Saturday, September 19, 2015

எப்படி அவரால் மட்டும்

'2015 செப்டம்பர் 27க்கும் 28க்கும் இடையே உள்ள இரவில் நிலவு சிகப்பு நிறமாக மாறும். பைபிளில் உள்ள அறிகுறிகள் எல்லாம் தோன்றும். உலகம் விரைவில் அழியும்.'

இப்படி ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாகப் பரவிக் கொண்டு வருகிறது.

உலகம் அழியுமா? அழியாதா? என்ற கேள்வி உலகம் தோன்றியது முதல் கேட்கப்படுகின்ற கேள்வி. 'மழை வரும்! ஆனால் வராது!' என்றுதான் இதற்கு நம்மால் பதில் சொல்ல முடியும்.

'தொடங்கும் அனைத்தும் முடியும்!' என்பதுதான் இயற்கையின் விதி என்றால், அது இயற்கைக்கும் பொருந்தத்தான் செய்யும்.

இந்த இயற்கையன்னையின் மடிசுகம் அனுபவித்த நமக்கு அந்த அன்னை நம்மை எழுப்பிவிடுவது கஷ்டமாகத்தான் இருக்கும்.

இன்று காலை முதல் எங்கள் கல்லூரி வளாகத்தில், 'இயற்கையைக் காப்போம்!' என்று அடுத்தடுத்து பேராசிரியர்கள் முழங்கிக் கொண்டே இருந்தனர். ஆனால் 'இயற்கைதான் நம்மைக் காக்கிறது!' என்பதை நாம் மறந்துவிட்டோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

ஒருவர் மற்றவர்மேல் பழியைப் போட்டுவிட்டு 'என் வேலை முடிந்துவிட்டது!' என்று சொல்வதுதான் இன்று சுற்றுச்சூழல்குறித்த கருத்தரங்குகளில் நடக்கிறது. ஒரு சுற்றுமடல், ஒரு கருத்தரங்கு, ஒரு உரை, ஒரு விவாதம் என்று மட்டும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா?

இயேசுவால் எப்படி தன்னை இயற்கையோடும், மக்களோடும் ஒன்றித்துப் பார்க்க முடிந்தது? எந்தவித பேதமும் பாராட்டாமல் எப்படி இணைந்து வாழ முடிந்தது?

பிறப்பு, இறப்பு, சிலுவை, உயிர்ப்பு, அன்பு செய்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் என எல்லாரையும், எல்லாவற்றையும் எப்படி அவரால் மட்டும் சமமாகப் பார்க்க முடிந்தது?


2 comments:

  1. இன்றைய நாளின் தேவைக்கேற்றதொரு பதிவு.இணைய தளத்தில் வேகமாகப் பரவி வரும் ' செப்.28 உலகம் முடிகிறது' எனும் செய்தி பலருக்குப் பலவிதமான பாதிப்புக்களை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.மிரண்டு போனவர் சிலர்; இப்படித்தான் பலமுறை வதந்திகள் எழுந்துள்ளன என்று முகம் சுளிப்பவர் சிலர்; எல்லோருக்கும் உள்ளதுதானே நமக்கும் என்று அலட்சியம் காட்டுபவர் சிலர் என பலதரப்பட்ட ரியாக்‌ஷன் நம் மக்களிடம்.மேட்டர் என்னதான் என தெரிந்துகொள்ளும் ஆவலில் அதைப் படிக்க முயற்சித்தால் பாதி புரிந்து புரியாத ஒரு நிலை.தந்தையின் சொற்களில் 'மழை வரலாம்; ஆனால் வராது'தான்." தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரை தலையாலே தான் தருதலால்' என்ற சிறுவயது பாடல் நினைவுக்கு வருகிறது. தன் வேர்களுக்கு ஊற்றப்பட்ட நீரை இனிப்பான இளநீராக தரைவழியாக தரும் தென்னையும் நன்றி உணர்வுக்கு உதராணமாக எடுத்துக்காட்டுகிறார்கள்.ஆனால் மனிதன் மட்டும் தான் தன்னைப் பாராட்டி,சீராட்டும் பூமித்தாயின் மடியிலேயே கை வைக்கிறான்.இது எதில் முடியமென நினைத்தால் பயம் தான் மிஞ்சுகிறது.இந்நிலையில் படைத்தவனின் மனப்பக்குவத்தை நாம் பெறுவது ஒன்றே வழி எனக்கூறுகிறார் தந்தை.தம்மை நேசித்தவர்களையும்,காட்டிக்கொடுத்தவர்களையும் சம நிலையில் அன்பு செய்த இயேசுவின் வழியில் நம்மை வாழ வைக்கும் 'பூமிப்பந்தை', ' இயற்கையை' நேசிப்போம். ஏற்கனவே இழைத்து விட்ட கொடுமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவோம்.நாமும் வாழ்ந்து நம் சக உயிரினங்களையும் வாழவைப்போம். தந்தைக்கு ஞாயிறு வணக்கங்களும்,நன்றிகளும்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு எனது வணக்கங்களும்,வாழ்த்துக்களும்."எப்படி அவரால் மட்டும்" இந்த பதிவில் இயற்கையோடும், மக்களோடும் இறை மகன் இயேசு எவ்வாறு ஒன்றித்து வாழ்ந்தார் என்பதை மிக அருமையாக படைத்தமைக்கு எனது நன்றிகள். என்னுடைய நிறைய நாள் சிந்தனையும் கூட "பிறப்பு, இறப்பு, சிலுவை, உயிர்ப்பு, அன்பு செய்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் என எல்லாரையும், எல்லாவற்றையும் எப்படி அவரால் மட்டும் சமமாகப் பார்க்க முடிந்தது"? என்று. மனிதர் அனைவரும் தனித்தன்மையுடன் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு வாழவே விரும்புகிறார்கள்.கடவுளை தவிர வேறு யாராலும் யாரையும் புரிந்து கொள்ள முடியாது என்பது பொதுவான சொல்லாடல்."நான் இந்த உலகில் பிறந்ததற்கு என் பெற்றோர்க்கு கடமைபட்டிருந்தேன்.ஆனால் முறையாக வாழ்வதற்கு எனது ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிளுக்கு கடமைபட்டிருக்கிறேன் என்பார் மாவீரர் அலெக்சாண்டர் . புத்தருக்கு ஞானோதயம் வந்தது போல என்னிலும் எனக்கும் நிறைய கற்று தந்தது தங்களின் பதிவுகள். அனைத்து பதிவுகளையும் தந்தை ஏசுவையும் ஒரு விலை மதிக்க முடியாத எனது ஆசிரியர் என்றே கூற முடியும் ஆக, நானும் இயற்கையோடும், ,பிறரோடும் அவரைப்போல ஒன்றித்து வாழ எங்களுக்காக ஜெபியுங்கள். நாங்களும் ஜெபிக்கின்றோம் . தந்தைக்கு எனது பாராட்டுக்கள்!....

    ReplyDelete