Thursday, September 10, 2015

இரண்டு வகைக் கேள்விகள்

விவிலியத்தில் இரண்டு வகைக் கேள்விகள் உள்ளன: முதல் வகைக் கேள்விகள் விடைகளைத் தங்களுக்கு வெளியே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 15) வரும் கேள்வி: 'ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கியிருப்போர் யார்?' இரண்டாம் வகைக் கேள்விகள் விடைகளைத் தங்களுக்கு உள்ளே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாளைய நற்செய்தியில் வரும் கேள்வி: 'குருடர் குருடருக்கு வழிகாட்ட முடியுமா?' இந்தக் கேள்விக்குப் பதில் 'முடியாது!' என்பதுதான்.

நாளைய நற்செய்தி வாசகம் (லூக்கா 6:39-42) இந்த ஒரு கேள்வி மட்டும்தான். இந்தக் கேள்விக்குப் பின் வரும் மற்ற வசனங்கள் இந்தக் கேள்வியின் விளக்கவுரைதான். எப்படி? 'தன் அறிவுக்கண்ணில் இருளைக் கொண்டிருக்கும் சீடன் தன் தலைவருக்கு வழிகாட்ட முடியாது.' 'தன் கண்ணில் மரக்கட்டையைக் கொண்டிருக்கும் நபர் தன் நண்பரின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க முடியாது.' ஆக, குருடர் குருடருக்கு வழிகாட்ட முடியாது. அப்படி அவர்கள் காட்ட முயற்சித்தால் இருவரும் குழியில் விழுவர்.

நாளைய முதல் வாசகத்தில் (1 திமொ 1:1-2, 12-14) திமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட மடலின் முகவுரையை வாசிக்கின்றோம். ஒருகாலத்தில் இருளில் இருந்த பவுல், ஒரு காலத்தில் குழியில் விழுந்து கிடந்த பவுல் கடவுளின் அருளால் இன்று ஒளிபெற்று நிற்கின்றார். ஒளிபெற்ற நிலையில் புறவினத்தாருக்கு திருத்தூதனாகவும், திமொத்தேயுவுக்கு நம்பிக்கையின் தந்தையாகவும் துலங்குகின்றார். தன் கடந்தகால இருளைப் பற்றி திமொத்தேயுவுக்கு எழுதும் பவுல், தான் மூன்று நிலைகளில் இருளில் இருந்ததாக எழுதுகின்றார்: பழித்துரைத்தேன், துன்புறுத்தினேன், இழிவுபடுத்தினேன். இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி இறைவனைப் பழித்துரைக்கவும், பிறருக்கும், தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி பிறரைத் துன்புறுத்தவும், தனக்கும், தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி தன்னையே இழிவுபடுத்தவும் செய்கின்றார். ஆனால், சரியான சந்தர்ப்பம் வருகிறது. இறைவனின் பரிவாலும், அருட்பெருக்காலும் ஆட்கொள்ளப்பட்டு முற்றிலும் ஒளிபெற்றவராகின்றார். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்கு உயர்கின்றார்.

நாளைய இறைவாக்கு வழிபாடு எனக்கு இரண்டு சவால்களை முன்வைக்கின்றது:

அ. அக இருளும் புற இருளும் என்னை வழிநடத்த நான் என்னையே கையளிக்கின்றேனா?

ஆ. நானே இருளில் இருந்து கொண்டு மற்றவருக்கு ஒளிகாட்ட நினைக்கின்றேனா?

மிகவும் தெரிந்த நிகழ்வுதான். இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன் இங்கு:

பங்குத்தந்தை ஒருவர் மருத்துவமனையிலிருந்த பெண்மணி ஒருவருக்கு நோயிற்பூசுதல் அருளடையாளம் அளிக்கச் செல்கின்றார். முடித்து வெளியேறும்போது, 'ஃபாதர் ஒரு நிமிடம்!' என அருட்பணியாளரை நிறுத்துகிறார் பெண்.

'என்னம்மா?'
'நான் உங்களை ஒன்று கேட்கலாமா?'
'கேளுங்கள்!'
'என் இறுதி ஆசை ஒன்றை நிறைவேற்றுவீர்களா?'
'என்ன ஆசை? சொல்லுங்கள்!'
'நான் இறந்தபின் என்னை அடக்கத்திருப்பலிக்கு கொண்டு வரும்போது என் கைகளை வெளியே தொங்கவிட்டு, அதில் ஒரு ஸ்பூனும், ஒரு ஃபோர்க்கும் வைக்க வேண்டும். செய்வீர்களா?'
'சரிம்மா, செய்கிறேன்! ஆனால் எதற்காக இப்படி செய்யச் சொல்கிறாய்?'
'ஃபாதர், எங்க வீட்டுல நாங்க 7 குழந்தைகள். எப்போதெல்லாம் குடும்ப விருந்து நடக்கிறதோ, அப்போதெல்லாம் ஒவ்வொரு குழந்தையின் அருகில் வந்து என் அம்மா, 'ஸ்பூனையும், ஃபோர்க்கையும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்' என்பார். நான் இதை என் வாழ்வியல் பாடமாகவும் எடுத்துக்கொண்டேன். எப்போதெல்லாம் இருள் சூழ்ந்து நம்பிக்கையின்மை மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் 'தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்!' என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.'

