Tuesday, September 1, 2015

மாமியார் இல்லா ஊரில்

'மாமியார் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!'

'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!' - என்ற பழமொழியை கொஞ்சம் மாற்றிப் பார்ப்போமே.

விவிலியம் இரண்டே பேரின் மாமியார் பற்றித்தான் பேசுகின்றது: ஒன்று, ரூத்து நூலில் வரும் நகோமி என்ற முதல் ஏற்பாட்டு மாமி. இரண்டு, நாளைய நற்செய்திப் பகுதியில் (காண். லூக்கா 4:38--44) வரும் 'அனோமி' (பெயரில்லாத!) என்னும் சீமோனின் மாமியார். முதல் ஏற்பாட்டில் 'மாமியார்-மருமகள்', இரண்டாம் ஏற்பாட்டில் 'மாமியார்-மருமகன்'. விவிலியத்தில் மாமியார் இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்று நாம் சொல்ல முடிபவர்களும் இரண்டு பேர்தாம்: முதல் ஆதாம், அதான் நம்ம ஏவாளின் வீட்டுக்காரர். இரண்டாம் ஆதாம், இயேசு, மரியின் மகன்.

இரத்த உறவுக்கு எப்படி தாய் அவசியமோ, அப்படி அவசியம் மாமியார் திருமண உறவுக்கு.

மாமியார் உறவை நான் நேரடியாக அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆக, சாமியாரா வந்தால் மாமியார் இல்லை. ரைமிங் நல்லாதான் இருக்கு!

பெண்களை மூன்றுவகைகளாப் பிரிப்பார் கவிஞர் பா. விஜய்: சிலர் ஒருமுறை பார்ப்பது போல இருப்பர், சிலர் திரும்பிப் பார்ப்பது போல இருப்பர், சிலர் நினைத்து நினைத்துப் பார்ப்பது போல இருப்பர்.

மாமியார்களையும் இந்த மூன்றுவகைகளுக்குள்; அடக்கலாம் என நினைக்கிறேன்:

முதல் வகை மாமியார்கள் ஒரே ஒருமுறை, திருமணத்தன்றுதான் பார்க்கலாம். அத்தோடு சரி, மருமகன் மற்றும் மருமகளுக்கு அவரோடு ஒத்தே போகாது.

இரண்டாம் வகை மாமியார்கள் 'நீயும் என் வீட்டுக்கு வா', 'நானும் உன் வீட்டிற்கு வருகிறேன்', 'நீ எனக்கு இதைச் செய்', 'நான் உனக்கு இதை செய்கிறேன்' என்று இருப்பார்கள்.

மூன்றாம் வகை மாமியார்கள். மிக அரிது. இவர்களை நினைத்துப் பார்த்தாலே மகிழ்வாக இருக்கும். இந்த வகை மாமியார்களில் ஒருவராகத்தான் சீமோனின் மாமியாரும் இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான் தன் மாமியாரின் காய்ச்சலையும் அவரின் உடல்நலனையும் குறித்துக் கவலைப்பட்ட சீமோன் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்து வருகின்றார்.

பெண்கள் என்றும் ஆச்சரியமானவர்கள்!

எப்படி என்று சொல்லவா?

தன் நோய் நீங்கியவுடன் மாமியார் இயேசுவுக்கு பணிவிடை செய்வதில் கவனமாயிருக்கிறார்.

இதுவே இயேசு சீமோனின் மாமனாருக்கு காய்ச்சலை குணமாக்கியிருந்தால், அவர் உடனே எழுந்து தன் வலைகளைத் தூக்கிக் கொண்டு மீன்பிடிக்க போயிருப்பார். அல்லது வரவு செலவு பார்க்கத் தொடங்கியிருப்பார். அல்லது, 'இந்தக் காய்ச்சலால் எனக்கு எவ்வளவு நஷ்டம்? அல்லது இன்னும் எத்தனை வேலைகள் காத்திருக்கின்றன?' என்று கணக்குப் பார்க்க அல்லது சொல்லிப் புலம்ப ஆரம்பித்திருப்பார்.

ஆனால் இந்த மாமியார் மிகவும் நல்லவர்.

சீமோனின் மாமியாரின் கவனிப்பில் அவரின் நன்றி வெளிப்படுகிறது.

ஆக, இயேசுவால் தொடப்பட்ட ஒருவர் இனி தன் வேலைகளைப் பார்ப்பதில் மும்முரமாக இருக்கக் கூடாது. இனி அவரின் வேலை இயேசுவும் அவர் சார்ந்தது மட்டும்தான். இது என் அருள்நிலை வாழ்வுக்கு மிகவும் நல்ல சவாலாக இருப்பதாக உணர்கிறேன். நான் அனுதினம் இயேசுவை நற்கருணையில் தொடுகிறேன். அல்லது இறைவார்த்தையாகக் கேட்கிறேன். வாசிக்கிறேன். அதைப் பற்றி பேசுகிறேன். அப்படியெனில் என் கவலையெல்லாம் இயேசுவைக் கவனித்துக்கொள்வதிலும், அவருக்கு பணிவிட செய்வதிலும்தானே இருக்க வேண்டும்?

நாளை நாம் வாசிக்கும் முதல் வாசகத்தில் (காண். கொலோசையர் 1:1-8) தூய பவுல் இதையொட்டித்தான் கொலோசை நகர மக்களுக்கு எழுதுகின்றார்:

'கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம்!'

ஆக, கொலோசை நகர மக்கள் இயேசுவின் மேல் உள்ள தங்களின் நம்பிக்கைக்கு, பிறர்மேல் கொண்டுள்ள அன்பினால் செயல்வடிவம் கொடுக்கின்றனர்.

