிடக்கை என்னவாக இருந்திருக்கும்?

தான் இறக்கும் அந்தத் தருணத்தில்கூட

இவர் வளர்த்த ஆசை மகன்

'இதோ! உன் அன்பார்ந்த மகன்!'

என்று தன்னை; சுட்டிக்காட்டாமல்
தன் சீடன் ஒருவரைக் காட்டி விடுகின்றார்.

'என்னது இவர் என் மகனா? அப்படின்னா நீ எனக்கு யார்?'

'இதோ உன் தாய்!' என உன் சீடனிடம் என்னை ஏன் தள்ளி விடுகிறாய்?

என்னையும் உன்னோடு எடுத்துக்கொள்ளேன்!

'நான் உனக்கு யார்?'

எனக் கேட்டிருப்பார் இந்தக் கன்னித் தாய்.

'உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்!'

என்று சிமியோன் சொன்னது இந்த நாளைக் குறித்துத்தானோ?

மரியாளின் கன்னிமை, அமல உற்பவம், இறைத்தாய்மை

என எல்லா இறையியல்களும் நம்மைத் தொடவில்லையென்றாலும்,

அவர் வடித்த கண்ணீர் என்னவோ நம் மனதையும் பிசைந்து விடுகிறது.

நாளை இந்த அன்னையின் கண்ணீரைக் கொண்டாடும் வேளையில்

அன்றாடம் கண்ணீர் வடிக்கும் ஒரு பெண்ணின் கண்கள் நோக்கி

என் கரம் நீண்டால்

நாளைய திருநாள் வெற்றி!



2 comments:

  1. " இதோ உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்"... வாள் ஊடுருவிய நேரத்தை விட இது என்று நடக்கும்? எப்படி நடக்கும் என்ற தவிப்பிலேயே அன்னை மரியாள் பல நூறு வியாகுலங்களை அனுபவித்திருப்பாள்.தன் கண்ணெதிரிலேயே தன் நேச மகன் உயிர்விடுதலைக்காணும் அவலம் எந்தத் தாய்க்கும் நேரக்கூடாத ஒன்று.வான தூதருக்கு 'ஆம்' என்றுரைத்த நாள் முதல் தன் மகனைக் கல்லறையிலிடும் நாள் வரை எத்தனை எத்தனை துயரங்கள! தந்தையின் வார்த்தைகளை சிறிது மாற்றிப்போட்டால் ஒரு பெண்ணின் தண்ணீர்க்குடம் உடையும்போதே அவள் பெற்றெடுக்கும் பெண்ணின் கண்ணீர்க்குடமும் உடைய ஆரம்பிக்கிறது.ஆயினும் வாழ்வையே ஒரு தவமாக வாழ்ந்த ஒரு தாயை முன்னுதாரணமாகப் பெற்றுள்ள நாம் பல சமயங்களில் ஒரு சிறு துரும்பைக்கூட சிலுவையாக நினைத்துப் புலம்புவதைத் தவிர்க்கலாமே! புனித யோவானின் வழியாக எந்த ஒரு மண்ணகத்தாய்க்கும் மேலானதொரு தாய் நமக்கிருப்பதை எண்ணி பேருவகை கொள்ளலாமே! நம்மைச்சுற்றியும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.தான் பெற்ற பிள்ளைகளால்,கணவனால்,இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பல பெண்கள் தங்களின் இதயத்தில் ஊடுருவிய வாள்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.இவர்களது வாழ்க்கையின் முட்களான விஷயங்களை நம்மால் ஓரங்கட்ட முடிந்தால்....அவர்களின் கண்ணீர் துடைக்க நம் கரங்கள் நீண்டால் தந்தையின் வார்த்தைகளில் இன்றையத் திருநாளை ஒரு வெற்றியான,அர்த்தமுள்ள நாளாக்கலாம்.ஒரு சோகம் கலந்த ஆனால் அர்த்முள்ளதொரு பதிவிற்காகத் தந்தைக்குப் பாலாட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வியாகுல அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள் . தங்களது பதிவில் இந்த வரிகள் என்னை தொட்ட வரிகள் அதாவது "அன்றாடம் கண்ணீர் வடிக்கும் ஒரு பெண்ணின் கண்கள் நோக்கி என் கரம் நீண்டால்" எத்தனையோஅன்னையர் தங்கள் குழந்தைகளின் துன்ப துயர நேரங்களிலெல்லாம் அருகிருந்து பிள்ளைகளின் வேதனையைத் தமதாக்கி தாய்மைக்குப் பெருமை சேர்ப்பதை அறிவோம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நம் அன்னையர்கள் நம் துன்பங்களிலெல்லாம் நம்மோடு பங்குகொள்ளும்போது தள்ளாடும் வயதிலும் தாய்மையின் தனிச் சிறப்பை அனுபவிக்கிறோம்.
    இனறு துன்புறும் மனிதனோடு உடன்இருக்க ஆள் இல்லை. மனிதனின் கஷ்டங்களில் பங்குகொள்ள யாருமில்லை. துன்புறும் மனிதனைக்கண்டு ஓடிவிடும் நிலை. ஆனால் இங்கு ஒரு பெண். தாய்மைக்கு தனியொரு இலக்கணமாய் திகழும் நம் அன்னை மரியா. தாய் என்ற பெருனையை ஒதுக்கிவிட்டு, துன்புறும் மனிதன் என்ற உறவோடு சிலுவையடியில் நிற்கிறாள்.
    உங்களின் துன்ப வேளைகளில் உங்கள் அருகில், உங்களோடு இருப்பவள். இந்த அன்னை உங்கள் துன்ப வேளையில் உங்களை விட்டு விலகுபவள் அல்ல. இயேசுவைப்போல நம் துன்பத்தை, பிணியை, பாரங்களைத் தன் உடலிலும் உள்ளத்திலும் நமக்காகச் சுமப்பவள்.
    எங்கள் சுமைகளைத் தாங்கும் அன்னையே, தம் பிள்ளைகளின் வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கும் ஒவ்வொரு தாயையும் தாங்கி வழிநடத்தும் அனனையே.தந்தையின் தாயையும் நீர் நிறைவாக ஆசிர்வதியும்.
    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறள் மொழிக்கேற்ப, அன்னையரைப் பெருமைப்படுத்தும் பிள்ளைகளாக வாழ்வோம். இந்த குறளை மையப்படுத்தி தன் தாய்க்கு பெருமை சேர்க்கும் தந்தை ஏசுவுக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete