Thursday, September 17, 2015

இறைப்பற்று

நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொத்தெயு 6:2-12) விசுவாசத்தில் தான் பெற்றெடுத்த அன்பு மகன் திமொத்தெயுவுக்கு பவுல் வழங்கும் அறிவுரை தொடர்கிறது.

'இறைப்பற்று பெறும் ஆதாயம் தருவதுதான். ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும்'

இப்படிச் சொல்லும் பவுல் தொடர்ந்து செல்வத்தினால் அருட்பணி நிலைக்கு வரும் தீமையையும் விளக்கிச் சொல்கிறார்.

செல்வத்திற்கு மாற்றாக, நீதி, இறைப்பற்று. நம்பிக்கை, மனவுறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடச் சொல்கின்றார்.

செல்வம் வந்தவுடன் நம்மால் நீதியை வாங்கிவிட முடிகிறது. இறைவனின் மேல் உள்ள பற்று குறைந்து, நாம் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றிக்கொள்ளவே மனம் விரும்புகிறது. பணமே நம்பிக்கையின் ஆதாரமாகிவிடுகிறது. எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொள்ள விரும்புவதால் மனவுறுதியும் அசைவு கண்டுவிடுகிறது. இறுதியாக, செல்வம் வந்தவுடன் பணிவும் பனிபோல மறைந்துவிடுகிறது.

ஆக, பவுல் முன்வைக்கும் மாற்று மதிப்பீடுகள் ஆச்சர்யம் தருபவையாக இருக்கின்றன.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 8:1-3) இயேசுவின் பணியை பல பெண்கள் தங்களின் பொருளாதாரத்தாலும், உடனிருப்பாலும் தாங்கினார்கள் என்று வாசிக்கின்றோம். ஆக, இறைப்பற்றால் வரும் மனநிறைவு கொண்டவர்களுக்கு இறைவன்தாமே தன் வானதூதர்களை அனுப்பி அவர்களை மேலும் நிறைவுசெய்வார் என்பது இயேசுவின் வாழ்விலேயே வெள்ளிடைமலையாக இருக்கிறது.


2 comments:

  1. தந்தைக்கு எனது பாசமுள்ள பணிவான வணக்கங்கள்.இன்றைய பதிவில் என்னை தொட்ட வார்த்தைகள் " இறைப்பற்றால் வரும் மனநிறைவு கொண்டவர்களுக்கு இறைவன்தாமே தன் வானதூதர்களை அனுப்பி அவர்களை மேலும் நிறைவுசெய்வார்" இன்றைய நற்செய்தியில் பெண்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்வதாக வாசிக்கிறோம். இதிலிருந்து, அந்த பெண்களின் வீரமும், விசுவாசமும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இந்த சமுதாயம் அவர்களுக்கென்று கட்டுப்பாடுகள் வைத்திருந்தாலும், அந்த கட்டுப்பாட்டிற்குள் தங்களால் கடவுளுக்காக, கடவுளின் பணியாளர்களுக்காக எதைச் செய்ய முடியுமோ, அதை அவர்கள் செய்கிறார்கள். இயேசுவின் போதனையில் நிச்சயம் அவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரரின் வெற்றியில் அவருக்கு மட்டுமல்ல, பின்புலத்திலிருந்து அவருடைய வெற்றிக்கான பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய அவருடைய குழுவுக்கே பெரிய பங்கு இருக்கிறது. அதைப்போல தங்களால் இயன்றைதைச் செய்து, இயேசுவின் பணிவாழ்வில் தங்களையும் இணைத்துக்கொண்ட, பெண்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    இருக்கிற சூழ்நிலையில் நாம் எந்த அளவுக்கு, கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது, நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி. இந்த சமுதாயத்தில் நாம் வைத்திருக்கிற பதவிகளால், பட்டங்களால் பல வேளைகளில் சூழ்நிலைக்கைதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் நானும் ஒருத்தி. ஆக, நாம் ஒவ்வொருவரும் இறைப்பற்றில் இயேசுவோடு எந்த அளவுக்கு, உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சிந்தித்து, உயர்வாக வாழ முற்படுவோம்.தந்தைக்கு எனது நன்றிகளும்! பாராட்டுகளும்!...........
    விண்ணக இறைவன் நம்மோடு இருந்து நமக்குச் சார்பாகப் போரிடும் போது எந்த எதிரியும் நம்மை வெற்றிக் கொள்ள முடியாது.

    ReplyDelete
  2. திமோத்தேயுவின் பெயரைக் கேட்கையில் ஏதோ எங்கள் வீட்டுப்பையன் போல ஒரு ஃபீல் எனக்கு வருவதுண்டு.காரணம் பவுலுக்கு அவர் மீது இருந்த வாஞ்சையும் அதை வெளிப்படுத்த அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் காரணமாயிருக்கலாம்.பல சமயங்களில் அடுத்தவரிடம் உள்ள பொருளோ,பணமோ நம்மிடம் இல்லையே எனப் பெருமூச்சு விடுகிறோம்.ஆனால் அது நம்மை வந்து சேர்ந்தபிறகு இறைவன் மீது இருந்த பற்று பொருட்களை நோக்கித்தாவுவதும்,எல்லாவற்றோடும் சமரசம் செய்வதால் மனவுறுதி அசைவு காண்பதும்,நம்மிடம் இருந்த பணிவு பனிபோல மறைவதும் நாம் அன்றாடம் நம் வாழ்விலும்,நம்மைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்விலும் காணும் நிகழ்வுகள் தான்.இதை விடுத்து நமது பொருளாதாரத்தையும்,உடனிருப்பையும் இறைபற்றை வளர்க்க,அவரின் பணியைத் தாங்க உபயோகப்படுத்துவது எத்துணை உசிதமானது என்று கூற வருகின்றன தந்தையின் வார்த்தைகள்.செல்வத்திற்குப் பதிலாக நீதி,இறைப்பற்று,நம்பிக்கை,மனவுறுதி,பணிவு இவற்றை நாடித் தேடி ஓடுவதன் மூலம் நம் கரங்களை இறைவனின் கரங்கள் இறுகப் பற்றிக்கொள்ளும் எனச் சொல்லாமல் சொல்கின்றன பதிவின் முகப்பில் காணும் அந்த இரு கரங்கள்.இதை விடவா ஒரு பேறு வேண்டும் ஒருவருக்கு? நல்லதொரு பதிவைத் தந்த தந்தையைப் பாராட்டுதல் தகும்!!!

    ReplyDelete