நம்பிக்கை, அன்பு - இதுதான் எல்லா மாமியாரின் பண்புகளும்கூட. தன் மருமகன் மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் அன்பிற்குரிய மகளை அவருக்கு கொடுக்கிறார். இல்லையா?

ஆக, நல்ல மாமியாராக இருக்கவும், நல்ல சாமியாராக இருக்கவும் தேவை இவைதாம்: 'நம்பிக்கை, அன்பு'


3 comments:

  1. என்ன ஃபாதர்! சாவு, சாவுக்குப்பின் வாழ்க்கை என்றெல்லாம் கூறிவிட்டு திடீரென்று மாமாயாரா..சாமியாரா என்று கவிதை பாட ஆரம்பித்து விட்டீர்கள். வச்சா குடுமி..செரச்சா மொட்டை என்றில்லாமல் வாழ்க்கையின் இரு பக்கங்களுக்கும் நியாயம் செய்வது தங்களின் ஸ்பெஷாலிடி! நானும் கூட இரு நல்ல மருமகன்களுக்கு மாமியார் தான்.நான் எந்த இரகம்? மருமகன்கள் நல்லவர்களெனில் மாமியாரும் நல்லவளாகத்தானே இருக்க வேண்டும்!!?? ( is the donkey blowing its own trumpet?) சரி... விஷயத்துக்கு வருவோம்...இயேசுவால் தொடப்பட்ட ஒருவரின் செயல் அவரைக்கும் கவனித்துக் கொள்வதிலும்,அவருக்குப் பணிவிடை செய்வதிலும் மட்டுமே இருக்க வேண்டுமெனில் என் பண்புகளும் ' நம்பிக்கை- அன்பு இதன் செயல்வடிவமாகத்தானே இருக்க வேண்டும்? ஒரு புதிய கோணத்தில் என் வாழ்க்கை முறையை பிரதிபலித்த தந்தைக்கு என் நன்றிகள்.சந்தேகமே வேண்டாம்... தாங்களும் "ஒரு நல்ல சாமியார்" தான்!!! தங்கள் பயணம் இனிதே அமைந்திட என் செபங்களும்....வாழ்த்துக்களும்.....

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்! வாழ்வளிக்கும் தமிழகத்தில் இருந்து.உங்களை எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியலை.ஏனென்றால் எந்த கோணத்தில் இருந்து நீங்கள் உங்கள் கருத்தை பதித்தாலும் உங்கள் வார்த்தைகள் அனைத்தும் விலை மதிப்பில்லா முத்துகளாகவே இருக்கின்றன .ஆக நல்ல மாமியாராக இருக்கவும், நல்ல சாமியாராக இருக்கவும் தேவை இவைதாம்: 'நம்பிக்கை, அன்பு' என்று பகிரங்கமாக எடுத்துரைத்ததற்கு நன்றிகள்! மாமியார் உறவை நான் நேரடியாக அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆக, சாமியாரா வந்ததால் மாமியார் இல்லை. ரைமிங் நல்லாதான் இருக்கு! சில நேரங்களில் என் தோழிகள் எல்லோரும் தமாஸ்க்கு சொல்வார்கள் நல்ல வேலை நீ கான்வேன்டுக்கு வந்துவிட்டாய் இல்லை என்றால் உன் மாமியார் பாவம் அவுங்களுக்கு அடங்கி இருககமாட்டாய் .ஏனென்றால் என் பெருவிரலை விட அடுத்த விரல் நீளமானதாக இருக்கும் அதற்காக. நான் சொல்வேன் என் தாயை விட மேலாக கவனித்து இருப்பேன்.அதனால் தான் நிறைய மாமியர்ர்களை காண்வென்டில் தந்து இருக்கிறார்கள் என்று. ஆனால் தந்தை அவர்கள் மிக அழகாக மாமியார்களை தரம் பிரித்து தந்துள்ளார். மாமியாரும் ஒரு பெண்ணே ! மாமியாரும் ஒரு தாயே ! இரத்த உறவில் வேண்டும் என்றால் பிரிந்து இருக்கலாம் ஆக இராயப்பரின் மாமியாரும் ஒரு நல்ல தாய் மற்றும் ஏசுவுக்கு பணிவிடை புரிவதிலும் நல்ல உள்ளம் படைத்தவர்.எனவே உனக்கு உன் உடல் ஆரோக்யம் என்பது கடவுள் கொடுத்திருக்கிற உன்னதமான கொடை. எவ்வளவு பொன், பொருள் கொடுத்தாலும் வாங்கமுடியாத கொடை. அத்தகைய கொடை இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதை பயனுள்ள முறையில் தேவையில் இருக்கிறவர்களுக்கு பயன்படுத்த முன்வருவோம். நம்பிக்கையை விதைப்போம்.பிறருடன் அன்புடன் உறவாடுவோம்.இன்றைய உலகில் கிறிஸ்துவை நம்புவோரின் குழுவாகிய திருச்சபை இயேசுவின் வல்லமையால் திடம் பெற்று, மக்களுக்கு மீட்பின் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும்; அவர்களுக்குப் பணி செய்ய எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். என் பாச தந்தைக்கு வாழ்த்துக்கள். தமிழகத்துக்கு வருக வருக என்று கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.அருமையான பதிவிற்கு நன்றிகள் !என் ஜெபத்தை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  3. சாமியார் இணைத்ததை மாமியார் பிரிக்காதிருக்கட்டும்!!!

    ReplyDelete