பவுலுக்கு பெஸ்ட் தமாஸ்கு சாலையில் வந்தது.

இருள் உள்ளே, வெளியே நம்மைச் சூழும்போது நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்:

'தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்!'


4 comments:

  1. தந்தைக்கு என் இனிய வாழ்த்துக்களும் வணக்கங்களும்! இரண்டு வகைக் கேள்விகள் என்ற தலைப்பே எனக்கு பயத்தை உருவாக்கியது இந்த பதிவை நான் படிக்க படிக்க எனக்குள் ஒரு ஆற்றல் வந்தது எந்த கேள்வியாய் இருந்தாலும் நான் பதிலை சரியாக கொடுக்க வேண்டும் என்று உங்கள் கேள்விகள் மிக அருமையாக என்னை சிந்திக்க வைத்தது.
    அ. அக இருளும் புற இருளும் என்னை வழிநடத்த நான் என்னையே கையளிக்கின்றேனா?
    ஆ. நானே இருளில் இருந்து கொண்டு மற்றவருக்கு ஒளிகாட்ட நினைக்கின்றேனா? இந்த இரண்டு கேள்விகளும் எனக்கும் ,பிறர்க்கும் உரைக்கும் கருத்து இது தான் .அது என்னவென்றால்
    பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத் திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். அதைக் கண்டு அவர்களும் கடவுளிடம் திரும்புகின்ற வாய்ப்புப் பிறக்கலாம். எனவே, சகோதர அன்பின் ஒரு முக்கியமான அம்சம் நம் பகைவரையும் அன்புசெய்து, நம் சகோதரர் சகோதரிகளிடம் இன்னின்ன குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவதற்குச் செய்யப்படுகின்ற முயற்சி ஆகும். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல் நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம்.நாம் நேர்மையாளர்கள் போல, தவறே செய்யாதவர்கள் போல, நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களை நமக்குக் கீழாக எண்ணுகிறோம். மற்றவர்களை மதித்து, உண்மையான அன்பு செய்து வாழ, ஆண்டவரிடத்தில் நாம் மன்றாடுவோம்.மாற்றம் ஒன்றே நிரந்தரம் அதற்கு நான் தயார் நீங்கள் தயாரா ?சிந்திப்போம் .இந்த பதிவின் வழியாக என்னை சிந்திக்க தூண்டிய என் பாச தந்தைக்கு எனது நன்றிகள் !.....

    ReplyDelete
  2. இருளும்,ஒளியும் மாறி மாறி வருவதால் கட்டுக்குள் வருவது ஒரு 'நாள்' மட்டுமல்ல; நம் வாழ்க்கையும் கூடத்தான்.வாழ்க்கையில் சில சமயம் இருளும் புயலும் நிறைந்திருப்பது சகஜம் தான்.இதற்கு பவுல் மட்டும் எவ்வாறு விதிவிலக்காக முடியும்? இறைவனுக்கும் தனக்குமுள்ள உறவில் இறைவனைப் பழித்துரைக்கவும்,பிறருக்கும் தனக்குமுள்ள உறவு நிலையில் பிறரைத் துன்புறுத்தவும்,தனக்கும் தனக்குமுள்ள உறவு நிலையில் தன்னையே இழிவு படுத்தத் துணிந்தாலும் இறைவனின் திருக்கரம் தன்னை நோக்கி வருகையில் அதைப்பற்றிப் பிடித்துக் கொள்கிறார்.இறைவனின் பரிவால்,அருட்பெருக்கால் ஆட்கொள்ளப்பட்டு ஒளிபெற்றவராகிறார்.வலுவற்ற அவர் வலிமை பெறுகிறார்.நம்மை நோக்கியும் கூட இறைவனின் ஒளிக்கற்றை பாய்ச்சப் படுகிறது.ஒளியை ஏற்கிறோமா இல்லை கண்களை மூடிக்கொள்கிறோமா.....யோசிக்கும் நேரமிது.யோசிப்போம். மற்றபடி நம் வாழ்க்கையில் இருள் வரினும்,ஒளி வரினும் நமக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நம் வாய் முணுமுணுப்பது நல்லதொரு அப்பியாசமே...." பெஸ்ட் இஸ் எட் டு கம்" போல.நல்லதொரு பதிவு....தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Anonymous9/10/2015


    Dear Yesu,
    Greetings of joy.
    How are you Yesu.
    It is very nice to read your article today. It was reflective and very much appealing.
    I preached on Mother Mary's Birthday on 7 silence of Mary taking the gist of your article. it was a little failure for me. i could not explain it properly.
    Take care. keep good health. see youuuuuuuuuuuu

    ReplyDelete